Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2009
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,494 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொட்டலில் பூத்த புதுமலர் 2

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 4

யாரோ தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பிரக்ஞையே இல்லாமல் மேலே மரத்தில் எதையோ உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர் கையில் வைத்திருந்த ஆயுதத்தை மரக்கிளைக்கு நேராக உயர்த்திப் பிடித்தான்.

கண் இமைக்கும் நேரத்தில் புலிபோல் பாய்ந்தார் தேவர். அவனுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “யார் நீ? என்ன செய்யப் போகிறாய்” என்று அதட்டினார்.

அவன் அலட்சியமாக சிரித்துக் கொண்டே கையில் உள்ள ஆயுதத்தைக் காண்பித்து, “இது துப்பாக்கி. புறாவைச் சுடப்போகிறேன்” என்றான்.

அவ்வளவு தான், தேவருக்கு கண்கள் சிவந்தன. கோபத்தால் மீசை படபடத்தது.

“இதோ பார்! இங்கு புறாக்கள் எதையும் சுடக்கூடாது. புரிகிறதா?”

“இது என்னுடைய இடம். என் அனுமதியில்லாமல் யாரும் இங்கு புறாக்களை வேட்டையாடக் கூடாது.” படபடவென்று பொரிந்து தள்ளினார் தேவர்.

இதைக் கேட்டதும், ‘கலகல’வென்று சிரித்தான் அந்த வாலிபன். முத்துக்கள் உதிர்வதைப் போல் இருந்தது அவனுடைய சிரிப்பு.

“சரியான பைத்தியம்! தூக்கக் கலக்கத்தில் பேசுகிறாயா, அல்லது தண்ணி போட்டுவிட்டு வந்திருக்கிறாயா?

சற்று நிதானித்து விட்டு மீண்டும் பேசினான், அதே சிரிப்புடன்,

“இது எங்க நல்லத்தா வீட்டு மாந்தோப்பு. இதோ பார்! தோப்புச்சாவி! ஆமாம், நீ எப்படி இதற்குள் நுழைந்தாய்? யாரிடம் அனுமதி கேட்டு உள்ளே வந்தாய்? திருட்டுத்தனமாக வேலியேறிக் குதித்து வந்தாயா?”

தேவருக்கு ஒரே குழப்பம். தலை சுற்றுவது போல் இருந்தது.

‘நல்லத்தாவாம், மாந்தோப்பாம்! யாருக்குப் பைத்தியம்? இவனுக்கா? எனக்கா?!

யதேச்சையாக மேலே அண்ணாந்து பார்த்தார்.

என்ன ஆச்சரியம்! உண்மையில் அங்கிருந்தது மாமரம் தான். உயரத்தில் உள்ள ஒரு கிளையில் புறா ஒன்று உட்கார்ந்திருந்தது.

மயக்கம் போட்டு விழக்கூடிய நிலை. இருகைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டார். உடை மரம் எங்கே?

சற்று சுதாரித்துக் கொண்டு, “நல்லத்தா என்று சொன்னாயே, அவர் யார்? எங்கிருக்கிறார்” என்று ஈன ஸ்வரத்தில் கேட்டார்.

வாலிபன் பேசவில்லை. பதிலுக்கு விரலால் ஒருபக்கம் சுட்டிக் காட்டினான்.

அவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார் தேவர். கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் பார்த்தார்.

அவர் தங்கியிருந்த திட்டுப் பகுதி, வறண்ட பொட்டல்வெளி, மரங்கள், புதர்கள் எதையுமே காணோம்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை வரிசையாக வீடுகள். ஓட்டடுக்கு வீடு, கெட்டி மச்சு வீடு, மாடி வீடுகள், நீண்ட அகலமான வீதிகள், விளையாட்டு மைதானங்கள், மருத்துவ மனை, அஞ்சலகம், நூலகம், பொழுது போக்கு மையங்கள், தேனீர்க்கடைகள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள்…..

ஊரை ஒட்டியுள்ள பேருந்து நிலையம்; வெளியில் இருந்து வரும் பேருந்துகள் வண்ணமலர்களைக் கொட்டுவது போல் பயணிகளை இறக்கிவிட்டு புதியமலர்களை வாரியெடுப்பது போல் காத்திருக்கும் பயணிகளை அள்ளித் திணித்துக் கொண்டு புறப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது”.

வசதி படைத்தவர்கள் பயணிப்பதற்காக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நவீன ஊர்திகள், வேன்கள், ஆட்டோக்கள்…

நிமிடத்திற்கு ஒன்றாக தெருக்களில் சீறிப்பாய்ந்து வரும் இரு சக்கர வாகனங்கள், பெரியவர்களில் இருந்து சிறுவர்கள் வரை அனாயாசமாக சவாரி செய்யும் மிதிவண்டிகள்…

நவநாகரீக உடையணிந்து இளவரசர்களைப் போல் வலம் வரும் ஆடவர்கள்…

கண்ணைக் கவரும் வண்ண வண்ணச் சேலைகள் கட்டி, கழுத்து, காது, கைகளில் தங்க நகைள் மின்ன பொன் காய்ச்சி மரம் போல் அன்ன நடை நடந்து ஆடவரைக் கிறங்க வைக்கும் ஆரணங்குகள்….

பெரிய கூடையில் இருந்து மொத்தமாக மலர்களைக் கீழே கொட்டியது போல், வகுப்பு முடிந்ததும் துள்ளிக் குதித்துக் கொண்டு வெளியில் ஓடி வரும் பள்ளி மாணவ – மாணவியர் கூட்டம்…

தெருவுக்குத் தெரு குழாயடியில் தண்ணீர் பிடிக்கும் பெண்களின் கும்மாளம்…

தெருக்கள் தோறும் சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலாளர், கைவினைஞர்கள், அங்காடி வியாபாரிகள், பழவியாபாரம் செய்யும் பெண்கள், பால் ஊற்றும் பாவையர், உரத்த குரலுடன் வீட்டுக்கு வீடு கூவி வியாபாரம் செய்யும் மீனவப் பெண்கள்…

காட்சி விரிந்து கொண்டே போனது. வாயைப் பிளந்தவாறே பார்த்துக் கொண்டிருந்த தேவர் வியப்பின் எல்லைக்கே வந்து விட்டார். மயங்கி விழும் நிலை.

“தள்ளி நில்! புறாவைச் சுடப் போகிறேன். தடுத்தால் உன்னைச் சுட்டு விடுவேன்.”

வாலிபனின் கணீரென்ற குரல் குத்தீட்டி போல் காதுக்குள் பாய்ந்தது.

இதைக் கேட்டதும் தேவர் அடியுண்ட வேங்கை போல் அவன் மீது பாய்ந்தார். வாலிபனும் சளைத்தவனாகத் தெரியவிலலை.

இருவரும் கட்டிப் புரண்டனர். இந்தக் கைகலப்பில் இசகு பிசகாக யாருடைய விரலோ துப்பாக்கி விசையில் பட்டு விட்டது.

‘டுமீல்!’

பதறிக் கண்விழித்தார் தேவர். உடல் ழுழுவதும் வியர்வை கொப்பளித்தது. நெடுந்தூரம் ஓடி வந்தது போல் மூச்சிரைத்தது. இலேசாக உடல் நடுங்கியது.

இதுவரை நடந்த சம்பவம், தான் பார்த்த காட்சிகள் அனைத்தும் நிஜமா, அல்லது கனவா?

உடலைத் தடவிப்பார்த்துக் கொண்டார். கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டார். சுற்றும் முற்றும் கவனித்தார்.

வாலிபனைக் காணவில்லை. மாந்தோப்பைக் காணவிலலை. தான் கண்டு ரசித்த மாயா ஜாலபுரியைக் காணவில்லை.

கடம்பனைப் பார்த்தார். கைகளிலிரண்டையும் மார்பில் வைத்தவாறு வானத்தைப் பார்த்தபடி அரைத்தூக்கத்தில் இருந்தான் கடம்பன்.

மறுபடியும் நறுக்கென்று தன்னுடைய தொடையில் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.

‘ஆம். நிச்சயமாக இது கனவு தான். ஆஹா! என்ன அற்புதமான கனவு! நினைத்துப் பார்த்தாலே உடல் புல்லரிக்கிறதே! என்ன சுகமான அனுபவம்! என் ஆயுளில் எவ்வளவோ இடங்களைச் சுற்றி வந்திருக்கிறேன். இப்படிப்பட்ட அழகும் வளமும் கொழிக்கும் ஊரைப் பார்க்கவில்லையே! உண்மையிலேயே இந்த ஊர் எங்கேனும் உள்ளதா? அல்லது கனவுக்காட்சியா?

இருக்கட்டும் இனிமேல் நாம் போகும் மார்க்கங்களில் இப்படிப்பட்ட ஓர் ஊர் இருக்கிறதா என்பதை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும். பின்னர் அந்த ஊரிலேயே தங்கி விட வேண்டும்’ என்ற தமக்குள் சங்கல்பம் செய்து கொண்டார்.

துண்டைத் தோளில் போட்டுக் கொண்டே கண்ட இடமெல்லாம் தேடிய கதை போல்; பொன்னும் மணியும் கொழிக்கும் அப்புதுமையான ஊர் வேறு எங்குமில்லை; அவர் காலடியில் தான் அது இருக்கிறது; அவர் அமர்ந்திருக்கும் அதே இடம் தான் அந்த ஊர் என்பது, பாவம்! சசிவர்ணத்தேவருக்கு அப்போ தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் சங்கல்பித்துக் கொண்டபடி அப்போதே அந்த ஊரில் அப்போதே குடியேறி விட்டார் என்பதையும் அவர் உணர்ந்து கொள்ளவில்லை.

கள்ளிச் செடிகளும், முள்ளிச் செடிகளும், கருவேல மரங்களும், உடை மரங்களும் காட்டுச் செடிகளும், முட்புதர்களும் நிறைந்த அந்த வனாந்திரப் பொட்டல் காடுதான் இன்றைய நவீன சித்தார்கோட்டையின் உருவாக்கத்திற்கு மூலஸ்தானமாயிருந்தது என்பதை இப்போது இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களில் பெரும்பாலோர் தெரிந்திருக்க முடியாது.

பொட்டலில் பூத்த புதுமலர்

கனவு உலகில் சஞ்சரித்த தேவர் நினைவு உலகிற்கு மீண்டார்.

இரவு சரியான தூக்கமின்மையாலும், அவர்கண்ட விசித்திரக் கனவு அடிக்கடி மனத்திரையில் தோன்றி அவரது சிந்தனையைப் பல்வேறு திசைகைளில் திருப்பி அலைக்கழித்துக் கொண்டிருந்ததாலும் முதல் நாள் விட்டிருந்த ஜுரம் மீண்டும் தலை காட்டியது.

கைகளால் தட்டி கடம்பனை அழைத்தார்.

இரவில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒன்று விடாமல் கூறினார்.

வாயைப் பிளந்தபடியே அளவு கடந்த ஆச்சரியத்துடன் அனைத்து விபரங்களையும் கேட்டுக் கொண்டிருந்தான் கடம்பன்.

தேவர் பேசி முடிந்ததும் கவலையுடன், “அண்ணா! உங்களுக்கு மறுபடியும் ஜுரம் வந்து விட்டதாகத் தெரிகிறது. சற்று இப்படியே இருங்கள்! சுக்குக் கஷாயம் போட்டுக் கொண்டு வருகிறேன்” என்று கூறி விட்டு நகர்ந்தான்.

ஜுரம் கூடியதே தவிரக் குறையவில்லை. இப்படியே இரண்டு மூன்று நாட்கள் நகர்ந்தது. கையிருப்பில் இருந்த உணவுப் பொருட்கள் ஏறக்குறைய தீர்ந்து விட்டது.

கடம்பன் கவலைப் பட்டான். அவனுடைய நினைவெல்லாம் தேவரைப் பற்றித்தான்.

மிச்சமிருந்த அவலை அரை குறையாக சாப்பிட்டு விட்டு ‘நாளைக்கு என்ன செய்வது?’ என்ற சிந்தனையுடன் இருவரும் உறங்கவாரம்பித்தனர்.

உறக்கத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மயக்கநிலை.

‘மச மச’ வென்று ஏதோ பேச்சுக்குரல்; கனவில் கேட்பதைப் போல்.

தேவர் ‘விசுக்’கென்று எழுந்து உட்கார்ந்தார். காதைத் தீட்டிக் கொண்டு உற்றுக் கேட்டார்.

அதே சமயம் மின்னல் வேகத்தில் கடம்பனும் வீச்சரிவாளைக் கையில் எடுத்துக் கொண்டு நாற்புறமும் கூர்ந்து நோக்கினான்.

தெற்குப் புறத்தில் இருந்து தான் சப்தம் வருகிறது. பொளர்ணமி நிலவின் பால் போன்ற வெளிச்சத்தில் நீண்ட தூரம் பார்க்க முடிந்தது.

கண்களை அகல விரித்தபடி வியப்பும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் கூவினார், “நாம் எதிர்பார்த்திருந்தவர்கள் தான்!”

“யார்? உலகநாதத் தேவர் குழுவா?” கடம்பன் கேட்டான்.

“ஆம்! நம் கவலை தீர்ந்தது. உணவுப் பொருட்களைப் பற்றிய பிரச்னை முடிந்தது. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இங்கு தங்கலாம்…”

அவரையறியாமலே வார்த்தை வெளிவந்து விட்டது. நறுக்கென்று உதட்டைக் கடித்துக் கொண்டார்.
கண்களில் வியப்புப் பொங்க அவரை ஏறிட்டுப் பார்த்தான் கடம்பன்.

இதற்குள் புதிய குழு காட்டுப் பகுதிக்குள் இருந்து திட்டுப் பிரதேசத்திற்குள் புகுந்தது. அவர்களுக்கும் ஆச்சரியம் காத்திருந்தது.

அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தவர்களுக்கு, தங்களுக்கு முன்னரே வேறு குழு வந்து தங்கியிருக்கிறது என்று தெரிந்ததும், அது யார் தலைமையில் உள்ள குழு என்பதைத் தெரிந்து கொள்ள மிக வேகமாக வந்தார்கள்.

குழுவின் தலைவரைப் பார்த்ததும் சசிவர்ணத் தேவர் பாய்ந்து சென்று அவரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

உலகநாதத் தேவர் வியப்பால் விரிந்த கண்களுடன் தேவரைப் பார்த்து, “என்ன சசி! ஏன் இப்படி இளைத்துப் போயிருக்கிறீர்? உடம்புக்கு என்னாச்சு? கடம்பனைத் தவிர மற்றவர்கள் யாரையும் காணவில்லையே ஏன்? என்ன நடந்தது? என்று கேள்வி மேல் கேள்வி போட்டுத் திக்குமுக்காட வைத்தார்.

தேவர் நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார்.

“ஆமாம்! உங்கள் இருவரின் சரக்குகளும் எங்கே?”

“முதலியார் வசம் கொடுத்தனுப்பி விட்டேன். இன்னும் நாலைந்து நாட்களில் அவர்கள் வந்து சேரலாம் என நினைக்கிறேன். உணவுப் பொருள் அதுவரை….. ” என்று முடிப்பதற்குள், “அட! இது தானா பெரிய கவலை! கவலைப்படாதீர். பத்து நாட்களுக்குப் போதிய உணவுப் பொருட்களைத் தந்து விட்டு போகிறேன். உடல் இருக்கும் நிலையில் இரண்டு வார காலமாவது இங்கு தங்கி விட்டுப் புறப்படுவது தான் நல்லது” என்று கூறி தமது குழுவில் இருந்த ஒருவரை அழைத்தார்.

“சரக்குப் பொதிகள் எல்லாம் இறக்கியாகி விட்டதா?”

“ஆம்!”

“இரண்டு பேருக்கு பத்து நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பிரித்தெடுத்துக் கடம்பன் வசம் கொடுத்து விடு!” என்று உத்தரவிட்டார்.

அவருடைய குழுவில் மொத்தம் பதினைந்து பேர், பத்து மாடுகள்.

இரவு உணவை முடித்துக் கொண்டு நிலவொளியில் அமர்ந்து அனைவரும் பற்பல கதைகளையும் பேசிக் குதூகலமாக நேரத்தை கழித்தனர்.

அருணோதயத்திற்கு இரண்டு நாழிகை முன்னதாகவே புதிய குழுவினர் எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டுப் பயணத்தைத் துவக்கி விட்டார்கள்.

மீண்டும் தனிமை. கடம்பனின் கனிவு நிறைந்த பணிவிடையால் ஜுரம் சன்னஞ்சன்னமாகக் குறைந்து வந்தது. எனினும் உடலில் முன்பு இருந்த தெம்பில்லை.

பகல் நேரத்தில் உடை மரத்தின் நிழலில் இருந்து பொழுதைக் கழித்து விட்டு இரவில் திட்டின் நடுப்பகுதிக்கு வந்து உறங்கி….

சரியாக ஏழு நாட்கள் கழிந்து முதலியார் குழுவுடன் திரும்பி வந்தார்… அதுமட்டுமல்ல..

செய்தி தெரிந்து தேவரின் மனைவியும், கடம்பனின் மனைவியும் அதே குழுவுடன் சேர்ந்து வந்திருந்தார்கள்.

மனைவியைக் கண்டதும் தேவர் முகத்தில் இலேசான கடுமையுடன், “எனக்கு என்ன ஆகிவிட்டது.! நன்றாகத் தானே இருக்கிறேன். குழந்தைகளைத் தனியாக விட்டு விட்டு ஏன் இப்படி அரக்கப்பரக்க ஓடி வந்தாய்? குழந்தைகள் சவுக்கியமாக இருக்கிறார்களா? ஊர் நிலவரம் எப்படி?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டார்.

நாகு என்ற நாகலிங்கம் அவரது மூத்த மகன். வேறொரு வணிகக்குழுவுடன் சேர்ந்து வடக்கே போயிருந்தான். கடுமையாகப் பேசிவிட்டாலும் உள்ளூர அவருக்கு மகிழ்ச்சி தான்.

அடுத்தவர்கள் என்னதான் விழுந்து விழுந்து பார்த்தாலும் கட்டிய மனைவி கவனிப்புக்கு ஈடாகுமா?

செல்லம்மாள் ‘அவர்’ பேசியதைப் பற்றி வருத்தப் படவில்லை.

‘எப்படியிருந்த உடம்பு! இப்படித்துரும்பாக இளைத்துப் போய் விட்டீர்களே! ஜுரம் ஆரம்பித்ததுமே எப்படியாவது வீட்டுக்கு வந்திருக்கக் கூடாதா? அல்லது உடனே தகவல் அனுப்பியிருக்கக் கூடாதா? நல்ல வேளை! தொண்டியில் இருந்து பார்த்திபனூர் வழியாக சிவகாசிக்குப் புறப்பட்டு வந்த குழுவில் ஓர் ஆள் மூலமாக பங்காரு செட்டியார் தான் தகவல் அனுப்பி வைத்தார். அவர் மகராசனாயிருக்க” என்று உள்ளூரக் கவலையோடும், பரிவோடும் பேசினாள்.

கடம்பன் ‘விசுக்’கென்று முன்னால் நகர்ந்து வந்து “அத்தாச்சி! அண்ணா சொன்னதைப் பற்றி எதுவும் நினைக்காதீர்கள்! அண்ணாவுக்குத் துணிச்சல் அதிகம். அண்ணாவுக்கு உடம்பு குணமாகும் வரை நீங்கள் இங்கு தங்குவது தான் நல்லது. உங்களுக்குத் தேவையான வசதியை நான் செய்து தருகிறேன்.” என்று முத்தாய்ப்பாகப் பேச்சை முடித்தான்.

தேவரும் கடம்பனும் கொடுத்திருந்த சரக்குகளை விற்றது தொடர்பான கணக்குகள் ரொக்கம் ஆகியவற்றை முதலியார் தேவரிடம் கொடுத்தார்.

தேவர் பணத்தை வாங்காமல் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.
‘கணக்கு வழக்குகள் சரியாயில்லையோ? அல்லது இலாபம் குறைவாயிருக்கிறது என்று நினைக்கிறாரோ’ என்ற முதலியார் கவலைப்பட்டார்.

சிறிது நேரத்தில் மெளனம் கலைந்து, முகத்தில் புன்னகையுடன், “முதலியாரே! நீங்கள் கவலைப்படுவது எனக்குப் புரிகிறது. காரணம் அதுவல்ல. இத்தனை வருடங்களாக அண்ணன் – தம்பி போல் பழகிய உங்கள் மீது நான் சந்தேகங் கொண்டால் அது நீச……” என்று பேச்சை முடிப்பதற்குள் முதலியார் தேவரின் வாயைப் பொத்தி,

“போதும், தேவரே இந்த மாதிரிப் பேசி என்னைப் புண்படுத்த வேண்டாம். நான் சிந்தனை வயப்பட்டது பணத்தைப் பெற்றுக் கொள்ளாததற்குக் காரணம் என்னவாயிருக்கக் கூடும், என்பது பற்றித் தான்”, என்று கூறினார்.

புன்னைகை மாறாமலேயே தேவர் கூறினார், “முதலியாரே! இந்தப் பணத்தை வைத்து இப்பொழுது நான் என்ன செய்வது? உடல் குணமாக எப்படியும் பத்துப் பதினைந்து நாட்களாவது ஆகும். அது வரை பாதுகாப்பற்ற இந்த இடத்தில் பணத்தை வைத்திருப்பது ஆபத்து. மாறாக, பதினைந்து நாட்கள் வரை ஒரு சுற்றுக்கு விட்டால்…..”

“புரிகிறது தேவரே! இந்தப் பணத்தைக் கொண்டு போய் அழகன்குளத்தில் மறுகொள்முதல் செய்து வரும்படி சொல்கிறீர். அவ்வளவு தானே!”

“ஆம் ஆம்! அதே தான் அது மட்டுமல்ல. சென்ற முறை செய்தது போல் உம்முடைய சரக்குடன் அதைக் கொண்டு செல்ல வேண்டும்.”

மகிழ்ச்சியுடன் அதை ஒப்புக் கொண்டார் முதலியார்.

இரவு கழிந்தது. பொழுது விடிந்தது. ஆதவன் தன் பொன்னிறக் கதிர்களால் பூமாதேவியின் மென்மையான உடலை தழுவித் தடவிச் சூடேற்றினான். உலக மொத்தமும் விழித்துக் கொண்டது.

முதலியாரின் குழு கிழககுத் திசையில் பயணத்தை மேற்கொண்டது.

கடம்பன் அதிகாலையிலேயே எழுந்து விட்டான்.

உணவுப் பொருட்கள் அனைத்தையும் மனைவியிடம் விவரம் சொல்லி ஒப்படைத்தான்.

“மஞ்சு! நான் வரும் வரை அத்தாச்சிக்குக் கூடமாட ஒத்தாசையாக இருந்து தேவரைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் சற்று வெளியே போய் விட்டு வருகிறேன்”. என்று சொல்லி விட்டு வீச்சரிவாளை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

பஞ்சவர்ணம் தலையை ஆட்டிக் கொண்டாள். எங்கு போகிறான் என்பதைப் பற்றிக் கேட்கவில்லை. கேட்டால் என்ன நடக்கும் என்பது அவளுக்குத் தெரியும்.

பொழுது உச்சியில் இருந்து மேற்கில் நகர்ந்தது. வெயிலின் வெம்மை சற்றுக் குறைந்தது.

வியர்க்க விறுவிறுக்க, தலையில் ஒரு கட்டு, நீண்ட மரக் கம்புகள். வியர்வையைத் துடைத்துக் கொண்டே, “மஞ்சு! எல்லோரும் சாப்பிட்டு விட்டீர்களா? அண்ணா சாப்பிட்டாரா? சீக்கிரம் எனக்கு உணவு எடுத்து வை. சாப்பிட்டு விட்டு நாம் இருவரும் சற்று வெளியே போய் வர வேண்டும்.

சாப்பிட்டு முடிந்ததும் இருவரும் கிழக்குத் திசையில் புறப்பட்டுச் சென்றார்கள்.

சுமார் அரைக் காத தூரம் நடந்த பின் நல்ல மணற்பாங்கான இடம் வந்தது. நிறைய பனை மரங்களும் உடை மரங்களும் இருந்தன.

பனை ஓலைகளை வெட்டி வரிசையாக மிதியல் போட்டு வைத்திருந்தான் கடம்பன். வெயிலில் ஓரளவு காய்ந்திருந்தது.

சுமக்கும் அளவுக்குக் கட்டாகக் கட்டி இருவரும் சுமந்து வந்தார்கள். மறுநாளும் சுமந்தார்கள்.

மூன்றாம் நாள் நாலைந்து பேர் தங்கக் கூடிய அளவில் ஓர் ஓலைக் குடிசை கம்பீரமாகக் காட்சியளித்தது.

தேவர் மகிழ்ச்சியால் பூரித்துப் போனார். செல்லம்மாள் மூக்கின் மேல் விரலை வைத்தாள். பஞ்சவர்ணம் முகத்தில் பெருமிதம் பொங்க, உதட்டில் புன்னகை தவழ ஓரக் கண்ணால் கணவனைப் பார்த்தாள்.

உடை மரத்தைச் சுற்றி தாறு மாறாக வைக்கப்பட்டிருந்த பொருட்களை புதிய குடிசை வீட்டுக்கள் பாந்தமாக அடுக்கி வைத்தாள் பஞ்சர்ணம்.

நாலைந்து நாட்கள் வரை அமைதியாகக் கழிந்தது. கடம்பன் உடை மரத்தையும் குடிசையையும் சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி தரையை சமப்படுத்தினான். பஞ்சவர்ணம் குப்பைகூளங்களை பெருக்கிச் சுத்தப் படுத்தினாள். குடிசை புதுப் பொலிவு பெற்றது.

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்