Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2011
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,638 முறை படிக்கப்பட்டுள்ளது!

குழந்தைகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

இந்தக் கேள்வியை ஆழ்ந்து சிந்தித்தால் நமக்கு கிடைப்பது ஏமாற்றமே. குழந்தைகள் பிறக்கின்றனர், வளர்கின்றனர். மனிதர்களாகின்றனர். இதில் என்ன இருக்கிறது என்று கருதுபவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகள் பழக்கப்படுத்தப்படாத ஜீவன்கள். அவர்களை நாம் தான் பழக்கப்படுத்தவேண்டும். இந்த சமூகத்தில் வாழ்வதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகள் தம் கனவை அடைகாத்து பொரிக்கும் சாதனங்களாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகளை தங்களுடைய பிற்கால வாழ்க்கைக்கான நிரந்தரவைப்பு நிதியாகச் சிந்திப்பவர்களும், அன்றாடச் செலவுக்கான முதலாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள். குழந்தைகளைச் சுமையாகக் கருதுபவர்களும் கடவுளாகப் போற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி எல்லாவிதமான சிந்தனைகளும் இருந்தாலும், இப்படி சிந்திக்கிற அனைவருமே குழந்தைகளாக இருந்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. குழந்தைமை என்கிற அற்புத உலகத்தில் கணந்தோறும் வாழ்வின் அழுத்தத்தைப் பருகியவர்கள்தான் அனைவரும். ஏனெனில் குழந்தை மானுடத்தின் அபூர்வப்பரிசு. குழந்தைகளின் செயல்பாடுகளில் கோடிப்புதையல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுகொள்கிற பொறுமை, கவனம், அக்கறை பெரியவர்களுக்கு இல்லை. விரட்டுகிற வாழ்வின் நொடிகளின் பின்னே அரக்கப்பரக்க ஓடிக் கொண்டேயிருக்கிறோம். எப்போதும் பொருளாதார வாழ்வை மட்டுமே மனதில் நிலைநிறுத்திக்கொள்கிறோம். வாழ்தலின் இன்பத்தை உணர்வதேயில்லை.

வாழ்தலின் இன்பமாக குழந்தைகளின் சிறகுகள் விரிந்து பறந்துகொண்டேயிருக்கின்றன. அந்தக் குழந்தைகளின் சிறகுகளில் முதல் காயத்தை சிறுவயதிலேயே பள்ளிக்கு அனுப்பி உண்டுபண்ணுகிறோம். பள்ளியிலும், வீட்டிலும் அதன்பிறகு சொன்னபடி சவுக்கு சொடுக்க ஆரம்பித்து விடுகிறது. பெரியவர்களுக்கு தெரியாத எதுவும் குழந்தைகளுக்குத் தெரியாது. எனவே பெரியவர்களின் சொல்படி கேட்டு நடந்தால் போதும் என்ற அதிகாரம் தன் கொடுங்கரங்களை வீசி குழந்தைகளை அடக்கத்துடிக்கிறது. பள்ளிகள் குழந்தைகளின் அகவியமான, புறவியமான சுதந்திரத்தை ஒடுக்குவதிலேயே முனைப்பாக இருக்கின்றனர். திட்டமிடப்பட்ட முறையில் குழந்தைகளின் படைப்பாக்கத்தைச் சிதைக்கின்றனர். விருப்பங்களை. ஆசைகளை. கண்டுணர்தல்களை மறுக்கின்றனர். சமூகமும் பெரியவர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. பெரியவர்களின் இந்த உலகில் குழந்தைகளுக்கான பிரத்யேக வெளியே இல்லை.

குழந்தைகளுக்கான கதை வெளி இல்லை. பாட்டி, தாத்தாக்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தாயிற்று இல்லையென்றால் புறக்கணிப்பின் துயரத்தில் தனியே வாழ விதிக்கப்பட்டுவிடப்பட்டுள்ளனர். பெரியவர்களைப் போலவே குழந்தைகள் பேசித் திரிகிறார்கள். அதைப்பார்த்துவிட்டு நமது குழந்தைகளிடம் அப்படி பேசச் சொல்லிப் பெருமைப்படுகிறோம் இல்லையென்றால் போலி வாழ்வின் பிரதிபிம்பமாகத் திரையில் வரும் கதாநாயகர்களின் பஞ்ச் டயலாக்கை பேசச் சொல்லிப் பூரித்துபோகிறோம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களிடம் எங்கள் வீட்டில் ஒரு அபூர்வபொம்மை இருக்கிறது. அது ரஜினியைப்போல பேசும். பிரபுதேவாவைப்போல ஆடும், குறள் ஒப்பிக்கும், குட்டிக்கரணம் போடும், ஆட்றா ராமா, ஆட்றா ராமா, சலாம் சொல்றா மாமாவுக்கு….  வாட் இஸ் யுவர் நேம்? மாமாட்ட சொல்றா.. ராமா.. என்று குழந்தைகளின் உலகத்திற்குள் அத்துமீறி நுழைகிறோம்.

அந்த உலகத்தின் நுண்ணுணர்வுகளையும், அழகையும், அபூர்வங்களையும், விந்தைகளையும் அழிக்கிறோம். தங்கள் உலகத்திற்குள் அனுமதியின்றி நுழைகிற எவரையும் எதிர்த்துக் கலகம் செய்கின்றன குழந்தைகள். அந்த கலகத்திற்கான காரணங்களைப் புரிந்து கொள்ளலாம். கொடிய வன்முறையெனும் ஆயுதங்களால் அவர்களை அடக்கிஒடுக்குகிறோம். பள்ளி, வீடு, சமூகம் என எங்கு சென்றாலும் குழந்தைகள் தங்கள் சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவே உணர்ந்து கொள்கின்றனர். பரிசுத்தமான தேவமலர்களாக பார்த்துக் குலுங்க ஆவல் கொண்ட அவர்கள் மனம் கூம்பி, சோம்பி விடுகிறது. குழந்தைமையில் ஏற்பட்ட காயங்களின் வடுக்களோடேயே அவர்கள் வளர்கின்றனர். தங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதையே அவர்கள் மற்றவர்களுக்குத் தருகிறார்கள். தாங்கள் என்ன அனுபவித்தார்களோ அதையே மற்றவர்கள் அனுபவிக்க விடுகிறார்கள். தாங்கள் என்ன ருசித்தார்களோ அதையே மற்றவர்களுக்கு ருசிக்கக் கொடுக்கிறார்கள்.

கசப்பின், வெறுமையின். விரக்தியின் துன்பத்தின் ஊற்று நீரே அவர்களுடைய உள்ளத்தில் ஊற ஆரம்பிக்கிறது. அதன் ஒவ்வொரு துளியையும் சமூகம் ருசிக்கும் போது புதிய இளந்தலை முறைகளை சபிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக இருந்து இளையதலைமுறையினரான இளைஞர்கள் சிரிக்கிறார்கள் கசப்புடன். முதலில் குழந்தைகளின் உலகத்தைப் புரிந்து கொள்வது, மிகப்பெரிய சவால். அந்த சவாலை பெரியவர்கள் முதலில் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். குழந்தைகளும் குட்டி மனிதர்களே என்று உணர்ந்து கொண்டாலே அவர்களை மதிக்கவும், அவர்கள் உலகத்தைப் புரிந்து கொள்ளவும் ஆரம்பித்து விடுவோம். குழந்தைகள் தங்களுடைய குழந்தைமையின் இனிமையை இன்பத்தை. பூரணமாக அனுபவிக்க உதவவேண்டும். அதற்கேற்ற குழந்தைகள் சார்ந்த நடவடிக்கைத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

குழந்தைகளின் உளவியல், புரிந்து கொள்ளும் ஆற்றல், கண்டுணரும் திறன், கற்றுக்கொள்ளும் வேகம், உணர்வுகளின் வெளிப்பாடு, கற்பனைத்திறன், அனுபவங்களின் சேகரிப்பு, பகுப்பாய்வு என்று குழந்தைகளின் உலகத்திற்குள் ஊடாடுகிற ஒரு ஆரோக்யமான மனப்பாங்கு தேவையிருக்கிறது. இத்தகைய குழந்தைகள் உலகத்திற்குள் காணாமல்போன தொலைந்துவிட்ட கதைகள், விளையாட்டுகள், படைப்பாகத்திறன்கள் எல்லாவற்றையும் மீட்டெடுக்க வேண்டியதிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிற குழந்தைகளின் பிரபஞ்சத்தில் இப்போது தெருக்கள் இல்லை, நிலாக்கள் இல்லை, ஆற்றங்கரை, குளத்தங்கரை இல்லை, கூடவிளையாடும் நண்பர்கள் இல்லை, பட்டுப்பூச்சிகள் இல்லை, வண்ணங்களை வீசிசெல்லும் வண்ணத்துப்பூச்சிகள் இல்லை, புரண்டு உருண்டு விளையாட புல்வெளிகள் இல்லை, அலைந்து திரிய காடுமேடுகள் இல்லை, ஆச்சரியப்படுத்தும் அருவிகளோ, அதிசயம் கொள்ளவைக்கும் மலைகளோ இல்லை, குருவிகளும், காக்கைகளும் இல்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்டு குழந்தைகளின் மனம் அலறுகிறது, ஏங்குகிறது.

இப்போது இருப்பதெல்லாம் மொழியின் சூட்சுமம் புரியத் துவங்கும் முன்பே, பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சுதந்திரத்தைச் சுவைக்கத் தொடங்குமுன்பே, ஒழுக்கம், ஒழுங்கு, எப்போதும் பூட்டப்பட்ட வீடுகளுக்குள் சிறை, எப்போதும் தின்றுகொண்டேயிருக்க பண்டங்கள். குழந்தைகளையே தின்பண்டங்களாகத் தின்று கொண்டிருக்கும் தொலைக்காட்சிப்பெட்டிகள், ஒவ்வொரு நாளும் ஒரு புத்தம் புது நாளாக மலர வேண்டிய குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் தண்டனையாக மாறிவருகிற அவலம். தூங்கி விழித்ததுமே ஹோம் ஒர்க், பரீட்சை, மார்க், ஏச்சு, பேச்சு, தண்டனை, டாக்டர். என்ஜினீயர், அமெரிக்கா என்று கனவுகளின் சுமை, பர்ஸ்ட் ரேங்க், நூற்றுக்கு நூறு (ஒருமார்க் கூட குறையக்கூடாது) என்று வாழ்வின் முழு அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டே குழந்தைகள் வளர்கிறார்கள். இன்றைய நிலைமையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி வருபவர்கள் குழந்தைகளே.

ஆனால் குழந்தைகளின் உலகம் எது? படைப்பாக்கம் பொங்கித் ததும்பும் உலகின் சொந்தக்காரர்கள், எல்லாக் குழந்தைகளும் சிறந்த புனைவியலாளர்கள். சிறந்த கதைசொல்லிகள், சிறந்த கண்டுபிடிப்பாளர்கள், சிறந்த உரையாடல்காரர்கள், சிறந்த கேள்வியாளர்கள், சிறந்த விளையாட்டுக்காரர்கள். கனவின் இசை மீட்டும் கந்தர்வ உலகத்தில் பறந்து திரியும் பட்டாம்பூச்சிகள். மானுட இனத்தின் அபூர்வ மலர்கள். அறிதலின் ஆனந்தத்தை முழுமையாக உணர்ந்தவர்கள் அற்புத உணர்வு பொங்கிப்பிரவகித்துக் கொண்டேயிருக்கும் படைப்பாளிகள் கனவுலகவாசிகள், சமூகமாற்றத்தின் வித்துகள், லட்சிய வீரர்கள், எதிர்காலத்தின் புத்திரர்கள், இந்த பூமியின் வண்ணக் கனவுகள். குழந்தைகளின் உலகத்திற்குள் முதல் அடி எடுத்துவைக்கத் துவங்குவோம். வாருங்கள்…

நன்றி: உதயசங்கர் – இளைஞர் முழக்கம்
தொடர்பு முகவரி: 57/21, அருணோதயா காம்ப்ளக்ஸ் 2வது மாடி,ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, பெரியமேடு, சென்னை – 03. தொலைபேசி: 044-25611348    ஆண்டு சந்தா: ரூ.75