Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2009
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,725 முறை படிக்கப்பட்டுள்ளது!

10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 2

தென் நாட்டின் சூழ்நிலை

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பாண்டிய நாடு தாயாதிச்சண்டையாலும், ஆட்சிப் போட்டியாலும் தனது தனித்தன்மையை இழந்து சோழ அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

வாரிசுப் போட்டியில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் தங்களுக்கு ஆதரவாக வெவ்வேறு அரசுகளிடம் உதவி கோரினர். விளைவு?
சேரநாட்டுப்படை, சோழர்படை, கொங்கு நாட்டுப்படை, இலங்கைப்படை, இத்தனையும் போதாதென்று பிளவுபட்டு நின்ற பாண்டியர்களின் படை இவ்வளவும் ஒன்றுக்கொன்று மாறி மாறிப் பொருதிக் கொண்டதன் விளைவாக தென்னகத்தின் அமைதி சீர்குலைந்தது.

எங்கு நோக்கினாலும் குழப்பம் தலை விரித்தாடியது. மக்களிடையே அச்ச உணர்வு தலை தூக்கியது. சமூக விரோதிகளால் கலவரத்திற்கு வித்திடப்பட்டது.

மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை. விவசாயிகள் பருவத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை. பலதரப்பட்ட தொழிலாளிகளும் கைவினைஞர்களும் தங்கள் தொழிலை நிம்மதியாகச் செய்ய முடியவில்லை.

யாரும் ஊர்விட்டு ஊர் போக முடியாது. ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து அடுத்த நாட்டின் எல்லைக்குள் பிரவேசிக்க முடியாது.
இராணுவ வீரர்கள் கண்குத்திப்பாம்பாக இருந்து இவர்களை மடக்குவார்கள்.

*

“நீ சேரநாட்டு ஒற்றனா?”
*

“நீ முழிக்கிற முழியைப் பார்த்தாலே தெரிகிறதே! நீ பாண்டிய நாட்டு ஒற்றன் தானே?”
*

“பொய் சொன்னால் தொலைந்தாய்! நீ சோழ நாட்டு ஒற்றன் என்று உன் முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கிறதே!”

என்று கேள்விக் கணைகளால் திணறடிப்பார்கள்.

பயத்தில் இசகுபிசகாக ஏதாவது உளறிக் கொட்டினால் சிறைக்குள் தள்ளி விடுவார்கள்.

இதனால் தைரியசாலிகள் கூட தனியே வெளியில் போக அஞ்சுவார்கள். அந்த அளவு நாட்டின் நிலைமை சீர்கெட்டுப் போய் இருந்தது.

இராணுவம், அரசாங்கத் தூதர்கள் தவிர சாமானிய மக்களின் நடமாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்தது.

இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையிலும மக்களில் ஒரு பிரிவினர் எவ்வித பயமுமின்றி தாங்கள் விரும்பிய இடமெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

ஊர் விட்டு ஊர், ஒரு நாட்டு எல்லை கடந்து மறு நாட்டுக்குள் ..

இவ்வாறு எவ்வித கட்டுப்பாடுமின்றி வலம் வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் சென்ற இடமெல்லாம் மக்களும் சரி, அரசு அதிகாரிகளும் சரி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

யார் இந்த அதிருஷ்டசாலிகள்? அஞ்சா நெஞ்சம் படைத்த இந்த மாவீரர்கள் யார்?
வேறு யாருமல்ல, வணிகர்கள் தான். கணக்கற்ற கட்டுப்பாடுகளையும், தடைகளையும் கண்டு கொள்ளாமல் துணிச்சலுடன் ஊர்வலம், நகர்வலம், நாட்டுவலம் வரும் வீரர்கள் இவர்கள் தான்.

‘சாதாரண வணிகர்களுக்கா இத்தனை மதிப்பு? ஏனைய அனைத்துத் தரப்பு மக்களையும் கிடுக்கிப்பிடியில் வைத்திருக்கும் இராணுவ வீரர்கள் இந்த வணிகர்களை மட்டும் கட்டுபாடற்ற வகையில் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பது ஏன்? என்ற கேள்வி நியாயமானது தான். அறிவார்ந்த கேள்வி.

இந்தக் கேள்விக்கு விளக்கமாகவும், சற்று விரிவாகவும் பதில் கூற வேண்டியுள்ளது. ‘போர்’ அடிப்பது போல தெரியும். வாசகர்கள் முணுமுணுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்.

இந்த ஆய்வின் மையக் கருத்தே இந்த ஊரின் ‘உருவாக்க மூலம்’ என்பது பற்றித் தான். ஊர் தோன்றியது எப்போது? எவ்வாறு? எவ்வித சூழ்நிலையில்? என்பதும் இதனுள் அடங்கும்.

இந்த ஆய்வின் ஜீவனாடியே இந்தக் கேள்வியின் பதிலில் தான் அடங்கியுள்ளது. போகப் போகத் தான் இது புரியும். இப்பொழுது விஷயத்துக்கு வருவோம்.

ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போர்தொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வெறுமனே ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான படைவீரர்களை மட்டும் அனுப்பி விட்டு அல்வாத்துண்டைப் போல் அந்த நாட்டைவிழுங்கி விடலாம் என்று நினைப்பது நடக்க முடியாத விஷயம்.

முதற்கட்டமாக சில பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்து முடிக்க வேண்டும்.

முதலில் போர்ப்படையில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கெடுக்க வேண்டும். படை போர் மேற் சென்றால் திரும்பி வர ஒரு மாதமோ, பல மாதங்களோ பிடிக்கும். அது வரை படை வீரர்களுக்குத் தேவையான உணவு, ஆயுதம், மற்றம் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் அனைத்தும் சித்தம் செய்து படை புறப்படும போதே அவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

அதுமட்டுமல்ல. இராணுவத்தில் இரண்டு வகையுண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக நிலையாக இருக்கும் நிரந்தர இராணுவம், அவசரகோலமாகத் திரட்டப்படும் தற்காலிக இராணுவம் என இருவகைப்படும்.

பிந்தியதை துணை இராணுவம் என்றும் கூறுவர். இந்தப் புதிய படையில் மக்களின் பலதரப்பட்ட பிரிவுகளில் இருந்தும் வயது வந்த வாலிபர்களைத் திரட்டுவார்கள். இவர்களுக்குப் போர் அனுபவம் இருக்காது. ஒரு மாதமோ இரண்டு மாதமோ போர்ப்பயிற்சி கொடுத்து துணை இராணுவம் என்று பெயர் சூட்டி இவர்களையும் நிரந்தர போர்ப்படையுடன் சேர்த்து அனுப்பி வைப்பார்கள்.

இப்பொழுது கூடுதல் சுமையாக இந்த துணை இராணுவத்துக்கும் உணவுப் பண்டங்கள் சேகரித்து அனுப்ப வேண்டும்.
இதில் சிக்கல் என்வென்றால் புதிதாகப் படைக்கு ஆட்கள் சேர்க்கும் போது குறிப்பிட்ட ஓர் இனத்திலோ, பிரிவிலோ இருந்து ஆட்கள் கிடைப்பது கஷ்டம். விவசாயி, நெசவாளி, கருமார், தச்சர் மற்றும் பற்பல தொழிலில் உள்ளவாகள் ஆக அனைத்துப் பிரிவுளில் இருந்தும் ஆட்கள் எடுக்கப்படுவார்கள்.

இத்தனை பிரிவுகளில் இருந்தும் உழைப்பாளிகளான ஆண்கள் வெளியேறிவிட்டால் அந்தந்தத் தொழில்கள் ஓரளவு ஸ்தம்பித்துப் போகும்.

இந்நிலையில் படைகளுக்குத் தேவையான பொருட்களை எங்கிருந்து திரட்டுவது?

ஆள் பற்றாக்குறையில் உள்நாட்டில் உற்பத்தி குறைந்தால் சாமானிய மக்களுக்கு அன்றாடத் தேவைக்கான பொருட்கள் எங்கிருந்து கிடைக்கும்? யார் கொடுப்பது?

இது ஒரு சிக்கலான பிரச்னை. நிரந்தரப்படை, துணைப்படை, பொது மக்கள் அத்தனை பேருக்கும் உணவுப் பொருளும், அன்றாடத் தேவைப் பொருள் அத்தனையும் ஏக காலத்தில் ஒரே மொத்தமாக சேகரித்துக் கொடுக்க வேண்டியது தவிர்க்க முடியாத பொறுப்பு அரசுக்கு ஏற்படுகிறது.

இதில் அலட்சியமாக இருந்தால் போர்ப்படையில் அதிருப்தி நிலவும். உள்நாட்டில் கலகம் ஏற்படும்.

இராணுவமும் மக்களும் ஒத்துழைக்காவிட்டால் அரசு எங்கே? ஆட்சி எங்கே?

இந்தப் பேராபத்தைத் தவிர்க்க வழி என்ன?

மேலே விவரிக்கப்பட்டுள்ள விஷயம் ஆக்கிரமிப்பாளருக்கு மட்டுமல்ல, ஆக்கிரமிக்கப்படும் நாட்டுக்கும் இது பொருந்தும்.
தாக்குதல் திறன் இருந்தால் கோட்டையை விட்டு வெளியேறி எதிர்த்தாக்குதல் நடத்துவார்கள். இல்லையேல் கோட்டைக்குள்ளேயே இருந்து கொண்டு தற்காப்புப் போரில் ஈடுபடுவார்கள். அப்பொழுது முற்றுகைக்கு உள்ளாகும். கோட்டைக்கு வெளியில் இருந்து உணவுப்பண்டங்கள் வருவதை எதிரிப்படை தடுத்து நிறுத்தி விடும். பட்டினி போட்டால் பணிந்து விடுவார்கள் என்பது அவாகள் எண்ணம்.

இவ்வாறான சமயத்தில் கோட்டைக்குள் போதுமான உணவுப்பொருட்கள் இருந்தால் முற்றுகையை சமாளிக்க முடியும். எதிரிகளிடம் உணவுப் பொருட்கள் தீர்ந்து விட்டால் முற்றுகை பிசுபிசுத்து விடும்.

ஆக இருவித அரசுகளின் வெற்றியும் தோல்வியும் உணவுப் பொருட்களையே சார்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் எங்கு கிடைக்கும்? யார் கொடுப்பார்கள்? எங்கிருந்து வந்து கொடுப்பார்கள்?

இதற்கொல்லாம் விடை காண வேண்டுமென்றால் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு நாகபட்டினம் வரை ஒரு நடைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

இந்த சரித்திரம் ஆரம்பிக்கக்கூடிய காலகட்டத்தில் இப்பாரத கண்டத்தில் பல்வேறு விதமான வணிகக்குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இவை ஒவ்வொன்றும் தத்தமக்குரிய வியாபாரப் பொருட்களையும், வணிக மார்க்கங்களையும் கொண்டிருந்தன.
இவற்றுள் குறிப்பிடத்தக்கவை

*

பரதேசி
*

நானாதேசி
*

திசையாயிரத்து ‌ஐநூற்றுவர்
*

பதினெண் விசயத்தார்
*

மணி கிராமத்தார்
*

நகரத்தார்

இவற்றுள் முதல் மூன்றும் பன்னாட்டுக் குழுக்கள். மற்றவை உள்நாட்டுக்குள்ளேயே செயல்படுபவை. மிகச்சிறிய குழுக்களும் உண்டு.
இந்தக் குழுக்கள் தமது சக்திக்கேற்ப உணவுதானியங்களை உள்நாட்டுப் பகுதியிலும், இதர அத்தியாவசியப் பொருட்களை வெளி நாட்டுத் தொடர்புடைய துறைமுகங்களிலும் கொள்முதல் செய்து அவற்றை சந்தைப் படுத்துவதற்காக அவரவருக்குரிய வணிக மார்க்கங்களில் புறப்பட்டு விடுவார்கள்.

இவ்விதமான வணிகக் குழுக்களிடம் அரசு நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொண்டு இராணுவத்தின் தேவைக்குக் கொடுத்தது போக மீதியை மக்களுக்கு வினியோகம் செய்யும்.

எதிரும் புதிருமான இரண்டு பகை நாடுகள் ஒரே வணிகக் குழுவிடம் தமக்கு வேண்டியவற்றை வாங்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு.

பகை, நட்பு என்பதையெல்லாம் வணிகக் குழுக்கள் கண்டு கொள்வதில்லை. தங்கக் காசுகள் கிடைத்தால் அவர்கள் யாருக்கும் சரக்கு கொடுப்பார்கள். இது வியாபார தர்மம்.

அரசுகளும் இதைப் பெரிது படுத்துவதில்லை. இதைக் காரணம் காட்டி வணிகக் குழுக்களுக்கு நெருக்கடி கொடுத்தாலோ, அல்லது கட்டுப்பாடுகள் விதித்தாலோ அனைத்து வணிகக்குழுக்களும் சேர்ந்து அந்த அரசைப் புறக்கணித்து விடுவார்கள்.

இதனால் எந்த அரசும் வணிகர்களைப் பகைத்துக் கொள்ளத் துணியாது. தங்கு தடையின்றி வணிகக் குழுக்கள், வர்த்தகர்கள் நடமாடுவதற்கு இது தான் காரணம்.

இப்பொழுது பெரியவணிகக் குழுக்களை விட்டு விட்டு சிறிய குழுக்களைக் கவனிப்போம். ஏனெனில் நமது ஆய்வுக்கும், கதை ஓட்டத்திற்கும் அவர்கள் தான் முக்கியம். அவர்களை வைத்துத்தான் இந்த ஊரின் தலைவிதி அமைந்துள்ளது.

பத்துப்பன்னிரெண்டு பேர்கள் – வியாபாரிகள் – ஒன்றாகச் சேர்ந்து கொள்வார்கள். அவரவர் தனித்தனி கொள்முதல், தனித்தனி விற்பனை. சிலரிடம் மாடு இருக்கும். பின் ஏன் குழுவாகச் சேர வேண்டும்,?

அக்காலத்தில் ரயில், பஸ், லாரிகள் எதுவும் கிடையாது. சீரான பாதைகள் இல்லை. காடுகளின் ஊடே செல்ல வேண்டும். கள்வர் பயம், நரிகளின் தொல்லை. தனியாகப் பயணம் செய்வது ஆபத்து.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் குழுவாகச் சேர்ந்து தொழில் செய்வார்கள்.

இவற்றுள் சில குழுக்கள் தூத்துக்குடியில் இருந்து நாகபட்டினம் வரை தமது வழித்தடத்தை அமைத்துக் கொள்ளும். வேறு சில குழுக்கள் அழகன்குளத்தில் இருந்து புறப்பட்டு பனைக்குளம், தேர்போகி, தேவிபட்டினம், திருப்பாலைக்குடி வழியாக தொண்டி வரை செல்லும்.

கடற்கரைப் பகுதியில் இவற்றின் வழித்தடம் குறுகியதாகயிருந்தாலும் நாட்டின் உட்பகுதியில் நீண்ட வழித்தடங்கள் உண்டு.

அழகன்குளத்தில் இருந்து உச்சிப்புளி, இருமேனி, வேதாளை, புதுமடம், பெரியபட்டினமும் கீழக்கரையும் இணைந்த ‘பவுத்திரமாணிக்கப்பட்டினம்’, கடுகுசந்தை, கடலாடி, முதுகுளத்தூர், வழியாக ஒரு வழித்தடம்.

கடுகுசந்தையிலிருந்து சாயல்குடி, பெருநாழி, சாத்தூர், சிவகாசி, சுருளி, கம்பம் பள்ளத்தாக்கு வழியாக வர்ஷநாடு வரை வேறொரு வழித்தடம்.

இவ்வாறு சிறு சிறு ஊர்களையும், பட்டி தொட்டிகளையும் இணைத்து பலவியாபார மார்க்கங்களில் இவை வியாபாரம் நடத்தி வந்தன.

அது சரி, அழகன்குளத்தில் இருந்து தேவிபட்டினம் செல்லும் வழித்தடத்தில் சித்தார்கோட்டை இடம் பெறவில்லையே? ஏன்? சித்தார்கோட்டையை ஒதுக்கி விட்டு எப்படிப் போக முடியும்?

இதற்கு விடை காண வேண்டுமென்றால் இந்த வணிகக் குழுக்களையும், மற்ற விஷயங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, கால விமானத்தில் ஏறி சுமார் ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் பயணம் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட இடத்திற்கு வந்தாகி விட்டது. மேலே விமானத்தில் வட்டமடித்தபடியே சித்தார்கோட்டையைப் பார்க்கிறோம்.. என்ன விந்தை! சித்தார்கோட்டை எங்கே? இடம் மாறி வந்து விட்டோமா?

இல்லை.. இல்லை! நிச்சயமாக அதே இடம் தான். சித்தார்கோட்டைக்கு மேலே தான் நாம் வட்டமடித்துக் கொண்டிருக்கிறோம். கீழே வீடுகளோ, குடிசைகளோ இல்லையே! மனித நடமாட்டத்தைக் காணோமே! ஆடுமாடுகள் எங்கே? ஒன்றுமேயில்லையே!

இப்போது நமக்குத் தெரிவது வீடுவாசல், ஆடுமாடு, ஆளரவமற்ற வனாந்திரப் பொட்டல் காடு தான். ஆங்காங்கே கருவேலமரம், உடைமரம், புன்னைமரம், கறுக்குவாய்ச்சிமரம். மற்றும் பெயர் தெரியாத காட்டுச் செடிகள், நீர்முள்ளி, சப்பாத்திக்கள்ளி உள்ளிட்ட முட்புதர்கள் நிறைந்திருந்தன. அந்தப் பொட்டல் காட்டைச் சுற்றி நான்கு புறமும் வெகுதூரம் வரை குடியிருப்புகளோ ஆள் நடமாட்டமோ, ஆடுமாடுகளோ தென்படவில்லை.

இப்படிப்பட்ட நிர்மானுஷ்யமான பொட்டல் காட்டின் ஊடே பாம்பு ஊர்ந்து செல்வது போல் ஓர் ஒற்றயடிப்பாதை தெற்கு வடக்காகச் செல்கிறது.

இப்பொழுது காலவிமானத்தில் இருந்து கீழே இறங்கி அந்தக் கொடி வழியில் நின்று சுற்றுமுற்றும் பார்க்கிறோம்.

முற்றிலும் முள்மரங்களும் முட்புதர்களும் நிறைந்த அந்த வறண்ட பொட்டல்பூமியில் கொடிவழிக்குக் கீழ்புறம் சற்று தள்ளி ஒரு சிறு திட்டுப் பகுதியிருந்தது. அதில் மரங்களோ புதர்களோ இல்லை. வெறும் கட்டாந்தரை. மற்ற இடங்களில் இருந்து அது வேறுபட்டுக் காட்சியளித்தது! பாலைவனச் சோலை போல்.

கொடி வழியில் இருந்து கிழக்குப்புறமாகப் போய் அந்த திட்டுப் பகுதிக்குப் போய் சுற்றிப் பார்க்கிறோம்.

திட்டுப் பகுதி பெருக்கிப் போட்டாற் போல் சுத்தமாக இருந்தது. அதன் நான்கு புறத்திலும் முட்புதர்களும் உடை மரங்களும் இருந்தது.

ஒரு பெரிய உடைமரம், அதன் கீழ் பகுதியில் முட்செடிகள் எதுவும் இல்லை. சுத்தமாக இருந்தது. கூர்ந்து பார்த்தால், என்ன ஆச்சரியம்!

ஒரு புறமாக முக்கோண அமைப்பில் மூன்று கற்கள் வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் அரைகுறையாக எரிந்து மீந்த சுள்ளிகள்.

சந்தேகமேயில்லை! யாரோ வந்து இந்த இடத்தில் சமைத்து சாப்பிட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்! திருடர்களா? வழிப்போக்கர்களா? யார்?

அவர்கள் யாராகயிருந்தாலும் அதைப் பற்றி நமக்கு அக்கறையில்லை.
பகல் நேரத்தில் கூட மனிதர் நடமாட அஞ்சும் இந்த பொட்டல் புதர்க்காட்டில் யாரோ வந்து “ஜம்”மென்”று சமையல் செய்து சாப்பிட்டு இரவில் தங்கி விட்டுச் சென்றிருக்கிறார்களென்றால் அவர்கள் சாதாரணமானவர்களாக இருக்க முடியாது.

எப்படியாவது இந்த மர்மத்தைத் தெரிந்தாக வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்