வெங்காய விலை உயர்வுக்கு வியாபாரிகளின் ரகசிய கூட்டணி காரணமா? மத்திய அரசு விசாரணை
வெங்காய விலை உயர்வுக்கு வியாபாரிகளிடையே நிலவும் ரகசிய கூட்டணிதான் காரணமா? என மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.
விலை உயர்வு
நாடு முழுவதும் வெங்காய விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நேற்று வெங்காய விலை கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை இருந்தது.
வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய வரியை ரத்து செய்தது. பாகிஸ்தானில் இருந்து டன் கணக்கில் வெங்காய இறக்குமதிக்கு நடவடிக்கை எடுத்தது.
வியாபாரிகள் கூட்டணி
இந்நிலையில், வியாபாரிகளுக்குள் தங்களுக்குள் ரகசிய கூட்டணி அமைத்துக் கொண்டு, வெங்காய விலையை ஏற்றி வருவதாக, வியாபார போட்டியை கண்காணிக்கும் மத்திய அரசு அமைப்பான `இந்திய வியாபார போட்டி ஆணையத்துக்கு’ (சி.சி.ஐ.) தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வியாபாரிகளின் ரகசிய கூட்டணி பற்றி அந்த ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆணையத்தின் டைரக்டர் ஜெனரல் (விசாரணை) இந்த விசாரணையை நடத்தி, 45 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வியாபார போட்டி சட்டம் மீறப்படும்போது, அதுபற்றி விசாரணை நடத்த இந்த ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.
காரணம் என்ன?
இதுகுறித்து, இந்திய வியாபார போட்டி ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-
வியாபாரிகள் ரகசிய கூட்டணி அமைத்து இருப்பார்களா? என்று ஆய்வு நடத்துவது பற்றி பலதடவை ஆலோசனை நடத்தினோம். மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது, இது விசாரணைக்கு உகந்தது என்று தோன்றியது.
எனவே, நாங்களாக முன்வந்து விசாரணை நடத்துகிறோம். வெங்காயத்தின் தேவை மற்றும் விநியோகம் குறித்தும், வெங்காய விலை குறித்த பத்திரிகை செய்திகளையும், வெங்காய மார்க்கெட்டுகளில் பெறப்பட்ட தகவல்களையும் ஆய்வு செய்து இந்த விசாரணை முடிவை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தான் தடை
இதற்கிடையே, நேற்று காலை வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு வெங்காயம் ஏற்றி வந்த 300 லாரிகளை திடீரென பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில அரசு தடுத்து நிறுத்தியது. இதுகுறித்து எவ்வித முன் எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. மேலும், பாகிஸ்தானில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெங்காய ஏற்றுமதி காரணமாக பாகிஸ்தானில் வெங்காயத்தின் விலை அதிகரித்து விட்டதாகவும், எனவே, உள்நாட்டில் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவுக்கு இந்தியா அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
தினதந்தி! 7-1-2011