Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,643 முறை படிக்கப்பட்டுள்ளது!

முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!!

சந்தையில் யாரும் அறிமுகம் செய்யாத புதிய விசயங்களையே வெற்றிக்கான மூலதனமாக வைத்துக் கொண்டு தான் தேர்ந்தெடுத்த துறையில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி வெற்றி பெற்றவரும், தன் வாழ்வைக் கடவுள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் படைத்திருக்கிறார் என்றும், நமக்கு எப்போதும் பிறவித்திறன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை; நாம் தேர்ந்தெடுக்கும் துறை, வேலை, வாழ்க்கை இப்படி எல்லாவற்றிலும் முழு ஈடுபாடுகாட்டி முன்னேற்றத்தை நாடினால் எந்த வானமும் நமக்கு வசப்பட்டே தீரும் என்றும், தான் தேர்ந்தெடுத்த துறையில் முழுக் கவனம், ஆர்வம், உழைப்பு, விடாமுயற்சி, துணிவு, நம்பிக்கை போன்றவற்றை பின்பற்றியும், மனதை ஒருநிலைப்படுத்தித் தன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியோடு பயணம் செய்து வெற்றி பெற்றவர் ‘JVM Networks’ மற்றும் ‘வழிகாட்டி சிஸ்டம்ஸ் லிமிடெட்டின்’ இயக்குநர் திரு. ஜெகதீஸ் சந்திரன் அவர்கள். தள்ளிப்போடுவதை விட்டுவிட்டு எதையும் முடியும் என்று முன்னேறிப்பார். உன் பெயரே ‘வெற்றி’ என்றாகிவிடும் என்ற அவரை டாக்டர் செந்தில் நடேசன், பேராசிரியர் கே. நாகராஜ் அவர்களுடன் நேர்முகம் கண்டோம். ஒரே எண்ண அலையுள்ள நண்பர்களை ஒருங்கிணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு புதுமைகளை எவரும் செய்திடாத நேரத்தில் வெளிக்கொணர்ந்து சாதிப்புகளை நிகழ்த்திவரும் அவரோடு இனிநாம்…

உங்களின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை பற்றி?
என்னுடைய சொந்த ஊர் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள கருமான்டக் கவுண்டனூர். பிறந்து, வளர்ந்தது எல்லாம் கோவையில். பள்ளிப்படிப்பு கோவையில் உள்ள கார்மல் கார்டன் பள்ளியில். இளங்கலைப் படிப்பு மேலாண்மைத்துறை (B.B.M). பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியிலும், முதுகலைப் படிப்பு எம்.பி.ஏ. பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியிலும் முடித்தேன்.

படிப்பு முடிந்தவுடன் குறிப்பிட்டு இந்தத்துறைக்குத்தான் போக வேண்டும் என்கிற முடிவு உங்களுக்குள் இருந்ததா?
என்னுடைய அப்பா திரு. ப. சின்னசாமி அவர்கள் காவல்துறையில் உயர் அதிகாரியாக(Superintendent of Police) இருந்தவர். வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையில் பணியாற்றியவர். அவருடைய எண்ணம் எல்லாம் நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அந்தப் பணியில் சேர வேண்டும் என்பதுதான். ஆனால் என்னுடைய கனவு, லட்சியம், ஆசை எல்லாமே Business Man-ஆக வரவேண்டும் என்பதுதான்.

தொழில்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற விருப்பத்திற்கு ஏதேனும் காரணம் உண்டா?
ஆர்வம் தான் காரணம். அடிப்படையில் எங்கள் குடும்பம் விவசாயம் சார்ந்தது. முதல் தலைமுறை பிசினஸ்மேன் நான்தான். இன்று இருப்பதைப்போல இன்டர்நெட் வளர்ச்சி அடையாத 2001ம் ஆண்டில் பெரிய நிறுவனங்கள் மட்டுமே அத்தகைய வசதியை வழங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எங்களுக்கு ஒரு பிராஜக்ட் கிடைத்தது. கேபிள் வழியாக இன்டர்நெட் வழங்குவது. அத்தகைய பணியை மேற்கொள்ள நாங்கள் பெருமுயற்சி செய்தோம். ஆனால் அந்தப் பணியை மேற்கொள்வது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.

எனினும், தன் முயற்சிகளில் சிறிதும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் மீண்டும், மீண்டும் முயற்சிசெய்து, கோவை முழுவதும் கேபிளைப் பதித்தோம். அதன் வழியாக இன்டர்நெட் சேவையை வழங்கினோம். தமிழ்நாட்டில் முதன்முதலில் கேபிள் வழியாக இன்டர்நெட் சேவையைக் கொடுத்தது நாங்கள் தான். தமிழ்நாடு முழுவதும் இதைச் செய்தோம். இன்று பல கல்லூரிகளில் மிகப்பெரிய கார்பரேட் கம்பெனிகளில் எல்லாம் கம்பியில்லா தொடர்புகள் (Wireless Network) மூலம் இத்தகைய வசதியை வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.

JVM Networks பணிகளைத்தாண்டி வழிகாட்டி சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் பணிகள் எத்தகையது? வழிகாட்டி என்கிற பெயர் புதுமையாக இருக்கிறதே?
எங்களுடைய ஆழ்ஹய்க் சஹம்ங் ‘வழிகாட்டி’ (Vazhikatti).  Vehicle Tracking-ல் புதிய புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானதும், அத்தியாவசியமானதுமாக கருதப்படுகிறது. எனவே தான் நாங்கள் வாகனப் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து இதைச் செய்கிறோம்.

‘வழிகாட்டியில்’ எத்தகைய புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறீர்கள்?
மஹாராஸ்டிராவில் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ‘டிராக்’ என்ற ஒரு பிராண்டை தற்பொழுது அறிமுகம் செய்திருக்கிறோம். அதன் சிறப்பு என்று பார்த்தோமானால், Sim Card Based Product ஒன்றை உங்கள் வாகனங்களில் அதை நீங்கள் பொருத்திக் கொண்டு, மொபைல் போனில் இருந்து இரண்டு ரிங் கொடுத்தால் அந்தக் கருவி இயங்க (Activate)ஆரம்பித்துவிடும். நீங்கள் எங்கேயாவது உங்கள் வாகனத்தை நிறுத்தியிருக்கும் பொழுது யாராவது எடுத்தாலோ, திருட முயன்றாலோ உங்கள் போனுக்கு தகவல் (Message) வந்துவிடும்.

உங்கள் போனில் இருந்து 4 ரிங் கொடுத்தால் உங்கள் வாகனம் எந்த பகுதியில் இருக்கிறது என்ற இடத்தைக் காட்டிவிடும். நீங்கள் 8 ரிங் கொடுத்தால் உங்கள் வாகனத்தில் எரிபொருளை நிறுத்தி, வண்டியை நிறுத்திவிடும். இதை வருகின்ற ஜனவரிக்கு முன்னர் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த உள்ளோம்.

தேவையை உணர்ந்து எல்லோரும் விரும்பும் புதிய முயற்சியை எடுத்திருக்கிற உங்களுடைய தொழில்நுட்பக் குழு குறித்துச் சொல்லுங்களேன்?
முதன்முதலில் நாங்கள் இந்த புதிய முயற்சியை ஆரம்பிக்கும்போது என்னுடைய நண்பர் விசால் என்பவரின் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்தது. அவர் இத்தகைய தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வல்லுநர். அவருடைய ஐடியாவை ஒரு முழுமையான திட்டமாக மாற்றியமைத்தோம். சிறிய தொழிலோ, மிகப்பெரிய தொழிலோ தொடக்கத்திலேயே சரியான புரிதலுடன் கூடிய திட்டமிடுதல் உறுதியாக வெற்றி பெறும் என்பதற்கு எங்களுடைய வெற்றியே சான்று. புதிய புதிய ஐடியாக்களை உருவாக்கி, அவற்றை விரைந்து செயல்படுத்தினோம். எங்களுடைய மனமும், உள்ளுணர்வும் சொன்னதைக் கடைப்பிடித்து மன உறுதியுடன் உருவாக்கிய பல பொருட்கள் மிகச்சிறந்த பொருட்களாக இருக்கிறது.

இத்தகைய வெற்றியைப் பெற நீங்கள் பின்பற்றிய வழிமுறைகள் என்ன?
ஆர்வம், நம்பிக்கை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொலைநோக்கு பார்வை ஆகியவற்றை பின்பற்றினால் வானமும் நிச்சயம் நமக்கு வசப்படும். வாழ்க்கையிலும், தொழிலிலும் வெற்றி பெற ஆர்வமும், முயற்சியும் வேண்டும். ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல். எதையுமே ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும், தொலைநோக்குடனும் செய்ததால் தான் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.

குடும்ப பின்னனி எதுவாக இருந்தாலும் மனம் தளராமலும், விடாமுயற்சியோடும் கடுமையாக உழைத்தால் எந்தத் துறையிலும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தை நாங்கள் விதைத்துத் கொண்டோம். அதன் வெற்றியை இப்போது அறுவடை செய்கிறோம். வித்தியாசமாக இருங்கள். வித்தியாசமாக சிந்தனை செய்யுங்கள். பெரியதாக சாதியுங்கள் என்ற கருத்துக்களையே எங்களின் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டுள்ளோம்.

தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு மன வலிமை என்பது அத்தியாவசியம். அதனை எப்படி பெருக்கிக் கொள்கிறீர்கள்?
நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையை விட மன வலிமை தான் முக்கியம். உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும், கேலி கிண்டல்களையும் தாண்டி ஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்பு போன்ற மனவலிமையும் வேண்டும். அத்தகைய மனவலிமையை நமக்குத் தருவது கடவுள் நம்பிக்கை மட்டுமே. கடவுள் வழிபாடு, தியானம், யோகா போன்றவை நமது மனவலிமையை அதிகரித்து எந்த நேரத்திலும் நமக்குச் சோர்வு வராமல் பார்த்துக்கொள்ளும். எத்தனையோ இரவுகள் தூக்கம் வராமல் இருந்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் என்னுடைய மனம் உடையாமல், எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது இத்தகைய கடவுள் வழிபாடும், தியானமும் தான். ஒவ்வொரு வேலையையும் சிறப்பாகச் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது தான் வெற்றி மேலும் வெற்றியைத் தரும் என்று ஆர்வத்தோடு உழைத்ததன் பலனே இன்றைய செயல்பாடுகள்.

படித்த துறையைக் காட்டிலும் முழுவதும் வேறுபாடானது தற்பொழுது நீங்கள் இருக்கும் இந்த தொழில் நுட்பத்துறை உங்களுக்கு இது எப்படி சாத்தியமானது?
முதலில் நாம் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. தேர்ந்தெடுத்த பிறகு அந்தத் துறையில் முழு கவனமும், ஆர்வமும், உழைப்பும் இருந்தால் எந்தத் துறையிலும் சாதிக்கலாம். நான் இந்தத் துறையில் நுழையும்போது இத்தகைய தொழில்நுட்ப அறிவு எனக்கு பூஜ்ஜியம்தான்.

ஆனால் இந்தத் துறையில் வெற்றிபெற இந்தத்துறை சார்ந்த வல்லுநர்களை என்னுடன் இணைத்துக்கொண்டேன். அதில் மிகவும் முக்கியமானவர் திரு. முத்துக்குமார். மென்பொருள் (Software) தயாரிப்பில் வல்லுநர். மற்றொருவர் திரு. முரளி. உற்பத்தி எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் மார்கெட்டிங் பற்றிய விரிவான விவரங்களும் முக்கியம். அத்துறையில் மிகச்சிறந்த அளவு அனுபவம் பெற்றவர்தான் திரு. முரளி. இப்படி நாங்கள் எல்லோரும் இணைந்து ஒரு குழுவாகச் செயல்பட்டு இத்தகைய வெற்றியைப் பெற்றிருக்கிறோம்.

உங்களுடைய திட்ட செயல்பாட்டின் முக்கிய சாதனையாக கருதுவது?
தமிழ்நாட்டில் முதன்முறையாக போக்குவரத்து சிக்னல்களில் GPRS வசதியை மேற்கொண்டவர்கள் நாங்கள் தான். இதற்கு முன்னர் இந்தியாவிலேயே ஐதராபாத்தில் தான் இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இருந்தார்கள். எங்களின் மிகப்பெரிய வெற்றி எதுவென்றால், 2010ல் கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி நகர் முழுவதும் இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தி, மாநாட்டு வளாகத்தில், கட்டுப்பாட்டு அறையில் இருந்தே பார்வையிட்டு, போக்குவரத்து நெருக்கடியைச் சரிசெய்ததை ஒரு பெரிய வெற்றியாகக் கருதுகிறோம்.

மற்றொன்று, இரண்டு மாதங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து சிக்னல் அருகில் மது அருந்துவிட்டு வந்தவருடன் நடைபெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டது. நாங்கள் பொருத்திய கேமராவின் மூலம் பதிவு செய்யப்பட்டதால் துப்பு துலங்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதையும் சாதனையாகக் கருதுகிறோம்.

மேலும் தற்பொழுது கோவையில் GPRS கருவி மூலம் போக்குவரத்து விதி மீறல்களையும், அதற்குண்டான அபராதத்தையும் உடனுக்குடன் ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்டவருக்கு வழங்கப்படுவது எங்களை பெருமைப்பட வைத்துள்ளது.

புதுப்புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய திட்டங்களை வைத்திருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கூறுவது?
புதுப்புது திட்டங்களை செயல்படுத்தக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மாதஇதழ் மூலமாக தெரிவிக்கும் செய்தி என்னவென்றால் உங்களுடைய புதிய முயற்சிக்குக் கண்டிப்பாக நாங்கள் அங்கீகாரம் கொடுப்போம். உங்கள் திட்டங்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

உதாரணமாக, நாங்கள் எப்பொழுதும் பணம் வைத்துக்கொண்டு தொழில்தொடங்குபவர்களை எங்களுடன் இணைத்துக் கொள்வதில்லை. கடும் உழைப்பு, விடாமுயற்சி, புதியனவற்றைத் தேடிக்காணும் ஆர்வம், அறிவியலில் அளவிடமுடியாத தாகம் போன்ற பண்புகளைக் கொண்ட இளைஞர்களைக் கொண்டது தான் எங்கள் நிறுவனம். ஆகவே கண்டிப்பாக உங்களுக்கு நாங்கள் உதவக்காத்துக் கொண்டிருக்கிறோம். வாருங்கள் இணைந்து வெற்றி பெறுவோம்.

இத்தகைய தொழில்நுட்பங்களை மற்ற துறையில், குறிப்பாக விவசாயத்துறையில் எப்படிப் பயன்படுத்தலாம்?
இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கின்ற விவசாயத்தில் தற்பொழுது ஆட்களே இல்லாமல்     மின்மோட்டார் Automatic-ஆக குறிப்பிட்ட நேரத்தில் தானே இயங்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. எதிர்வரும் காலங்களில் மேலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதை எளிமையாக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

கல்லூரி வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது சட்டென நினைவுக்கு வருவது?
அடிப்படையில் எங்களுடைய குடும்பம் விவசாயம் சார்ந்தது. ஆனால் நான் தேர்ந்தெடுத்த துறை பிசினஸ் மேனேஜ்மென்ட். பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் B.B.M. படிக்கும்போது அதிகமான மாணவர்களின் பெற்றோர் திருப்பூரில் பெரிய அளவில் தொழில்துறையில் ஈடுபட்டிருந்தவர்கள்தான். என்னைப் போல் மிகச்சிலரே வேறுதுறையைச் சார்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது மற்ற மாணவர்களைப் பார்க்கும்போது நாம் ஒரு பிசினஸ்மேனாக வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் விதையாக விழுந்தது. அத்தகைய விதை முளைவிட்டு வளர்வதற்குத் தேவையான உரமாக இருந்தது கல்லூரியில் நடைபெற்ற Seminar-ம்,Workshop-ம். அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பலபேரைப் பார்க்கும்போது நாமும் ஒருநாள் இத்தகைய நிலையை அடைந்து, இதே கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்கிற முடிவு தான்.

இந்தத் தொழில்நுட்பத் துறையில் நுழைவதற்கான திருப்பம் எப்போது ஏற்பட்டது?
சாதிக்க வேண்டும் என்ற துடிப்புள்ளவர்களுக்கு யாராவது போதிக்க வேண்டும் என்பது தேவையே இல்லை. சட்டென ஒரு நொடியில் ஏதோ ஒரு உந்துதல் சாதனைக்கான முதல்படியில் நம்மை தானாகவே ஏற்றிவிடும். அப்படி ஒரு உந்துதல் எனக்கு ஏற்பட்டது. M.B.A. முடித்திருந்த காலத்தில் புராஜக்டிற்காக நாங்கள் காத்திருந்தபோது, திரு. விசால் இப்படி ஒரு புராஜக்ட் இருப்பதாகக் கூறினார். எங்களுக்கும் மனிதகுலத்துக்குப் பயனுள்ள ஒரு பொருளை தரவேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. நோக்கம் உயரியதாக இருந்ததால் இது எங்களுக்கு சாத்தியமானது.

உங்கள் “நட்பு வட்டம்’ ஒன்றோடு ஒன்றாக இணைந்து செயல்பாட்டுக்கு வந்தது எப்படி?
எங்கள் அனைவருக்கும் வெற்றிபெற வேண்டும் என்ற நிரம்ப இருந்தது. அதுவும் யாருமே செய்யாத ஒரு பொருளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. ஒத்த எண்ணங்களை உடையவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பதைப் போல் ஒரே சிந்தனையுடன் இருந்த நாங்கள் ஒன்றாக இணைந்தோம். JVM Network-ஐ ஆரம்பித்தோம்.  ஜெகதீஸ், விசால், முரளி மற்றும் முத்து என்பதன் சுருக்கமே JVM.

இன்று நீங்கள் பெற்றிருக்கும் இந்த குறிப்பிடத்தக்க வெற்றியை எப்படி தக்க வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?
தரம் தான் நிரந்தரம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எந்த ஒரு காலகட்டத்திலும் எங்களின் தரத்தில் குறைபாடு வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அடுத்தது குறிப்பிட்ட நேரத்தில் சேவையைக் கொடுப்பது. மக்களுக்கு முழுமையான திருப்தியைக் கொடுக்குமளவுக்கு எங்களின் சேவையை அமைத்துக் கொண்டிருக்கிறோம்.’Customer is our Asset elsewhere all are our Liabilities’ என்று காந்திஜி சொன்னதுபோல் வாடிக்கையாளருக்கு முழுதிருப்தியான பொருளாக எங்கள் பொருள் இருக்கிறது. நாங்கள் உருவாக்கிய பொருள்களைப் பற்றி பல்வேறு பின்னணிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.

தங்களைப் பாதித்தவர்கள் பற்றியும், தங்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் பற்றியும் குறித்து?
ஆ.ஆ.ங. துறைத்தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் எனக்கு எப்போதும் மார்கெட்டிங் சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கிவருகிறார். அவருடைய வழிகாட்டுதல் என்னுடைய வெற்றியில் மிகப்பெரியது. பேராசிரியர் திரு. பழனியப்பன் மற்றும் பேராசிரியர் திரு. தங்கராஜ் போன்றவர்களது பங்கும் என் வெற்றியில் மகத்தான அளவு உள்ளது. மேலும் என்னுடைய வெற்றியை தன்னுடைய வெற்றியாக நினைத்து தேவைப்படும் போதெல்லாம் ஆலோசனைகள் வழங்கிவரும் பி.எஸ்.ஜி. ஐ.எம். இயக்குநர் (PSG IM Director)டநஎ ஐங ஈண்ழ்ங்ஸ்ரீற்ர்ழ்) நந்தகோபால் அவர்கள்.

படித்த புத்தகங்கள்?
நாளைய தினம் நாம் வெற்றி பெற்ற மாமனிதனாக வாழ்வதற்கு புத்தகங்கள் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது. தெளிவடைந்த மனம், உறுதியாக இயங்குவதற்குத் தேவையான அமைதியைத் தரும். ரமண மகரிஷியுடைய புத்தகங்களையும், நமக்குத் தன்மான உணர்ச்சியையும், தன்னம்பிக்கையையும் கற்றுக்கொடுக்கும் தன்னம்பிக்கை போன்ற நூல்கள், கடந்தகாலத் தலைவர்கள் சந்தித்த போராட்டங்கள், அவற்றில் அவர்கள் பெற்ற வெற்றிகள், அவர்கள் எடுத்த முடிவுகள் பற்றி கூறும் வரலாறுகள் போன்ற புத்தகங்களைப் படித்து என்னை மேலும் பக்குவப்பட்டவனாக மாற்றிக்கொள்கிறேன்.

இளைய தலைமுறைக்கு நீங்கள் கூறவிரும்புவது?
இன்றைய இளைஞர்களில் பெரும் பாலானோர் புகைப்பழக்கம், மது போன்ற தீய பழக்கங்களுக்கு மிக விரைவில் அடிமையாகி விடுகிறார்கள். அதிலிருந்து விடுபட வேண்டும். தீய வழியில் செல்லாமல் நல்ல வழியில் செல்ல வேண்டும். நமது நோக்கங் களையும், கொள்கை களையும், திட்டங்களையும், செயல்பாடுகளையும் சரியான முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் அரசாங்கத்தை வேலை கொடுக்கும் ஒரு நிறுவனமாகவே நினைக்கின்றனர். அப்படி இல்லாமல் தனியாக தொழில் தொடங்கி மக்களுக்கு வேலை வாய்ப்பளித்து நாட்டின் உற்பத்தியைப் பெருக்கும் தொழிலதிபராக மாற வேண்டும். இத்தகைய சிந்தனையை வளர்த்துக்கொண்டு அதிலேயே தீவிரமாகச் செயல்பட வேண்டும். எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதில் உள்ள பல அடிப்படை அம்சங்களை உன்னிப்பாகக் கவனித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் தெரிவது இத்தகைய இளைஞர்களிடம் தான். ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிகழ்த்திக்காட்டாமல் தீயவழிகளில் செல்லும் இளைஞர்களை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இதிலிருந்து இளைய தலைமுறை விடுபட்டு, உங்கள் மதியையும், மனதையும் ஒருமுகப்படுத்தி இந்த சமுதாயத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும். பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் பொதுவானது என்றாலும் அதனைத் தீவிரமாக செயல்படுத்தும் ஆற்றலும், வலிமையும் இத்தகைய இளைஞர்கள் கையில் தான் உள்ளது.

புதிதாக தொழில் தொடங்க காத்திருக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் கூறுவது?
தொழில் தொடங்கும் எவருமே அடிப்படையில் பயப்படுகிற ஒரு விஷயம் ரிஸ்க் எடுக்க வேண்டுமே என்பதுதான். தொழிலில் மட்டுமல்ல எந்த ஒரு விஷயத்திலுமே ரிஸ்க் எடுக்காமல் அடுத்தகட்ட வளர்ச்சி என்பது சாத்தியமில்லை. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். தவறுகள் ஏற்படலாம். அத்தகைய தவறுகளை ஏற்றுக்கொண்டு உடனடியாக சரி செய்வதில் கவனத்தை செலுத்தி மீண்டும் தவறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தைப் பற்றி?
பாசத்தின் உறைவிடம் பெற்றோர். என்னுடைய நேசத்தில் அவர்களை எண்ணிப் பார்க்கிறேன். நாம் பிறக்கும்போது இவ்வுலகத்திற்கு எதையும் கொண்டு வரவில்லை. நாம் கொண்டுவந்த ஒன்றே ஒன்று நம் உறவுகள் மட்டுமே. அத்தகைய உறவுகளில் மிக முக்கியமானது நம்மை இவ்வுலகிற்கு கொண்டுவரக் காரணமான தாயும், தந்தையும்.

தன்னுயிரைக் கொடுத்து நம்மை இன்னுயிர் என்று எப்போதும் நினைத்துக்கொண்டு காத்திருக்கும் அன்னை, தந்தை என்ற முதன்மையான உறவுகளைப் பற்றி குறிப்பிடுகையில் ‘தட்டுங்கள் திறக்கப்படும்’, ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்ற நிலை இருக்கையில் நான் கேட்காமலேயே என் தேவையை அறிந்து பிறந்தது முதலே பூர்த்தி செய்து கொண்டிருப்பவர் என் அன்னை சம்பூர்ணம்.

நல்ல உடல் நலத்துடனும், சமுதாயத்தில் ஒழுக்கத்துடனும், வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது என் தந்தை திரு. சின்னச்சாமி அவர்களின் குறிக்கோள். மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல. தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை என்று எண்ணி வாழ்பவர் என் தந்தை. எந்த நிலையிலும் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும். நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிலும் ஒரு ஒழுங்கை (Systematic) எதிர்பார்ப்பவர்.

எங்களுடைய இந்த வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பை தந்த ஆதியூர் பெரியப்பா திரு. மயில்சாமிக் கவுண்டர்.
நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் மிக முக்கியமானதான உணவு உற்பத்தியை திறம்பட அதிகரிக்கும் பொருட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள என் தம்பி பிரபுராம்.

போட்டியும், பொறாமையும் நிறைந்த இவ்வுலகில் தங்களுக்கு என்ன லாபம் என்று பார்க்காமல் பாசத்தையும், நேசத்தையும் அள்ளித்தரும் என் மனைவி பூரணி, மகன் ரித்விக், மகள் வர்ஷினி என்ற அளவான குடும்பம் என்னுடையது.

உங்களது முன்மாதிரி(‘Roll Model’)?
எனக்கு உந்து சக்தியாக விளங்குபவர்கள் இருவர். ஒருவர் தன் வாழ்க்கையில் ஒழுங்கையும், நேர்மையையும் தனது கொள்கையாகக் கொண்டுள்ள திரு. ரத்தன் டாடா அவர்கள், மற்றொருவர் ஒரு சதவீத ஊக்கத்தை முதலீடாகக் கொண்டு 99 சதவீத வியர்வையைச் சிந்தி இன்று பார் போற்றும் புகழ் பெற்றுள்ள திரு. திருபாய் அம்பானி அவர்கள்.

எதிர்காலத்திட்டம் குறித்து?
கல்லூரியும், மருத்துவமனையும் கட்டி எளியவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்காலத்திட்டம். அன்பு என்பதே தெய்வமானது. அத்தகைய அன்பை போதிக்கக்கூடிய கல்லூரியாகவும், மருத்துவமனையாகவும் அது இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

தன்னம்பிக்கை பற்றி?
முயற்சி செய்யும் வரைதான் நாமெல்லாம் மனிதர்கள் என்ற கவிப்பேரரசின் கூற்றை உண்மை என்று உலகிற்கு காட்டக்கூடிய நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் கொடுப்பது தன்னம்பிக்கை மாத இதழ்.

ஒரு கதவு மூடப்படும்போது மற்றொரு கதவு திறக்கிறது என்பதைப் போல் வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்து தோல்வியடையும்போது, மூடப்படும் கதவை திறக்கும் சாவி போன்ற நம்பிக்கையைத் தருவது தன்னம்பிக்கை மாத இதழ்.

திரு. K. C. ஜெகதீஸ் சந்திரன்,
இயக்குனர், JVM Networks மற்றும் வழிகாட்டி சிஸ்டம்ஸ் லிமிடெட், கோவை

தன்னம்பிக்கை மாத இதழ்.