Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2014
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,358 முறை படிக்கப்பட்டுள்ளது!

நல்லறம் செய்வோம் நமக்காக!

ஸலாம் கூறுதல்!

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி.

நாவைப் பேணுதல்!

முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : புகாரி.

வாக்குறுதியை நிறைவேற்றுதல்!

“(நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்” (அல்-குர்ஆன் 17:34)

கோபத்தை அடக்குதல்!

“(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்” (அல்-குர்ஆன் 3:134)
பொறுமையைக் கடைபிடித்தல்!

“முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்-குர்ஆன் 3:200)

நயவஞ்சகத் தன்மைகளை விட்டும் விலகியிருத்தல்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முனாபிஃக்கின் அடையாளம் மூன்று. 1) பேசினால் பொய் பேசுவான்,2) வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான், 3) நம்பினால் மோசம் செய்வான். அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.

பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுதல்!

“(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 24:30)

வறியவர்களுக்கு உதவுதல்!

“மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்” (அல்-குர்ஆன் 76:8)

விருந்தினரைக் கண்ணியப்படுத்துல், மற்றும் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழுதல்!

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.

பிறர் வீடுகளில் நுழைவதற்கு முன் வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி பெறுதல்!

“ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் – (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது)” (அல்-குர்ஆன் 24:27)

பெற்றோர்களைப் பேணுதல்!

“அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்-குர்ஆன் 17:23-24)

மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுதல்!

குணத்தில் அழகானவரே ஈமானில் முழுமையானவர். தன் மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : திர்மிதி.
குடும்பத்தினர்களுக்கு செலவு செய்தல்!
தனது பொறுப்பிலுள்ளவர்களை ஒருவன் கவனிக்காமலிருப்பது அவன் பாவி என்பதற்கு போதுமான சான்றாகும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம் : அஹ்மத், அபூதாவுத்.

உறவினர்களைப் பேணுதல்!

“நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் – நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்” (அல்-குர்ஆன் 16:90)

உறவினர்களுடன் சேர்ந்திருத்தல்!

தமது வாழ்வாதாரம் (பொருளாதாரம்) விசாலமாக்கப்படுவதும்,வாழ்நாள் நீடிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) மற்றும்அனஸ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்:புகாரி

சகோதர முஸ்லிமுடன் நட்புறவு கொள்ளுதல்!

“அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

முஸ்லிம்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துதல்!

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்-குர்ஆன் 49:10)