Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

July 2015
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,260 முறை படிக்கப்பட்டுள்ளது!

மது போதையில் சிக்கும் மாணவியர்!

பள்ளி மாணவியரும் மது போதையில் சிக்கும் விபரீதம், தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. கோவையில், பள்ளிச் சீருடையில் மாணவி நடத்திய ரகளையால், இது அம்பலமாகியுள்ளது. கலாசார சீரழிவைத் தடுக்க, பெற்றோர், ஆசிரியர் மட்டுமின்றி, அரசும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.Tamil_News_large_1291763

தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ கடைகளின் வரவு, இளைஞர்களை மது போதைக்கு அடிமையாக்கி வருகிறது. அதையும் தாண்டி, பள்ளி மாணவியரும் போதை பழக்கத்துக்கு ஆளாகும் அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. கோவையில் நடந்த சம்பவமே இதற்கு சாட்சி.

கோவை, தனியார் பள்ளியில், பிளஸ் 2 படிக்கும், 16 வயது மாணவி ஒருவர், நேற்று முன்தினம், வகுப்பை புறக்கணித்து விட்டு, சரவணம் பட்டி ஓட்டலுக்குச் சென்று மது குடித்துள்ளார். அவருடன், சில தோழியரும் இருந்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், மாணவி, ஓட்டலில் கலாட்டா செய்தார். தோழியர், அவரை, டாக்சியில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பவும் முயற்சித்தனர்; அவர் ஒத்துழைக்கவில்லை. ஆண் நண்பர் ஒருவரை வரவழைத்து, பைக்கில் ஏற்றினர்.

பைக்கில் ஏறிய மாணவி, ‘வீட்டுக்கு செல்ல மாட்டேன்’ எனக் கூறி, மீண்டும் ரகளையில் ஈடுபட்டார். ஆண் நண்பர், மாணவியின் போதை இறங்கும் வரை, காளப்பட்டி, சரவணம்பட்டி பகுதிகளில் சுற்றிய பின், வெள்ளக்கிணறு வழியாக, துடியலுார் வந்தார். திடீரென பைக்கில் இருந்து குதித்த மாணவி, அங்குள்ள விநாயகர் கோவில் முன் ரகளை செய்தார். சீருடையில் உள்ள மாணவி, போதையில் கலாட்டா செய்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவியை ஆட்டோவில் ஏற்ற முயற்சித்தும், பலன் இல்லை.ஒரு வழியாக போலீசார் அங்கு சென்று, மாணவியை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் கொண்டு சென்றனர். பெற்றோரை வரவழைத்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

காதல் தோல்வியால், மாணவி மது குடித்து ரகளை செய்ததை அறிந்து, போலீசாரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, தலைநகரான சென்னை விடுதிகளில் தங்கியுள்ள இளம்பெண்களும், மாணவியரும், வார இறுதி நாட்களில், மது விருந்து நடத்தி கொண்டாடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இது தவிர, வகுப்பறையில், ஆபாச படம் பார்க்கும் அளவுக்கு, மாணவியரின் செயல்கள் அரங்கேறுகின்றன.

சமீபத்தில், இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட, கோவையைச் சேர்ந்த ஏழு மாணவியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, ‘வாட்ஸ் ஆப், பேஸ்புக்’ என, சமூக வலைதளங்களும் காரணமாக உள்ளன.

பெற்றோர் இதில் விழிப்போடு இருந்து, ஆரம்பம் முதலே குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும். மது வகைகளுக்கு, தமிழகத்தில் கட்டுப் பாடற்ற நிலை காணப்படுவதும் இதற்கு காரணம் என, சமூகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தமிழக அரசு, இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தினால் மட்டுமே, கலாசார சீரழிவைத் தடுக்கமுடியும்.

‘தேவையற்ற சுதந்திரமே காரணம்!’:

கோவையை சேர்ந்த உளவியல் நிபுணர் மோனி கூறியதாவது:இயந்திரத்தனமான உலகில் பெற்றோரின் அன்பும், அரவணைப்பும், கண்டிப்பும் பிள்ளைகளுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுபவர்கள் மிகவும் குறைவு. கண்மூடித்தனமாக சுதந்திரம் வழங்கப்படுவதால், பெரும்பாலான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது.பெற்றோர் இடையே முரண்பாடு, குடும்ப சூழல், அதிகப்படியான கண்டிப்பு மற்றும் சுதந்திரம், தவறான நட்பு, ஹார்மோன் மாற்றங்கள் என, பல்வேறு காரணங்கள், மாணவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.’டீன் ஏஜ்’ பருவத்தில் மாணவர்களிடம் தடுமாற்றம், குழப்பம் ஏற்படும். அச்சமயத்தில் பெற்றோர் வழிகாட்டும் விதமாகவும், முன்னுதாரணமாகவும் நடந்து கொள்ள வேண்டும். எவ்விதமான செயல்களை செய்ய வேண்டும், செய்யக்கூடாது போன்றவற்றை, கண்டிப்புடன் கூடிய அன்பின் மூலம் வலியுறுத்த வேண்டும்.பாசம் என்ற பெயரில், மொபைல்போன், இன்டெர்நெட் இணைப்பு போன்ற தேவையற்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கக் கூடாது. இவை அவசியமாக இருந்தால், எப்போதும் கண்காணிப்பு இருக்க வேண்டும். பாடத் திட்டங்களில், வாழ்க்கை முறை கல்வியை, ஆரம்பம் முதலே அறிமுகப்படுத்துவதே, இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்.

பெற்றோர், ஆசிரியரே காரணம் :

வளர் இளம் பருவத்தில், எதிர் பாலினத்தினர் மீது ஈர்ப்பு வரும்; பால் உணர்ச்சி துாண்டப்படும்; இனக் கவர்ச்சி ஏற்படும். உடல் உறுப்புகள் குறித்து அறியத் தோன்றும். இதெல்லாம், அந்த வயதில் ஏற்படும் உணர்வுகள் தான்.வளர்இளம் பருவத்தில், அவர்களின் கவனத்தை படிப்பு, விளையாட்டு களில் திசை திருப்பி நல்வழிப்படுத்த வேண்டும். நல்ல தோழனாக, தோழியாக இருந்து வழிகாட்ட

வேண்டும். பெற்றோருக்கு மட்டுமல்ல; ஆசிரியர்களுக்கும் இந்த பொறுப்பு உண்டு. தவறானபழக்கமே, மது, போதை பழக்கத்துக்கு மாணவியர் செல்ல காரணம். அளவுக்கு அதிகமாக பணம் கொடுப்பது, அளவுக்கு மீறிய பாசம் வைப்பது, செல்லம் கொடுப்பதும் கூடாது.
ஆனந்த், மனநல ஆலோசகர், சென்னை

பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை:

கிராமப்புறங்களில், ஏழு, எட்டாவது படிக்கும் மாணவர்கள், பிறந்த நாளுக்கு, டாஸ்மாக் சரக்கு வாங்கி, ‘பார்ட்டி’ வைக்கின்றனர். இதற்கு டாஸ்மாக் கடைகள் தான் காரணம்; இந்த பழக்கம் மாணவியரையும் தொற்றியுள்ளது. நவீன, ‘டெக்னாலஜி’யின் தவறான பயன்பாடே, மாணவியர் ஆபாச படம் பார்க்கும் நிலைக்கு காரணம். நல்லொழுக்க கல்வி போதிப்பதோடு, ஆண், பெண் சமத்துவம், பாலியல் விழிப்புணர்வு தரும் வகையில், பாடத் திட்டத்தில் மாற்றம், டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பும் அவசியம்.
பொன்னுத்தாய், மாதர் சங்கம், மதுரை

கோவை அருகே, தனியார் பள்ளியில் வகுப்பு இடைவேளையில், மொபைல் போனில், ஆபாச படம் பார்த்ததால், மாணவியர் இடைநீக்கம் செய்யப்பட்டுஉள்ளனர். தமிழகம் எங்கே போகிறது என்ற கவலை கலந்த அதிர்ச்சியும், வேதனையும் வாட்டுகிறது. பள்ளிகளில், நீதி போதனை வகுப்புகளைகட்டாயமாக்க வேண்டும்
ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்

தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ மதுவால் ஏற்படும் பாதிப்பும், சமூக அவலங்களும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாதிப்பு, பெரியவர், இளைஞர், மாணவர்களை கடந்து, குழந்தைகளையும் நோக்கி பாய்ந்துஉள்ளது. விபத்து, சமூகக் குற்றங்களை மதுவை ஒழிக்காமல் தடுக்க முடியாது. டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி, வரும், 10ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பா.ஜ., தலைவர்

மாணவர்களுக்கு ஆபாச படம் பதிவு செய்து கொடுத்தவர் கைது:சிவகங்கை அருகே, கீழப்பூங்குடியைச் சேர்ந்தவர், அம்பேத், 27. கீழப்பூங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, ஆவண நகல் எடுக்கும் கடை வைத்துள்ளார். இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட பலருக்கு, ‘பென் டிரைவ், மொபைல் போன்’ ஆகியவற்றில், ஆபாச படங்களை பதிவு செய்து கொடுத்துள்ளார். விசாரணை நடத்திய போலீசார், வாலிபரை கைது செய்தனர்.