Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2012
S M T W T F S
« Jan   Mar »
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,866 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஹிஜ்ரத்தும் அதன் நினைவுகளும்

நாம் ஹிஜ்ரி 1433 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். ஹிஜ்ரி என்ற சொல்லை, இஸ்லாமிய ஆண்டுக்குத் தேர்ந்தெடுத்திருப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்ச்சியுண்டு. அவ்வரலாற்று நிகழ்ச்சியையும், அந் நிகழ்ச்சியின் போது, சில கட்டங்களில் , நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த நல்லியல்புகளையும் காண்போம்.
இஸ்லாமியருக்கென தனியொரு ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில் எழுந்தது. நபித் தோழர்கள், அதை எந்தக் காலகட்டத்திலிருந்து துவக்குவது என்று ஆலோசித்தனர். முக்கியமான பல நிகழ்ச்சிகள் நடந்திருப்பினும், அவற்றில் நபி(ஸல்) அவர்கள், முதன் முதலாக, மக்காவை விட்டு, வெளியேறிய நிகழ்ச்சியையே, இஸ்லாமிய ஆண்டின் துவக்கக் காலமாகக் – காலக்கட்டமாகக் கொள்ளலாமெனத் தீர்மானித்தனர்.
இஸ்லாமிய வரலாற்றில் , பல முக்கிய போர்கள் நிகழ்ந்துள்ளன. பல உடன்படிக்கைகள் நடந்துள்ளன. இவற்றிலொன்றை நினைவு கூர்ந்து, அதையே இஸ்லாமிய ஆண்டிற்குப் பெயராகவும், துவக்க கால கட்டமாகவும் வைத்திருக்கலாம். ஆனால், நபித் தோழர்கள், நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்றத்தையே (ஹிஜ்ரத்தையே) நமது ஆண்டின் துவக்க காலமாகவும், பெயராகவும் வைக்கத் தீர்மானித்தனர்.
நபி(ஸல்) அவர்கள், தோழர் அபூபக்கர்(ரழி) ஆகிய இருவர் மட்டுமே, மக்காவை விட்டு வெளியேறினர். மதீனாவுக்கு வந்த பின்பு தான், பத்ரு, உஹது மற்றும் பல தற்காப்புப் போர்கள் நடந்தன. இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது. பல உயிர்த் தியாகங்கள், சிறப்புமிக்க உடன்படிக்கைகள் நிகழ்ந்தன. இறுதியாக சுமார் பல ஆயிரக்கணக்கான மக்களுடன் மக்கா நகர் சென்று, அங்கும் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டது.
இவ்வனைத்து நிகழ்ச்சிகளுக்கும் துவக்கமாக இருந்தது. நபி(ஸல்) அவர்களின் மக்கத்து வெளியேற்ற நிகழ்ச்சி தான். அந்நிகழ்ச்சி நடந்திராவிடில், மேற்காணும் நிகழ்ச்சிகளுக்கு இடமேது? அன்று நபி(ஸல்) அவர்களின் உயிருக்கே ஆபத்து வந்த போது, உயிர், உடமை உறவு அனைத்தையும் துறந்து , பிறந்த மண்ணையும் விட்டு, வெளியேறிய தியாகத்திற்கும், செயலுக்கும் முன்பாக, வேறெந்தச் செயலையும், வேறெவர் தியாகத்தையும், அருமை நபித் தோழர்கள், உயர்வாகக் கருதவில்லை.
அம்மாநபியின் தியாக, புனித வெளியேற்றமே இஸ்லாமிய மறு மலர்ச்சிக்காகவும், அதன் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாகவும் அமைந்தது, அத்தகைய ஹிஜ்ரத் நிகழ்ச்சியை இஸ்லாமிய ஆண்டுக்கு துவக்க காலமாகவும், ஹிஜ்ரத் என்ற சொல்லையே ஹிஜ்ரி ஆண்டின் பெயராகவும் வைத்தனர். இவ்வெளியேற்ற நிகழ்ச்சியின் சில கட்டங்களில் நபி(ஸல்) அவர்களின் நற்பண்பையும், நம்பிக்கை, உறுதியையும், இந்த ஹிஜ்ரி புத்தாண்டில் நினைவு கூர்வோம்.
நபி(ஸல்) அவர்களின் நேர்மையெனும் நற்பண்பு:-
நபி(ஸல்) அவர்களின் இல்லத்தை மக்கத்து காபிர்கள் முற்றுகையிட்டு, அவர்களைக் கொல்ல வாளேந்தி நிற்கின்றனர். வீட்டின் உள்ளே இருப்பவர்களின் நிலை எவ்வளவு பதட்டமாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இறைவனது கட்டளைக் கிணங்க வெளியேறும் அந்த பதட்டமான, இக்கட்டான நிலையிலும், நபி(ஸல்) அவர்கள் அலி(ரழி) அவர்களை அழைக்கிறார்கள். தாம் பிறரிடமிருந்து பெற்று, பாதுகாத்து வரும் அமானிதப் பொருட்களின் விபரத்தைக் கூறி அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுக்கிறார்கள்.
எத்தகைய ஆபத்தான மிக நெருக்கடியான சூழ்நிலையிலும் நபி(ஸல்) அவர்கள் தமது நேர்மை நிலையைப் பொறுப்புக்களை ஒப்படைக்கும் வகையில் கடைப்பிடித்திருக்கிறார்கள். மக்கா நகரில் தரம் அங்கிருந்த போது மட்டுமின்றி, தாம் வெளியேறிய பின்னரும் அஸ்ஸாதிக், அல் அமீன் எனும் தமது அருந்தகுதிக்கு இழுக்கு ஏற்படாவண்ணம் செய்து காட்டியதையுணர்ந்து அவ்வுன்னத நடைமுறையை நமது வாழ்வில் கடைபிடித் தொழுக வேண்டும்.
ஆனால் இன்று அமானிதப் பொருளை மோசடி செய்வதும், அமானித நிலையில் தமது பொறுப்பிலுள்ள அநாதைகள், விதவைகள் முதலியோரின் சொத்துக்களை விழுங்குவதும், பிறருக்குக் கடன் பட்டதை, தீர்க்க வேண்டும் என்ற பொறுப்புணர்வின்றி, தமக்கு வியாபாரத்தில் ஏற்பட்டதோர் கஷ்டத்தைக் காரணம் காட்டி கொடுத்தவரின் பொருட்களை கபளீகரம் செய்துவிடும் ஏமாற்றுச் செயல்களையும் நாம் காண முடிகிறது.
இவ்வாறு அமானிதப் பொருட்களை பேணிக் காக்காமல் இருக்கும் பொறுப்பில்லாத தன்மையை, செயலை வல்ல அல்லாஹ் குர்ஆனில் எச்சரிப்பதைப் பார்ப்போம்.
“(விசுவாசிகளே! நிச்சயமாக நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விட வேண்டும்” என அல்லாஹ் கட்டளையிடுகிறான்.(4:58)
“தவிர நீங்கள் (செய்வது அக்கிரமம் என) அறிந்து கொண்டே உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.” (8 : 27)
“நீங்கள் அநாதைகளின் பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்,(அவற்றிலுள்ள) நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருட்களுடன் (சேர்ந்து) விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது மாபெரும் பாவமாகும்.” ( 4:2)
இன்னும் எவர்கள் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களையும், வாக்குறுதிகளையும் பேணி, சாட்சியத்தில் தவறிழைக்காமலும், தொழுகையைப் பேணியும் வருகிறார்களோ, இத்தகையோர் தாம் சுவனபதியில் மிக்க கண்ணியப்படுத்தப்படுவார்கள். (70:32-35)
அல்லாஹ்வின் வல்லமையும் , அவனது தூதர் நபி(ஸல்) அவர்களின் ஈமான் உறுதியும்
நபி(ஸல்) அவர்கள் தமது இல்லத்திலிருந்து வெளியேறி விட்டதை உணர்ந்து கொண்டவுடன், அந்த மக்கா காபிர்கள், அவர்கள் சென்ற பாதையைப் பின் தொடர்கின்றனர். நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரழி) அவர்களும் மக்காவின் அருகிலுள்ள ஒரு குகையில் மறைந்திருக்கின்றனர். குகையின் மேற்புறத்தில் நடமாடும் காபிர்கள் தற்செயலாகக் குனிந்தாலும் இருவரும் தென்பட்டு விடும் அமைப்பில் மிக அபாய நிலையில் இருவரும் உள்ளே அமர்ந்திருந்தார்கள்.
தோழர் அபூபக்கர்(ரழி) அவர்கள் நபி அவர்களே! நாம் இப்போது இருவர் மட்டுமே இவ்விடத்திலிருக்கிறோம், அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறதே என கலக்கமுற்றார்கள்.
இதோ எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வல்லமையால், தனது தூதர் நபி(ஸல்) அவர்களையும், அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களையும் மிக அற்புதமாகக் காப்பாற்றிய நிலையை வெகு அழகாகச் சொல்லிக் காட்டுகிறான்.
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அவருக்கு யாதொரு இழப்பும் இல்லை) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றிய போது, நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கிறான். குகையில் (அவனது நபி), இருவரில் ஒருவராக இருந்தபோது தமது தோழரிடம் “கவலைப்படாதீர் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.” என்று கூறினார் (அப்போது) அவர் மீது அல்லாஹ் தம் சாந்தியை இறக்கி வைத்தான். மேலும் நீங்கள் பார்க்க முடியாத படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான். நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான். (ஏனெனில்) அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும். அல்லாஹ் யாவற்றையும் மிகைப்போனும், ஞானமிக்கோனுமாவான். (9:40)
நபி(ஸல்) அவர்கள் இத்தகைய பேராபத்தான நிலையிலும் தமது நிலை தடுமாறி விடாது, வல்ல அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர்களாக, அவன் ஒருவனே அன்றி தமக்கு பாதுகாவலர் வேறு யாருமில்லை எனும் நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்தவர்களாக, அருமை நண்பர் அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களுக்கு பயப்படாதீர்! அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் வல்ல நாயன் நலமுடன் இருக்கும் பொழுது நாம் கவலைப்படுவானேன்? என்று அல்லாஹ்வைக் கூறி ஆறுதல் செய்ததை அனைவரும் உணர்ந்து படிப்பினை பெறுவோமாக.
ஆனால் இன்றைக்கு மக்கள் தமக்கேற்படும் துன்பம் துயரங்களை அகற்ற, வல்லமைமிக்க அல்லாஹ்வின் அபார சக்திகளை மறந்துவிட்டு, அவனது படைப்பினங்களிடம் பாதுகாப்புத் தேடியலையும் பரிதாப நிலையைப் பார்க்கிறோம். அவ்வாறு செய்வது பெருங்குற்றமான இணை வைத்தலில் சேர்க்கும் என்பதையும், இணைவைத்தல் ஒரு போதும் மன்னிக்கபடுவதில்லை என்பதையும் அவர்கள் உணர்வதில்லை.
இதோ வல்ல அல்லாஹ் தனது சிறிதும் ஐயமில்லாத சிறப்புமிகு வேதத்தில் அறிவிக்கின்றான்.
“இணை வைத்தல் மன்னிப்பில்லாக் குற்றம்”
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை அறவே மன்னிக்க மாட்டான்; அதல்லாதவற்றை தான் நாடியோருக்கு மன்னிப்பான், யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்கள். (4 : 48)
உதவியும், பாதுகாப்பும் :-
நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சி வானங்களிலும், பூமியிலும் உள்ளது. அவனைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனோ துணை செய்பவனோ வேறு எவருமில்லை. இதை நீங்கள் அறியவில்லையா? (2 : 107)
எனினும், நீங்கள் அவனையே அழைப்பீர்கள், அப்போது அவன் எதற்காக அவனை அழைத்தீர்களோ, அத்துன்பத்தை தான் நாடினால் நீக்கி விடுவான். ( 6 : 41)
(நபியே!) நீர் கூறும் அல்லாஹ்வையன்றி நீங்கள் (பாதுகாவலர் என) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களை உங்கள் கஷ்டங்களை நீக்க அழைத்துப் பாருங்கள். (அவ்வாறு அழைத்தால்) அவர்கள் உங்களது யாதொரு கஷ்டத்தை நீக்கி வைக்கவோ, அல்லது திருப்பி விடவோ சக்தி அற்றவர்கள் (என்பதை உணர்வீர்கள்) (17 : 56)
நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ளது போன்று, அவர்களின் வாழ்க்கை முறையும் மனித சமுதாயத்திற்கு ஒரு வழி காட்டலாக அமைந்திருப்பதை நாம் அறிந்திருந்தும் 1408 ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட நமது சமுதாயத்தில் உண்மையான இஸ்லாமியத் தன்மை உருவாக்கியுள்ளதா? அதன் தூய வாழ்வு துவங்கியிருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்த்து இப்புத்தாண்டில் நமது வாழ்வை இஸ்லாமிய நெறிகளின் பால் செலுத்தி சீர்படும் எண்ணத்துடன் அதை வரவேற்பதில் தான் உண்மையான புத்தாண்டின் மகிழ்வு அமைந்திருக்கிறது. வல்ல நாயன் நல்லதோர் திருப்புமுனையை நமது வாழ்விலும் நல்கி, நலம் பல பெற அருள் புரிவானாக! ஆமீன்.
நன்றி: இப்னு ஷேக் – தமீமுன்அன்சாரி வலைப்பூக்கள்