Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2005
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,428 முறை படிக்கப்பட்டுள்ளது!

பேரலையா? பிரளயத்தின் முன்னுரையா?

அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா? (அல்குர்ஆன் 7:97-98)

“தென்னை மரத்துக்குத் தேள் கொட்டினால் பனைமரத்துக்கு நெரிகட்டியது போல” என்று ஒரு பழமொழி உண்டு. அந்த மாதிரித்தான் இந்தோனிஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பம் தென்கிழக்காசியாவை மட்டுமல்ல – ஆஸ்திரேலியா ஆப்ரிகா கண்டங்களையும் தாண்டிப் பாய்ந்து கோடிக்கணக்கான மனிதர்களின் வாழ்கையோடு விளையாடி, பல்லாயிரம் மக்களின் இன்னுயிர்களையும் பறித்துக் கொன்டு விட்டது!இதற்கு முன்னும்ஏற்பட்டதுண்டு. 1964 டிசெம்பரில் ஏற்பட்ட புயலில் பல்லாயிரம் பேர் மாண்டு போனார்கள்! ஒரு ரயிலே அடித்துச் செல்லப்பட்டது. தனுஷ்கோடி நகரமே இல்லாமல் ஆக்கப்பட்டது.

ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு – தமிழ் மக்களின் வாழ்க்கையில் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கோரத் தாக்கத்தை தழும்பைத் தந்து விட்டுச் சென்று விட்டது இந்த கடல் அலையின் கோபாவேசம்! “சுனாமி”ப் பேரலை இதுவரை உலகம் பார்த்திராத இழப்புகளையும் இன்னல்களையும் தந்திருக்கிறது! எதுவும் மிஞ்சாமல் எல்லாவற்றையும் இழந்து விட்டவர்களே, பல்லாயிரம் பேர்! நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது! நம் அனுதாபங்களும் பிரார்த்தனைகளும் அந்த சகோதர சகோதரிகளுக்காக!

தமிழகத்தில் இயற்கைப் பேரழிவுகள் எல்லாம் 20 வினாடிக்குள் நிகழ்ந்து விட்ட அதிசயம்! கான்கிரிட் கட்டடங்கள் அட்டைப் பெட்டிகள் போல அடித்து நொறுக்கப்பட்டதைப் பார்த்தோம். பஸ்களும் லாரிகளும் கனரக எந்திரங்களும் தகர டப்பாக்கள் போல மிதந்து சென்றதைப் பார்த்து மிரண்டோம்!. நம் உடன் பிறப்புக்கள் இதுவரை இந்த உலகில் நம்முடன் நடமாடிக்கொண்டிருந்த சகோதர சகோதரிகள், பிஞ்சுக் குழந்தைகள் நொடிப்பொழுதில் அந்த அசுர அலைக்குள் அமிழ்ந்து போனதையும் டிவியில் பார்த்துப் பதறித் துடித்தோம்! நம் ஆயுள்வரை அந்த உரைந்து போன கணங்களை மறக்கவே முடியாது என்பது முற்றிலும் உண்மை!

சுனாமி எச்சரிக்கைக்கான சரியான முன்னறிவிப்பு இருந்திருந்தால் ஓரளவுக்கேனும் உயிர் நஷ்டங்களைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்! உண்மை! அனுபவங்களின் அடிப்படையில் தான் மனிதன் பாடம் படித்தாக வேண்டும்! அப்படித் தான் கற்காலத்திலிருந்து படிப்படியாக மனிதன் இந்த நாகரிக காலத்துக்கு முன்னேறி வந்திருக்கிறான்! எனவே பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அந்த விசயத்தில் நம் அரசு இனி கவனம் செலுத்தும் என்று நம்புவோம்!

ஆனால் இத்தகைய இயற்கைப் பேரழிவுகளை முற்றிலுமாக மனிதனால் வென்று விட முடுயுமா? தற்காத்துக்கொள்ள முடியுமா? அது சாத்தியமா? சுனாமிப் பேரலையை நேரில் – அல்லது படங்களைப் பார்தவர்கள் யாராலும் “முடியும்” என்று அடித்துச் சொல்ல முடியாது! மனிதப் பகுத்தறிவு அதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது.காரணம் எல்லாம் ஒரு நொடியில்! கண்ணிமைத்துத் திறப்பதற்குள்! உயிரும் உடலுமாய் – ரத்தமும் சதையுமாய் சிரிப்பும் கும்மாளமுமாய் – இயங்கிக் கொண்டிருந்த மனிதர்கள் குப்பை கூலங்களாய் முட்புதறுகளுக்குள் சிக்கிக் கொன்டதும் – மண்ணுக்குள் புதைந்து போனதும் மனித அறிவுக்கெல்லாம் அப்பாற்பட்ட விசயம் அல்லவா?!

யார் நம்புகிறார்களோ இல்லையோ, முஸ்லிம்களான நாம் அதை நம்புகிறோம்! காரணம் இது நமக்குப் புதிய விசயங்கள் அல்ல! இந்த உலகத்தில் இதற்கு முன் நடக்காதது எதுவும் இப்போது புதிதாக நடந்து விடவில்லை! இதை விடவும் பெரிய பேரலைகளை நெருப்பு மழைகளை – பூமி அதிர்வுகளை – வெள்ளப் பெருக்கை சில சமுதாயங்களின் ஒட்டுமொத்த அழிவுகளை இந்த உலகம் சந்திதிருப்பதைப் பாலபாடமாகப் படித்தவர்கள்தான் தான் முஸ்லிம்கள்!

 • இயற்கைப் பேரழிவு என்று சிலர் சொல்லலாம்!
 • விதி என்று சொல்லி சிலர் ஆசுவாசப் பட்டுக் கொள்ளலாம்!
 • காஞ்சி மடாதிபதியைக் கைது செய்ததால் ஏற்பட்ட “தோஷம்” என்று சிலர் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்!

ஆனால் முஸ்லிம்கள் இதைப் பார்க்கும் பார்வையே வேறாக இருக்க வேண்டும்!

 • அல்லாஹ், தன் திருமறையில் சொல்லிக் காட்டி எச்சரிக்கை செய்யாதது எதுவுமா நிகழ்ந்துவிட்டது?
 • ஆதுவின் கூட்டமும்,
 • லூதுவின் கூட்டமும்
 • நூகுவின் சமுதாயமும்
 • அழிந்த கதைகளை நம் வேதம் சொல்லிக் காட்டவில்லையா?

‘அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லயா’? எல்லாம் நாம் படித்த விசயம் தான்! பச்சைக் குழந்தைகளாய் மதரசாவில் பாடம் படித்த காலத்திலிருந்து கேட்டுக் கேட்டு மனதில் பதிந்து போன விஷயங்கள் தான்! ஆனால், என்ன? புராணக்கதையாய் – பத்தோடு பதினொன்றாய் மனதில் புதைந்து – மறந்து போயிருந்த அந்தக் கதையும் காட்சியும் இதோ நிஜமாய் – வெகு நிஜமாய் கண் முன்னே நிகழ்ந்து நம்மை அதிர்ச்சியில் உரைந்து போக வைத்திருக்கிறது! அவ்வளவு தான்!

 • ஏன் நடந்தது இந்தக் கொடூரம்?
 • எதற்காக இந்தப் பேரழிவு
 • இதற்கு யார் பதில் சொல்ல முடியும்?

மனித எஜமான உத்தரவுகளுக்கே தலை குனிந்து – கைகட்டி வாய் பொத்திப் பணிந்து நிற்கும் மனிதன், படைத்த இறைவனிடமே கேட்க முடிந்த கேள்வியா இது? எனவே, இப்போது கேள்வியெல்லாம் கேட்க வழியில்லை – முடியவும் முடியாது! யாராலும் – எவராலும்! வேரென்ன செய்யலாம்? செய்ய முடியும்?

 • வயது முதிர்ந்த பெரியவர்களை
 • பால்மணம் மாறாத பச்சிளம் பாலகர்களை
 • வாழ்வை இப்போது தான் தொடங்கியிருந்த இளவட்டங்களை
 • உல்லாசப் பொழுது போக்குக்காக ஊர் விட்டு – நாடு விட்டு நகர்ந்திருந்தவர்களை
 • ராஜாக்களை
 • மந்திரிகளை
 • அதிகாரிகளை
 • அறிவியல் வல்லுநர்களை

கந்தைத்துணியாய் கசக்கி நொருக்கி முள்ளுக்குள் சொருகி – மண்ணுக்குள் புதைத்துவிட்ட அந்த “சகல சக்தியாளன்”, நம்மை உயிருடன் விட்டு விட்டதற்காக நாம் என்ன செய்யப் போகிறோம்? என்ன விதமான நன்றியைத் தெரிவிக்கப் போகிறோம்? இந்தக் கேள்விகளுக்கான பதிலில் தான் இந்தப் பேரழிவின் மூலம் இறைவன் தரும் படிப்பினை இருக்கிறது! அது தான் இந்த தலையங்கத்தின் நோக்கமும் கூட! அதை, இன்னும் எளிதில் புரியுமாறு விரிவாக்கிச் சொன்னால், இன்று இந்த சுனாமி அலையில் மாண்டுபோன அத்தனை மனிதர்களும் – ஏற்பட்ட அனைத்து நஷ்டங்களும் உயிர் தப்பித்துக் கொண்ட நமக்குப் பாடம் சொல்லித் தருவதற்காக இறைவன் உபயோகித்த பாட உபகரணங்கள் தான் (Teaching Guides) என்ற உண்மை நமக்குப் புரிய வேண்டும்! எனவே பொங்கிப் பிரவாகித்த இந்த சுனாமி அலையை ஒரு சராசரி இயற்கை நிகழ்வாக – பேரழிவு ஏற்படுத்திய பேரலையாய் மட்டும் பார்க்காமல்,

 • முன்பு நிகழ்ந்த “பிரளயங்களின் முன்னுரை” யாகப் பார்க்க வேண்டும்!
 • அதில் பொதிந்துள்ள ஆன்மீகச் சிந்தனைகளின் வெளிச்சம், எதிர்காலத்தில் நம்மை நேர்வழியில் நடத்த வேண்டும்!

“நம்மையும் சக மக்களையும் இத்தகைய எதிர்பாராத பேரழிவுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும். இந்த பேரழிவில் பல விதங்களில் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஆறுதலையும் ஆசுவாசத்தையும் தர வேண்டும். அந்த அவர்களின் நஷ்டங்களை இயன்ற அளவில் தீர்த்து – அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் – அளவில் உதவக்கூடியவர்களாகவும் நம்மை ஆக்கி வைக்க வேண்டும்.” என்று பிரார்தனைகள் தான் நம்முள் இப்போது ‘அருளலைகள்’ ஆக ஊற்றெடுக்கின்றன! வல்ல நாயனிடம் மன்றாடிக் கையேந்த வைத்துள்ளன! அல்லாஹ் இந்த நம் பிரார்த்தனைகளை ஏற்றுருள் புரிவானாக! ஆமீன்