Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2005
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,197 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோன்புக் கஞ்சி

ரஹ்மத் அலி காரைவிட்டு இறங்கினார். அன்று கடையில் ஓய்வில்லா வேலை. ஒரு லைசன்ஸ் சந்பந்தமாக பல ஆபிஸ்களுக்கும் அலைச்சல்! அதனால் நாவறட்சி! நோன்பின் களைப்பு தூக்கலாக இருந்தது! அஸ்மா – அவர் மனைவி அடுப்படியில் நோன்பு திறக்க பலகாரம் சுடும் பணியில் இருக்க வேண்டும் – கொதிக்கும் எண்ணையின் ‘சுர்.. ர்.. ர்’ என்ற சப்தம் உள்ள ஹால்வரை கேட்டது.

பாத்ரூமில் குளிப்பதைவிட, குளிர்ந்த கிணற்று நீரில் நான்கு வாளி அள்ளிக் குளித்தால் சுகமாக இருக்குமே என்ற உணர்வு! டிரஸ்மாற்றிக் கொண்டு – டவலை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு அறையின் வலப்பக்கமாய் இருந்த கதவைத்திறந்து கொண்டு கிணற்றடிக்கு வந்த போதுதான் அந்தக் காட்சியைக் கண்டு பதறிப்போனார். அங்கே..!

ஒரு பழைய அலுமினியக் கோப்பையில் நோன்புக் கஞ்சி! அதை ருசித்துக்கொண்டிருந்த கோழிகள்!

அவருக்குள் விவரிக்க முடியாத ஒரு தவிப்பு!

பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி மனத்திரையில் மின்னலிட்டது!

அப்போது ரஹ்மத்அலி பத்து வயதுப் பையன்!

நோன்புக்கஞ்சி வாங்க அந்தத் தெருப்பையன்கள் எல்லாம் ஒன்றாகவே செல்வார்கள்!

அவர்களில் ரஹ்மத்அலி மட்டுமே வறுமையான குடும்பத்துப் பையன்!

கையில் தூக்குச்சட்டியுடன் செல்லும் அவர்கள் பள்ளி வாசலுக்கருகில் இருந்த “புது ஊத்து” ஊறணிக் கரையில் இருந்த “கருக்காச்சி” மரநிழலில் இருந்து கொஞ்ச நேரம் விளையாடுவார்கள். அஸர் தொழுகை ஆரம்பித்தவுடன் ஓடிச் சென்று கியூவில் நின்று கொள்வார்கள்! தொழுகை முடிந்து துஆஓதியவுடன் கஞ்சி பகிர்தல் ஆரம்பிக்கும்!

கஞ்சி வாங்கிய பிறகு, மறுபடியும் கருக்காச்சி மர நிழலில் ஒரு விளையாட்டு!

நோன்பு வைக்காத சிறுவர்கள் அங்கேயே நோன்புக் கஞ்சியை ருசிபார்ப்பார்க்ள! ஆவி பறக்கும் கஞ்சிக்குள் விரலைவிட்டு ‘சூப்புவதில்’ – அதில் மிதக்கும் முள்ளிலையை எடுத்து சுவைப்பதில் ஒரு தனி இன்பம்! நோன்பு திறக்கும் நேரத்தில் தான் அரக்கப் பரக்க வீட்டுக்கு ஓடுவார்கள்! அப்படி விளைாயடிக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பையன்கள் ரஹ்மத் அலியின் தூக்குச் சட்டியை தற்செயலாகத் தட்டிவிட, கஞ்சி முழுவதும் தரையில் கொட்டி விட்டது! துடிதுடித்துப் போனான் ரஹ்மத்அலி. ஓவென்று அழ ஆரம்பித்துவிட்டான்!

திகைத்து போய்விட்டார்கள் பையன்கள்! இந்த சாதாரண நோன்புக்கஞ்சி கொட்டிப் போனதற்காக இவன் ஏன் இப்படி அழுகிறான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை! அந்த நோன்புக்கஞ்சியை வைத்துத்தான் அவனும், அவனுடைய ஏழைத்தாயும் நோன்பு திறக்க வேண்டும். ஸஹருக்குத்தான் சுடுசோறும், ரசமும், பருப்பும்! எப்போதாவது கருவாடு, மீன்!

இதையெல்லாம் அந்தப் பையன்களிடம் சொல்லிக் காட்டவா முடியும்?

அவனால் விம்மத்தான் முடிந்தது!

‘கொட்டிப்போய்விட்டது’ என்று மறுபடியும் சென்று கேட்டாலும் கஞ்சி பகிரும் ‘சவுகத்தலி’ கொச்சையாக ஏசுவார் என்பதால் அவன் அழுது கொண்டே வீட்டுக்குத் திரும்பினான்!

அவனை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அவனது தாய்க்கு!

அந்தப் பழைய நினைவுகள் வந்து மோதியதைத் தவிர்க்க முடியவில்லை ரஹ்மத் அலியால்!

இன்று அவர் அந்த ஊரில் ஒரு பெரிய மளிகை வியாபாரி!

கார்- வீடு – நிலம்புலம் என்று வசதியான வாழ்க்கைச் சூழல்!

பணக்காரப் பின்னணியுடைய மனைவி!

“அஸ்மா! அஸ்மா!” என்று கோபமாகக் குரல் கொடுத்தார்!

‘அவள் ஓடிவந்தாள்!

“என்ன இது?” என்றார் நோன்புக் கஞ்சியைச் சுட்டிகாட்டி!

“இன்னிக்கு கஞ்சி நல்லாவே இல்லீங்க! ஒரு மணமுமில்லே – அதான் அதைக் கோழிக்கு ஊத்திட்டு – உங்களுக்கு கிஸ்மிஸ் முந்திரி போட்டு தனியா நானே காச்சிகிட்டிருக்கேன்” என்றாள் இயல்பாக!

“நல்லா மணக்கலேங்கறதுக்காக கோழிக்கு ஊத்திப்புடுறதா? அது ஒரு புனிதமான ஆகாரமில்லியா?” படபடத்தார் அவர்! என்றுமில்லாத கோபம் குரலில்!

“என்னங்க இதுக்குப்போயி பெரிசாக் கோபப்படுறீங்க? அவசரமாக கூப்பிட்டவுடனே என்னமோ ஏதோண்டு நெனச்சி அடுப்பிலே போட்டதை அப்படியே விட்டுட்டு ஓடியாந்தேன்..” என்று சொடுக்கிவிட்டு உள்ளே போக ஆரம்பித்தாள் அவள்! “கொஞ்சம் நில்லு அஸ்மா! உனக்குப் பிடிக்கலேன்னா பள்ளிவாசல் நோன்புக் கஞ்சியை இனிமே வாங்க வேண்டாம். ஆமா!” என்று காட்டமாகவே சொன்னார்!

“சரி” என்றாள் அவள், சரத்தில்லாமல்!

ஒரு சாதாரண விஷயத்தில் இந்த மனுஷன் ஏன் இப்படிச் சத்தம் போடுகிறார்? என்று நினைத்தவளாக கிணற்றடியை நோக்கிச் செல்லும் கணவரையே பார்த்துக் கொண்டு நின்றாள் அஸ்மா!

ரஹ்மத் அலி அப்படி அவசரமாகக் கிணற்றடியை நோக்கி நகர்ந்தது கண்களில் திரையிட்டுவிட்ட கண்ணீரைத் துடைத்துக் கொள்ளத்தான் என்பது அவளுக்குத் தெரியவில்லை. தெரிய நியாமில்லை.

நன்றி: மணிச்சுடர்.