Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2005
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,050 முறை படிக்கப்பட்டுள்ளது!

பொய் முகங்கள்

வாஷிங்டன் டிஸியிலிருந்து பல்டிமோர் செல்லும் நெடுஞ்சாலையில் டாக்டர் காலிதின் வோல்வோகார் வழுக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது.

‘ஒருவகையாக இரண்டு வாரங்களைச் சமாளித்தாகி விட்டது. இன்னும் ஒரு வாரம் எப்படியாவது சமாளித்து விட்டால், அத்தாவை திருப்தியோடு ஊருக்கனுப்பிவிடலாம்’ என்று நினைத்துக்கொண்டான் காலித்.

பின் சீட்டில் சாய்ந்துகொண்டு ஏதோ ஒரு ஆயத்தை வாய்க்குள் உச்சரித்துக்கொண்டிருந்தார் மஜீது ராவுத்தர்.

நல்ல கனமான கறுத்தமேனிக்கு தும்பைப் பூப்போன்ற வெள்ளைச் சட்டை. எண்பதுக் கெண்பது சங்கு மார்க் கைலி, தொப்பி, இத்யாதி, கனகச்சிதமாய் இருந்தது.

வழியில் ஃபிரெட்ரிக் மெடிக்கல் சென்டரில் அவனுக்கு ஒரு அப்பாயிண்ட்மென்ட் – அவன் கிளாஸ்மேட் டாக்டர் சுமாமிநாதன் அங்கு ஒரு கன்ஸல்டிங் நியூரோ சர்ஜன். ஃபிரெட்ரிக்கிலேயே அவனுக்கு வீடும்கூட!

அப்பாய்ண்ட்மெண்டை முடித்துக்கொண்டு அப்படியே சுமாமிநாதன் வீட்டுக்கும் செல்லத் திட்டம்.

மதுரையில் படிக்கும் காலத்தில் காலிதும் சுவாாமிநாதனும் இரட்டைப் பிள்ளைகள்போல். காலிதின் வீட்டிலேயே எப்போதும் சுற்றிச் கொண்டிருப்பான் சுவாமி. அத்தா மீது அவனுக்குக் கொள்ளைப் பிரியம். அழைத்து வருமாறு அடிக்கடி போன் செய்து கொண்டிருந்தான்.

யந்தரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் அமெரிக்க வாழ்க்கை முறையில் ரிலாக்ஸாக புரோக்கிராம் போட எங்கே நேரமிருக்கிறது? அதுதான்தொழிற்பணியோடு இணைத்தே அந்த புரோக்கிராம்.

காலித் ஒரு பல்மொனரி மெடிஷின் ஸ்பெஷலிஸ்ட், நுரையீரல்நோய்களில் நிபுணன் – அந்தப் பகுதியில் பிரபலமானவன்!

அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட இந்தப்பதினேழு வருடத்தில் முதன் முறையாக அத்தாவை அமெரிக்காவுக்கு அழைத்து வந்திருந்தான் –

மஜீது ராவுத்தர் ஒரு ரிடையர்டு ஹெட்கிளார்க்! முப்பது வருட அரசாங்க சர்வீஸில் அவர் சம்பாதித்ததெல்லாம் மதுரை காஜிமார் தெருவில்உள்ள அந்த வீடும்,’கைச்சுத்தமான ஆசாமி’ என்ற நல்ல பெயரும்தான்.

ஓரளவுக்கு மெரிட்டுக்கு மரியாதையிருந்த அந்தக் காலத்தில் நல்ல மார்க் இருந்தததால் மருத்துவக் கல்லூரியில் இடம் சிரமமில்லாமல் கிடைத்தது – நேஷனல் மெரிட் ஸ்காலர்ஷிப் அவனை டாக்டராக்கியது.

மார்க்க அனுஷ்டானங்களில் ஊறிப்போன மஜீது ராவுத்தர் பைனை அதீத அக்கறையோடு வளர்த்திருந்தார்! அந்தக் காலத்திலேயே வெள்ளைச் சட்டை, வெள்ளைக்கைலி, வெள்ளைத்தொப்பி சகிதம் கறுகறுவென்ற தாடியுடன் அவர் கம்பீரமாக ஆபீஸுக்குள் நுழையும் போது அணைவரது கண்களும் அந்த வித்தியாசமான உருவத்தையே மொய்த்துக்கொண்டிருக்கும்!

ஹவுஸ் சர்ஜன்ஸி முடிந்த கையோடு ECFMG எழுத மகன் மலேசியா செல்ல வேண்டும் என்று கேட்டபோது மஜீது ராவுத்தருக்கு அதில் விருப்பம் இல்லை!

அறுபது கோடிப்பேர் வாழும் இந்திய நாட்டில் பிழைக்க வழியில்லாமலா அந்நிய நாட்டுக் ஓடிப்போக முயற்சிக்க வேண்டும்? என்பது அவரது கருத்தாக இருந்தது!

இருந்தாலும் மேற்படிப்பும் படித்துக்கொண்டு சம்பாதிக்கும் வாய்ப்பு வேறு அந்த நாட்டையும்விட அமெரிக்காவில் தான் அதிகம் என்று விளக்கிச் சொன்னபோது, தன் மகனின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடவில்லை அவர்.

ECFMG பாஸ் செய்து அவன் நியூயார்க் மருத்துவமனையொன்றுக்குப் புறப்பட்டபோது திருமணமானவனாக இருக்குமாறு பார்த்துக் கொண்டார் – பி.ஏ. படித்திருந்த நிஷா அவனுக்கு மனைவியாகியிருந்தாள்!

“நீ எந்த நாட்டுல இருந்தாலும் முன்னுக்கு வந்திடுவே காலிது! உன் திறமை, துணிச்சல் எனக்குத் தெரியும்! ஆனா அது மட்டும் போதாது! நீ எங்க இருந்தாலும் ஒரு நல்ல முஸ்லிமா இருக்கணும்! உன்னோட குழந்தைகளை நல்ல முஸ்லிம்களா வளர்க்கணும் – நம்ம கலாச்சாரப் பெருமைகளைக் கண்ணைப் போல பாதுகாக்கணுங்கறதேன் உங்கிட்ட நான் கேட்டுக்க விரும்பறதெல்லாம் – அதை மட்டும் மறந்துரக் கூடாது நீ!” என்று தான் உபதேசித்து அனுப்பினார்!

அதன்பின் அவர் அவனுக்கு எழுதிய கடிதங்களில் பாதிக்குமேல் அந்தக் கலாச்சாரத்தைக் காப்பாற்றவேண்டிய கட்டாயத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும்!

காரணம் அவர் அமெரிக்காவுக்குச் சென்றிராவிட்டாலும் அமெரிக்க நாகரிகம் இங்கிருந்து போன நம்பவர்களுடைய கலாச்சாரப் பின்னணிகளை எந்த அளவுக்கு அலைக்கழிதிருக்கின்றது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்.

அவர் பணி செய்த ஆபிஸின் அதிகாரியுடைய மூத்த பையன் – அவரது அனுமதியின்றி ஒரு அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு கிறிஸ்டியனாகிப் போனதில் மனமுடைந்து அவர் ஹார்ட் அட்டாக்கில் அகாலமாக இறந்து போனதும் – அந்தப் பையனின் பராமரிப்பை எதர்பார்த்திருந்த அந்தக் குடுபமும் – ஐதீகத்தில் ஊறிப்போன குடும்பம், அவனோடு காம்ப்ரமைஸ் செய்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டதும் அவருக்குத் தெரியும்!

ஆனால் தன் மகன் மீது அவருக்கு அளவுக்கதிகமான நம்பிக்கை இருந்தது! அவனுடைய மழலைப் பிராயத்திலிருந்து அவனது ஒவ்வொரு அணுவுக்குள்ளும் அவர் ஏற்றி வைத்திருந்த ஈமானின் உறுதிப்பாடு எந்தச் சூழ்நிலையிலும் தன் பிடியை விட்டு விடாது என்று அவர் நம்பினார்!

ஆனால், அவனது மனைவி…?

என்னதான் இருந்தாலும் அன்னியப் பெண்! படித்தவள்! அமெரிக்கச் சூழ்நிலை அவளை மாற்றி விட்டால்..? அவரது சந்ததிகளான பேரன் பேத்திகள் வழி தவறிப் போவதற்கு அது காரணமாகிப் போகுமே என்ற பயம் தான் அவருக்கு!

அதையும் அவர் மறைக்கவில்லை! மகனிடம வெளிப்படையாகவே எச்சரித்துத்தான் அனுப்பினார்!

அவனிடமீருந்து வரும கடிதங்களிலிருந்து அவன் எள்ளளவும் மாறிவிடவில்லை என்பதை நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஒரு பையன் – ஒரு பெண, இரண்டு குழந்தைகள தான் அவனுக்கு!

இந்தப பதினேழு வருட காலத்தில் ஒரே ஒரு முறை – அதுவும் பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்ததுதான்! அப்போது குழந்தைகள் மிகச்சிறிய பிள்ளைகள் – எதையும அனுமானிக்க முடியாத வயது!

இடையில மஜீது ராவுத்தர் ரிட்டடையரான பிறகு, திடீரெனத்தாக்கிய அந்த கண்நோய் பற்றிச் செய்தி கிடைத்ததும் காலித் மட்டும்தான் இந்தியா வந்தான்!

கொஞ்சங்கொஞ்சமாக மங்க ஆரம்பித்த பார்வை முழுவதும் விரைவிலேயே இல்லாமல் போனது – அது ‘டிஜெனரடிவ் ஆப்டிக் அட்ரொஃபி’ என்பதால் பிரமாதமாக ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை காலித் புரிந்து கொண்டான்.

அத்தாவை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்று தன்னுடனேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு அவனுள் இருந்தாலும், அவனது வாழ்க்கைச் சூழ்நிலை – குடும்ப நிலவரம் அதற்கிசைந்ததாக இல்லை!

மனைவி நிஷா மிகவும் மாறிப் போயிருந்தாள்! அமெரிக்க மெய்ன்ஸ்ட்ரீமுக்குள் பிரவேசித்திருந்தாள் – குழந்தைகள் கூட தாய்வழியிலேயே போய்க்கொண்டிருந்தன.!

அதை ஒரு தாபத்தோடு அவனால் பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிந்ததே தவிர, அதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளைச் செய்ய முடியாதபடி அப்படி ஒரு வேலைச் சூழ்நிலை அவனுக்கு!

மனதுக்குள் மருகுவதைத்தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை!
ஒரு பாகிஸ்தானியக் குடும்பத்தின் உதவியோடு பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுப்பதாகவும், மார்க்க அனுஷ்டானங்களைக் கற்றுக் கொடுப்பதாகவும், அெமரிக்காவில் வாழ்ந்தாலும் பிள்ளைகளை இந்திய முஸ்லிம்களாகவே வளர்த்து வருவதாகவும் கடிதங்களில் பொய்யுரைத்துக் கொண்டிருந்தான் அத்தாவுக்கு!
இப்படியொரு சூழ்நிலையில், அத்தாவை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்று வைத்துக் கொள்வது சாத்தியமாகத் தோன்றவில்லை அவனுக்கு!

ஏதேதோ காரணங்களைச் சொல்லி சமாளித்தான் – இந்தியாவிலேயே நவீன சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தான். ஏராளமாகப் பணம் கொடுத்து அத்தாவை நன்கு கவணித்துக் கொள்ளுமாறு தன் ஒரே தங்கையிடம் வேண்டிக் கொண்டான்!

அந்த நேரத்தில்தான் அத்தாவிடமிருந்து அந்தக் கடிதம் வந்தது!
மகன் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு, அத்தாவுக்கு அங்கு சிகிச்சைக்கு வழிசெய்யவில்லையே என்ற குற்றச்சாட்டுக்கு அவன் ஆளாகிவிட வேண்டாம் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். உறவினர்களின் சாடைப்பேச்சு அத்தாவை உறுத்தியிருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டான்.

பாமர்களுக்கு தெரியுமா அவரது வியாதிக்கு உலகத்தில் எங்குமே சிகிச்சை இல்லையென்று?

அத்தாவின் கடிதத்தில் இருந்த நியாத்தைப் புரிந்து கொண்ட அவன், உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

மிகவும் சிரமப்பட்டு குடும்பச் சூழ்நிலையை ஓரளவுக்கு மாற்றியமைக்க முயன்றான்.

மனைவியும் மகனும் ஓரளவுக்கு கன்வின்ஸ் ஆகிவிட்டார்கள்!

ஆனால் பதினான்கு வயது மகள் ஹஸீனாவைக் கன்வின்ஸ் செய்வதுதான் சிரமமாயிருந்தது காலீதுக்கு!

முழுக்க மழுக்க ஒரு அமெரிக்க டீன்ஏஜராக வளர்ந்திருந்த பெண் அவள்!
“உங்க அப்பாவுக்காக நான் ஏன் என்னுடைய பழக்க வழக்கங்களை மாத்திக்கணும்?” என்று எதிர்க்கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தாள் அவள்!

அத்தாவுக்கு கண்பார்வை இல்லாததால் மற்ற விஷயங்களைச் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் அத்தாவின் புத்திசாலித்தனம் அவனுக்கு நன்றாக தெரியுமே?

“எங்கே குர்ஆன் ஓதிக்காட்டு!” என்று பேரன் பேத்தியைப் பிடித்துக்கொண்டால்? அந்தபயம் தான் காலிதுக்கு!

அத்தாவிடம் பேசாமல் உண்மையைச் சொல்லிவிடுவோமா என்று கூட யோசித்தான் – ஆனால் அத்தாவிடம் பொய்யனாகிப்போக அவனுக்கு மனமில்லை. அவனைப் பற்றி அவர் கட்டியுள்ள மனக்கோட்டையைத் தகர்க்க விரும்பவில்லை.

தன் தர்மசங்கடத்தை சுமாமிநாதனிடம் போனில் சொன்னான். உடனே சுமாமி அவனுக்கு உதவிக்கு வந்தான். சுவாமியின் நெருங்கிய நண்பன் ஹலீம் மிர்ஸாவுக்கு ஹஸீனாவின் வயதிலே ஒரு பெண் – முழுக்க முழுக்க பாகிஸ்தானியக் கலாச்சாரத்தில் கண்டிப்போடு வளர்க்கப்பட்ட பெண் – அவளை ஏன் சில நாட்களுக்கு ஹஸீனாவுக்கு ‘டூப்’பாக பயன்படுத்திக் கொள்ளக்கூடாது? என்று கேட்டான்~ அது விடுமுறைக் காலமாய் இருந்ததால் ஹஸீனாவை எங்காவது டூர் அனுப்பிவிட்டு ஹலீமின் மகள் பர்வினை வீடடுக்கழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுப்பதாக சுவாமி சொன்னான் – அப்படியே செய்தான்!

தன் பேத்தி ஸலாம் சொல்லி வரவேற்றதைக்கண்ட மஜீது ராவுத்தருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

அமெரிக்காவின் அந்த வேகமான வாழ்க்கை முறை தன் மகனை ஓர்
அணுக்கூட மாற்றி விடவில்லை என்பதை நினைத்துப் பெருமைப்பட்டார்!
பெரிய மனநிம்மதி அவருக்கு! அதை நேரில் தெரிந்து கொள்ளத்தானே,
‘சிகிச்சை’ அது இது என்று சொல்லி அவர் அமெரிக்காவுக்கு வந்திருந்தார்.

நாடகம் நன்றாகவே அரங்கேறிக் கொண்டிருந்தது! சும்மா சொல்லக்கூடாது!
அந்த பாகிஸ்தானியப் பெண் பர்வீன் படு சூட்டிகை! சொன்னதைப் புரிந்து
கொண்டு தன் திறமையால் மஜீது ராவுத்தரை வியக்க வைத்துக்
கொண்டிருந்தாள் – உண்மையான ஹஸீனாவாகவே மாறிப் போனாள்!

இவற்றையெல்லாம் மெளனமாகப்பார்த்துக் கொண்டிருந்தாள் ஹஸீனா. தன்
அறையிருந்தபடியே! எங்கும் வெளியில் செல்ல முடியாதென்று மறுத்துவிட்ட
அவளுக்கு நடப்பது எல்லாமே வேடிக்கையாகத் தெரிந்தன! வெறுப்பு மூட்டம்
அவளுள் புகைந்து கொண்டிருந்தது!

சுமாமிநாதனின் வீட்டில் கிடைத்த இட்டிலி, தேங்காய் சட்டினியும், அவன்
மனைவி, குழந்தைகளின் இனிய தமழ்ப் பேச்சும் மதுரையிலிருக்கும்
உணர்ச்சியை ஏற்படுத்தியது மஜீதுராவுத்தருக்கு!

ஃபிரெட்ரிக்கிலிருந்து திரும்பும்போது தன் மகனை அன்போடு கடிந்து
கொண்டார் – ஒரு சுவாமிநாதனால் தன் பிள்ளைகளுக்கு இவ்வளவு நன்றாகத்
தமிழ் கற்றுக் கொடுக்க முடிந்திருக்கிற போது, அவனால் ஏன் தன் தாய்
மொழியை தன் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க முடியாமல் போனது
என்று கோபமாகக் கேட்டார்!

சுவாமியின் மனைவி வெறும் ஹவுஸ் வைஃபாகவே இருப்பதாகவும், தன் மனைவி வேலைக்குச் செல்வதால் அது சாத்தியமற்றுப் போய்விட்டதாகவும் சொல்லி சமாளித்தான்.

இதற்கே கோபிக்கும் அத்தா உண்மை நிலவரம் தெரிந்தால் என்ன சொல்வார்? என்று நினைத்துக் கொண்டே டிரைவ் செய்து கொண்டு வந்தான் காலீத்.
வாஷிங்டன் டிஸீயின் புறநகர்ப் பகுதியிலிருந்த வீட்டின் முன் கார் நின்றது.
வீட்டினுள் நுழையும் போதே “ஹஸீ! ஹஸீனா டியர்” என்று அழைத்தவாறு உள்ளே சென்றார் மஜீது ராவுத்தர். பேத்தியோடு அந்த இரண்டு வாரத்தில் அவர் அவ்வளவு ஒட்டிப் போயிருந்தார்.

“யெஸ் கிராண்ட்பா” என்றவாறு முன்வந்து நின்ற ஹஸீனாவைப் பார்த்ததும் வெடவெடத்துப் போனான் காலீத்.

குரல் வித்தியாசத்தில் குழம்பிப்போய் நின்றார் மஜீது ராவுத்தர்.

என்ன எதிர்பாராத திருப்பம்!

“ஹஸீ..” என்று ஏதோ சொல்லமுற்பட்ட காலீதை நோக்கிப் பொரிந்து தள்ளினாள் ஹஸீனா! அது அமெரிக்க ஸ்லாண்டாக இருந்தாலும் அனுபவசாலியான மஜீது ராவுத்தரால் அந்த ஆங்கிலத்தை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

“சீ! நீயெல்லாம் ஒருதகப்பன்” என்று ஆரம்பித்து, தனக்கு டூப்போட வேண்டிய அவசியம் ஏன் என்று கேட்டாள்! பர்வீனைத்தான் வீட்டுக்கு அனுப்பிவிட்டதாகவும் இனி தன்னால் இந்தப்போலி நாடகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாதென்றும் கத்தினாள்.

“இந்திய கலாச்சாரத்தில – இஸ்லாமியப் பண்பாட்டில் தன்னை வளர்க்காததற்கு யார் காரணம்?” என்று கேட்டாள்.

ஒரு சுவாமிநாதனால் அவர் மகள் சுமந்தாவை ஒரு இந்தியக் கலாச்சாரப் பின்னணியில் வளர்க்க முடிந்திருக்கிறபோது – ஒரு ஹலீம் மிர்ஸாவால் ஒரு பர்வீனை பாகிஸ்தானிய முஸ்லிமாக வளர்க்க முடிந்திருக்கிற போது – தன்னுடைய பெற்றோரால் தன்னை ஏன் ஒரு தமிழ் முஸலிம் பெண்ணாக வளர்க்க முடியவில்லை என்று கர்ஜித்தாள்!

கோபத்தில் பொரிந்து தள்ளும் தன்பேத்தியை நோக்கி தட்டுத் தடுமாறி முன்னேறினார் மஜீது.

ஓடி வந்து அவரைக் கட்டிக்கொண்டு “டெல்மீ, கிராண்ட்பா! ஹு இஸ் ரைட் அன்ட் ட்ரூ? மீ ஆர் டாட்?” என்றாள்!

நெகிழ்ந்து போன மஜீது ராவுத்தர் அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டே சொன்னார்.

“இட் இஸ் யூ – யூ மை டியர்!”

பொய் முகங்கள் தரையை நோக்கின.

நன்றி: முஸ்லிம் முரசு