நான் எழுதுலகுக்கு அறிமுகமானது கவிதை வாயிலாகத்தான். சுமார் 1000 கவிதைகள் எழுதி இருந்தாலும் கதையாசிரியனாகவே பரவலாக அறியப்படுகிறேன். அதைப்பற்றி எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. 10 சிறுகதைத் தொகுதிகளைத் தந்துள்ள நான் ஒரே ஒரு கவிதை நூலைத்தான் , என் மல்லாரி பதிப்பகத்தின் மூலம் தந்திருக்கிறேன். அந்த “இருகாட்சிகள்” நூலிலிருந்து சில காட்சிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இதைப்பற்றி, மறைந்த இறையருட்கவிமணி, பேராசிரியர், கா.அப்துல் கபூர், எம்.ஏ.; டி.லிட். அவர்கள் எழுதிய சில வரிகளை முன்னுரையாக வைப்பதில் மகிழ்ச்சி. ”
இந்த நூலில் ‘இருகாட்சிகளாக ஹிமானாசையத் காட்டும் காட்சிகள் ஒரு புதிய இலக்கிய வடிவம். இதில் ஒரு சமகால சமுதாயச்சிறுகதை, ஒரு வரலாற்றுச் சிறுகதை இரண்டையும் பிசிறில்லாமல் இணைத்துக்காட்டுகிறார்…..’ என்ன செய்வது? சொல்லுங்கள் , என்ன செய்வது?’ என்று அவர் ஒவ்வொரு காட்சியையும் முடிக்கும் போது, நாம் வித்தியாசமான ஓர் உணர்ச்சிக்கு ஆளாகிறோம்…”
இன்று | அன்று |
மூமினா ஒழுச்செய்தாள்
மூச்சிரைக்க ஓடி முஸல்லாவை எடுத்தாள்! முறையாய் தக்பீர் கட்டி முனைப்போடு தொழ ஆரம்பித்தாள் ! முன்னறையில் முணுமுணுப்பு! முஹ்ஸினாவும் தோழிகளும் மூலை வீட்டு கதிஜாவும் மும்முரமாய்ப் பேசும் சத்தம்! போதிய இடைவெளியில் பாங்காய் அமைந்திருந்த ருக்கூவும் ஸுஜூதும் படுவேகத்தில் மாற பரபரப்பாய்த் தொழுது முடித்தாள் ! “இந்த மனுஷிக்கு இதே வேலையாப்போச்சு எப்பப் பார்த்தாலும் தொழுகை தொழுகைதேன்! சீக்கிரமா வரச் சொல்றா ஒங்க சீதேவி வப்பும்மாவை” முறைத்தவள் யாருமல்ல மூமினாவின் மருமகள்தான்! இதற்குமேல் சுணங்கினால் எழும் நூறு வசை பாட்டு! எனவே, துவாவை ஒத்திவைத்து துடித்தெழுந்த மூமினம்மாள் துள்ளியோடினாள் முன்னறைக்கு! மாமியாரை விட்டுவிட மனசு கேட்காத மருமகளும் மகிழ்ச்சியோடு ஆன் செய்தாள் மணியான ரிமோட்கன்ட்ரோலை! டிவி திரையினிலே விரிந்ததொரு புதுச்சினிமா! திறந்திருந்த வாய்க்குள் நுழைந்துவிட்ட கொசுக்கூட வியந்துநின்று பார்த்ததந்த வீட்டுத் தலைவி மூமினாவை! |
கொளுத்தும் வெய்யில்
கொடுமையான சுடுமணல் ஆடையில்லாவெற்றுடம்பில் அழுத்தும் இரும்புடை ! பழுத்த வயது பசித்திளைத்தபெண்ணுருவம்! சுற்றிக் கயவர்கள் சூளுரைத்து நின்றார்கள்! “ஓரிறைவன் தானென்றும் அவன் தூதர் முஹம்மதென்றும் ஒப்புக்கொண்ட கொள்கையினை விட்டுவிட்டேன் என்று சொல் சொல்! சொல்லடி, நீ! சதிகாரி” என்றவர்கள் சவுக்கால் விளாசினர்! சருகான அப்பெண்மணியோ “முடியாது.. முடியாது ஒருக்காலும் முடியாது! மூலவன் அல்லாஹ்வே அவன் தூதர் முஹம்மதுவே! மூச்சே போனாலும் முனைமுறிந்து போகேன் நான்! என்று முழக்கமிட எதிர்நின்ற கொடியவர்கள் அம்பால் எய்து அவள் இன்னுயிரை அழித்தார்கள் அந்தோ அவள் துயரம் ஆறாத ரணமன்றோ! அழியாச் சரித்திரமாய் அமைந்தவள்தான் சுமையா! அந்தச் சுமையாவும் அருமை நம் மூமினாவும் சொந்த பந்தம்தான்… சோதர முஸ்லிம்கள்தான்! என்ன செய்வது? சொல்லுங்கள்… என்ன செய்வது? |