இன்று | அன்று |
ஆசியா மரியத்துக்கு அழகான ஒருபிள்ளை! வயது நான்கு வதூது அதன் பெயர்! கொள்ளை அழகு குறும்புகளோ ஏராளம்! பேச்சில் செல்லம் பெரியவன்போல் துருதுருப்பு! ஆனா ஆவன்னா அழகாக அவன் படிப்பான் ஏ பி சீடி எழிலாக அவன் சொல்வான்! என்ன சொன்னாலும் சொன்னதைச் சொல்லிவிடும் புத்தி சாலித்தனம் பூரிப்பு எல்லோருக்கும்! ஒலி ஒளி கேட்டால் ஒரே மூச்சில் மனப் பாடம்! ஒரு ஸ்டெப் விடாமல் ஒழுங்கான டான்ஸ் மூவ்மென்ட்! ஆசியா மரியம் அகமகிழ்ந்து போனாள்! அரபகத்தில் உள்ள அவள் கணவன் அஹ்மதுக்கு அருமைமகன் வதூது பற்றி அழகழகாய் எழுதிடுவாள்! ஆறு மாதத்தில் இன்னோர் கைக்குழந்தை ஆரிஃபா அதன் பெயர்; அழகின் பொக்கிஷமே! தூங்கும் குழந்தைக்கு துணையாக இருக்குமாறு மாமியாரைச் சொல்லிவிட்டு மாடி வந்தாள் ஆசியாமரியம்! அடுத்தவீட்டு அலிமாவிடம் ஆசையாய் வாங்கி வைத்த எஜமான் கேசட்டை எடுத்துப் போட்டாளே! ரஜினி சூப்பர்ஸ்டார் ராஜாபோல் பவனிவந்தார்! ஆழ்ந்து படம் பார்த்த ஆசியா மரியத்தை கீழிருந்து வந்த கீச்சுக்குரல் எழுப்பியது! கீழறையில் தூங்கிய குழந்தை அழும் சத்தம்! மேலே வந்து மூச்சுமுட்டச் செய்தது! பொறுமை இழந்து அவள் பொசுக்கென்று எழுந்தாளே! “என்னம்மா சீதேவியளா? ஏன் புள்ள அழுகுது? அழுகுற குழந்தைய அடக்கத் தெரியாத துப்புக் கெட்ட ஜன்மம்! தூ தூ” எனத் திட்டி கீழே இறங்கினாள்! கீழ்வானம் வெடித்தது! அறைக்குள் செல்ல அவள் முயன்றபோது அங்கு வந்த வதூது அவசரமாய் ஓடினான்! தொட்டிலைப் பிடித்தான் தாலாட்டுப் பாடினான்! “ஏம்மா நீ அழுவுறே? சித்தெறும்பு ஒன்ன கடிச்சிச்சா?” சித்தெறும்பு கடித்ததோ சீர்தட்டிப் போனதோ! ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தியது! ஆசியா மரியம் அணைத்தாள் வதூதை! முத்தமாரிப் பொழிந்தாள்! முகம்பார்த்துப் பூரித்தாள்! சூசகம் புரிந்து சுறுசுறுப்பாய் இயங்கிய பாச மகனைப் பாராட்டி மகிழ்ந்தாளே! |
அழும் குழந்தைக்கு ஆராரோ பாடிய ஆயிஷா பாத்திமா அஸ்மா கதீஜா சீராகப் பாடிய சிறப்புமிகு பைத்துகள் மருவிப் போய்விட்ட மர்மம்தான் என்னவோ? சிறப்பான முனாஜாத்து சுரம் மாறா சீறா எழிய அரபுத்தமிழில் ஏற்புடைய மாலைகள்! கண்ணிகள் ; கவிதைகள் கருத்துடைய பாடல்கள் ‘இக்பாலை’ உருவாக்கிய அக்காலச் சரித்திரங்கள்! ‘முஹம்மதலி ஜவஹர்’களை முகிழ்ப்பித்த தாலாட்டுக்கள்! மறைந்துவிட்ட மாயம் என்ன? மாற்றுவழி கண்டதென்ன? சினிமா மோகத்தால் சீரழிந்து போனதுடன் சின்னஞ்சிறு மனங்களிலும் நஞ்சேற்றும் கொடுமை என்ன? ‘அலிஃப்’ ‘பே’ ஓதவேண்டிய அழகான குழந்தைக்கு அனாச்சார அறிமுகத்தை அம்மாவே செய்கிறாளே! அந்தக் காலத்து ஆயிஷாவும் பாத்திமாவும் இந்தக் காலத்து ஆசியாயும் அலிமாவும் சொந்த பந்தம்தான் சோதர முஸ்லிம்கள்தான்! என்ன செய்வது? சொல்லுங்கள்…. என்ன செய்வது? |