Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2009
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 5,040 முறை படிக்கப்பட்டுள்ளது!

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை

இன்றைய தலைமுறையினர்கள்,  ஏன் முந்தைய தலைமுறையினர்கள் பலர் அறியாத பல வரலாற்றுச் சம்பவங்களையும், செய்திகளையும் நமதூர் பெரியார் – ஆசிரியர் சி. அ. அ. முஹம்மது அபுத்தாஹிர் அவர்கள் சுவைபட எழுதியுள்ளார்கள். தான் அறிந்த இந்த சம்பவங்களை உலகத்தினர் அறியட்டும் என்ற நன்நோக்கில் சித்தார்கோட்டை.காமில் வெளியிட முன்வந்துள்ளார்கள்.

உண்மையில் சிரமமான இந்த ஆய்வு பாராட்டத்தக்கதாகும். இந்த அறிய சேவைக்காக நாம் அனைவரும் அவர்களுக்குக் கடமைப் பட்டுள்ளோம்.

இந்த ஆய்வுக்கட்டுரை சிறப்பாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறேன். கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்கள் இணையதளத்தில் இடம் பெற எங்களுக்கு எழுதுங்கள். தகுந்த ஆதாரத்துடன் தரப்படும் நல்ல கருத்துக்கள் இந்த ஆய்வுக் கட்டுரையில் இன்ஷா அல்லாஹ் இடம் பெறும்.

M.S. காஜா முயீனுத்தீன், கப்ஜி – சவுதி அரேபியா


டாக்டர் ஹிமானாவின் அறிமுகம்
நமது முகம்மதியா மேல்நிலைப் பள்ளியின் வெள்ளிவிழாவினை சிறப்பாகக் கொண்டாட முடிவு மேற்கொண்டபோது, அதன் தொடர்பில் ஒரு சிறப்பு மலர் வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது. நான் அம்மலர்க்குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டேன். அம்மலரில் சித்தார் கோட்டையின் வரலாறு முடிந்தவரை சுருக்கமாக வெளியிடவும் முடிவு செய்யப்பட்டு, வெளிவந்தது.

 

அப்பணியினை சிறப்பாகச் செய்யக் கூடியவர்கள் யார் என்று பரிசீலித்து இப்போது சித்தார்கோட்டை.காம் தளத்தில் இந்த ஆய்வுக்கோவையை எழுதும் ஆசிரியர் அவர்கள் வசம் ஒப்புவிக்கப்பட்டது. அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அப்பணியைச் செய்து முடித்து மலர்க்குழுவிடம் ஒப்படைத்தார்கள். மலர்க்குழுவுடன் பள்ளி – ஜமாஅத் நிர்வாகக் குழுக்களும், ஊரின் அப்போதைய மூத்த வயதுப் பெரியார்கள் அனைவரும் அமர்ந்து பரிசீலனைக்குப்பின் அவ்வாய்வின் ஒரு பகுதி மட்டும் மலரில் இடம் பெறச் செய்யப்பட்டது. மலரில் இடம் போதாமையே சுருக்கமாக வெளியிடக் காரணம்.

அந்த ஆய்வு இப்போது முழுமையாக நமது தளத்தில் வெளிவரும் செய்தியை சகோதரர் ஹாஜா மொய்னுதீன் அவர்கள் தெரிவித்த போது மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அது நம்மூர் மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய வரலாறு.

இதனை எழுதியிருக்கும் பெரியார் சி.அ.அ. முஹம்மது அபூதாஹிர் அவர்கள் என் ஆசிரியர். அரபி, உர்தூ, இந்தி, தமிழ், ஆங்கிலம், பர்மீஸ் இப்படி பல மொழிகள் எழுதப் படிக்கத் தெரிந்த அறிஞர்.

சித்தார்கோட்டையில் பிறந்து பல துறைகளிலும் திறமை பெற்றிருந்த அறிஞர் பெருமக்கள் வரிசையில் இன்றும் நம்முடன் வாழ்ந்துவரும் அன்னாருக்கு நாம் அனைவரும் கடமைப் பட்டுள்ளோம்.

இந்த அரிய முயற்சியை மேற்கொண்ட அன்னாருக்கு நம் நன்றி.

டாக்டர் ஹிமானா சையத்,
சிங்கப்பூர் – 14 ஆகஸ்ட் 2009


ஆசிரியரின் முன்னுரை:

 

அப்போது 5ஆம் வகுப்பை முடித்து விட்டு இவ்வூரில் மேல் படிப்பு படிக்க வாய்ப்பு இல்லாததாலும் வெளியூரில் சென்று படிக்க வசதியில்லாததாலும் ‘பேட்மின்டன்’ விளையாடுவதற்கு ‘பணிக்கன் ஊரணிப்’ பக்கம் போய் வருவதை வழக்கமாகக் கொண்ட மாணவப்பருவம்! ஆசை தீர விளையாடிவிட்டு 10 மணி அளவில் பணிகன் ஊரணியில் சுமார் 1 மணி நேரம் வரை குளித்து கும்மாளமடித்துவிட்டு பசியெடுத்தபின் காலை சிற்றுண்டியை மனதில் அசை போட்டுக்கொண்டே வீடு நோக்கிப்போவேன். இதுவே என் தினசரி வாழ்க்கையாக அமைந்து விட்டது.

அது மட்டுமல்லாமல் வெள்ளி விழா மலரில் கட்டுரை எழுதுமாறு என்னைக்கேட்டதும் தயக்கமின்றி ஒப்புக்கொண்டதற்கும் ,பல அன்பர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த ஆய்வுக் கட்டுரையை தொகுத்து வழங்குவதற்கும் இதுவே மூலகாரணமாக அமைந்தது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. எப்படி?

தினசரி ‘பணிக்கன் ஊரணியில்’ குளிக்கும் பழக்கம் ஏற்பட்டதால் அங்கு வரும் அனைவரிடமும் நன்கு பரிச்சயம் ஏற்பட்டது. வயது வித்தியாசமின்றி எல்லோரிடமும் பழகுவேன்.ஊரின் தென்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் பலர் அங்கு குளிக்கவந்தாலும் நான் மட்டும் அவர்களை விட்டு ஒதுங்கி வாலிபர்கள் உள்ள பகுதியில் ஒதுங்கிக் கொள்வேன்.

பல பிரச்சனைகளைப் பற்றி பேசுவார்கள், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். சிலம்பம், குஸ்தி, மற்றும் கால் பந்து பற்றிப் பேசுவார்கள், அரசியல் பற்றி அலசுவார்கள்.ஆன்மீகம் பற்றி ஆராய்ச்சி செய்வார்கள். பக்கிரப்பா முகைதீன்,அப்பாவின் பூர்வீகம் பற்றிய செய்தி சூடு பிடிக்கும்.

பேச்சு தடம்மாறும். கல்யாண ஊர்வலம் (அப்போதெல்லாம் இரவு 10 மணிக்கு மேல் தான் மாப்பிள்ளை ஊர்வலம் நடக்கும்)சிலம்பாட்டம், தீப்பந்த விளையாட்டு, அத்தானூர் பெண்கள் சதிராட்டம் என்று நீளும்.

பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு உணர்ச்சி பொங்கும்.உரத்தக் குரல்களுக்கிடையே வடக்குத்தெரு, தெற்குத்தெரு ,வெள்ளைக்கொடி, சிகப்புக்கொடி என்ற வார்தைகள் ஓங்கிக்கேட்கும். அவர்களிடம் ஆவேசம் தொனிக்கும்.

இதையெல்லாம் நான் ஒரு பக்கமாக நின்று வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். எனக்கு அப்போது அவர்கள் பேச்சைப் புரிந்து கொள்ளக் கூடிய வயது இல்லை. அத்தனை பேருக்கிடையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருக்கிறானே என்ற பிரக்ஞையின்றியே அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைகளும், பிரதிவாதங்களும் நடந்து கொண்டேயிருக்கும்.

1937 அல்லது 1938 என்று ஞாபகம். கோடைகாலத்தின் ஆரம்பம். ‘பேட்மின்டன்’ ஆடிவிட்டு கிரவுண்டில் வியர்வை சொட்டச் சொட்ட ஊரணியை நோக்கி நடந்தேன். நல்ல களைப்பும் கூட.

பாதி தூரத்தை நான் கடந்து கொண்டிருக்கும் போது ஊரணிப் பக்கமிருந்து பலத்த பேச்சு சப்தம் கேட்டது. ஆவேசமான குறல்கள்.

இனந்தெரியாத பயம்! யாரோ சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் போலும் என்றெண்ணி விரைவாக நடந்து ஊரணிக்கரைக்கு வந்து சேர்ந்தேன். கரைக்கு எதிர்புறம் ஊரணிமேட்டில் உள்ள தைக்காவில் இருந்து தான் அந்த ஆவேசக்குரல்கள் வந்து கொண்டிருந்தது. பூனை போல் கிட்ட சென்று ஒதுங்கினேன்.

25 முதல் 30 வயதிற்குட்பட்ட நாலைந்து வாலிபர்கள் தான் அவ்வாறு ஆவேசமான குரலில் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

“அதெல்லாமில்லை. சித்தார்கோட்டை என்பது சரியான பெயர். கடைசியில் உள்ள பன்மை குறியை நீக்கி விட்டால் சித்தர் கோட்டை என்று ஆகிவிடும்”.

‘நீ சொல்வது சரியல்ல. சித்தரசன் கோட்டை என்பது சொல் வழக்கில் சித்தார்கோட்டை என்று வந்து விட்டது”.

“உனக்கு ஒன்றுமே புரியவில்லை. நம் ஊருக்கு கிழக்கேயிருக்கும் கருப்பண்ணசாமி கோவிலில் முன்பு சித்தர்கள் இருந்தார்களாம். அதை வைத்துத் தான் சித்தர்கோட்டை என்று பெயர் வந்ததாக எங்க நல்லத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன்”.

முன்பு பேசியவர் கோபம் அடைந்தார்.

“உனக்குத்தான் ரொம்பத் தெரியுமோ? கோட்டைத் திடலைப் பற்றி உனக்குத் தெரியுமா?

நம்ம ஊருக்கு மேற்கே. அதில் இருந்து கொண்டு தான் சித்தரசன் இந்த ஊரை ஆண்டு வந்தானாம்”.

அடுத்தவர் துள்ளியெழுந்தார். தோளைத் தட்டி விடடுக் கொண்டு “உன் பேத்தலைக் கண்டியன் தாவு உடைப்பில் கொண்டு போய்ப் போடு…”

மூன்றாமவர் அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டே மற்றவர்களைப் பார்த்து “நான் அப்போதே சொல்ல நினைத்தேன் .உங்கள் பேச்சு எங்கே போய் முடிகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். கண்டியன்தாவு என்று நீங்கள் சொன்ன பிறகு தான் எங்க ராதத்தா சின்ன வயதில் எனக்குச் சொன்ன செய்தி ஞாபகம் வருகிறது.

ரொம்ப காலத்துக்கு முன் இந்த ஊர் சின்ன குடியிருப்பாக இருந்த போது இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று ஊர் மக்கள் கூட்டம் போட்டு பேசினார்களாம். பலரும் பல விதமாக சொன்னதில் ஒரு முடிவும் ஏற்படவில்லை. கடைசியாக ஒரு பெரியவர் எழுந்து நம்ம குடியிருப்புக்கு மேற்கே ‘கண்டியன் தாவு’ என்று ஓர் சின்ன ஆறு ஓடுவது உங்கள் எல்லோருக்கும் தெரியும்! அதை வைத்து ‘சிற்றாறு கோட்டை’ என்று சூட்டினால் பொருத்தமாக இருக்கமென்று நினைக்கின்றேன்.” கருப்பண்ணசாமி கோவிலில் எந்த சித்தரும் இருந்ததாக தெரியவில்லை. கோட்டைத்திடலில் மரங்களும் புதர்களும் மண்டி கிடக்கிறது. கோட்டையிருந்த அடையாளமேயில்லை. ஆனால் கண்டியன் தாவு ஆறு இன்று நம் கண் முன் ஓடிக் கொண்டிருக்கிறது. இங்கு கூடியிருப்பவர்களில் யாருக்காவது இதில் விருப்பமில்லை என்றால் வேறு பொருத்தமான பெயரைக் கூறலாம்’ என்று கூறி முடத்ததும் அங்கிருந்த அனைவரும் கரகோஷம் செய்து ஒரு மனதாக ‘சிற்றாறு கோட்டை’ என்று பெயர் சூட்டினார்களாம். அதுவே சித்தாரு கோட்டை என்றும் சிட்டாரு கோட்டை என்றும மாறி விட்டது” என்று தன்னுடைய கட்சியை ஆதாரபூர்வமாக நிலை நாட்டிப் பேசினார்.

நேரம் ஏறிக்கொண்டே வந்தது. விவாதமும் முடிந்தபாடாக இல்லை. வயிறு உடனே வீட்டுக்கு நடையை கட்டு என்று என்னை எச்சரித்தது. பசியோடு வீட்டிற்கு நடந்தேன்.

அந்தக் கூட்டத்தில் அவர்கள் பேசிக்கொண்ட, விவாதித்துக் கொண்டிருந்த அத்தனை செய்திகளையும் உள்வாங்கிக்கொண்டேன்.

இதற்கு முன் நாட்கணக்கில் – மாதக்கணக்கில் – வருடக்கணக்காக அவர்கள் அருகில் இருந்து எத்தனையோ விஷயங்களைக் கேட்டிருக்கிறேன்.

வீட்டுக்குப் போனதும் அத்தனையும் மறந்து விடுவேன். அடுத்த நாள் வேறு விஷயம்; மறு நாள் வேறு விஷயம். இப்படியே…

அன்று நான் கேட்ட, தெரிந்த. உள்வாங்கிக் கொண்ட அந்தச் செய்தி மட்டும் இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை. என்ன காரணம்? ஏன்? பல முறை இதைப் பற்றி நான் யோசித்துப் பார்த்ததுண்டு.. எதுவும் புரியவில்லை.

1996ல் முகம்மதியா உயர்நிலைப் பளிளியின் வெள்ளி விழா மலருக்காக ஒரு கட்டுரை – அதுவும் இந்த ஊரைப் பற்றிய முழுவிவரங்களும் அடங்கியதாக இருக்க வேண்டும் – எழுதித்தருமாறு மலர் வெளியீட்டுத் தலைவர் என்னிடம் கேட்டுக் கொண்ட போது தான் இதற்கு விடை கிடைத்தது.

மலைப்பாக இருந்தது. மறுத்தேன். ‘இந்த ஊரைப் பற்றி எனக்கு என்ன தெரியும். உங்களைப் போல நானும் ஒரு சராசரி பிரஜை தானே’ என்று தட்டிக் கழிக்க முயன்றேன். விடவில்லை.. மடக்கிவிட்டார்கள்.

பொறுப்பை ஏற்றுக் கொண்டாகி விட்டது. எனக்கு உள்ளூர பயம் ஏற்பட்டது. எதைப் பற்றி எழுதுவது? எங்கிருந்து ஆரம்பம் செய்வது? மையக் கருத்தாக எதை அமைப்பது? எதுவுமே புரியவில்லை! மூளையைக் கசக்கிக் கொண்டேன்.

திடீரென மின் வெட்டினாற் போல் மூளையில் ஒரு செய்தி பளிச்சிட்டது. அன்றொரு நாள் – சுமார் அறுபது வருடங்களுக்கு முன் – பணிக்கன் ஊரணியில் நடந்த காரசாரமான விவாதம்! இந்த ஊர் பெயர் பற்றிய ஆக்ரோஷமான சர்ச்சை.

என் உடல் சிலிர்த்தது. உள்ளம் பூரித்தது. அந்த வாதம் பிரதி வாதத்தின் விஷயத்தையே மையக்கருத்தாக வைத்து ஓர் ஆய்வு நடத்தினால் என்ன?

அன்று அந்த வாலிபர்களின் முரண்பட்ட அபிப்பிராங்களுக்குக் காரணமாயிருந்த பிரச்னைக்கு ஒரு சுமுகமான, ஆதாரப்பூர்வமான, எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முடிவை எட்டுவதற்கு முயற்சி செய்யலாமே!

ஆனால் நான் நினைத்தது போல் இந்த விஷயம் அவ்வளவு சுலபமானதாகத் தெரியவில்லை. எனக்குத் தேவையான விவரங்களை சேகரிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இறைவன் அருளால் குறைந்த கால அளவுக்குள் கூடுமானவரை விளக்கங்களுடன் ‘சித்தார்கோட்டை அன்றும் – இன்றும்” என்ற ஆய்வுக்கட்டுரையை மலர் வெளியீட்டுக் குழுவில் சமர்ப்பித்து விட்டேன்.

1937ல் பணிக்கன் ஊரணிக்கரையில் அந்த வாலிபர்களுக்கிடையே நடைபெற்ற வாதப் பிரதிவாதம், முரண்பட்ட அபிப்பிராயங்கள், ஆவேசமான பேச்சு இந்த ஒரு சம்பவத்தை மட்டும் 60 வருடங்களாக நான் மறக்காமல் உள்ளத்திலலேயே உருவேற்றிக் கொண்டிருந்தது இவையாவும் ஒன்றன்பின் ஒன்றாக திரைப்படக் காட்சிகள் போல் மனதில் தோன்றியது.

‘இப்போது இந்த வாலிபர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்களே, இதில் எவ்வித முடிவும் ஏற்படாது.. அவரவர் கட்சியை யாரும் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியாது.. ஒரு காலத்தில் நீ தான்இதற்குத் தீர்வு காண வேண்டியிருக்கும்’ என எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாட்டம் இருந்ததாகவே என் உள்ளுணர்வு கூறுகிறது. அதற்காகவே அந்த ஒரு சம்பவத்தை மட்டும் பசுமரத்தாணி போல் என் உள்ளத்தில் பதியவைத்திருக்கிறான். அனைத்துப்புகழும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே

இந்த முன்னுரை அல்லது அறிமுகவுரை போர் அடிப்பதாகத் தெரியும். ஆனால் இனி வரவிருக்கும் செய்திகள் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள இந்த அறிமுகவுரை அவசியமாகிறது. இபபோது எழுதவிருக்கும் ஆயவுக்கோவைக்கு தலைவாயில் தான் இந்த முகவுரை.

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்