லிபர்ஹான் கமிஷன் அறிக்கை கண்துடைப்பா? கண்திறப்பா?
டிசம்பர் 6-ம் நாள்!
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் தூய்மையை- இறையாண்மையை மதிக்கத் தெரியாத மதவாதிகள் அதன் முகத்தில் அறைந்து நாட்டுக்கு மாறாத களங்கத்தை உண்டுபண்ணிய நாள்!
18 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த அந்தக் கொடூரத்தின் உண்மையைக் கண்டறிய அமைக்கப் பட்ட ‘லிபர்ஹான் கமிஷன்’ 17 வருடங்களுக்குப் பின் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து, அரசு அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, அது இப்போது சூடுபறக்கும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது!
68 இந்துத்துவ தலைவர்கள் குற்றவாளிகள் என்பது கமிஷன் கண்டுபிடித்த உண்மை!
ஆனால் அந்த உண்மை நாட்டின் ஒரு சிறு குழந்தைக்குக் கூடத்தெரிந்த உண்மைதான்!
குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக கூட ‘வாஜ்பாயி’க்கு இதில் பங்கு இல்லை என்றுதான் சொல்கிறதே தவிர, மற்றவர்கள் நிரபராதிகள் என்று வாதிக்கவில்லை!
நாடாளுமன்றத்தின் பாஜக துணைத்தலைவரும், அத்வானிக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வரப்போவதாக அறியப் படுகிறவருமான திருமதி சூஷ்மா சுவராஜ் ஒரு படி மேலே போய், நாடாளுமன்றத்தில் “ஆமாம்; மஸ்ஜிதைத் தகர்த்தது உண்மைதான்; எங்களுக்கு முடிந்தால் தண்டனை தாருங்கள்; அதற்கு நாங்கள் தயார்” என்று சவால் விட்டிருக்கிறார்! அவரைத் தட்டிக் கொடுத்து உச்சிமோந்திருக்கிறார் அத்வானி !
ஆக, இப்போது தேவைப் படுவது அரசு அவர்களை எப்போது? எவ்வாறு தண்டிக்கப் போகிறது என்பதுதானே தவிர, மேல் ஆராய்ச்சிகளுச்கு வேலை இல்லை!
அரசு என்ன செய்யப் போகிறது?
அதைத்தான் இந்திய மக்கள் -அரசியலமைப்புச் சட்டத்தை உயிராக நம்பிக் கொண்டிருகிற- நாட்டின் சட்ட ஒழுங்குகளை மதித்து நடக்கிற நாணயமான குடிமக்கள் எதிர்பார்க்கிறார்களே தவிர, வார்த்தை விளையாட்டுக்களையோ-கனல் கக்கும் வசனங்களையோ அல்ல!
நம்மைப் பொறுத்த வரை வாஜ்பாயியும் குற்றவாளிதான்! வகுப்பு வாதிதான்!
‘1983-ல் அஸ்ஸாமில் தேர்தல் நடந்த நேரத்தில், ‘வெளிநாட்டினர் ஊடுருவல் என்ற கோஷம் எழுப்பப்பட்டு 2000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ‘நெல்லி’ யில் உடல் உறுப்புகளை துண்டு துண்டாகக் கொய்து படுகொலை செய்யப் பட்டபோது, அவர் நிகழ்த்திய இனவெறிப்பேச்சை, கம்யூனிஸ்ட் எம்.பி. திரு இந்திரஜித் குப்தா மே 28 1996-ல் நாடாளுமன்றத்திலேயே ஆதாரத்துடன் அம்பலப் படுத்தினார்!
1992 டிசம்பர் 5-ம் நாள் அவர் லக்னோவில் கரசேவைக்குச் செல்வோர் சாத்வீகமாகவெல்லாம் நடந்துகொள்ள வாய்ப்பில்லை என்று தூபம் போட்ட பேச்செல்லாம் நாட்டுமக்களுக்கு நன்றாகவே தெரியும்
குஜராத்தில், மோடி, ‘கோரதாண்டவம்’ ஆடி பல்லாயிரம் முஸ்லிம்களை உயிருடன் கொளுத்திய அக்கிரமத்தைப் பற்றி நிருபர்கள் கேள்விகள் கேட்ட போது தான் நாட்டின் பொதுவான பிரதமர் என்பதையும் மறந்து அப்படுகொலையை ‘முதலில் தொடங்கியது யர்?’ என்று கேட்டு நியாயப் படுத்தியதையும் மக்கள் அறிவார்கள்!
மற்ற இந்துத்துவ வாதிகளுக்கும் அவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்:
- இவர் ‘சா·ப்ட் வில்லன்’!
- மற்றவர்கள் ‘கோர வில்லன்கள்’ -அவ்வளவே!
எனவே மத்திய அரசு குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை தரப் போகிறது? என்பது மட்டும்தான் இப்போதைய கேள்வி !
இதில்தான் லிபரான்கமிஷன் அறிக்கையின் ‘பிரயோஜனம்’ அடங்கியிருக்கிறதே தவிர, சூடான விவாதங்களிலோ -பரஸ்பர குற்றச் சாட்டுக்களிலோ அல்ல!
தண்டனை கொடுத்தால், லிபரான் கமிஷன் அறிக்கை ஒரு கண்திறப்பு!
இல்லையேல், வெறும் கண்துடைப்புத்தான்!
அதில் சந்தேகம் இல்லை!
நன்றி: நர்கிஸ் – துணைத்தலையங்கம் – ஜனவரி – 2010