Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,930 முறை படிக்கப்பட்டுள்ளது!

இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி

தமிழகத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அடிப்படைக் கல்வி மட்டுமே படிக்க முடிந்தாலும் தன் பேரறிவாலும், உழைப்பாலும் எண்ணற்ற சாதனைகள் புரிந்து பிற்காலத்தில் ‘இந்தியாவின் எடிசன்’ என்றழைக்கப்பட்ட பெருமையை உடையவர் ஜி.டி.நாயுடு (கோபாலசாமி துரைசாமி நாயுடு) (1893-1974). இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் வாகனத்தைத் தயாரித்த பெருமை உடையவர் இவர். உலகத் தரம் வாய்ந்த முதல் மின் சவரக் கத்தி, ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ, ஓட்டுப் பதிவு எந்திரம், மண்ணெண்ணெயால் இயக்கப்படும் காற்றாடி, பழரசம் பிழியும் கருவி, திரைப்படக் காமிராக்களில் தூரங்களுக்கேற்ப சரி செய்து கொள்ளும் கருவி, பெட்ரோலால் இயக்கப்படும் இரு இருக்கை மோட்டார் கார், சில விவசாய புதுக்கண்டுபிடிப்புகள் என்று ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்த மேதை அவர். கல்வித் துறையிலும், தொழில் துறையிலும் பல மைல் கல்களை உருவாக்கிய பெருமை அவருக்குண்டு.

பல வெற்றியாளர்கள் தங்கள் வெற்றியோடு திருப்தி அடைந்து விடுகிறார்கள். அவர்கள் முன்னேற்றம் அவர்களுடனேயே முடிந்து விடுகிறது. தாங்கள் கண்ட வெற்றியை பிற்கால சமூகமும் பெற வேண்டும் என்று எண்ணி அதற்காக முயற்சிகள் மேற்கொள்பவர்கள் வெகு சிலரே. ஜி.டி.நாயுடு அந்த வெகு சிலரில் ஒருவர்.

அறிவு தாகம் மிக்க அவருக்கு இளைஞர் சமுதாயத்தின் மீது அதீத அக்கறை இருந்தது. கோயமுத்தூரில் சில கல்வி நிறுவனங்கள் துவங்கக் காரணமாக இருந்த அவர் ஒரு நாட்டின் எதிர்கால முன்னேற்றம் அந்நாட்டு இளைஞர்களின் தரத்தைப் பொருத்தே அமைகின்றது என்று நம்பினார். அக்காலத்தில் இளைஞர்களின் வாழ்க்கை எப்படி வாழப்படுகிறது என்பதை அறிய அக்காலத்தில் ஆராய்ச்சி செய்து ஒரு புள்ளி விவரத்தைப் பெற்ற அவர் கூறுகிறார்:

“இளம் உள்ளங்கள் நன்மை தீமைகளை ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகின்றன. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு எப்படி உண்பது? எப்போது உண்பது? எப்போது உறங்குவது, எப்படி உடை அணிவது? எப்படிக் குளிப்பது எப்படி பிறருடன் பழகுவது? எப்படி வேலைகளைச் செய்வது? என்ற ஆரம்பப் பாடம் கூடத் தெரிவதில்லை. அவர்கள் இதையெல்லாம் நாள் தோறும் செய்கிறார்கள். ஆனால் ஒழுங்கற்ற முறையில்! அவர்கள் கல்லூரிக்கு எதற்காக வந்தார்களோ அதை மறந்து விளையாட்டிலும், திரைப்படத்திலும், விழாக்களிலும், நாவல்களிலும் நேரத்தை வீணாக்குகின்றனர். அவர்கள் 15ஆம் வயது முதல் 25ஆம் வயது வரை உள்ள பத்தாண்டு காலத்தை எப்படி கழிக்கிறார்கள் என்பதற்கு ஒரு புள்ளி விவரம் கூறுகிறேன்.

செலவு செய்த முறை வருடம் மாதம் நாள்
உறக்கம் 3 4 5
உணவு 0 7 18
கண்ணாடிக்கு முன் அழகு பார்த்தல் 0 7 18
வீண் பொழுது போக்குகள் 4 3 4
படிப்பு 1 1 15

இளைஞர்களின் எண்ணங்கள் களியாட்டங்களையும், வீண் பொழுது போக்குகளையும் சுற்றியே வட்டமிடுமானால் அவர்கள் சக்தி சிதறுவதுடன் உடலும், உள்ளமும் கெடுகின்றன என்று அவர் ஆணித்தரமாக நம்பினார். 1953 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் உரையாற்றிய போது அவர் இளைஞர்களுக்குக் கூறினார். “நீங்கள் எந்தத் தீய பழக்கத்திற்கும் அடிமையாகி விடாதீர்கள். தவறி அடிமைப்பட்டு விட்டால் அதனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் பாழாவதோடு மனித சமுதாயமும் நஞ்சூட்டப்படுகிறது. சாதாரணமாக 15 வயது முதல் 25 வயதுக்குள் தான் தீய பழக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றை இளம் வயதிலேயே மாற்றா விட்டால் பிறகு எப்போதுமே மாற்ற முடியாது. மாணவப் பிராயத்தில் இயற்கையாகக் காணப்படும் ஊக்கமும் தைரியமும் தீய பழக்கத்தை எளிதாக ஒழித்து விடக் கூடியவை. இளைஞர்கள் பட்டம் பெறும் காலத்தில் அறிவு முதிர்ச்சி பெறுகிறார்கள். அப்போது அவர்களுக்கு நன்மை தீமைகளைப் பகுத்துணரும் ஆற்றல் ஏற்பட வேண்டும். பரந்த நோக்கு ஏற்பட வேண்டும். நீங்கள் முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் வகுப்பிலோ தேறா விட்டாலும் அல்லது தேர்ச்சியே பெறா விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தீய பழக்கங்களை விட்டு விட்டோம் என்ற நம்பிக்கையோடும், தைரியத்தோடும் நேர்மைக்காக போராடும் உள்ளத்தோடும், ஆழ்ந்து நோக்கும் பிரச்னைகளை ஆராயும் தன்மையோடும் நீங்கள் இங்கிருந்து வெளியேறுவீர்களேயானால் உங்கள் வாழ்நாள் முழுவதும் எல்லாத் துறைகளிலும் வாகை சூடுவீர்கள்”

“நீங்கள் நிறைய கற்பதற்கும், உங்களை முன்னேற்றிக் கொள்வதற்கும், வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் இது தான் தக்க பருவம். உலகின் மிகப் பெரிய தலைவர்களது வாழ்க்கை வரலாற்றை நீங்கள் பார்ப்பீர்களேயானால் அவர்கள் கல்லூரிப் பட்டம் பெற்றிருந்தாலும், பெறா விட்டாலும் நிறைய உழைத்தவர்களாக, அறிவைத் தேடி ஓடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் தான் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டிகளாக அமைகிறார்கள்”

ஒழுக்கமான வாழ்க்கையும், அறிவுத் தாகமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் ஒருவருக்கு சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது. இது அவர் அடுத்தவருக்குச் சொன்ன அறிவுரை மட்டுமல்ல. அவருடைய வாழ்க்கையிலும் அவர் முழுமையாகக் கடைபிடித்தார். செல்வந்தராக ஆன பிறகும் கட்டுப்பாடான சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்த அவர் காலத்தையும் வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்தினார். அதனால் தான் அவரால் நிறைய சாதிக்க முடிந்தது.

தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை அவர் ஒரு போதும் எள்ளளவும் வீணாக்கியதில்லை. இயந்திரங்கள், தொழில் நுட்பம் சம்பந்தமாக உலகில் எங்கு கண்காட்சி நடந்தாலும் கண்டிப்பாக அங்கு சென்று முழு நேரமும் அங்கு இருந்து தன் அறிவு தாகத்தைத் தீர்த்துக் கொள்வார். 1939 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூயார்க்கில் உலகக் கண்காட்சி நடைபெற்றதைக் காணச் சென்றார். அதுபற்றி பின்னர் குறிப்பிட்ட போது அவர் கூறுகிறார்: “நான் கண்காட்சிக்கு தினமும் தவறாமல் சென்று வந்தேன். தினமும் நான் தான் காட்சி சாலைக்குள் நுழைவதில் முதல் மனிதனாகவும், வெளி வருவதில் கடைசி மனிதனாகவும் இருந்தேன். காலை உணவை முடித்துக் கொண்டு காட்சி சாலைக்குப் போவேன். மாலை வரையில் ஒன்றுமே உண்ணாமல் இயந்திரங்களைப் பார்த்து விட்டு வீடு திரும்புவேன்”

வாழ்க்கையின் ஆரம்பத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைந்த பிறகும் அவர் இப்படியொரு ஆர்வத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது அவருடைய உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். அதனால் தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் ஜி டி நாயுடுவைக் குறித்து சொல்கையில் “இலட்சத்தில் ஒருவர் என்று சொல்வது கூட அவரைக் குறைத்துச் சொல்வது போலத் தான்” என்றார்.

இளைஞர்களே அவர் கூறியதைப் போல உங்கள் இளமைக் காலத்தில் எச்சரிக்கையாக இருங்கள். கவனமாக இருங்கள். உங்கள் சக்தியையும், காலத்தையும் வீணக்காமல் முழுமையாகப் பயன்படுத்துங்கள். அப்படிச் செய்தீர்களானால் அவரைப் போல் நீங்களும் கால மணலில் காலடித் தடங்களை விட்டுப் போகலாம்!
– என். கணேசன் நன்றி: ஈழநேசன்