A.H. பாத்திமா ஜனூபா
இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகள் அவர்களின் உலக இலாபங்களை அடையும் விஷயத்தில் மட்டுமல்லாது ஆன்மீக விஷயத்திலும் ஆண்களுக்கு கொடுக்கும் உரிமைகளை பெண்களுக்கு மறுக்கவில்லை. உதாரணத்திற்கு ஆண்கள் தங்களின் ஜவேளை தொழுகையை நிலைநாட்ட பள்ளிவாயில்களை நோக்கி செல்வது அவர்களின் கடமை என்பதையும், அவ்வாறு செல்லாதவர்கள் நபியவர்களால் கண்டிக்கப்படுகிறார்கள் என்பதும் நாம் அறிந்த உண்மையே. இவ்வாறு ஆண்கள் பள்ளிக்கு வருவதை கடமையாக்கிய இஸ்லாம் பெண்களின் நலன் கருதியும், பெண்கள் வீட்டையும்,குழந்தையும் பராமரிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு பெண்கள் அவர்களின் இல்லங்களிலேயே தொழுதுக் கொள்வதை சிறப்பிற்குரியது என்று கூறுகிறது.
ஒரு பெண் அவளின் வீட்டு முற்றத்தில் தொழும் தொழுகையை விட அவளின் அறையில் தொழும் தொழுகை மிக சிறந்தது. இன்னும் அவளின் அறையில் தொழும் தொழுகையைவிட உள் அறையில் தொழும் தொழுகை மிகச்சிறந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அபூதாவூத்
இவ்வாறு பெண்கள் வீட்டில் தொழுவதையே சிறந்தது என்று கூறும் நபி (ஸல்) அவர்களே பெண்கள் மஸ்ஜிதுக்கு வருவதை அனுமதித்துள்ளார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு முறை நபியவர்கள் இஷா தொழுகையை பிற்படுத்துகிறார்கள். எந்த அளவுக்கு என்றால் உமர்(ரலி) அவர்கள் பெண்களும் குழந்தைகளும் (தொழுகையை எதிர்பார்த்தவர்களாகவே) தூங்குகிறார்கள் என்று அறிவிப்பு கொடுத்து தொழுகைக்காக அழைக்கும் வரை (நபியவர்கள் பிற்படுத்தினார்கள்) பிறகு வெளியேறி இஷாவை தொழவைத்து முடித்துவிட்டு இப்போது இந்த பூமியிலே உங்ளைத்தவிர வேறு யாரும் தொழுகையை எதிர்பார்த்தவர்களாக இருக்கவில்லை என்று கூறினார்கள். நூல்: புகாரி.
நபி அவர்கள் கூறினார்கள்: (தொழுகையில் இமாம் தவறு செய்தால் தவறைச் சுட்டிக்காட்டுவதற்கு) தஸ்பீஹ் கூறுவது ஆண்களுக்கும், கை தட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:புகாரி
இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டுநபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது. அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி
இந்த ஹதீஸின் மூலம் நபி (ஸல்) அவர்கள் பெண்களை பள்ளிக்கு அனுமதித்து அவர்களுக்கு தொழுகையும் நடத்தியுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு பெண்களை அனுமதித்ததோடு மட்டுமல்லாமல் தன் உம்மத்தவர்கள் பெண்களை பள்ளியை விட்டும் தடுத்துவிடக்கூடாது என்பதற்காக அதற்கான கட்டளையும் பிறப்பித்தார்கள்.
நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி
நபிஸல்) அவர்கள் எந்த ஒன்றை மார்க்க விஷயமாக கட்டளை பிறப்பித்தாலும் அல்லாஹ்வின் அனுமதியில்லாமல் அதை கூறமாட்டார்கள் என்றிருக்கும்போது மஸ்ஜிதை விட்டுப் பெண்களை தடுக்கக்கூடாது என்பது இறைவனின் கட்டளையாகவும் ஆகாதா?
மஸ்ஜிதுக்கும் பெண்களுக்கும் எந்த தொடர்புமே இல்லாமல் இருப்பதையும் பார்த்தால், இஸ்லாமிய பெண்களை அவர்களின் வணக்கஸ்தலங்களை விட்டும் அவர்களின் மார்க்கம் தடுக்கிறது என்று மாற்று மதத்தவர்கள் எண்ண மாட்டார்களா? கல்வி கற்பதற்காக, பொருள்களை வாங்குவதற்காக, ஊரையும் நாட்டையும் சுற்றி பார்ப்பதற்காக பெண்களை அனுமதிக்கும் இவர்கள் இறை இல்லத்திற்கு இறைவனை துதிக்க மட்டும் அவர்களை ஏன் தடை செய்கிறார்கள்? இறைவனோ இறைத்தூதரோ ஒரு விஷயத்தில் கட்டளை பிறப்பித்து விட்டால் அதில் மாற்று கருத்துக் கொள்ள இறைவன் நமக்கு எந்த அதிகாரத்தையும் தரவில்லையே!
பெண்கள் பள்ளிக்கு வரும்போது சில கட்டுப்பாடுகளை பேணுமாறு கூறினார்களே தவிர பள்ளிக்கே வரக்கூடாது என்று கூறவில்லை.
நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலை நான் கேட்பேன். (எனக்குப் பின்னால் தொழுதுகொண்டு இருக்கும்) அந்த குழந்தையின் தாயாருக்கு சிரமமளிக்க கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கி முடித்து விடுவேன். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி) நூல்:புகாரி
“உங்களில் ஒரு பென் மஸ்ஜிதுக்கு வந்தால் அவள் நறுமணம் பூசவேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஜைனப் (ரலி) நூல்: முஸ்லிம்
நபிஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிக்குச்சென்று தொழுது வந்துள்ளனர் என்பதற்கு பின்வரும் ஹதீஸ்களும் தெளிவான சான்றுகளாகும்.
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று அமர்ந்து இருப்பார்கள். பெண்கள் ஆண்களை சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக நான் கருதுகிறேன் என்று இப்னு ஹிஷாம் கூறுகிறார். நூல்:புகாரி
நபி ஸல்) அவர்களுக்குப்பின் வந்த கலீஃபாக்களும் பெண்களை பள்ளிவாசலில் அனுமதித்துள்ளார்கள் என்பதை பின்வரும் செய்தியின் மூலம் அறியலாம்.
உமர்(ரலி) அவர்களின் மனைவி (ஆதிகா) சுபுஹ் தொழுகைக்கும், இஷா தொழுகைக்கும் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்திலே கலந்துக் கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (உங்கள் கணவர்) உமர் அவர்கள் இதை விரும்பமாட்டார். இன்னும் ரோஷப்படுவார் என்று அறிந்திருந்தும் எதற்காக நீங்கள் வெளியேறி (மஸ்ஜிதுக்கு) வருகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (இதுவரை என்னை அவர் தடுக்கவில்லையே) என்னை மஸ்ஜிதுக்கு வராமல் தடுப்பதை விட்டும் அவரை எது தடுத்தது என்று வினவினார்கள். அதற்கு (அவர்களின் மகன் அப்துல்லாஹ்) இப்னு உமர் அவர்கள் அல்லாஹ்வினுடைய பெண் அடிமைகளை அல்லாஹ்வின் மஸ்ஜிதை விட்டும் தடுக்காதீர்கள் என்ற நபியின் சொல்தான் அவர்களை தடுத்துள்ளது என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி
இவ்வாறுநபியவர்களின் சொல் பெண்களை மஸ்ஜிதை விட்டும் தடுக்கக்கூடாது என்று மிக ஆணித்தரமாக இருந்தும், அதை ஸஹாபாக்கள் செயல்படுத்தி காட்டியதாக பல செய்திகள் அறியப்பட்டும் இவைகளுக்கு மாற்றமாக வேறொரு கருத்துக்கொள்ள எந்த ஒரு அடியாருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்பதை கீழ் வரும் வசனம் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் யாதொரு விஷயத்தப்பற்றி கட்டளையிட்ட பின்னர் அவ்விஷயத்தில் (அதற்கு மாறாக வேறு) அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 33:36)
இவ்விறை வசனத்தை மனதில் நிறுத்தி மஸ்ஜிதுக்கு செல்ல பெண்கள் விரும்பினால் அவர்களை அனுமதித்து அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை சரியான முறையில் நிறைவேற்றி இறைவனின் அருளைப் பெற விசுவாசிகள் முன்வர வேண்டும்.
நன்றி : ரீட்இஸ்லாம்