கேன்சர் என்றாலே உலகம் பதறும். அதன் விளைவுகள் அப்படி. உலகில் நிகழும் மரணங்களில் 13 சதவீதம் புற்றுநோயினால் வருகிறது. 2007ம் ஆண்டில் மட்டும் கேன்சரால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை 7.6 மில்லியன் ! கேன்சருக்கு மட்டும் ஒரு தீர்வு கிடைத்தால், பல மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு மேஜிக்கல் கண்டுபிடிப்புக்காக உலகம் வழி மேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு நீரூற்றும் கண்டுபிடிப்பு தான் இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசைத் தட்டிச் சென்றிருக்கிறது !
இந்த 1.4 மில்லியன் டாலர் விருதைக் கர்வத்துடன் பெற்றுக் கொண்டவர்கள் மூன்று பேர். எலிசபெத் பிளாக்பர்ன், காரல் கிரைடர் மற்றும் ஜேக் ஸாஸ்டெக். இவர்களில் முதல் இருவர் பெண்கள். 1901ம் ஆண்டு துவங்கி இதுவரை 800 பேருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவர்களில் பெண்கள் வெறும் 36 பேர் மட்டுமே ! இரண்டு பெண்கள் நோபல் பரிசைப் பகிர்ந்து கொள்வதும் இது தான் முதல் முறை என்பது கூடுதல் சிறப்பு. சரி, இவர்களுடைய கண்டுபிடிப்பு தான் என்ன ?
குரோமோசோம்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். செல்களிலுள்ள டி.என்.ஏ மற்றும் புரோட்டீனின் ஒழுங்கான வடிவம் என அதைச் சொல்லலாம். குரோமா என்றால் உடல், சோமா என்றால் நிறம் என்கிறது கிரேக்க மொழி. குரோமோசோம்களைக் குறித்து வெளியான ஆராய்ச்சிகள் எக்கச்சக்கம். அந்த குரோமோசோமின் கடைசியில் டெலோமியர் எனும் ஒரு பகுதி இருக்கிறது. விஞ்ஞானிகள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத பகுதி. ஆனால் அது தான் குரோமோசோம்களைக் கண்ட்ரோல் செய்யும் ரிமோட் என்பது தான் இந்தக் கண்டுபிடிப்பு.
ஒரு செல் இரண்டாகப் பிரிவது உடலின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. அப்படி செல்கள் இரண்டாகப் பிரியும் போது அதிலுள்ள குரோமோசோம்களின் மாறாத பிரதி இரண்டு செல்களிலும் இருக்கும். இந்த வால்பகுதியான டெலோமியர் அப்படியல்ல. செல் பிரியும்போதெல்லாம் இந்த டெலோமியரின் நீளம் குறைந்தால் உடல் சட சடவென வயதாகித் தொலைக்கும். ஒருவேளை இந்த டெலோமியர் எப்போதுமே ஒரே நீளத்தில் இருந்தால் ? வேறென்ன என்றும் இளமை தான். கான்சர் செல்களில் இந்த பிரச்சினை தான் வருகிறது. டெலோமியர் எப்போதுமே நீளம் குறைவதில்லை. கான்சரும் அழிவதில்லை.
இந்த டெலோமியரின் சூட்சுமத்தைத் தான் இந்த விஞ்ஞானிகள் உடைத்திருக்கிறார்கள். குரோமோசோம்களின் நீளத்தை நிர்ணயிப்பது டெலோமியர் தான் என்பதில் துவங்கி, இந்த டெலோமியர் எப்படி இயங்குகிறது, என்னென்ன செய்கிறது என்பதையெல்லாம் விலாவரியாக அறிந்து தெளிந்திருக்கிறார்கள். இதிலுள்ள ஒரு என்ஸைம் தான் குரோமோசோம்களை அச்சு அசலாகப் பிரதியெடுக்கிறது. அதைக் கண்டுபிடித்தது தான் இந்த ஆராய்ச்சியின் ஹைலைட். அந்த என்சைமுக்கு இவர்கள் இட்ட பெயர் டெலோமிரேஸ் !
எலிசபெத் பிளாக்பர்ன் னின் பூர்வீகம் ஆஸ்திரேலியா. 1975லேயே அமெரிக்கா போய் செட்டிலாகி, அமெரிக்கப் பிரஜையும் ஆகி விட்டார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் அறிவியலுக்கான இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர். டெலோமிரஸ் பற்றிய முதல் அறிக்கையை அமெரிக்காவில் 1980லேயே வெளியிட்டு விருது வாங்கியவர் இவர். அந்த ஆராய்ச்சியில் படிப்படியான வளர்ச்சி தான் முப்பது ஆண்டுகளுக்குப் பின் இன்று நோபல் பரிசை அவருக்குத் தந்திருக்கிறது.
பிறப்பால் ஆஸ்திரேலியன் என்பதால் ஆஸ்திரேலிய பிரதமர் துவங்கி, கடைகோடி ஆஸ்திரேலியர் வரை எலிசபெத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர். 61 வயதானாலும் இன்னும் அவர் ஒரு ஆஸ்திரேலியன் தான் என சிலாகிக்கின்றனர். இருக்காதா பின்னே, ஆஸ்திரேலியாவிலிருந்து நோபல் பரிசு வாங்கியிருக்கும் முதல் பெண்மணியல்லவா அவர். போகட்டும், கல்பனா சாவ்லாவை நாம் கொண்டாடவில்லையா ?
ஜான் ஹாப்கின் பல்கலைக்கழக காரல் கிரைடருக்கு 48 வயதாகிறது. இவரும் நீண்ட நெடிய வருடங்களாக பிளாக்பெர்ன்னுடன் இந்த ஆராய்ச்சியில் மிக முக்கிய பங்களிப்பைச் செய்திருக்கிறார். விருது கிடைத்த ஆனந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் வெளிவே வரவில்லை.
ஜேக் ஸாஸ்டெக் அமெரிக்காவின் பாஸ்டனிலுள்ள ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுகிறார். 56 வயதாகும் இவர் 1980ம் ஆண்டு முதலே எலிசபெத் பிளாக்பெர்னுடன் இந்த ஆராய்ச்சியில் ஐக்கியமாகியிருக்கிறார்.
ஸ்வீடனின் கரோலின்கா விலுள்ள நோபல் குழுவினர் நோபல் பரிசை வழங்கினார்கள். இந்த கண்டுபிடிப்பு பிரமிப்பூட்டுகிறது. செல்களைக் குறித்த நமது பல தலைமுறை அறிவை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. நமது ஆராய்ச்சிகள் பலவற்றை கலைத்துப் போட்டு புதிதாய் துவங்க வைத்திருக்கிறது. மருத்துவத்தின் பல்வேறு சன்னல்களையும், கதவுகளையும் திறந்து விட்ட மகத்தான கண்டுபிடிப்பு இது. என நோபல் புகழாரம் சூட்டினார்கள்.
கான்சர் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பலரும் இப்போது பழைய ஆராய்ச்சிகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு டெலோமிரஸைக் கவனிக்கத் துவங்கியிருக்கின்றனர். டெலோமியரைக் இஷ்டப்படி ஆட்டுவிக்க ஏதேனும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்பதே இப்போதைய ஹாட் ஆராய்ச்சி.
காரணம் இருக்கிறது. கான்சர் செல்களிலுள்ள டெலோமியரை அழித்தால் கான்சர் செல் அழியும். அவ்வளவு தான். கான்சருக்கான மருந்து ரெடி. அறுவை சிகிச்சை ஏதும் இல்லாமலேயே கான்சர் செல்கள் அழிந்து போகும் ! அதையே உல்டாவாக்கினால் இளமைக்கான மருந்து தயார். நல்ல செல்களிலுள்ள டெலோமியர் நீளம் குறையாமல் பாதுகாத்தால் போதும். உடல் வயதாகாமல் அப்படியே இருக்கும். முக்கியமாக, வாழும் காலம் முழுதும் ஆரோக்கியமாய் வாழலாம்.
அனீமியா, அல்சீமர், தோல் நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான வேர் இந்த டெலோமியரில் தான் இருக்கிறது என்கின்றனர். உலகில் உள்ள கொடிய நோய்களில் பெரும்பாலான நோய்களுக்கு டெலோமியரின் சிதைவே காரணமாய் இருக்கலாம் என்பது இப்போதைய மருத்துவ உலகின் நம்பிக்கை. இன்னும் சொல்லப் போனால் மன வளர்ச்சி குறைவாக இருப்பதற்கும் டெலோமியருக்கும் தொடர்பு இருக்கிறதாம். “மன அழுத்தத்தில் இருக்காதே, நோய் வரும், இளமை போகும்” என்பார்கள். அதன் காரணமும் டெலோமியர் தானாம். மன அழுத்தம் டெலோமியரைச் சிதைத்து உடலை நோயிலும், முதுமையிலும் தள்ளி விடுகிறது.
உலகெங்குமுள்ள ஆராய்ச்சியாளர்களையும், மருத்துவர்களையும் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்த கண்டுபிடிப்பு. இது அஸ்திவாரத்தையே ஆட்டிப் போட்ட அட்டகாச ஆராய்ச்சி என்கிறார் பேராசிரியர் ரோஜர் ரெடல். இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள குழந்தைகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்.
டெலோமியர் என்பது நமது ஷூ லேஸின் முனை போல. முனை போய்விட்டால் ஷூ லேஸ் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்து போகும். முனை ஷார்ப்பாக இருந்தால் ஷூலேஸ் நன்றாக இருக்கும். டெலோமியர் பக்காவாக இருந்தால் செல் ஆரோக்கியமாக, இளமையாக இருக்கும். என அறிவியல் தெரியாதவர்களுக்கு இதை விளக்குகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நோபல் பரிசு எனும் அங்கீகாரம் இந்த ஆராய்ச்சியை பெரிய அளவில் நடத்த உதவும். உலகை உலுக்கும் நோய்களுக்கு இந்த நோபல் ஒரு முடிவைத் தர வேண்டும் என்பதே உங்ளைப் போல எனது விருப்பமும்
நன்றி : ஜூனியர் விகடன்