Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,197 முறை படிக்கப்பட்டுள்ளது!

ஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்!

இந்தியாவிலும் இலங்கையிலும் கிராமப்புறங்களில் வாழ்வோர் இரவு நேரத்தில் ஒரு காட்சியைக் கண்டிருப்பீர்கள். சூரியன் மறைந்த பின்னர் மினுக்மினுக்கென்று அங்குமிங்கும் பறந்து செல்லும் மின்மினிப் பூச்சியைக் கண்டிருப்பீர்கள். கிராம மக்கள் நாள் தோறும் இதைக் காண்பதால் இதில் அதிசயம் ஏதுமில்லை.

ஆனால் இதே வகையில் பல தாவரங்களும், மீன்களும், நத்தைகளும் பூரான்களும் ஒளி வீசும் விந்தைச் செய்தி பலருக்கும் தெரியாது.

இயற்கை உருவாக்கிய விந்தைகளில் ஒன்று தான் இந்த மின்மினிகள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த காளிதாசன் என்னும் வடமொழிக் கவிஞன் இரவில் ஒளி வீசும் தாவரங்கள், மலைக் குகைகள் பற்றி வடமொழியில் கவி பாடியுள்ளான். அவனது காலத்தில் இப்படி ஓளி வீசும் தாவரங்கள் இந்தியாவிலும் இருந்தன போலும். ஆனால் இன்று உலகின் வேறு பகுதிகளில் மட்டுமே அவை உள்ளன.

தாவர வகைகளில் நாய்க்குடை என்றும் காளான் என்றும் அழைக்கப்படும் பூஞ்சன் FUNGI வகைத் தாவரங்களைப் பலரும் பார்த்திருப்பீர்கள். ஆஸ்திரேலியாவில் இத்தகைய காளான்கள் பல இரவு நேரத்தில் ஒளியை உமிழ்கின்றன.

இவற்றில் சில வீசும் வெளிச்சத்தில் புத்தகங்களைக் கூடப் படிக்கலாம்! விஷச் சத்துள்ள இக்காளான்களின் பெயர் PLEUROTUS NIDIFORMIS. மற்றொரு வகையின் பெயர் POROMYCENA MANIPULARIS. இவை தலைவலித் தைலம் தயாரிக்கப் பயன்படும் யூகலிப்டஸ் மரங்களுக்கு அருகில் வளருகின்றன. இவை இரவு நேரத்தில் ஏன் இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராக உள்ளது.

இன்னுமொரு சுவையான செய்தி உண்டு. நியூசிலாந்து நாட்டில் குகைகளில் ஒளி வீசும் பூச்சிகள் உள்ளன. இவைகளைப் பார்க்க ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். ஆனால் இவை மனிதச் சத்தத்தைக் கேட்டால் ஒளி வீசுவதை நிறுத்தி விடும்.

ஆகையால் சுற்றுலாப் பயணிகள் அமைதியாக நின்று இவைகளைப் பார்க்க வேண்டும். இவை நீல நிற ஒளியை வெளியிடுகின்றன. குகையின் மேல் புறத்திலிருந்து இந்தப் பூச்சிகள் ஒட்டடை, நூலாம்படை போலத் தொங்கும் இந்த வெளிச்சத்தை நோக்கி வரும் பூச்சிகளைப் பிடித்துத் தின்று விடும். இவைகளின் பெயர் ARACHNO CAMPA.

மின்மினிப் பூச்சிகளில் (FIRE FLIES, GLOW WORMS) 2000 வகைகள் உள்ளன. இவை தவிர 1500 வகை மீன்கள் கடலுக்கடியில் ஒளி வீசுகின்றன. மலேசியாவில் DYAKIA STRIATA என்ற ஒரு வகை நத்தை நீல நிற ஒளியை வீசுகின்றது. தன்னைச் சாப்பிட வரும் பிராணிகள் மிரட்டி விரட்டவே இவை இப்படி ஒளியைச் சிந்துகின்றன.

ஒரு வகைப் பூரான் ஒளியை உமிழும் திரவத்தைப் பயன்படுத்தி ஏனைய பிராணிகளின் உடலில் கொப்புளத்தைக் கூட உண்டாக்கி விடுமாம். LUMINO DESMUS என்ற வகை ரயில் வண்டிப் பூச்சி ஒளியைச் சிந்துவதோடு தன்னைத் தாக்கும் பிராணிகள் மீது சயனைடு வாயுவையும் வீசுமாம்.

கடலுக்கடியில் ஆழம் செல்லச் செல்ல இருள் மண்டி விடும். இங்கு வாழும் 1500 வகை மீன்கள் தங்களாக உடல் மூலம் விளக்கேற்றி இரை தேடுகின்றன.

ANGLER FISH எனப்படும் தூண்டில் மீன் தனது மூக்கின் மீதுள்ள மீன்பிடித் தூண்டிலில் ஒளியைக் தோன்ற செய்கிறது. மின்சார பல்பு போன்ற தோற்றமுள்ள இதை நோக்கி ஏனைய மீன்கள் வரும். அவ்வளவு தான் அவற்றைக் கபளீகரம் செய்து விடும் இந்த ANGLER FISH.

கலபகாஸ் என்னும் தீவுக்கருகில் கடலுக்கடியில் VIPER FISH என்ற வகை மீன்கள் வசிக்கின்றன. இவைகளின் வாயில் விளக்கு போல வெளிச்சம் தெரியும். வாயைத் திறந்தவுடன் இந்த ஒளியை நோக்கி வரும் மீன்களின் கதை முடிந்தது. இதை மரண விளக்கு என்று அழைத்தாலும் தவறில்லை.

இவை எல்லாவற்றையும் விட மிகவும் விந்தையான மீன் இனம் LANTERN EYE மீன் வகைகள் தான். மீன் வகைகளில் அதிகமான ஒளியை வீசுவதால் இவைகளுக்குப் பொருத்தமாக லாந்தர் விளக்கு மீன் என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இவை கண்களைச் சுற்றும் போது விளக்குச் சுற்றுவது போல ஒளியும் இடம் மாறும்.

HATCHET FISH என்ற மீன் வகை தன்னைச் சுற்றி எந்த அளவுக்கு வெளிச்சம் உள்ளதோ அதே அளவுக்கு உடலிலிருந்து ஒளியை வெளி விடுமாம். இப்படிச் சமமான ஒளியிருந்தால் இதை ஏனைய மீன்கள் காண முடியா. இது ஒரு தற்காப்பு உத்தி.

மனிதன் கண்ணாடிகளையும், லென்ஸ் எனப்படும் உருப் பெருக்காடிகளையும் கண்டு பிடிப்பதற்கு முன்னதாகவே மீன்கள் கண்டுபிடித்து விட்டன போலும். REFLECTING FISH எனப்படும் பிரதிபலிப்பு மீனின் உடல் முழுவதும் கண்ணாடி போலும், லென்ஸ் போலும் செதில்கள் உள்ளன. இந்த மீன் உண்டாக்கும் வெளிச்சத்தை அவை பிரதிபலிக்கின்றன.

நியூசிலாந்தில் ஒன்றரை அடி நீளத்திற்கு வளரும் மண்புழு சுரக்கும் வழவழப்பான திரவம் கூடச் சிறிது நேரத்திற்கு ஒளியைக் கசியும். இந்த ஒளி மயமான பாதையைக் கொண்டே அவை சென்ற திசையை அறிந்து விடலாம்.

ஒளியைக் கசியக் கூடிய பூச்சிகளைப் பற்றிப் பேசினால் நியூசிலாந்து தான் நினைவுக்கு வரும். இவை திருவிழாக் காலங்களில் போடும் மின்சார விளக்குகள் போல ஒரே நேரத்தில் எரிந்தும், அணைந்தும் காடுகளையும், குகைகளையும் அலங்கரிக்கும். இந்தியாவில் மைசூரிலுள்ள பிருந்தாவன் அணையிலும், இங்கிலாந்தில் BLACK POOL என்னுமிடத்திலும் இரவு நேர மின்சார விளக்கு அலங்காரத்தைக் காண ஆண்டுதோறும் லட்சக் கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதே பணியை மின்மினிப் பூச்சிகளும் செய்கின்றன.

இறுதியாக, இந்தப் பூச்சிகளும் மீன்களும் எப்படி ஒளி வீசுகின்றன? ஏன் ஒளி வீசுகின்றன என்பதை பார்ப்போம்.

இந்த ஒளி வீச்சுக்கு அவை உடலிலுள்ள சில இரசாயனப் பொருட்களைப் பயன் படுத்துகின்றன. LUCIFERIN என்ற பொருள் ஆக்ஸிஜனுடன் கலந்து ஒளியை வீசும். இதற்கு LUCIFERASE என்ற என்ஸைமில் உள்ள ADENOSINE கிரியா ஊக்கியாக உதவி செய்கிறது. கிஜிறி என்று சுருக்கமாக அழைக்கப்படும் TRIPHOSPHATE என்ற புரதச் சத்தை இவை பயன் படுத்துகின்றன. இந்த வகையில் ஒளியைத் தயாரிக்க அவை தனது சக்தியில் 2 விழுக்காட்டை மட்டுமே பயன் படுத்துகின்றன.

தற்கால விஞ்ஞானிகள் இந்த உத்தியை அவர்களுடைய ஆராய்ச்சியில் பயன் படுத்துகின்றனர். LUCIFERIN, LUCIFERASE ஆகியவைகளை உற்பத்தி செய்யும் Gene எனப்படும் மரபணுக்களை clonning என்ற முறையில் காப்பி எடுத்து வேறு சில தாவரங்களில் ஏற்றுகின்றனர். இவ்வகையில் ஒரு புகையிலைச் செடியைக் கூட ஒளி வீசும் செடியாக மாற்றி விட்டார்கள். சில வகை பாக்டீரியாக்களில் இந்த ஒளி வீசும் ஜீனை ஏற்றினால் தீமை பயக்கும் பாக்டீரியாக்கள் எங்கு இருக்கின்றன என்றும் கண்டு பிடிக்கலாம். டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், மாமிசம் ஆகியவை கெட்டுப் போனால் கூட இந்த முறையில் கண்டு பிடித்து விடலாம்.

இன்னும் சிலர் சாலைகளில் உள்ள மின்சார விளக்குகளை எடுத்து விடலாம், மின்மினிப் பூச்சிகளின் ஜீன்களை மரத்தில் ஏற்றிச் செலவில்லாமலேயே வெளிச்சம் பெறலாம் என்று கூறுகின்றனர். செவ்வாய்க் கிரகத்திலிருந்து மண்ணை எடுத்து வந்து அதில் இந்த ஜீன்களை ஏற்றினால் அங்கு உயிரினம் உள்ளதா என்பதைக் கூடக் கண்டு பிடித்து விடலாம். ஏனெனில் ATP எனப்படும் ADENOSINE TRIPHOSPHATE புரதச் சத்து இல்லாமல் எந்த உயிரினமும் தோன்ற முடியாது LUCIFERIN, LUCIFERASE என்ற இரசாயனம் செயல் படவும் இவை தான் அடிப்படைப் பொருள்.

ஒரு விந்தையான விஷயம் என்னவென்றால் மனிதன் உண்டாக்கும் வெளிச்சத்துடன் உஷ்ணமும் உருவாகிறது. ஆனால் இயற்கை உயிரினங்கள் உமிழும் இந்த ஒளியில் வெப்பம் என்பதே இல்லை.

மீன்களும், மின்மினிப் பூச்சிகளும் ஒளியை வீசுவது ஏன்? மின்மினிப் பூச்சியின் இனப் பெருக்கத்திற்காக அதாவது ஆண் பூச்சிகளைக் கவர்வதற்காகப் பெண் பூச்சிகள் மினுமினுக்கின்றன. சில வகைப் பூச்சிகளில் ஆண், பெண் இரண்டும் ஒளி வீசுகின்றன. மீன்கள் இரையைப் பிடிப்பதற்காக இப்படிச் செய்கின்றன. பூரான், நத்தை போன்றவை எதிரிகளை மிரட்டி விரட்ட இப்படிச் செய்கின்றன. ஆனால் காளான் போன்ற கீழ்நிலத் தாவரங்கள் எதற்காக இப்படிச் செய்கின்றன என்று தெரியவில்லை.

அண்மைக் காலத்தில் இந்த மின்மினிகள் குறித்து இரண்டு அருமையான நூல்கள் வெளியாகியுள்ளன. HILDA SIMON என்பவர் எழுதிய LIVING LANTERNS என்ற புத்தகமும் JOHN TYLER என்பவர் எழுதிய GLOW WORMS என்ற புத்தகமும் சுவையான பல தகவல்களைத் தருகின்றன.

மத்தியஅமெரிக்காவில் மின்சார வெட்டுக் காரணமாக ஒரு மருத்துவ மனையில் விளக்குகள் இல்லாமற் போன போது ஒரு அவசர ஆப்ரேஷனை ஒளிவீசும் பூச்சிகளின் வெளிச்சத்திலேயே நடத்தி விட்டனர் டாக்டர்கள்.

மத்திய அமெரிக்காவில் CLICK BEETLE என்ற வண்டின் முன்புறம் 2 பச்சை நிற ஒளி விளக்குகளும், வால் புறத்தில் ஆரஞ்சு நிற ஒளி விளக்கும் உள்ளன. இதை AUTOMOBILE அதாவது கார் வண்டு என்பார்கள். தலைப் புறத்தில் பச்சை விளக்கும் வால் புறத்தில் சிவப்பு விளக்கும் உள்ளதல்லவா.

காடுகளில் வழியே நடப்போர் இவைகளைப் காலில் கட்டிக் கொண்டு அந்த வெளிச்சத்திலேயே நடப்பார்களாம் இன்னும் சிலர் இவைகளைக் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து வீட்டிற்கு விளக்குப் போல பயன்படுத்துவார்களாம்!

இயற்கையின் மாபெரும் விந்தைகளில் ஒன்றான மின்மினி, மீன்கள், பூச்சிகள், தாவரங்கள் குறித்துத் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெறுகிறது.

ஒலியை வெளியிடும் தாவரங்கள், பூச்சிகள் மீன்களின் ஆங்கிலப் பெயர்கள்:

1. PHYROPHORUS NOCTILUCAS மத்திய அமெரிக்க வண்டு

2. PLATYURA சிலந்திவலை போல மின்னி ஒளி வீசும் பூச்சி

3. ARACHNO CAMPA நியூசிலாந்தில் ஒட்டடை போலத் தொங்கி ஒளி வீசும் பூச்சி

4. PHYROPHORUS LAGIOPTHALMUS/ AUTOMOBILE BEETLE/ CLICK BEETLE தலையில் 2 பச்சை விளக்கு, வாலில் ஆரஞ்சு விளக்கு

5. PLEUROTUS NIDIFORMIS ஆஸ்திரேலியக் காளான் வகை

6. POROMYCENA MANIPULARIS

7. JELLY FISH

8. BACTERIA

9. LANTERN EYE FISH

10. VIPER FISH

11. ANGLER FISH

12. HATCHET FISH

13. LUMINO DESMUS

14. DYAKIA STRIATA மலேசிய நத்தை

நன்றி: சுவாமிநாதன்