Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,770 முறை படிக்கப்பட்டுள்ளது!

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள்!

இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள்

ஒரு நாட்டின் உண்மையான உயர்வு அந்த நாட்டின் ஒட்டு மொத்த சமுதாயத்தின் உயர்வில் தான் இருக்கிறது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் தான் உண்மையான உயர்விற்கு சரியான அளவுகோல். கோசல நாட்டின் சிறப்பைச் சொல்லும் போது கம்பன் சொல்வான் –

எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை; மாதோ.

மக்கள் அனைவரும் அனைத்து பெருஞ்செல்வத்தையும் அடைந்திருப்பதால் அங்கு இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடையே காண முடிவதில்லை என்கிறான். இன்னொரு இடத்தில் கம்பன் சொல்வான் –

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்.

அங்கு ஈகை என்பதே இல்லையாம், வறுமை என்பதே இல்லாததால். இந்த அளவு செல்வச் சிறப்புள்ள நாடு கவியின் கற்பனையில் மட்டுமே இருக்க முடியும் என்றாலும் ஒவ்வொரு நாடும் இந்த நிலையை அடையப் பாடுபட வேண்டிய இலக்காக இந்தக் கற்பனை ‘உடோபியா’வை வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சிக்காரர்கள் தங்கள் சாதனைகளை விளக்க ஆரம்பித்தால் கம்பன் கண்ட காட்சி மங்கிப் போகும் என்பதே நிச்சயம். நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது என்கிற எண்ணம் கேட்பவர்க்கு ஏற்பட்டு விடும். அதுவும் தங்கள் இலவசத் திட்டங்களால் மக்களுக்கு அனைத்தையும் தந்து மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை வானளவு உயர்த்தி விட்டதாகச் சொல்லி நம்ப வைக்க அவர்கள் முயற்சிப்பார்கள். எதிர்க்கட்சிக் காரர்களோ இந்த இலவசத்திட்டங்களால் மக்களுக்கு கடுகளவும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்றும் மக்கள் வாழ்க்கைத் தரம் பாதாளம் நோக்கி சரிந்து கொண்டிருக்கிறது என்று சத்தியம் செய்து சொல்வார்கள்.

இந்த இரண்டில் எது உண்மை? இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன? அவற்றில் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? இந்தக் கேள்விகளுக்கு பாரபட்சமில்லாமல் நடுநிலையோடு விடைகளை ஆராய்வோம்.

இலவசத் திட்டங்களும் ஓட்டு வங்கி அரசியலும் முன்பெல்லாம் தேர்தல் அறிக்கைகள் ஒரு கட்சியின் கொள்கை விளக்கமாக இருந்தன. ஆட்சிக்கு வந்தால் அந்தக் கட்சி செயல்படுத்த இருக்கும் புதிய தொலைநோக்குத் திட்டங்களையும், பொருளாதாரக் கொள்கைகளையும் பட்டியலிடுவதாகவும் இருந்தன. அப்படி இருப்பது தான் மக்கள் முன் வைக்கக்கூடிய அறிவார்ந்த அணுகுமுறையாகக் கருதப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த புதிய நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம், இந்தந்த விஷயங்களில் இந்தந்த முடிவெடுப்போம் என்பது போன்ற கொள்கை ரீதியான அறிவிப்புகள் தான் தேர்தல் அறிக்கையாக வெளிவரும். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் இப்படி இருந்த நிலை பின் பெருமளவு மாறி எதையெல்லாம் இலவசமாகத் தருவோம் என்கிற அறிவிப்பு தான் முக்கியமாக தேர்தல் அறிக்கையாக வெளி வர ஆரம்பித்தது. அறிவார்ந்த அணுகுமுறை இந்த அறிவிலிகளுக்குத் தேவை இல்லை என்ற முடிவை அரசியல் கட்சிகள் எடுத்து விட்டது போல் தான் தெரிகிறது.

பொருளாதார நிபுணர்களும், சமூக, அரசியல் ஆய்வாளர்களும், “ஓட்டு வங்கி அரசியலின் உச்சக்கட்டம்’ என இந்த இலவசங்களை குறிப்பிட்டு கவலை தெரிவிக்கின்றனர். ஆனாலும் இலவச மதிய உணவு இலவசக் கல்வி கொடுத்த காமராஜர் ஆட்சி இழந்ததும்,இலவச சைக்கிள் ரிக்ஷா, இலவச கண்ணொளித் திட்டம் கொண்டு வந்த கருணாநிதி ஆட்சி இழந்ததும், இலவச சத்துணவு கொடுத்த எம்ஜிஆர் 1986 உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்தும் மோசமான தோல்வியைச் சந்தித்ததும், இலவச சைக்கிள் கொடுத்த ஜெயலலிதா ஆட்சி இழந்ததும் வரலாற்று நிகழ்வுகள்.

இலவசத் திட்டங்களை அறிவிப்பதாலேயே ஓட்டும் ஆட்சியும் கிடைத்து விடாது என்பதற்கான உதாரணங்கள் இவை. என்றாலும் இப்போது அடுக்கடுக்காக வரைமுறையில்லாமல் வர ஆரம்பித்திருக்கும் இலவசத் திட்ட அறிவிப்புகள் இன்றைய அரசியல் போகும் பாதையை சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இலவசம் என்பது அரசியலில் பயன்படுத்தியே தீர வேண்டிய ஒருவித மயக்க மருந்து என்றும் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க அதைத் தவிர வேறு சிறந்த ஆயுதம் கிடையாது என்றும் இன்றைய அரசியல்வாதிகள் திடமாக நம்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இலவசத் திட்டங்களால் நன்மைகள்

இலவசத் திட்டங்களால் எந்த நன்மையுமே இல்லை என்று சொல்லி விட முடியாது. மதிய உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் போன்றவை எத்தனையோ ஏழைச் சிறுவர்களுக்கு ஒரு வேளைச் சோற்றை உத்திரவாதத்துடன் கொடுத்து பசியாற்றி அவர்கள் கல்வியைத் தொடர உறுதுணையாக இருந்திருக்கிறது. பள்ளிக்கு அனுப்பினால் குழந்தைகளுக்குப் போடும் ஒரு வேளை உணவுச் செலவு மிச்சம் என்ற ஒரு காரணத்திற்காகவே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய ஏழைப் பெற்றோரின் எண்ணிக்கை அதிகம் உண்டு.

அது போல வறியவர்களுக்கு இலவச மருத்துவ உதவி, காப்பீட்டுத் திட்டம், ஆம்புலன்ஸ் வசதி போன்ற சேவைகள் உபயோகமாக இருப்பதில் சந்தேகமில்லை. பணக்காரர்கள் மட்டுமே பெற முடிந்த சேவைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு வறியவர்களுக்கும் அமைந்துவிடுவதால், வளரும் பொருளாதாரம் உள்ள எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட சேவைகள் சமூக நீதியை நிலைநாட்டும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் முதியோர் உதவித் தொகை போன்ற சில திட்டங்கள் உண்மையாக ஒருசில பயனாளிகளுக்குப் பெரும் உதவியாகவே இருக்கின்றன என்பதற்கு உதாரணங்கள் நிறைய உண்டு. பொது விநியோக அமைப்பின் மூலமாக அரிசியும் வேறு சில இன்றியமையாத உணவுசார் பொருட்களும் குறைந்த விலையில் அளிக்கப்படுவதும் வரவேற்கத்தக்கது. அதேபோல் குழந்தைகளுக்கும் கருவுற்ற பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்து குறைந்த இளம் பெண்களுக்கும் சத்துணவு வழங்கப்படுவதும், பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், சைக்கிள்கள், போக்குவரத்திற்கு கட்டணக் குறைவு ஆகியவை மாணவ மாணவியருக்கு வழங்கப்படுவதும் வரவேற்கத்தக்க மனித வள முதலீடுகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

தனியார் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு அள்ளித்தரும் வரி மற்றும் இதர சலுகைகளை மறந்து விட்டு ஏழைகளுக்கான இலவச திட்டங்களால் தான் நாட்டின் நிதி நிலைக்கு ஆபத்து என்று கூறுவது நியாயமற்றது என்று மேற்கூறிய இலவசத் திட்டங்களுக்கு ஆதரவாக சில பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இலவசத் திட்டங்களால் தீமைகள்

எதையுமே ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கக் கூடாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசுகள் அத்தியாவசிய சேவைகளைத் தாண்டிப் பொருட்களை இலவசமாக வழங்க ஆரம்பிக்கும் போதுதான் அது நாட்டு பொருளாதாரத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்த ஆரம்பிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது..

இந்த இலவசத் திட்டங்களின் பயன் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு போய்ச் சேர்கிறதா என்றால் பெரும்பாலும் அது இல்லை என்றே கூற வேண்டும். பொதுமக்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சிக்காரர்களுக்கு (யார் ஆட்சியில் இருந்தாலும்) கொடுக்கும் ஊக்க போனஸாகவே சில இலவசத் திட்டங்கள் அமைகின்றன. ஓட்டு வங்கியைக் குறிவைத்து நடத்தப்படும் இந்த இலவச நாடகத்தின் மூலம் ஊழல் பெருச்சாளிகள் நன்றாக கொள்ளையடித்து விடுகிறார்கள்.

பல சமயங்களில் இலவசமாய்க் கொடுப்பதாலேயே அந்தப் பொருட்களின் தரம் மிகக் குறைந்ததாக அமைந்துவிடுகிறது என்பதால் இந்த இலவசங்கள் அந்த ஏழைகளை அவமானப்படுத்தும் சின்னங்களாகிவிடுகின்றன. ஆனால், பாவம் ஏழை மக்களுக்கு இந்த அவமானமும் புரிவதில்லை. புரிந்தாலும் மக்கள் அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை

வெங்கடேச ரவி என்ற கவிஞர் அழகாகச் சொல்வார்:

நாம்
தன்மான உணர்ச்சிகளை
அடகு வைக்கவில்லை;
அடகு வைத்தால்
மீட்கப்படுமோ என்ற பயத்தில்
மொத்தமாகவே விற்று விட்டோம்!

இலவசமாகப் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோமே என்கிற உணர்வு மக்களைப் பெரிதாக பாதிக்கவில்லை என்பதைப் பார்க்கையில் அந்த கவிஞரின் ஆதங்கம் தவறில்லை என்றே தோன்றுகிறது.

ரேஷனில் போடப்படும் அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்களின் தரம் தாழ்ந்திருப்பது ஒருபுறம். தப்பித்தவறி அது சுமாராக இருந்துவிடும் பட்சத்தில் அதைக் கடத்தி, அதிக விலைக்கு விற்று விடும் அவலம் இன்று அதிகம் இருக்கிறது.

தமிழகத்தை எடுத்துக் கொண்டால் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று மிக பிரமாதமாக விளம்பரபடுத்தபடுகிறது அந்த விளம்பரத்தை மேலோட்டமாக கேட்டோம் என்றால் தமிழ்நாட்டில் பசி கொடுமை என்பதே இல்லாது போய்விட்டது என்று தோன்றும். ஆனால் அரிசியை தவிர மற்ற பொருட்களின் விலை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் வெறும் அரிசியை மட்டுமே சாப்பிட பழகி கொண்டால் தான் ஏழைகள் பசியின்றி வாழ முடியும் என்பது தெரியும். பருப்பு விலை, காய்கறிகளின் விலை, மசாலா பொருட்களின் விலை, இன்னும் சமையலுக்கு தேவையான மண்ணெய், எரிவாயு, விறகு என்று அனைத்தையும் கணக்கு போட்டு பார்த்தால் விழி பிதுங்கி விடும். அடிப்படை தேவைகளுக்கே இப்படி என்றால் தண்ணீர் வரி, மின்சார வரி, மருத்துவ செலவு, மற்றும் இதர செலவுகளுக்கு ஏழை மக்கள் என்ன செய்வார்கள்? விலை வாசியை ஒட்டு மொத்தமாகக் கட்டுப்பாட்டில் வைக்காமல் ரேஷன் அரிசியை மட்டும் ஒரு ரூபாயிற்குத் தருவது எந்த வகையில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு உதவி செய்யும்.

கழிப்பறை வசதிகளே இல்லாமல் இன்னமும் இங்கு பல லட்சம் வீடுகள் இருக்கும் போது வீட்டுக்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி தருவது கேலிக் கூத்தே அல்லவா? எது முக்கியம் என்கிற அடிப்படைகள் கூட இங்கு கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றல்லவா தெரிகிறது.

சினிமா கேளிக்கை வரி ரத்தால் ஏற்படும் இழப்பு எவ்வளவு ? வரிவிலக்கு அளிப்பதனால் பலனடைவது யார்? திரைத்துறையில் இருக்கும் சாதாரண தொழிலாளர்களா? கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்கள் தானே? இதனால் ஏற்பட்ட நன்மைகள் என்று ஏதாவது உண்டா? குறைந்த பட்சம் திரையரங்குகளிலாவது கட்டணம் குறைந்ததா? ஏன் உள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும் ?

சமீபத்தில் விவசாயக் கடன் ரத்து என்ற பெயரில் தேசிய வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் கொடுத்த கடன்களை (சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய்) ஒரே நேரத்தில் மத்திய அரசு தள்ளுபடி செய்தது. கடன் சுமை தாள முடியாத விவசாயிகளுக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால் சூதாட்டத்திற்கும், டாஸ்மாக் கடைக்கும் செலவழிக்க, நகைகளை அடமானம் வைத்துக் கடன் வாங்கியவர்களுக்குக் கூட இந்தத் தள்ளுபடி செல்லுபடியானது, உண்மையாக உழைத்து வாங்கிய கடனைக் கட்டுபவர்களை ஏளனம் செய்வதுபோல் அல்லவா இருக்கிறது? இதில் ஏழைகளை விட பல மடங்கு பலன் அடைந்தவர்கள் செல்வந்தர்களே. ஏற்கனவே பெரும் தொழிலதிபர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளைக் கடன் வாங்கி, அதைத் திருப்பிக் கட்டுவதற்கு புதிது புதிதாக வழிகள் கண்டுபிடித்துக் கடன் வாங்கும் நிலையில், அடிமட்டக் கடனையும் ரத்து செய்துவிட்டால் வங்கிகள் கதி என்ன ஆகும்? இனி வாங்கிய கடனைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் யாருக்காவது வருமா? வங்கிகள் நஷ்டமடைந்தால், பொருளாதாரப் பற்றாக்குறை பெரிதாகிக் கொண்டே போனால் அது மறுபடியும் பொதுமக்கள் தலையில்தானே வரியாக வந்து விடியும்?

இன்னொரு மிக வருத்தமான விஷயம் என்னவென்றால், இலவசத் திட்டங்களை அள்ளிக் கொடுப்பதில் ஒவ்வொரு கட்சியும் போட்டி போடுகின்றனவே தவிர, ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும், தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிப்பதாகவே தெரியவில்லை.

உலகமே பொருளாதாரச் சரிவில் சிக்கித் தவிக்கும்போது, ஒருவரை ஒருவர் விஞ்சும் விதத்தில் நமது அரசியல் கட்சிகளால் எப்படி இவ்வளவு இலவசத் திட்டங்களை அறிவிக்க முடிகிறது? இலவசத் திட்டங்களால் அரசின் கடன் சுமை கோடிக் கணக்கில் உயர்ந்து கொண்டே போகிறது, இதற்கான வட்டிக்காக வரி ஏற்றம் என்ற சுமையை மறைமுகமாக மக்கள் மீது அரசு சுமத்துகிறது.

இது போன்ற இலவச திட்டங்களுக்கு பல கோடிகளை ஒதுக்குவதால் பற்றாக்குறை பட்ஜெட்தான் சமர்ப்பிக்கப்படுகிறது. அரசு கஜானாவில் இருந்து கணிசமான தொகை இந்த இலவச திட்டங்களுக்கு போய்விடுகிறது. தமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான கவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை பிரசுரித்த ஒரு பிரபல ஆங்கில பத்திரிகை , “தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும் போர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில் எழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது’ என கிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது இந்தப் பத்திரிகை.

தேவை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்கிற பாரபட்சமே இல்லாமல், அரசு பணத்தை எடுத்து வருவோர் போவோருக்கெல்லாம் விநியோகம் செய்வது என்பது என்ன புத்திசாலித்தனமோ தெரியவில்லை. இப்படிப்பட்ட ஊதாரித்தனத்தின் விளைவுகளை, மீண்டும் பொதுமக்கள்தான் பாவம் சகித்துக் கொள்ள நேரிடும் என்பதுதான் துர்பாக்கியம். எனவே யாருக்கு எது தேவையோ அது மட்டும் இலவசம் என்று யோசித்து அதை மட்டும் வழங்கினால் அரசு கஜானாவிற்கு செல்லும் பணம் வேறு உருப்படியான நீண்ட காலத்திற்கு உதவக் கூடிய நல்ல திட்டங்களுக்குச் செலவிட கணிசமாக மிஞ்சும்.
முடிவாக சில வார்த்தைகள்

எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால் ஒருசில இலவசத் திட்டங்கள் ஒருசிலருக்கு ஓரளவு நல்ல பலன் தருவனவாக இருந்தாலும் பெருமளவு திட்டங்கள் மக்களை ஏமாற்றும் முயற்சியாகவே இருக்கின்றன. அவற்றில் சில ஏழைகள் தற்காலிக பலன்களை அடைய வாய்ப்பிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ, அவர்களை மேம்படுத்தவோ அந்தத் திட்டங்கள் உதவுவதில்லை.

கோழியுடன் எழுந்து கோட்டான் கூவுகையில் தூங்கி காலமெலாம் உழைத்து கால் வயிற்றுக் கஞ்சிக்குக் கலங்கித் தவிக்கும் உழவர்கள் இன்றும் இந்த இலவசத் திட்டங்களால் பெரிதாகப் பயனடையாமலேயே இருக்கின்றனர். விலைவாசி விஷமென ஏறுவது கண்டு விம்மிடும் நிலையில் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இருக்கின்றனர். கல்வி என்கிற அடிப்படைத் தேவைக்குக் கூட அவர்கள் பெருமளவு செலவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்று அதிகரித்திருக்கிறது. இந்த இலவசத் திட்டங்கள் அவர்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவுமில்லை, வாழ்க்கையை எந்த விதத்திலும் மேம்படுத்தி விடவுமில்லை.

மொத்தத்தில் அடுத்த ஆட்சியைப் பிடிக்கும் குறுகிய சுயநல நோக்கே இந்த இலவசத் திட்டங்களில் தெரிகிறதே தவிர மக்களுக்கு உதவும் தொலை நோக்குப் பார்வையைக் காணமுடியவில்லை என்பதால் இவை பெருமளவு நிரந்தரமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை என்ற முடிவுக்கே வர வேண்டி இருக்கிறது.

நன்றி: என்.கணேசன் – (மணற்கேணிக்காக எழுதியது)