“மனிதாபிமானம்’ மரத்துப் போனதால், சுட்டெரிக்கும் வெயிலில், ரத்தக் காயத்துடன் நான்கு மணி நேரம் கிடந்தார், மருத்துவமனை ஊழியர் ஒருவர்.
கோவை அரசு மருத்துவமனை வளாகம், பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடந்தார். மிக அருகில் வெளிப்புற நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர் அறை, புறக்காவல் நிலையம் உள்ளன. காயத்துடன் கிடந்தவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
வெயிலில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக கிடந்தவரை கண்டு கொண்டவர் எவரும் இல்லை; போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. மருத்துவமனை ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, “இவர் மார்ச்சுவரியில் பணியாற்றும் தற்காலிக பணியாளர். இரவு நேரத்தில் போதையில் வரும் இவர், இங்கு பணியில் இருப்பவர்களுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்போது கூட போதையில் தான் கிடக்கிறார்’ என்றார்.
மாலை 6 மணிக்கு போதை தெளிந்து எழுந்த அந்த ஊழியர், தன்னை சக ஊழியர் ஒருவர் அடித்து காயப்படுத்தி விட்டார் என அப்பாவியாக கூறினார். புறக்காவல் நிலைய பணியில் இருந்த போலீஸ்காரர், சிகிச்சைக்காக போதை ஊழியரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
நன்றி: தினமலர்