இதுதான் மாதிரிப் பள்ளி! – ஆரணி அதிசயம்

‘அரசுப் பள்ளி’ என்றால் நம்மையும் அறியாமல் ஓர் அலட்சிய மனோபாவம் மனதுக்குள் உட்கார்ந்துகொள்ளும். தேர்ச்சி பெறாத மாணவர்கள், பொறுப்பற்ற ஆசிரியர்கள், அடிப்படை உள் கட்டமைப்புகள் இல்லாத பள்ளிகள் – இவைதான், அரசுப் பள்ளியின் இலக்கணங்கள் என்பது உங்கள் எண்ணமாக இருந்தால், நீங்கள் உடனடியாக ஆரணி, சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு விசிட் அடிப்பது நல்லது!

இந்த வருடம் தன் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டு இருக்கும் இப் பள்ளி, 1911-ல் துவங்கப்பட்டபோது, இதன் பெயர், ‘கார்னேஷன் இலவச ஆரம்பப் பள்ளி’. 1957-ல் பெருந்தலைவர் காமராஜர் ஆலோசனைப்படி, சுதந்திரப் போராட்டத் தியாகியும் இப் பள்ளியை உருவாக்கி அதன் வளர்ச்சிக்கு உழைத்தவருமான தியாகி எம்.வி.சுப்பிரமணிய சாஸ்திரியார் நினைவாக பெயர் மாற்றப்பட்டது. உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்று படிப் படியாக வளர்ந்த இப் பள்ளியில், இப்போது 5 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மிகப் பெரிய விளையாட்டுத் திடல், நிறைவான கழிவறை வசதிகள், சகல வசதிகளுடன் கூடிய ஆய்வுக் கூடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று தன்னிறைவு பெற்ற பள்ளியாக விளங்குகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ-வும் முன்னாள் பள்ளி தாளாளருமான ஏ.சி.நரசிம்மன் நம்மிடம், ”நான் 1939 – ல் இந்தப் பள்ளியில் படித்தேன். நான் படித்த பள்ளிக்கே 21 ஆண்டுகள் தாளாளராகப் பணியாற்றி இருக்கிறேன். நான் தாளாளராக இருந்த காலகட்டத்தில், 1992-93 வாக்கில் மட்டும் சுமார் ஏழு மாணவ மணிகள் மருத்துவப் படிப்பிலும் 33 மாணவ மணிகள் பொறியியல் படிப்பிலும் சேர்ந்தனர் என்பது என்னை மிகவும் நெகிழ்ச்சிகொள்ள வைக்கும் நினைவுகள்!” என்கிறார் மகிழ்ச்சியோடு.

பள்ளியின் தற்போதைய தாளாளர் சுந்தரம், ”ப்ளஸ் டூ தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதி கரித்து வருகிறது. கல்லூரியைப்போல ஆய்வுக் கூட  வசதிகள் எங்கள் பள்ளியில் உள்ளன. ஆரணி வட்ட அளவிலான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது, திருவண்ணாமலை கல்வி மாவட்ட அளவிலான கால் பந்து மற்றும் பூப் பந்து போட்டிகளில் முதல் இடம், கபடிப் போட்டியில் இரண்டாம் இடம் என விளையாட்டுச் சாதனைகளிலும் முத்திரை பதித்தவர்கள் எங்கள் குழந்தைகள். பழைய மாணவர்களில் ஒருவர் மாவட்ட ஆட்சியராகவும், ராஜசேகர் என்பவர் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.ஏ.எஸ். ஆகவும் இருந்து இருக்கிறார். லோகநாதன் என்பவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார். அன்பரசன் என்ற பழைய மாணவர் இங்கிலாந்து பி.பி.சி-யில் இருக்கிறார்!” என்கிறார் நிறைவோடு.

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளும் இந்த நிலையை எட்டினால், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைகளுக்கு சாமான்யர்கள் அடிபணிய வேண்டிய அவசியம் இருக்காதே!

நன்றி: – கோ.செந்தில்குமார், படங்கள்: பா.கந்தகுமார் – விகடன்