Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 9,063 முறை படிக்கப்பட்டுள்ளது!

முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …

முதுமை நெருங்க நெருங்க மனிதன் எத்தனையோ ஆற்றல்கள் இழக்க நேர்கிறது. உடல் தளர்வது மட்டுமல்ல மூளையின் ஆற்றலும் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதை அவன் நிறையவே உணர்கிறான். முன்பு போல் அவனால் பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. புதியனவற்றைக் கற்றுக் கொள்வது முன்பு போல் அவனுக்கு எளிதாக இருப்பதில்லை. இது பொதுவாக நாம் எல்லோரும் நம்பும் யதார்த்த நிலை என்றாலும் பல அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கை உண்மையைச் சாராதது என்று சொல்கின்றன. முதுமையிலும் மூளையின் ஆற்றலை சிறப்பாக மனிதன் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சிகள் அடித்துச் சொல்கின்றன.

முதலில் தனிப்பட்ட ஆராய்ச்சிகளையும், அதன் முடிவுகளையும் பார்ப்போம்.

பெர்க்ளியைச் சேர்ந்த மரியன் டயமண்ட் (Marian Diamond) என்ற 78 வயதான உயிரியல் பேராசிரியர் முதுமையிலும் மூளைத்திறன் சிறப்பாக செயல்பட ஐந்து முக்கியத் தேவைகளைச் சொல்கிறார். 1) சரியான உணவு 2) உடற்பயிற்சி 3) சவால்களை எதிர்கொள்தல் 4) புதுமைகளில் ஆர்வம் 5) அன்பு. இது அவரது ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் மட்டுமல்ல. அவரே அதற்கான வாழும் உதாரணம். 78 வயதான பின்னும் பாடம் நடத்தும் அவரிடம் “நீங்கள் ஏன் ஓய்வு பெறவில்லை” என்று கேட்ட போது “நான் ஏன் ஓய்வு பெற வேண்டும்?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் அவர். சென்ற வருடம் அவர் நடத்தும் மனித உடலியல் வகுப்பிற்கு 736 மாணவர்கள் படிக்க பதிவு செய்திருந்தார்கள்.

அமெரிக்க நரம்பியல் அகேடமி(American Academy of Neurology)யின் புதிய கண்டுபிடிப்பு ஒன்று ஒரு வார காலத்தில் ஆறு முதல் ஒன்பது மைல்கள் வரை நடக்கும் முதியோர் தங்கள் நினைவு சக்தியை தக்க வைத்துக் கொள்வதாகக் கூறுகின்றன.

ஃப்ராங்க் லாலிஸ் (Frank Lawlis) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த மனவியல் வல்லுனர் நன்றாக மூச்சுப் பயிற்சியில் ஈடுபடும் முதியவர்கள் உணவு உட்கொள்வதிலும் கவனமாக இருந்தால் மூளைத் திறன் குறையாமல் இருப்பார்கள் என்று தனது ஆராய்ச்சி ஒன்றின் முடிவாகச் சொல்லி இருக்கிறார்.

ஜார்ஜ் ரோச்செல்லெ (George Rozelle) என்ற அமெரிக்க நரம்பியல் சிகிச்சையாளர் (neurotherapist) நல்ல உறக்கம், சுறுசுறுப்பான தன்மை ஆகிய இரண்டும் இருக்கும் முதியவர்களின் மூளைத் திறன் சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார்.

கான்சாஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ப்ரெண்டா ஹன்னா பேடி (Brenda Hanna-Pladdy) என்ற ஆராய்ச்சியாளர் வாழ்நாள் முழுவதும் இசையில் முழுமூச்சாக ஈடுபடும் மனிதர்களின் மூளை சிறப்பாக செயல்படுகிறது என்று கூறுகிறார்.

ஆர்னால்டு ஸீபெல் (Arnold Scheibel), என்ற ஒரு மூளை ஆராய்ச்சிக் கழகத்தின் (UCLA’s Brain Research Institute) இயக்குனர் புதியனவற்றைக் கற்க அதிக ஆர்வம் காட்டுபவர்களின் மூளை தன் திறனை இழக்காமல் இழக்காமல் பெருமளவு தக்க வைத்துக் கொள்கிறது என்று கூறுகிறார்.

இலினாய் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆர்ட் க்ரேமர் (Art Kramer) என்ற விஞ்ஞானியும், பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்த கிர்க் எரிக்சன்(Kirk Erickson) என்ற விஞ்ஞானியும் சேர்ந்து நடத்திய ஆராய்ச்சியில் மனிதர்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும் மூளையின் ஆற்றலைத் தீர்மானிப்பவையாக இருக்கின்றன என்று கூறுகிறார்கள். ஓயாத கவலை, மன அழுத்தம், அதிகமாகக் குடித்தல் ஆகியவை மூளையின் செயல்பாட்டுத் திறனைப் பெருமளவு குறைத்து விடுவதாகக் கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சிகளும், இது போன்ற வேறு பல ஆராய்ச்சிகளும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாகத் தக்க வைத்துக் கொள்ள சில ஆலோசனைகளைத் தொகுத்து சுருக்கமாகப் பார்ப்போம்.

1) உணவுப் பழக்கங்கள்:

உணவில் நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது நல்லது. கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவைத் தவிர்ப்பதும் நல்லது.

2) உடற்பயிற்சி:

தினமும் சில மைல்கள் நடப்பதும், மிதமான உடற்பயிற்சி செய்வதும் மூளையின் ஆற்றல் குறையாமலிருக்க மிகவும் உதவுகின்றன என்பதை பல ஆராய்ச்சிகள் ஒருமித்துக் கூறுகின்றன. மூச்சுப்பயிற்சிகளும் பெருமளவு உதவுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

3) புதிய முயற்சிகள்:

எப்போதும் வழக்கமான செயல்களையே செய்து கொண்டிராமல் புதிய புதிய முயற்சிகளிலும், செயல்களிலும் ஈடுபடுபவர்கள் மூளை முதுமையிலும் இளமையாகவும் திறனுள்ளதாகவும் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

4) ஓய்வு:

சுறுசுறுப்பாக இருப்பது போலவே தேவையான அளவு ஓய்வும், உறக்கமும் மூளையின் திறன் குறையாமல் இருக்க மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

5) மூளைக்கு வேலை:

மூளைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறுக்கெழுத்துப் போட்டிகள், விடுகதைகள், புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள முற்படுதல் ஆகியவை மூளைக்கு முறையாக வேலை தந்து அதன் திறனைத் தக்க வைத்துக் கொள்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

6) படித்தல்:

புத்தகங்கள் படித்தல் முதுமையில் நல்ல பொழுது போக்கு மட்டுமல்ல அது மூளைக்கும் நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். எனவே புத்தகங்கள் படிப்பதும் உதவும்.

7) நல்ல பழக்க வழக்கங்கள்:

புகைபிடித்தல் மற்றும் அதிகமாய் மதுவருந்துதல் போன்ற பழக்கங்கள் நாளடைவில் மூளைத் திறனை மழுங்கடிக்கின்றன என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தீய பழக்கங்களை விட்டொழித்து நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்தல் மிக முக்கியம்.

8) மற்றவை:

அடிக்கடி பயணிப்பது, பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வது, இசையைக் கேட்பது, அதிகமாய் கவலைப்படாமல், பதட்டப்படாமல் இருப்பது, தியானம் செய்வது போன்றவையும் முதுமையிலும் மூளைத் திறனைக் கூர்மையாக வைத்திருக்க உதவுகிறது என்கின்றன விஞ்ஞான ஆராய்ச்சிகள்.

மேலும் வயதாக வயதாக மனிதன் சில பல செயல்களில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக் கொள்வதும், வயதாகி விட்டதால் சில செயல்பாடுகள் முன்பு போல் இருக்க முடியாது என்று நம்ப ஆரம்பிப்பதும் மூளையின் ஆற்றல் குறைய முக்கிய காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். எனவே மேற்சொன்ன ஆலோசனைகளைக் கடைபிடித்து, மனதளவில் முதுமையடைந்து விடாமல் இருந்தால் மூளை என்றும் முதுமை அடைந்து விடுவதில்லை, அதன் ஆற்றல் குறைந்து விடுவதில்லை என்பதை நினைவில் இருத்துவோமாக!

நன்றி:- என்.கணேசன்  –  ஈழநேசன்