Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2011
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,618 முறை படிக்கப்பட்டுள்ளது!

தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!

தெருவில் நீங்கள் நடந்து சென்றுகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று தெய்வம் உங்கள் எதிரில் தோன்றி, “உனக்கு என்ன தேவை” – என்று கேட்கிறது. உங்களது மனக் கண்ணில் இந்தக்காடசியைக் காட்சிப்படுத்திப் பார்த்து.. உங்களது தேவையைச் சொல்ல முயலுங்கள்…அப்போது தான் நம் தேவை எதுவென்று நாமே உணராமல் இருக்கும் உண்மை நிலை நமக்குப் புரியவரும்.

நாம் எல்லோருமே வெற்றியைத் தேடித்தான் விரைந்து கொண்டிருக்கிறோம்.. மகிழ்ச்சிக்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம். நிம்மதியை நாடித்தான் நடந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் வெற்றி,மகிழ்ச்சி, நிம்மதி – எல்லாம் எந்தக் கடையில் கிடைக்குமென்று நினைக்கிறீர்கள்?

இதெல்லாம் கடையில் கிடைக்குமா? – என்பது ஒரு அருமையான கேள்வியாக இருந்தாலும் “கடை விரித்தேன். கொள்வாரில்லை” என்னும் வள்ளலாரின் ஆதங்கம் மறுபுறம் நம்மை உலுக்காமலில்லை.

தேடுவோர் ஒருபுறமும் – வைத்துக்கொண்டு காத்திருப்போர் மறுபுறமுமாய் இருக்க எப்போதும் இடைவெளி மட்டும் இருந்தபடி இருந்து கொண்டே இருக்கிறது. விளைவு?

ஆங்காங்கே புலம்பல், கலக்கம், மயக்கம், தயக்கம், குழப்பம், விரக்தி…! சரி இவற்றால் பாதிக்கப்படாமல் நாம் நம் வாழ்க்கைத் தோணியைச் செலுத்த வேண்டுமென்றால் முதல் முதலாக “நாம் என்ன செய்ய வேண்டும் – என்பதன் வெளிப்பாடுதான் இந்தப் படைப்பு.

வெற்றியோ, மகிழ்ச்சியோ நிம்மதியோ ஒரு பெட்டகமாகவோ மூட்டையாகவோ எதுவென்று தெரிந்தால் தானே அதைப் பெறமுடியும். தேவை எதுவென்று தெரிந்தால் தானே அதைப் பெறமுடியும். “தேவை ஒரு வீடு” என்று வைத்துக்கொள்ளுங்கள். “வீடு வேண்டும்” என்று எல்லோருக்கும் தெரியும். தெரியும் என்றாலும் எல்லோராலும் அதை அடையமுடிகிறதா? முடியவில்லை. ஏன் தெரியுமா? தெரிந்து கொண்ட நிலையில் நமக்குள் ஏற்படும் (தேடல்) உந்து சக்தி போதுமானதாக இருக்காது. “வீடு இருந்தால் நல்லதுதான்… ஆனால் அதுக்கு எங்க போறது” – என்ற எண்ணம் வெறும் ஆதங்கமாக மட்டுமே எஞ்சும்.

சரி.. அடுத்த நிலையைப் பார்ப்போம். அது “தேவையை புரிந்து கொள்ளும் நிலை” . புரிதல் என்பது தனிமையில் நமக்குள் எழும் சிந்தனையின் விளைவு நேற்று என் உறவினர் ஒருவரின் புதிய வீட்டைப் பார்த்தேன். சிறிய வீடாக இருந்தாலும் எவ்வளவு அழகாக இருக்கிறது! இது போன்ற ஒரு வீடு நமக்கிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இத்தகைய சிந்தனையின் விளைவால் ஏற்படும் தூண்டுதல் கொஞ்சம் அதிகமாயிருக்கும். .. இதன் விளைவாக… நமக்குத் தேவையான அந்த வீடு, நம்மை நாடத் தொடங்கிவிடும்.

அதை அடைய இதுவும் போதாது ஏன் தெரியுமா.. நாம் பார்த்த வீட்டின் நினைவு கொஞ்ச நாளில் மறைந்து விடும். எனவே நாம் அடுத்த நிலைக்கு நகர வேண்டும். அதுதான் நமது தேவையை நாம் உணரும் மூன்றாவது நிலை.. அதென்ன “தேவையை உணர்தல்” – என்கிறீர்களா?

இது ஒரு நல்ல கேள்வி மட்டுமல்ல.. தேவையான கேள்வியும் கூட, பதிலைப் பார்ப்போம்.

உணர்தல் என்றால் நாம் கற்பனையில் கண்ட, வீடு “நமக்குக் கிடைத்துவிட்டால் நம் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும். ஒவ்வொரு நாளும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டுச் சொந்தக்காரரின் இடைஞ்சல் இருக்காது… வாடகைச் செலவு மிச்சமாகி விடும். வங்கிக்கடன் பெற்றிருந்தால் நமக்கு வருமான வரி மிச்சமாகும். நாம் நினைத்தபடி நமக்குப் பிடித்தபடி நம் வீட்டுக்குள் நாம் சுதந்திரமாக இருக்கலாம். நமக்குப் பிடித்த செடிகளை வளர்க்கலாம். நம் குழந்தைகள் படிப்பதற்கென்று நல்ல அறை செய்யலாம்” -என்று வரப்போகும் அனுபவத்தை – அனுமானத்தால் அணுஅணுவாய் மனதுக்குள் உணர்ந்து சிலிர்ப்பது, பூரிப்பது. அதாவது மானசீகமாய் அந்த வீட்டில் வசிப்பது அப்படி வசிக்கும்போது ஏற்படும் ஆனந்தத்தில் பூரிக்க வேண்டும். இதைத்தான் உணர்தல் என்கிறேன்.

அதாவது “சொந்த வீட்டின் அவசியத்தை உள்ளப்பூர்வமாக உணர்வது. விரும்புவது காதலிப்பது” இப்படிப்பட்ட உணர்வைப் பெற்றுவிட்டால் நமது கவனம் அந்த வீட்டில் முழுமையாகக் குவிந்திருக்கிறது என்று பொருள். கவனம் குவிந்துவிட்டால் போதும் தொலைவிலிருந்த நமது கனவு இல்லம் நம் அருகாமையில் வந்து விடும். காரணம் என்ன தெரியுமா?

இப்படியாகக் காட்சிப்படுத்தி அதன் களிப்பை உணர்த்த தலைப்படும் போது அது காதலாக மாறி விடும். – அந்தக் காதல் நமக்குள் ” அதை அடையும் தீவிரத்தை அதிகமாக்கிவிடும். அதன் விளைவாக நமது தேடல் தீவிரமாய் இருக்கும். பொருத்தமான வீட்டை நோக்கி நமது கவனம் குவியும். நமக்குத் தெரிந்த பலரிடமும் வீடு பற்றியே விசாரிப்போம். அப்படித் தேடத் தொடங்கிவிட்டால் – வீட்டைப் பற்றிய பல செய்திகள் நம்மைத்தேடி வரத் தொடங்கி விடும். சரி இது போதுமா? இன்னுமொரு நிலை இருக்கிறது. அதுதான் நம் தேவை பற்றிய தெளிவு பெறும் நிலை. அதாவது அந்த வீடு தான் நாங்கள்” , “நாங்கள் தான் அந்த வீடு” என ஒன்றிவிடும்போது அந்த வீட்டிற்குள் நீங்கள் வாழத் தொடங்கிவிடுவீர்கள். உங்களுக்குள் வாழ்ந்த அந்த வீடு.. இனி உங்களை தன்னுள் அடக்கிக் கொள்ளும்.

அது எப்படி..? என்கிறீர்க்ளா? அதுதான் படிப்படியாக நாம் நம் தேவையை அடையும் வழி முறை. நீங்கள் உங்கள் “தேவையை” அறியும்போது அது தொலைவிலிருக்கும் நீங்கள் உங்கள் தேவையை புரிந்து கொள்ளும்போது அது உங்கள் அருகாமையில் வந்துவிடும். நீங்கள் உங்கள் தேவை இதுவெனத் தெளியும் போது உங்களுக்குள்ளேயே அது வந்துவிடும்.

வேறொன்றுமில்லை… ஒவ்வொரு நிலையிலும் உங்களது கவனம் கூர்மையடைகிறது. உங்களின் தேடல் தீவிரமடைகிறது. விளைவு வெற்றி உங்களைச் சேருகிறது. வெற்றி பெற்றால் மகிழ்ச்சிக்கு குறை இருக்குமா என்ன? அனைவரும் மகிழ்ச்சி பொங்கே வாழ விரும்புகிறோம்.

கவலையை விடுங்கள்.. தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்! ஆமாம்

சுதந்திரத்தின் தேவையை காந்தி
உணர்ந்ததைப் போல்
பிறருக்கு உதவும் தேவையை தெரிசா
உணர்ந்ததைப் போல்
மின்சாரத் தேவையை எடிசன்
உண்ர்ந்ததைப் போல்

நீங்களும் உங்களின் தேவையாய், “எதை உள்ளப்பூர்வமாக உணர்கிறீர்களோ….அதன் மீது காதல் கொள்ளத் தொடங்குவீர்கள்… காதல் கொண்ட பின் அதை அடைவது அரிதில்லை!

நன்றி:   ம.திருவள்ளுவர் – தன்னம்பிக்கை