Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,950 முறை படிக்கப்பட்டுள்ளது!

உணவாகவும் நிவாரணியாகவும் பால்

பாலென்றால் எவருக்கும் வாயூறும். அது தெவிட்டாத உணவுப் பண்டம். பால் சகல சத்துக்களும் அடங்கிய ஒரு பூரண உணவு, சர்வரோக நிவாரணி நோய் எதிர்ப்பு சக்தியுடன் எண்ணிறந்த சத்துக்கள் ஒளடதங்கள் அதில் தாராளமாக பொதிந்துள்ளன.

காலாதி காலமாக ஜீவராசிகளின் உணவுகளில் முக்கிய இடத்தை வகித்து வரும் பால் உண்மையில் அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடை. தாய்ப் பால், ஒட்டகப் பால், மாட்டுப் பால், ஆட்டுப் பால் என வித்தியாசம் வித்தியசமான பால் வகைகளை மனிதப் பயன்பாட்டின் பொருட்டு வல்ல அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான்.

பாலை தேவைகளுக்கேற்ப மனிதர்கள் தேடி அலைந்து விலையைப் பொருட்படுத்தாது வாங்கி அருந்தி திருப்தியுறுகின்றனர். இது பாலின் விலைமதிக்க முடியாத மகிமையை உணர்ந்ததனாலாகும்.

மனிதனுக்கு பல்வகை, பல்சுவை உணவுகளை ஏற்பாடு செய்த அல்லாஹ் பாலை ஒரு வித்தியாசமான பண்டமாக ஆக்கியுள்ளான். அது ஒரு போதுமான உணவு. எல்லா உணவுகளுக்குப் பின்னரும் பொதுவான துஆவை ஓதுபவர்களாகவிருந்த ரஸ¤ல் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பால் குடித்த பின் தனியான துஆவொன்றை ஓதும் வழக்கமுள்ளவர்களாக இருந்தமை இப்பின்னணியில் தான்.

“நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: எவருக்கு அல்லாஹ் உணவை உண்ணக் கொடுத்தானோ அவர் ‘அல்லாஹ்வே! எமக்கு இதில் பரக்கத் செய்வாயாக! மேலும் இதை விட சிறந்ததை எமக்கு அளிப்பாயாக!’ எனக் கூறவும்.

மேலும் எவருக்கு அல்லாஹ் பாலை குடிக்கக் கொடுத்தானோ அவர் ‘அல்லாஹ்வே! எமக்கு இதில் பரக்கத் செய்வாயாக! மேலும் எமக்கு இதிலிருந்து அதிகப்படுத்தித் தருவாயாக!’ எனக் கூறவும், ஏனெனில் பாலைத் தவிர உணவு, பானத்தில் போதுமானதாக இருக்கக்கூடியதை நானறியேன்.” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா), நூல் : ஸ¥னன் இப்னி மாஜஹ்)

நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாலருந்தினார்கள். பால் குடிப்பதை ஊக்குவித்தார்கள். ‘பசுப் பாலைப் பற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் அது எல்லா மரங்களிலிருந்தும் உண்ணுகிறது’ என்றார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹ்) நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்). ‘பசுப் பாலில் அனைத்து வியாதிகளுக்கும் குணப்படுத்துதலுண்டு’ என்றும் நவின்றார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியல்லாஹு அன்ஹ்), நூல் : முஸ்தத்ரக் அல்-ஹாகிம்)

பால் வெண்மையான, தூய்மையான, மதுரமான பானம். அதற்கு நிகர் அது தான். தொன்றுதொட்டு தூய்மையின் அடையாளமாக வும் வெண்மைக்கு உதாரணமாகவும் பால் விளங்குகின்றமை குறிப்பிடத் தக்கது. ‘பாலை விட வெண்மையானது’ ‘பால் போன்ற உள்ளம்’ ஆகிய சொற் றொடர்கள் வாழையடிவாழை யாக பிரயோகத்தில் இருந்து வருவது இதற்கு சான்று. மிஃராஜின் போது பாலும் மதுவும் அன்னல் நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது அவர்கள் பாலைத் தெரிவு செய்தார்கள். அவ்வேளை ‘நீர் இயற்கைக்கு வழிகாட்டப்பட்டீர்’ என அன்னலாரிடம் சொல்லப்பட்டது. நேர்வழியைச் சுட்டுவதற்கு அல்லாஹ் இங்கே பாலைத் தெரிவு செய்துள்ளான்.

ஏகப்பட்ட அற்புதமான குணங்களை தன்னகத்தே சுமந்துள்ள பாலை மனிதனுக்கு வழங்குவதற்காக அதனை கால்நடைகளின் வயிறுகளுக் குள்ளிருந்து அல்லாஹ் எப்படி வெளிக்கொணர்கிறான் என்பதை பின்வரும் அல்-குர்ஆன் வசனத்தில் காணலாம்.

“நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகைகளில் உங்களுக்கு படிப்பினை உண்டு. கலப்பற்ற, குடிப்பவர்களுக்கு இன்பகரமான பாலை சாணத்துக்கும் இரத்தத்துக்கும் மத்தியிலிருந்து அவற்றின் வயிறுகளிலுள்ளதிலிருந்து நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்.” (16 : 66)

சாணத்துக்கும் குருதிக்கும் இடையிலிருந்து பால் வெளிவந்த போதிலும் சற்றும் கூட அதில் சாணம், உதிரம் ஆகியவற்றின் நிறமோ, மணமோ, சுவையோ இருப்பதில்லை. இது எல்லாம் வல்லவனின் ஆச்சரியமான ஏற்பாடு.

பாலின் மகிமை, முக்கியத்துவம், அவசியம் பற்றி சமகால உலகு என்ன தான் தெரிந்து வைத்துள்ள போதிலும் அது பற்றி கூரை மேலேறி கொக்கரித்த போதிலும் தூய பால் இன்று மக்களுக்கு கிடைப்பது அரிது என விவசாய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கால்நடைகளுக்கு ஹோர்மோன் ஊசி ஏற்றி செயற்கை வழியூடாக பால் பெறுகின்ற சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தீய விளைவு இது.

ஹோர்மோன் ஊசியில் உள்ளடங்கியுள்ளவை கால்நடைகளுக்குள் சென்று பாலுடன் வெளிவந்து பாலை அருந்துபவர்களுக்கு பாதிப்பை உண்டுபண்ணுகிறது. சினையுற்று பால் தர வேண்டிய கால்நடைகள் குட்டி ஈனாது தமது குருதியை, கல்சியத்தை அளவுக்கதிகமாக பால் மூலம் வெளியேற்றுவதால் குறுகிய காலத்திலேயே நலிவுற்று போவதுடன் பால் சுரப்பும் குன்றிப் போகின்றது. அவற்றின் மடிக் காம்புகள் கூட நோயுறுகின்றன. குறுகிய காலத்தில் நிறையப் பணம்பண்ண வேண்டுமென்ற பேராசை அவனியை இப்பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளது.

நமக்கு முன்னிருந்தோர் நோய் நொடி குறைவாக காணப்பட்டதற்கான காரணம் அவர்கள் உட்கொண்ட உணவுப் பண்டங்கள் நச்சுத்தன்மையற்றிருந்மை என இன்று பரவலாக நம்பப்படுகிறது, பேசப்படுகிறது. தூய பால் பருகி உடல் சுகத்தை, பலத்தை அவர்கள் உறுதி செய்தனர்.

கறப்பு கொஞ்சமாக இருந்தாலும் தரமான பால் கொஞ்சம் பருகினாலும் நலம் நலமேதான்.

கைத்தொழில் புரட்சிக்கு முன்னிருந்த ஆரோக்கியமான கலப்பற்ற பால் அருந்தும் நிலை நமக்கு மீண்டும் வரவேண்டும்.

ஆரோக்கியமான வெண்மைப் புரட்சி தோன்ற வேண்டும். கால்நடைகளின் நலன் உரிய முறையில் பேணப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் திட்டங்கள் வரைந்து காரியமாற்ற வேண்டும். இது இன்றைய தேவை.

நன்றி: இஸ்லாமிய அழைப்பு உலகம்