Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2012
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,129 முறை படிக்கப்பட்டுள்ளது!

சூப்பர் வுமன் சின்ரோம்!

வீடு, அலுவலகம் இரண்டு இடங்களிலும் வேலை பார்க்கும் பெரும்பாலான பெண்களுக்கு, சூப்பர் வுமன் பிரச்னை உள்ளது. பெண்களில் சிலர் தான் மனதில் முடிவு செய்திருக்கும் லட்சியத்தை அடைவதற்காக போதுமான தூக்கம், சத்துணவு இல்லாமல் கடுமையாக உழைப்பவர்கள். இன்னொரு பிரிவினர் அடுத்தவர் செய்தால் நன்றாக இருக்காது. தான் செய்தால் மட்டுமே பர்பெக்டாக இருக்கும் என்ற எண்ணத்தில் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவர்கள்.

இன்னும் சிலர் மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்பதற்காக எல்லா வேலைகளையும் தானே பார்ப்பது. இது மாதிரியான பெண்களில் பெரும்பாலானவர்கள் உடல் நலம் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. உணவில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து வேலை செய்பவர்களுக்கு போதுமான சத்தின்மையால் உடல் சோர்வு ஏற்படும். மேலும் இரும்புச் சத்து குறைபாடு போன்ற பிரச்னைகள் வரும். தானே இழுத்துப் போட்டுக் கொண்டு வேலைகளைச் செய்வதால் அதை யாராவது குறை கூறி விட்டால் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.

மேலும் உழைப்பை யாராவது பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இவர்களுக்கு இருக்கும். சின்னச் சின்ன ஏமாற்றங்கள் கூட இவர்களிடம் பெரிய பாதிப்புகளை உருவாக்கும். எல்லா வேலையும் பர்பெக்டாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மற்றவர்களது வேலையில் திருப்தியின்றி ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்பார்கள். இதன் மூலமும் மன அழுத்தத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படும். இவர்கள் உடல் நலத்தை முதல் இடத்திலும், வேலைகளை இரண்டாவது இடத்திலும் வைக்க வேண்டும். நேரத்தை சரியாக பிரித்து பயன்படுத்த வேண்டும்.

வேலையை பகிர்ந்து கொடுத்து ரிலாக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இவர்கள் மன அழுத்தம் அல்லது பதற்றம் ஏற்பட்டால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம் சரி செய்து கொள்ளலாம் என்கிறார் மனநல மருத்துவ நிபுணர் செல்வமணி தினகரன்.

பாதுகாப்பு முறை

இந்தப் பிரச்னை சமாளிக்க ஆலோசனை தருகிறார் உளவியல் நிபுணர் தேவிப்பிரியா.. இப்போதைய லைப் ஸ்டைலை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல்நலம், வேலை இரண்டும் முக்கியம்.

வேலைக்கு இடையில் ரிலாக்ஸ் செய்வதற்கு பிடித்த பொழுது போக்கை சேர்த்துக் கொள்ளலாம். குறைவாக சாப்பிட்டாலும் முழுமையான சத்து இருக்கும்படி உணவை மாற்றுவது அவசியம். வீடு, அலுவலகம் இரண்டு இடத்திலும் இருக்கும் பிரச்னைகளை எளிதில் சமாளிக்கும் உக்தியை தனது மனநிலைக்கு தகுந்தபடி உருவாக்க வேண்டும். இது அனுபவத்தில் அல்லது ஆலோசனை பெறுவதன் மூலம் சாத்தியம் ஆகும். தன்னைச் சுற்றியிருக்கும் நெருக்கடிகளைக் குறைத்துக் கொள்வதன் மூலம் ரிலாக்ஸ் ஆகலாம்.

தனது வேலையை பகிர்ந்து கொடுப்பதன் மூலம் டென்ஷனை குறைத்து கொள்ளலாம். பெண்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தனது பிரச்னைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களும் உதவ வாய்ப்புள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலைகளை எளிதாக்கிக் கொள்ளலாம். தனது உடல் நலத்தையும், மனநலத்தையும் பாதிக்காத வகையில் வேலைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு லட்சியங்களை எளிதில் அடையலாம்.

வாரம் அல்லது மாதத்தில் ஒருநாள் தனக்கு பிடித்த ஒரு விஷயத்தை மேற்கொள்வது. அது சினிமா, சுற்றுலா அல்லது தூங்குவதாகக் கூட இருக்கலாம். இதன் மூலம் டென்ஷனை குறைத்துக் கொள்ளலாம். பெண்கள் மனநிலையை மாற்றிக் கொள்வதன் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

ரெசிபி

கருவேப்பிலை சாதம்: கருவேப்பிலை ஒரு கப், தேங்காய்த்துருவல் அரை கப் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். சாதத்தை தனியாக உப்பு போட்டு வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு கடுகு, பெரிய வெங்காயம் நறுக்கியது, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த கருவேப்பிலை, தேங்காய் துருவலையும் எண்ணெயில் போட்டு நன்றாக வதக்கவும். இதில் ஏற்கனவே வேக வைத்த சாதத்தைக் கொட்டிக் கிளறினால் கருவேப்பிலை சாதம் ரெடி. இதில் இரும்புச் சத்து, நார்ச்சத்து உள்ளது.

பலாக்காய் குழம்பு: சிறிய பலாக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் தக்காளியை தனியாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்து கொள்ளவும். தேங்காய்த் துருவலில் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு ஒரு பெரிய வெங்காயம் கட் செய்து வதக்கிக் கொள்ளவும். கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். பின்னர் அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி விழுதுடன் தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தூள் போட்டு பலாக்காய் சேர்த்து வேக விடவும். இறுதியில் தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கவும். இது உடலுக்கு குளிர்ச்சியானது.

உருளைக் கிழங்கு தோசை: உருளைக் கிழங்கை வேக வைத்து உரித்துக் கொள்ளவும். புளிக்காத தயிர் ஒரு கப், மைதா அல்லது கான்பிளவர் மாவு ஒரு கப், அரிசி மாவு ஒரு கப், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கை பொடியாக மசித்துக் கொள்ளவும். இத்துடன் தயிர் மற்றும் மாவு வகைகள் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு அடை பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். இதில் கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தோசைக்கல்லில் வார்த்து சாப்பிடலாம்.

டயட்

இத்தகைய ‘சூப்பர் வுமன்’ பெண்கள் தங்களது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம்? சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா, ‘‘வேலை டென்ஷனில் பெண்கள் பெரும்பாலும் காலை உணவு சாப்பிடுவதில்லை. மதியம் குறைவாக சாப்பிடுவது, இரவு எல்லா வேலையும் முடிந்த பின் சாப்பிட வேண்டும் என மூன்று நேரமும் உணவின் மீது வெறுப்பைக் காட்டுவதால் இவர்களது உடலுக்கு போதுமான சத்து கிடைப்பதில்லை. வேலையை டென்ஷனாகவே பார்க்கும் சில பெண்கள் டென்ஷன் அதிகரிக்கும் போதெல்லாம் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதால், உடல் எடை அதிகரிப்பு பிரச்னைக்கு ஆளாகின்றனர்.

இவர்கள் வேலைக்கு இடையில் தினமும் ஒரு பழச்சாறு சாப்பிட வேண்டியது அவசியம். ஒற்றைக் காயில் பொரியல் செய்வதற்கு பதிலாக பல காய்களைக் கொண்ட கூட்டு, பொரியல் அல்லது சாதம் எடுத்துக் கொள்ளலாம். காலையில் சாப்பிட நேரமில்லை எனில் ஒரு டம்ளர் பால் மற்றும் ஒரு ஆம்லெட் கூட போதுமான எனர்ஜி தரும். இருக்கும் நேரத்தில் சத்தான உணவை எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

மதியம் முழு சத்தும் அடங்கிய வெரைட்டி ரைஸ் தயாரித்துக் கொள்ளலாம். இரவு கட்டாயம் ஒரு வாழைப்பழம் சேர்ப்பது நல்லது. முறையாக உணவு எடுத்துக் கொள்ளும் போது ரத்தசோகை மற்றும் சத்துக் குறைபாட்டினால் சோர்வு மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. கொழுப்பு உணவுகள் தவிர்த்து பயறு, காய்கறி, கீரை வகைகள் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

பாட்டி வைத்தியம்

 • சீரகம், ஓமம் இரண்டும் சம அளவில் சேர்த்த தண்ணீரில் குளித்தால் இரவில் டென்ஷன் நீங்கி தூக்கம் நன்றாக வரும்.
 • டென்ஷனால் உருவாகும் தலைவலியை விரட்ட சுக்கை தண்ணீர் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடவும்.
 • சுக்கு, கொத்தமல்லி இரண்டையும் பொடி செய்து பாலில் கலந்து குடிப்பதன் மூலம் உடலில் தேவையற்ற சதை சேர்வதைத் தடுக்கலாம்.
 • சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் ரத்தசோகை பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
 • செலரிக் கீரையுடன் திப்பிலி சேர்த்து அரைத்து சாப்பிடுவதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும். மறதியால் ஏற்படும் டென்ஷனைக் தவிர்க்கலாம்.
 • சுத்தம் செய்யப்பட்ட சோற்றுக் கற்றாழை சாறை அதிகாலையில் தினமும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றில் இருந்து தப்பிக்கலாம்.
 • டர்னிப் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
 • துளசிச் சாற்றில் தேன் கலந்து குடிப்பதன் மூலம் உடல் எடை கூடுவதைத் தவிர்க்கலாம்.
 • முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தம் அதிகம் ஊறும்.
 • அதிகாலையில் வல்லாரைக்கீரையை மென்று தின்று விட்டு அடுத்த நான்கு மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால் அனைத்து வகையான மனநோய்களும் விலகும்.
 • வில்வமரத்தின் வேர்ப்பட்டையை பொடி செய்து தினமும் பாலில் கலந்து சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.

நன்றி் அமானுஷ்யம்