Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2012
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,476 முறை படிக்கப்பட்டுள்ளது!

எதிர்காலத்தில் என்ன படிக்கலாம்?

”ப்ளஸ் டூ முடிச்சாச்சு… அடுத்து?” என்ற கேள்விக்கு நம்மவர்களுக்கு அதிக சாய்ஸ்கள் யோசிக்கக்கூடத் தெரியாது. எம்.பி.பி.எஸ்., பி.இ., பி.காம்., என கல் தோன்றி கல்லூரி தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய படிப்புகளை மட்டுமே இன்னமும் டிக் அடிக் கிற பழக்கம் பலருக்கு!

இன்று உலகம் திமிறிக்கொண்டு பயணிக்கும் வேகத்துக்கு பலப்பல தளங்களில் பயிற்சிபெற்ற இளைஞர்களின் தேவை லட்சங்களில் துடிக்கி றது. தகுதியானவர்களோ சில ஆயிரங்களில்தான் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறார்கள். அதே சமயம், பழகிய படிப்புகளை லட்சக்கணக்கா னோர் படித்து முடித்து ஆயிரங்களில் மிஞ்சி யிருக்கும் வேலைவாய்ப்புகளுக்கு முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். ‘ரிசஷன்’ என்ற ஒற்றை வார்த்தை பல லட்சம் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களின் வாழ்க்கையையே தற்காலி கமாகத் தள்ளாட்டத்தில் ஆழ்த்திச் சென்றிருக் கிறது. ஐ.ஏ.எஸ், டாக்டர், இன்ஜினீயர் பணிக ளுக்கு மட்டும்தான் இந்தச் சமூகத்தில் கௌரவ அந்தஸ்து வழங்கப்படும் என்று எந்தச் சட்டமும் இல்லை. நமக்குள் ஒளிந்திருக்கும் இயல்பான திறமையை வெளிப்படுத்தும் பணி மூலம் நமது வாழ்க்கை முறையை நிர்ணயித் துக்கொள்ளும் எந்த வேலையும் கௌரவமா னதே!” என்கிறார் கெம்பா மனிதவளப் பள்ளி யின் இயக்குநர் ஆர்.கார்த்திகேயன்.

”நான் 1982-ம் வருடம் வேண்டி விரும்பி சைக்காலஜி படித்தவன். அப்போது வேறு எந்த பாடப் பிரிவிலும் இடம் கிடைக்காதவர்கள்தான் சைக்காலஜி படிக்க வந்தார்கள். ‘சைக்காலஜி படித்தால் அதிகபட்சம் பிஹெச்.டி., முடித்துப் பேராசிரியர் ஆகலாம். சம்பாதிக்கவெல்லாம் முடியாது!’ என்று என்னைப் பயமுறுத்தினார்கள். ஆனால், நம்புவீர்களா… இன்று எனது ஒரு நாள் சம்பளம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய். காரணம், இன்றைய உலகமயச்சூழலில் கவுன்சலிங், ஆலோ சனை, நேர்முகத் தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் என சைக்காலஜிஸ்ட்டுகளின் தேவை அபாரமாக அதிகரித்திருக்கிறது. தான் படிக்க முடியாத படிப்பு களைத் தங்கள் குழந்தைகளைப் படிக்கவைக்க நினைக்கும் பெற்றோர்களின் மனப்போக்குதான் இந்த நிலைக்குக் காரணம். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எம்.பி.பி.எஸ்., பி.காம்., பி.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகள்தான். உலகம் இன்னும் பெரியது என்பதை மாணவர்களைக் காட்டிலும் பெற்றோர்கள் உணர வேண்டும்!” என்கிறார் கார்த்திகேயன்.

நமக்குத் தெரிந்த ‘பாரம்பரிய’ப் படிப்புகளைத் தவிர்த்து, ஃபீஸ் என்று கையைக் கடிக்காமலும், நிச்சய வேலைக்கு உத்தரவாதமும் தரும் சில படிப்புகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாமா?

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு லட்சம்!

ராகவன் ப்ளஸ் டூவில் 80 சதவிகித மதிப்பெண்கள். வீட்டில் மேற்கொண்டு படிக்கவைக்க வசதி இல்லை. ‘மிகக் குறைந்த செலவில் ஏதாவது படிக்க வேண்டும். வேலை கிடைக்க வேண்டும். கை நிறையச் சம்பளம் வேண்டும்’ என்பது ராகவன் எண்ணம். ‘இத்தனையும் ஒண்ணா நடக்க வாய்ப்பில்லை!’ என்றுதானே நீங்கள் நினைப்பீர்கள். ஆனால், அதுதான் இல்லை. சும்மா இருக்கப் பிடிக்காத ராகவன், பகுதி நேரமாக ஆறு மாதம் ஜெர்மன் மொழி படித்தார். மொழி கற்கச் சென்ற இடத்தில் கிடைத்த தொடர்புகள் மூலம், ஒரு ஜெர்மன் நாட்டு நிறுவனத்துக்காக தமிழகத்தில் சில பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத் தது. மூன்று மாத வேலை. கை மட்டுமல்ல… பை நிறையச் சம்பளம். அங்கு கிடைத்த தொடர்புகள் மூலம் தொடர்ந்து ஜெர்மன் மொழியறிவு ராகவனுக்கு வேலை கொடுத்தது. சுதாரித்த ராகவன், அடுத்தடுத்து பிரெஞ்ச், இத்தாலி எனப் பல சுலபமான மொழிகளைக் கற்றுக்கொண்டார். இன்று ராகவனுக்குச் சுமார் 20 மொழிகள் தெரியும். இப்போது ராகவன் பல மொழி களைப் பயிற்றுவிக்கும் ஒரு நிறுவனத்தின் நிறுவனர். சர்வதேசக் கருத்தரங்குகளில் மொழிபெயர்ப்புகள், கல்லூரிகளில் மொழியியல் சிறப்பு வருகைப் பேராசிரியர் என அவருடைய சம்பளம் இன்று மாதத் துக்குச் சில லகரங்களில்!

ஒவ்வொரு நாட்டின் தூதரகமும் அவர்களின் தாய் மொழியை வார இறுதி அல்லது மாலை நேர வகுப்பு களில் கற்றுக்கொடுக்கிறார்கள். மூன்று அல்லது ஆறு மாத கோர்சுகளுக்குச் சில ஆயிரங்கள்தான் கட்டணம். புதிய மொழியை அறிந்துகொள்ளும் ஆர்வமும், புதிய கலாசாரங்களை ஆய்வு செய்யும் ஆர்வமும் உள்ள எவரும் தங்களுக்கு விருப்பமான எந்த மொழியையும் படிக்கலாம். போட்டிகள் மெலிந்த வளமான வருமானம் தரும் துறை இது.

கட்டுமான மேலாண்மை (Construction Management)

எம்.பி.ஏ., படிப்பில் இது புதுசு. உலகமே கான்க்ரீட் காடாக உருமாறும் சூழல் இது. பாலங்களைக் கட்டுதல், சாலைகள் அமைத்தல் போன்ற செயல்களை மேலாண்மை செய்யக் கற்றுக்கொடுக்கும் படிப்பு இது. ‘பொறியியல் படித்தவர்கள் அந்தப் பணிகளைத்தானே செய்கிறார்கள்!’ என்கிறீர்களா? இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு வேலையே அந்தப் பொறியியல் வல்லுநர்களை நிர்வ கிப்பதுதான். மேலாண்மைப் பாடங்களோடு அடிப்படை யான கட்டுமானப் பொறியியல் பாடங்களும் கற்றுத்தரப் படுவதால், இவர்களால் சிறந்த மேனேஜர்களாகவும், இன்ஜினீயர்களாகவும் செயல்பட முடியும். சென்னை ஐ.ஐ.டி. சிவில் இன்ஜினீயரிங் துறையில் இப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. எம்.பி.ஏ., படிப்புக்கு ஆகும் செலவு தான் இந்தப் படிப்புக்கும் ஆகும். இத் துறையில் அடுத்த கட்ட ஒளிமயமாக ‘ரியல் எஸ்டேட் மேலாண்மை’ படிப்பு தென்படுகிறது.

ஸ்பெஷல் எஜுகேஷன்!

பார்வையற்றவர்கள், செவித்திறன் பாதிப்படைந்தோர், வாய் பேச முடியாதோர் போன்ற மாற்றுத்திறன் உடைய மாணவர்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பாடம் சொல்லித்தரக் கற்றுத்தரும் படிப்புதான் இந்த ‘சிறப்புக் கல்வி’. பொதுவாக, இன்றைய இளைஞர்கள் ஆசிரியர், பேராசிரியர் பணிகளைப் பெரும்பாலும் தேர்வு செய்வதில்லை. அதிலும், இந்த சிறப்புக் கல்வித் துறையைத் தேர்ந்தெடுப்பவர்கள் ரொம்பவே குறைவு. அதனால், இங்கு தேவை அதிகம். போட்டி குறைவு. நீங்கள் எதிர்பார்க்காத சம்பளமும் உண்டு. கொஞ்சம் பொறுமையும், கற்றுத்தருவதிலும், கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்தக் களம் சிவப்புக் கம்பளம். Rehabilitation council of India என்னும் ஊனமுற்றவர்களுக்கான மத்திய அரசு நிறுவனம் இந்தப் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. கோவையில் ராமகிருஷ்ணா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் இந்தப் படிப்பைப் படிக்கலாம். Bachelor of visual impairment, Bachelor of Hearing impairment என்று பல்வேறு பாடப் பிரிவுகளும் உண்டு.

சைபர் லா படி… சம்பளக் கவரைப் பிடி!

பட்டப்படிப்பை மெரிட்டில் முடித்தாலும் வேலை கிடைக்காத பல ஜீனியஸ்கள் ‘ஹை-டெக் திருடர்’களாகத் தொழில்நுட்பத்தைக் கைக்குள் வைத்துக்கொள்ளும் காலம் இது. ஓர் அறைக்குள் ஒற்றை கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு, கிரெடிட் கார்டு மோசடி முதல் வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்வது வரை ‘உன்னைப்போல் ஒருவன்’கள் பல்கிப் பெருகிவிட்டார்கள். அவர் களுக்கெல்லாம் ஆப்படிக்கக் கற்றுக்கொடுக்கும் படிப்பு இந்த ‘சைபர் லா’!

‘எத்திக்கல் ஹேக்கிங்’ (Ethical Hacking) மூலம் பல சைபர் குற்றவாளிகளைப் பிடிக்கவும், குற் றங்களைத் தடுக்கவும் இப் படிப்பில் கற்றுத்தரப் படுகிறது. கணினிக் கல்வியோடு இந்தப் படிப் பையும் நீங்கள் முடித்தால், உங்களுக்குக் கிடைக்கும் மரியாதை டபுளாக இருக்கும். கூடவே, ‘அறிவுசார் சொத்துரிமை’பற்றியும் நீங்கள் அறிந்திருந்தால், அதற்கென்று தனிச் சம்பளம் அளிக்கக்கூடிய நிறுவனங்களும் ஏகமாக இருக்கின்றன. சட்டப் பல்கலைக்கழகங் களில் முதுநிலைப் பட்டயப் படிப்புகளாக சைபர் லா கற்றுத்தரப்படுகிறது.

ஒருங்கிணைந்த படிப்புகள்!

ப்ளஸ் டூ முடித்தவுடன் ஒரே ஜம்ப்பில் எம்.ஏ., எம்.எஸ்ஸி., அல்லது எம்.டெக்., போன்ற பட்டங்களைப் படிக்க விரும்புபவர்களுக்குக் கை கொடுக்கிறது ‘இன்டெகரேட்டட் கோர்ஸ்’ எனப்படும் ஒருங்கிணைந்த படிப்புகள். ஐந் தாண்டு காலப் பட்ட மேற்படிப்புகள் இவை. ஆனால், இப்போதைக்கு சாஃப்ட்வேர் இன்ஜி னீயரிங், எலெக்ட்ரானிக் மீடியா, ஆங்கிலம், பொருளாதாரம், டெவலப்மென்ட் ஸ்டடீஸ் போன்ற ஒரு சில பாடப் பிரிவுகள் மட்டுமே ஒருங்கிணைந்த பாடங்களாகக் கற்றுத்தரப்படு கின்றன. ‘மெடிக்கல் டூரிஸம்’, ‘சுற்றுலா மேலாண்மை’ போன்ற பாடங்களும் சில பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த படிப்புகளாகக் கற்பிக்கப்படுகின்றன. வருங்காலத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேவைகள் உள்ள துறை இது.

கொஞ்சம் அதிகம் செலவு பிடிக்கும் படிப்பென் றாலும், பிரகாசமான வேலைவாய்ப்பு அளிக்கும் படிப்புகள் இவை. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட சிறந்த கல்லூரிகளில்தான் இப்படிப்புகளைப் படிக்க வேண்டும். வங்கிகளின் கல்விக் கடன் உதவிகளோடு கட்டணங்களையும் சமாளிக்கலாம்.

இ.ஆர்.பி. (ERP)

பொதுவாக, தொழில் நிறுவனங்களில் உற்பத்தித் துறை, மனித வளத் துறை, மார்க்கெட்டிங் என்று பல பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 10 பேராவது பணிபுரிவார்கள். ஆனால், அந்த 10 நபர்களின் வேலையைக் குறைத்து ஒரே ஆளே திறமையோடு பணிபுரிவது எப்படி என்பதைக் கற்றுத்தருவதுதான் ‘என்டர் பிரைஸ் ரிசோர்ஸ் பிளானிங்’ (Enterprise Resource Planning) படிப்பு. இந்தப் படிப்புகள் காஸ்ட்லிதான். குறைந்தது ஐந்து லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். ஆனால், சிறந்த கல்வி நிறுவனத்தில் படித்துத் தேர்ச்சி பெற்றால், முதல் மாதச் சம்பளமேகுறைந்த பட்சம் 80 ஆயிரம் ரூபாய்! இப் படிப்பு முடித்த வர்களுக்கு ‘மோஸ்ட் வான்டட்’ தேவை இருப்பதால், படித்து முடித்த அடுத்த நொடியே வேலை கன்ஃபர்ம்!

கிளினிக்கல் ரிசர்ச்!

மருத்துவமனைகளில் பல ரத்த மாதிரிகள், திசுக் கள், செல்கள் போன்றவற்றை ஆய்வுக்காகப் பத்தி ரப்படுத்தியிருப்பார்கள். அவற்றின் தன்மை, பண்பு கள், ஜீன் வரலாறுகள் பற்றியெல்லாம் கணினியில் பதிவேற்றச் சொல்லித்தரும் படிப்பு. அது மட்டும் அல்லாமல், அறுவை சிகிச்சை அசம்பாவிதங்கள்பற்றித் தெரிந்துகொண்டு, அவற்றைச் சமாளிக்கச் சொல்லித் தரும், டாக்டர் படிப்புக்கு இணையான சங்கதிகளைக் கற்றுத் தரும் படிப்பு இது. சில சிறந்த மருத்துவமனைகள் தங்கள் சொந்தச் செலவில் இப் படிப்புகளைக் கற்றுத் தருகின்றன. புதுடெல்லியில் உள்ள Institute of clinical research India நிறுவனத்தில் இந்தப் படிப்பு உண்டு. அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் பி.எஸ்ஸி., முடித்தவர்களுக்கு ஒரு வருடப் படிப்பாகவும் சொல்லித் தரப்படுகிறது!

மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்!

”இன்று சுற்றுச்சூழல், மனித உரிமைகள், குழந்தைத் தொழிலாளர் பிரச்னைகள், பெண் சிசுக் கொலைகள் போன்ற சமூகப் பிரச்னைகள் குறித்த கவனங்கள் அதிகரித்திருக்கின்றன. இது குறித்த சமூகப் பிரச்னைகள் மற்றும் களப் பணிகள் குறித்து சொல்லித்தரும் படிப்பே மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இப் படிப்பை முடித்தவர்க ளுக்கு நல்ல சம்பளம் உண்டு. பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் இந்தப் பாடப் பிரிவு உண்டு என்றாலும், இதைத் தேர்ந்தெடுக்கிறவர்கள் குறைவு. எனவே, போட்டிகளும் குறைவு.

இப்படிப் பல துறைகளிலும் எண்ணற்ற பாடப் பிரிவுகள் இருந்தாலும், அவையெல்லாம் முறையாக அங்கீகரிக்கப்பட்டவைதானா, கல்வி நிறுவனங்கள் உரிய அங்கீகாரம் பெற்றவையா என்பதைக் கவனத்தில் கொண்டே இறுதி முடிவெடுக்க வேண்டும்!” என்கிறார் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கின் முதல்வர் ஃபாத்திமா வசந்த்.

”நீங்கள் எந்தப் படிப்பு படித்தாலும் அதை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. எம்.பி.ஏ., முடித்த மணிரத்னம் தொழில் நிறுவன வேலைக்குச் செல்லவில்லை. ஆனால், சினிமாவை கார்ப்பரேட் கண்ணோட்டத்தோடு அணுகி, வெற்றிகர மான வியாபாரமாக்கியதில் எம்.பி.ஏ., கைகொடுத் திருக்கலாம். நம்மூரில் எதற்குமே லாயக்கற்றவர்கள்தான் பி.ஏ., வரலாறு படிப்பார்கள் என்று ஒரு தவறான கருத்து இருக்கிறது. ஆனால், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாறு முடித்த மாணவர்கள்தான், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அதிகம் வெற்றியடை கிறார்கள்!” என்று முடிக்கிறார் ஃபாத்திமா வசந்த்.

‘என்னப்பா, எதுவுமே கேள்விப்பட்ட மாதிரி இல்லையே! இதையெல்லாம் நம்பி எப்படி..?’ என்று தயங்குகிறீர்களா? சுமார் 45 வருடங்களுக்கு முன் நாகவரா ராமாராவ் நாராயணமூர்த்தி இன்ஜினீயரிங் படிப்பைத் தேர்ந் தெடுத்தபோதும், அவரது பெற்றோர்களுக்கு இதே கவலைதான். ஆனால், இன்று ‘இன்ஃபோசிஸ்’ நிறுவனத் தின் நிறுவனராக என்.ஆர்.நாராயணமூர்த்தி இந்தியா வின் அறிவுசார் அடையாளங்களில் ஒருவர். தமது வாரிசுகளுக்குள் ஒளிந்திருக்கும் ‘நாராயணமூர்த்தி’ களை ஏன் பெற்றோர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள்? (ஆனால், 2010-லும் பொறியியல் களம் அதே வாய்ப்பு களோடு இருக்காது என்பதையும் கவனியுங்கள்!)

அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் துறை சார்ந்த படிப்புகள்

கார்ட்டூன் துறையில் ஆர்வமுள்ளவர்கள் NID Ahmedabad, J.J.School of Arts. IIT Mumbai – Guwahati போன்ற இடங்களில் டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளில் சேரலாம். டிப்ளமோ படிக்கக் குறைந்தது 12-ம் வகுப்பில் 45% மதிப்பெண்களும், இளங்கலை படிப்பிலும் அதே அளவு மதிப்பெண்களையும் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். இதில் முதுகலைப் படிப்பில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பு! மும்பை மற்றும் குவாஹத்தியில் மட்டும்தான் முதுகலைப் படிப்பு உண்டு!

ஸ்பேஸ் சயின்ஸ்

ஸ்பேஸ் சயின்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற ஆர்வமுள்ளோர், இதே துறை அல்லது இந்தத் துறை சம்பந்தமான வேறு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்போர் விண்ணப்பிக்கலாம். புனே பல்கலைக்கழகத்தில் மட்டுமே இந்தத் துறை சம்பந்தமான படிப்புகள் உள்ளன. பட்டயப் படிப்பும் குஜராத் மற்றும் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் மட்டும் உள்ளன!

உணவுத் தொழில்நுட்பம்

‘கெமிஸ்ட்ரி, மற்றும் பயோகெமிஸ்ட்ரி அல்லது வேளாண்மை முடித்த மாணவர்கள் முதுகலைப் படிப்பாக, food technology&-ஐத் தேர்ந்தெடுத்தால், உலகில் உள்ள பெரிய பெரிய உணவு உற்பத்தி சம்பந்தமான துறையில் வேலை உறுதி’ என்கிறது, மைசூர் உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம். உணவுகளின் கலோரியை அளவிடவும், உணவுத் தரத்தை அளவிடவும் கற்றுத்தருகிறது இந்தப் படிப்பு!

தடய அறிவியல்

தடய அறிவியல் துறையில் சேர விரும்புவோர் லக்னோ பல்கலைக்கழகம், சண்டிகர் மற்றும் கொல்கத்தாவில் உள்ள Central Forensic Science Laboratory ஆகியவற்றில் சேரலாம். எச்சில், முடி, கைரேகை போன்றவற்றை வைத்துக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவும் இத்துறையில் பயிற்சி பெற்றோருக்கு காவல் துறை, சட்டம், டிடெக்டிவ் ஏஜென்சீஸ் போன்ற இடங்களில் வேலைக்கு உத்தரவாதம்!

நன்றி: விகடன் – (ரீ.சிவக்குமார், ந.வினோத்குமார் –   இர.ப்ரீத்தி )