Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2012
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,314 முறை படிக்கப்பட்டுள்ளது!

ரியாலிட்டி ஷோ..?

இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில்,வெவ்வேறு பெயர்களில் வெளி வந்து கொண்டிருப்பது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனி மனித உறவுகளை சீர்குலைக்கும் நிகழ்ச்சிகள்..! தனிப்பட்ட மனிதர்களின் கண்ணீர்,துயரம்,ஆவேசம், என்று அவர்களின் அந்தரங்கத்தை கூறு போட்டு காசு பார்க்கும் சேனல்களின் கண்டுபிடிப்பு தான் இந்த ரியாலிட்டி ஷோக்கள்..!

மாமியார், மாமனார், மருமகன், மருமகள், அம்மா, பிள்ளை, பெண், நாத்தனார், மச்சினர், அண்ணன் மனைவி, தம்பி மனைவி,என ஒரு உறவு விடாமல் அனைவரையும் அழைத்து அவர்களை எதிர் எதிரே உட்கார வைத்து அவர்களின் குறைகளை கேட்கிறோம் என்ற பெயரில், தன் சேனலின் டி.ஆர்.பி ( டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் ) என்னும் வழிமுறையை அதிகப் படுத்த எல்லாவித முறையையும் கையாள ஒவ்வொரு சானலும் தயாராக இருக்கிறது..! இவர்களுக்கு சமுதாயத்தின் மீது எந்த பொறுப்போ, அக்கறையோ கிடையாது..! அவர்களின் நோக்கம் எல்லாம் வெறும் வர்த்தகம் மட்டுமே.

பொதுவாக குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால்  இரு தரப்பினரும் மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்னை சரியாகி விடும்..!  குடும்பத்தில் இருக்கும் வீட்டு பெரியவர்களும், சம்பந்தப்பட்டவர்களும், உட்கார்ந்து பேசி, எது சரி அல்லது எது தவறு என்று கலந்து ஆலோசிப்பது தான் சரியான வழி முறையாக இருக்கும்..! ஆனால் இதில் எந்த விதத்திலும் சம்பந்த படாத மூன்றாம் நபரின் தலையீடு குடும்ப விவகாரங்களை தீர்ப்பதற்கு எதற்கு என்பது தான் தெரிய வில்லை.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில், உறவுகளின் பிரச்சனையை சரி  செய்கிறோம் என்ற பெயரில் நடந்த  ஒரு ரியாலிட்டி ஷோவை பார்க்க நேரிட்டது…! கணவர்கள் ஒரு புறம், மனைவிகள் மறுபுறம், நிகழ்ச்சியை நடத்துபவர் என்ற பெயரில் ஒருவர்..! அவர் சானலில் வாங்கும் லட்சக்கணக்கான சம்பளத்திற்கு உண்மையாக உழைக்கும் விதத்தில் அவரின் கேள்விகள், இருதரப்பினரையும் தூண்டும் விதத்தில் இருந்தது…! அவர் அப்படி கேட்டால் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும், வாக்கு வாதங்கள் அனல் தெறிக்க நடக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும்…! அவர் எதிர் பார்ப்பதும் அது தான்.

அதில் ஒரு கேள்வி..! கணவனிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயம்..! அதே போல மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத விஷயம்..! என்று. சொல்லவா வேண்டும் இந்த கேள்விக்கு பதில்களை..! போட்டி போட்டு கொண்டு  சரமாரியாக கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் சொல்ல தகவல் உண்மையில் தூக்கிவாரிப் போட்டது..! இதை சொல்லி விட்டு பெரிய சாதனை செய்த மாதிரி பெரிய சிரிப்பு வேறு அந்த பெண்ணுக்கு..! அதை பார்த்ததும் யார் பெற்ற பிள்ளையோ ஆனால் கன்னத்தில் ஒன்று போடலாம் என்று தோன்றியதை தவிர்க்க முடிய வில்லை..!  தன் கணவரைப் பற்றிய மிக சென்சிடிவான விஷயம் குறித்து, அவ்வளவு எளிதாக யாருக்கும் வெளி தெரியாத, தெரிய வேண்டிய அவசியம் இல்லாத ஒரு தகவல் அவர் சொன்னது…! இந்த பதிலை அந்த கணவரும் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் என்பது அவரின் முகத்தைப் பார்த்தால் தெரிந்தது.

எது அந்த பெண்ணை இப்படி தன் கணவரின் ஒரு அந்தரங்கமான விஷயத்தை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் சொல்ல வைத்தது..? இதனால் அவர் அடைய போவதென்ன..? சொன்னதால் இவரின் பிரச்னை தீரப் போகிறதா..?  வீட்டில் கணவனும் மனைவியுமாக உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய ஒரு விஷயத்தை இப்படி பகீரங்கப் படுத்த வேண்டிய தேவை என்ன.? தன் முகம் தொலைக்காட்சியில் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த அளவு தன் தரத்தையும், தன் கணவனின் செயலையும் பறை சாற்ற வேண்டுமா ..?  இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் சேர்ந்து தானே இருக்க வேண்டும்..?  இந்த நிகழ்ச்சி அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காதா..?  முன் போல அந்த கணவரால் அந்த பெண்ணுடன் இயல்பாக இருக்க முடியுமா ..? இது போன்ற பல கேள்விகள் மனதில் எழுவதை தவிர்க்க முடிய வில்லை.

கணவன் மனைவி உறவு என்பது எவ்வளவு அழகான ஆழமான உறவு..! மற்ற எல்லா உறவிலும் மாற்று எவருடனும் ஒப்பீடு செய்ய முடியும்..! ஆனால் இந்த உறவை எந்த உறவோடும் ஒப்பிட முடியாதே..! கருத்து  வேறுபாடு இல்லாத கணவன் மனைவி யாரும் இங்கு உண்டா என்றால், கண்டிப்பாக  இருக்க முடியாது..! அப்படி இருப்பதற்கான சாத்தியமும் இல்லை என்பதே உண்மை…! இரு வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த, வாழ்ந்த இரு உயிர்கள் ஓருயிராக வாழ ஆரம்பிக்கும் போது தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது என்பது மிக இயல்பான ஒன்று..! ஆனால் அதை எல்லாம் தாண்டி சரியான புரிதலும், ஒருவரின் பால் ஒருவருக்கு இயல்பாகவே ஏற்படும் ஈர்ப்பும், நேசமும் இருந்து விட்டால் பிறகு எந்த வித பிரச்சனையும் அவர்களை ஒன்றும் செய்யாது.

அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (அல் – குரான்2:187)

இந்த ஒரு ஆழமான வசனத்தின் மூலமாகவே கணவன் மனைவி உறவு என்பது எப்படி பட்டது..! அது எப்படி இருக்க வேண்டும் என்பது நமக்கு உணர்த்தப் பட்டு இருக்கிறது..! ஆடை எப்படி நம் மானத்தை காக்கிறதோ அப்படி தான் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தன் துணையின் குறையை, அந்தரங்கத்தை,ர கசியத்தை, காக்க வேண்டியது கடமை ஆகும்…! நமக்கு  இயற்கையாக ஏற்படும் சில தேவைகளை, தேடல்களை ஹலாலான வழியில் பெற வேண்டும் என்றால் கணவன் மனைவி என்ற பந்ததால் மட்டுமே சாத்தியம்…! அது தான் இறை வகுத்த சட்டமும்.

குறை இல்லாத மனிதர் என்று இவ்வுலகில் யாரும் உண்டா..? அப்படி இது வரை யாரும் இருந்து  இருக்கிறார்களா..?  என்றால் அப்படி யாரும் இல்லை அப்படி யாரும் இருக்கவும் முடியாது ..! குறை, நிறை சேர்ந்தவன் தானே  மனிதன்..! . தன் துணையின் குறை பிடிக்க வில்லை என்றால் அதை மெதுவாக மாற்ற முயல்வது தானே புத்திசாலித்தனம்..! அந்தக் குறையும் நம் வாழ்க்கைக்கோ, மார்க்கத்திற்கோ,பங்கம் விளைவிக்கக் கூடிய வகையில் இல்லை என்றால் அதை அப்படியே மாற்ற முயலாமல் ஏற்றுக் கொள்வதே சரி.

இங்கு முழுதாக, ஆணை அறிந்த பெண்ணும் இல்லை..! பெண்ணை, அறிந்த ஆணும் இல்லை என்பதே உண்மை..! அறிந்து கொள்வதும் அவ்வளவு எளிது இல்லை..! தேவையும் இல்லை..!  இறையின் படைப்பு  அப்படி தான் படைக்க பட்டிருக்கிறது..! ஆணின் இயல்பு  தன்மை வேறு..! பெண்ணின் இயல்பு தன்மை என்பது வேறு..!  இதை அவரவர் இயல்பு படி சரியாக புரிந்து கொண்ட ஆணும் பெண்ணும் தான் வெற்றியாளர்கள்…! இந்த சரியான புரிதல் என்பது ஒருவர் அடுத்தவர் மீதான நேசத்தையும், மதிப்பையும், மரியாதையும் கொடுக்கிறது…! குறைகளை மன்னிக்க சொல்கிறது..!. இந்த ஒற்றுமையின் காரணமாக நல்ல அறிவான, பண்பான சந்ததிகளை கொடுக்க முடிகிறது.

இந்த மாதிரி ஷோக்களை பார்க்கும் போது..! பொதுவில் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள்  வெளியிடும் வார்த்தைகளில் பொருட்டு விளையும் பின் விளைவுகளை நினைக்கும் போது அவர்களின் மீது பரிதாபமே வருகிறது.

ஏற்கனவே உறவுகள் சிக்கலாகி கொண்டிருக்கும் காலம் இது…! உறவுகளின் எண்ணிக்கையும் சுருங்கி கொண்டு வருகிறது…!  இதில் இருக்கும் உறவுகளையும் இல்லாமல் பண்ணுவதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி கண்ணுக்கு தெரியாமல் அதை பற்ற வைக்கும் வேலையை தான் சானல்கள் செய்து கொண்டு இருக்கின்றன.

ஒரு மனிதன் என்பதற்கு உரிய  சரியான அர்த்தத்தோடு ஒருவன்  வாழ வேண்டும் என்றால் அவன் அங்கம் வகிக்கும் பாத்திரம் (மகன்,சகோதரன்,கணவன்,மாமா,மச்சான்,நண்பன்  …………………) என அவன் பொருப்பேற்றிருக்கும் ஒவ்வொரு  பாத்திரத்தின் சார்பாகவும் அவன் நம்பிக்கையாகவும், உண்மையானவனாகவும், நேர்மையானவனாகவும், நடுநிலை தவறாதவனாகவும் இருக்க வேண்டும்..!  அவன் இல்லாமல் போனாலும், அவனின் நினைவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு இனிமையான நினைவாக இருந்தது எனில் அது தான் அவன் இவ்வுலகத்தில் பெற்ற வெற்றி.

ஆனால் இந்த வெற்றி அவ்வளவு எளிதா என்றால் எளிதில்லை..!  இதற்கு தான் மறுமை குறித்தான சிந்தனை தேவை  படுகிறது..! அனைவரும் சொல்வது தான் நமது இறப்பு என்பது எப்போது வேணாலும்  வரும்..! அதனால நாம தயார் நிலையில இருக்கணும் என்று..! ஆனால் உண்மையில் அது ஆழ்மனதில் திடத்தோடு பதிவு செய்ய பட்டிருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்..!

அந்த உணர்வு எப்போதும் நம் சிந்தனையில் ஓடி கொண்டிருந்தால்..! நாம் அடுத்தவர்களை பார்க்கும் பார்வை வேறாக இருக்கும்..! எழுதி கொண்டிருக்கும் நான் இந்த பதிவை பதிவு செய்வது உறுதியில்லை என்ற நிலைப் பாட்டையும், எப்போது வேண்டுமானாலும் இறைவன் என் உயிரை கைப்பற்றுவான் என்றும் அப்படி அவன் கைப்பற்றி அவன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை நான் வைத்திருக்கேனா என்று உறுதியாக நம்பும் போது தான் சக மனிதர்களை அவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களை நேசிக்க சொல்கிறது..!  தன் தவறுகளையும் யார் சொன்னாலும் திருத்தி கொள்ள முடிகிறது..! உறவுகளையும்  கொண்டாட  சொல்கிறது.

விட்டு கொடுப்பவர் எப்போதும் கெட்டு போவதில்லை.

நன்றி: சகோதரி ஆயிஷா பேகம் – கையளவு உலகம்