அடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் நடந்து செல்கிறான். அப்போது இரை தேடி வந்த புலி ஒன்று அவனை பார்த்து விடுகிறது. உடனே அவனைத் துரத்துகிறது. பயந்து ஓட்டம் பிடித்த மனிதன், அங்கிருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக்கொள்கிறான்.
ஆனாலும், புலி அவனை விடுவதாக தெரியவில்லை. மரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. பயம் அதிகமான மனிதன் மரத்தின் கிளையை இறுக பற்றிக்கொள்கிறான்.
அப்போதுதான் தனக்கு பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்கிறான். அங்கே ஒரு கரடி இருக்கிறது. அதை பார்த்த மாத்திரத்தில் குலை நடுங்கிபோகிறான் மனிதன்.
தன்னை பார்த்து மிரண்ட மனிதன் மீது கரடிக்கு இரக்கம் பிறக்கிறது. `மனிதா… என்னை பார்த்து பயபடாதே. நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உயிருக்கு பயந்து மரத்தின் மீது ஏறும்போது என் காலை தொட்டுவிட்டாய். இதன் முலம் என்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளாய். எந்த நிலையிலும் நான் உன்னை கொல்ல மாட்டேன்` என்றது கரடி.
அப்பாடா… தலைக்கு வந்தது தலைபாகையோடு போயிற்று என்று பெரு முச்சுவிட்ட மனிதன் கீழே பார்த்தான். அங்கே புலி இடத்தைவிட்டு அகலுவதாக தெரியவில்லை. அது கரடியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தது.
`ஏ கரடியே! நீயும் மிருகம், நானும் மிருகம். அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி. ஒன்று… அவனை நீ சாப்பிடு. இல்லை… கீழே தள்ளிவிடு; நான் சாப்பிடுகிறேன்` என்றது புலி.
அதற்கு கரடி, `அவன் என்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளான். அவனை நான் காப்பாற்றியே தீருவேன்` என்றது.
சிறிதுநேரம் கழிந்தது. மனம் தளராத புலி அடுத்ததாக மனிதனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்தது.
`மனிதா! எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. எனக்கு எப்படிம் இரை வேண்டும். கீழே இறங்கினால் நிச்சயம் உன்னை கொன்று சாப்பிட்டு விடுவேன். ஆனால், உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் கூறுகிறேன்.
உன் அருகே உள்ள கரடி இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறது. அதை கீழே தள்ளி விட்டுவிடு. என் பசியும் தீரும். உயிர் பிழைத்துவிடலாம்` என்றது.
தான் மட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன், அருகே மரக்கிளையில் தூங்கிக்கொடிருந்த கரடியை பிடித்து கீழே தள்ளினான். ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக பிடித்துக்கொடு கீழே விழாமல் தப்பியது.
நடுநடுங்கிபோனான் மனிதன். அவன் கை, கால்கள் தானாக ஆட ஆரம்பித்தன. விட்டால், மரத்தில் இருந்து தானாகவே கீழே விழுந்துவிடுவான் போல் இருந்தது.
அப்போது கரடி நிதானமாகவே பேசியது. `பயப்படாதே. இப்போதுகூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாபப்படுகிறேனேத் தவிர, உன்னை பழிவாங்க நினைக்கவில்லை. இப்படிச் செய்யலாம் என்று நான் எண்ணினேன். அதனால், முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன்.
இபோதும்கூட நான் உன்னை கொல்ல மாட்டேன். புலியிடம் தள்ளியும் விட மாட்டேன். கவலைபடாதே…’ என்றது.
`தவறு செய்துவிட்டோமே…’என்று கண்ணீர் சிந்தினான் மனிதன்.
மிருகங்களிடம் இருக்கும் நற்பண்புகள் மனிதர்களிடம் இல்லை என்பதற்காக சொல்லபட்ட கதை இது.
பல மாமியார்-மருமகள் உறவிலும் இதே நிலைதான். மாமியார் என்றால் மருமகளை கொடுமைபடுத்துவாள், மருமகள் என்றால் மாமியாரை மதிக்க மாட்டாள்; மாறாக, கணவனை கைக்குள் போட்டுக்கொள்வாள் என்கிற எண்ணம்தான், இன்றைய மாமியார்கள், மருமகள்களின் முளையில் பதிவு செய்யபட்டு இருக்கிறது.
தவறாக பதிவு செய்யபட்ட அந்த கண்ணோட்டத்தில் ஒருவரையொருவர் அணுகுவதால் மாமியாரும், மருமகளும் எலியும், பூனையுமாக மாறி விடுகிறார்கள். மாமியார் மருமகளை பற்றி மகனிடமோ, மருமகள் மாமியாரை பற்றி கணவனிடமோ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, பெரும் பிரச்சினையையே ஏற்படுத்தி விடுகிறார்கள்.
இந்த விஷயத்தில் பாவம் கணவன்மார்கள்தான்! பெற்றத் தாயிடம் கோபப்படவா? தாரத்திடம் கோபப்படவா? என்று தெரியாமல், மண்டையை பிய்த்துக்கொள்கிறார்கள்.
நம்ம ராமையாவும் இந்த வகையில் பாதிக்கபட்டவர்தான். ஒருநாள் அவரது மனைவி, `நான் உங்க அம்மா பற்றி நிறைய கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க கண்டுக்கவே மாட்டேங்குறீங்க…’ என்று கேட்டதோடு, கோபத்தில் பளார் என்று அடிக்காத குறையாக பேசி விட்டதால், மனைவியிடம் பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார்.
பெரும்பாலான கணவன்மார்கள் இப்படித்தான் மனைவிமார்களிடம் அடங்கிபோய் கிடக்கிறார்கள். சிலர்தான், தாயின் பேச்சைக்கேட்டு மனைவியை வாங்கு வாங்கு என்று தினமும் வாங்குகிறார்கள்.
இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க என்ன செய்யலாம்?
முதலில் மாமியார்களுக்கு… மருமகளை உங்களது இன்னொரு மகளாக கருதுங்கள். வீட்டுக்கு வந்ததும் மகனை கையில் போட்டுக்கொள்வாள் என்று அக்கம் பக்கத்தில் பெருசுகள் யார் சொன்னாலும், அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள்.
`நானும் உனக்கு அம்மாதான். நீயும் எனக்கு இன்னொரு மகள்தான்’ என்று அடிக்கடி மருமகளிடம் சொல்லி பாருங்கள். அவள் தன் அம்மாவை உங்களிடமும் காண்பாள்.
பெற்ற மகளிடம் உரிமையோடு கோபிக்கலாம். ஆனால், மருமகளிடம் அப்படிச் செய்யக்கூடாது. ஏனென்றால், மாமியார் எப்படிபட்டவர் என்பதை அவள் உங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்து கொள்கிறாள்.
நீங்கள் அவளிடம் ஒரு தாய்க்குரிய அன்பையும், பாசத்தையும், பரிவையும் அவளிடம் கொட்டினால், அவளும் உங்களை தன் அம்மாவாக ஏற்றுக்கொள்வாள்.
மருமகள் மனதிற்குள் ஏதாவது பிரச்சினைகளில் புழுங்கினால் அவளுக்கு அன்பாய் ஆதரவு சொல்லுங்கள்.
பிரச்சினை தீர வழிகாட்டுங்கள். மருமகள் வீட்டிற்கு வந்த பிறகு அவளிடம் எல்லா வேலையையும் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுப்பதும், டி.வி.யில் சீரியல் பார்ப்பதும், பக்கத்து வீட்டு பெருசுகளிடம் ஊர் வம்புகளை பேசுவதும் நல்லதல்ல.
அவளோடு நீங்களும் வேலைகளை ஆதரவாய் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் அவளோ வீட்டு வேலைகளை தானாக செய்ய ஆரம்பித்து விடுவாள். அதற்காக அப்படியே விட்டுவிடாதீர்கள்.
நீங்களும் முடிந்தவரை உதவுங்கள். மருமகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் தாய்பாசத்தை கொட்டி கவனியுங்கள். உங்கள் அன்பில் மெய்சிலிர்த்துபோவாள் அவள்.
இனி, மருமகள்களுக்கு…
டி.வி. சீரியல்களில் பயமுறுத்தும் மாமியார் மாதிரிதான் நம் மாமியாரும் இருப்பாள் என்ற கற்பனைகளை தூக்கியெறிந்து விடுங்கள். அவரை உங்களது இன்னொரு தாயாக கருதுங்கள்.
எந்தவொரு தாயும் தனது மகன் கடைசிவரை தனக்கு துணை நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பாள். அதனால், கணவன் எப்போதும் தன்னுடன்தான் இருக்க வேண்டும், தன் பேச்சை மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.
எல்லா மாமியார்களுமே மருமகளிடம் எதிர்பார்ப்பது நல்ல குணத்தையும், விட்டுக்கொடுக்கும் மனபான்மையும்தான். `நீங்களும் எனக்கு அம்மாதான். உங்கள் மகளிடம் பழகுவது போலவே என்னிடமும் பழகுங்கள்’ என்று சொல்லி பாருங்கள்.
`மருமகள் என்றால் என் மருமகள் போல்தான் இருக்க வேண்டும்’ என்று மற்றவர்களிடம் புகழ ஆரம்பித்துவிடுவார்.
வயதான காலத்தில் எல்லா மாமியாரும், மாமனாரும் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையையும், ஓய்வையும்தான்.
அதற்கு எந்த பங்கமும் ஏற்படுத்திவிடாதீர்கள்.
சாப்பாட்டை மாமியாரே போட்டு சாப்பிட வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவருக்கு நீங்களும் அடிக்கடி உணவு பரிமாறி, அவருக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து அசத்துங்கள்.
வயதானாலே உடல் ரீதியான தொந்தரவுகள் நிறைய வரும். அந்தநேரத்தில், மாமியாருக்கு ஒரு மகளாய் நின்று பணிவிடை செய்யுங்கள்.
அந்த வயதான உள்ளம் உங்களை பாராட்ட வார்த்தை தெரியாமல் மகிழ்ச்சியில் தவிக்கும்.
நன்றி: உங்களுக்காக