Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2012
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,647 முறை படிக்கப்பட்டுள்ளது!

அடுத்த கட்ட படிப்பு பற்றிய ஓர் அலசல் !

ப்ளஸ் டூ முடித்த பிறகு, என்ன படிக்கலாம்? இப்போது எந்த படிப்புக்கு நல்ல மவுசு? இன்றைக்கு மவுசுள்ள அந்தப் படிப்பை முடிக்கும்போது நாளைக்கு வேலைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்?

.- ப்ளஸ் டூ தேர்வை எழுதவிருப்பவர்கள், அவர்களின் பெற்றோர், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என்று எல்லோரையும் சுற்றிச் சுற்றி எப்போதுமே எழும் கேள்விகள்தான் இவை.

.கேள்விகள் பழையதென்றாலும், பதில்களைப் புதுசாக்குகிறது காலம்!

.”ப்ளஸ் டூ-வுக்குப் பின் மேற்படிப்பை தொடர்வோரின் தற்போதைய நிலவரம், 40 சதவிகிதம். இதில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே அதிக மதிப்பெண்களோடும், பொருளாதாரத்தில் தேறியவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த 10 சதவிகிதத்தினர்தான் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளைப் பற்றி யோசிக்கத் தலைபடுகிறார்கள். மீதமுள்ள 30 சதவிகிதத்தினர், ‘ஏதோவொரு படிப்பில் சேர்வோம். அதை முடித்த பிறகு கிடைக்கும் ஏதோ ஒரு வேலையில் தொற்றிக்கொண்டு வாழ்வை செலுத்துவோம்’ என்ற முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

.உண்மையில்… குறைந்த செலவில், அதிக காலவிரயமின்றி படிப்பை முடித்ததுமே கையில் வேலையைக் கொடுக்கும் கோர்ஸ்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொள்வது அந்த 30 சதவிகிதத்தினருக்கு மட்டுமல்ல… மேற்படிப்பை பற்றியே யோசிக்காத மீதமுள்ள 60 சதவிகிதத்தினரில் கணிசமானவர்களுக்கும் பயன்படக்கூடும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்” என்று அந்தப் பெரும்பான்மை சதவிகித மாணவர்களுக்கான வேலை வாய்ப்புள்ள கோர்ஸ்கள் பற்றி பட்டியலிட்டார் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவரும் இயக்குநருமான டாக்டர் மணிமேகலை.

.”நம் நாட்டில் விவசாயத்தை அடுத்து, அதிகப்படி வேலை வாய்ப்புகள் ‘டெக்ஸ்டைல்ஸ்’ துறையை முன்னிறுத்தி வளர்கின்றன. ‘அப்பேரெல் பிராண்டிங்’ (Apparel Branding) எனப்படும் ஆயத்த ஆடைப் பயிற்சியின் கீழ், விற்பனை (Apparel Merchandising), ஆயத்த ஆடைகளில் மேம்பாடு (Apparel Product Development), தர உத்தரவாதம் (Apparel Quality Assurance)என சுவாரஸ்யமான தலைப்புகளில் ஏராளமான சான்றிதழ் படிப்புகள் இருக்கின்றன. மத்திய ஜவுளித்துறையின் கீழ் வரும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி முன்னேற்றக் குழுமம் (AEPL-Apparel Export Promotion Council)நிதியுதவியுடன் இதற்கான பயிற்சிகள், வேலை வாய்ப்பு உத்தரவாதத்துடன் கிடைக்கின்றன.

.இதற்கடுத்து எலெக்ட்ரானிக்ஸ், வெல்டிங் படிப்புகளில் ஐ.டி.ஐ. முடிக்கும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. புரொடக்டிவிடிக்காக இந்தப் பணிகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பல தொழில் நிறுவனங்கள் புதுமை செய்கின்றன. அதேபோல, பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களில் தொழில் சார்ந்த படிப்புகளைப் பெறுபவர்களுக்கும் உத்தரவாதமுள்ள எதிர்காலம் இருக்கிறது.

.பள்ளிப் படிப்பை ஆங்கிலம் வழியாக முடித்தவர்கள் மற்றும் ஆங்கில மொழித்திறன் ஈடுபாடு கொண்டவர்கள் பி.பி.ஓ. (BPO-Business Process Outsourcing), கே.பி.ஓ. (KPO -Knowledge Process Outsourcing), எல்.பி.ஓ. (LPO -Legal Process Outsourcing) போன்ற பயிற்சிகளைப் பெற்றால், உடனடி வேலைவாய்ப்பை பெறலாம். தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Institute of Entrepreneurship and Career Development) மேற்கண்ட பயிற்சிகளை அதிக செலவில்லாமல் பெற உதவுகிறது.

.உணவு மற்றும் உபசரிப்பில் தனிப் படிப்புகளும் சமீப ஆண்டுகளாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. உள்நாட்டில் மட்டுமல்ல, உலகமெங்கும் வேலை வாய்ப்போடு காத்திருப்பது இந்த உணவு மற்றும் உபசரிப்புத் தொடர்பான படிப்புகள்தான்” என்ற மணிமேகலை… அதிகம் அறியப்படாத, அதேசமயம் அமோக வேலைவாய்ப்புக்கான சில படிப்புகளையும் சொன்னார்.

.”பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் (Bio Informatics) எனப்படும் உயிர்த் தகவலியல் படிப்புக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. மாலிக்குலர் பயாலஜி துறையில் (Molecular Biology) புள்ளியியல் (Statistics) மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயன்பாடுகளை செலுத்தும் இந்தப் படிப்பானது… சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழக கல்லூரிகளில் தரப்படுகின்றன.

.இதேபோன்ற அதிக கவனம் பெறாத இன்னொரு படிப்பு… (GPS-Geographical Information System). இணைய வசதி எல்லோருக்கும் சாதாரணமாக கிட்டும் இந்தக் காலத்தில், அதன் மூலம் புவியமைப்புகளை மேப்களாக தரும் தொழில்நுட்பம் பிரபலமாகி வருகிறது. இதைக் கற்றுக்கொடுக்கும் இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு இருக்கிறது.

.இன்ஷூரன்ஸ், முதலீட்டுத்துறை, பணிபுரிபவர் மற்றும் ஓய்வுபெறுபவர் நிதி நல விவகாரங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு உலகம் முழுமைக்கும் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவற்றுக்கு வழி செய்யும் (Actuarial Science) படிப்புகளை மேற்கொள்வதும் சிறப்பு” என்ற மணிமேகலை,

.”இந்த டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளை நேரடியாகவும் படிக்கலாம். அல்லது ஏதாவதொரு அடிப்படை டிகிரி படிப்பை முடித்துவிட்டு, அல்லது அதனுடன் இணையாக இவற்றையும் மேற்கொள்வது புத்திசாலித்தனமானது!” என்று வழிகாட்டினார்.

.’அடிப்படை கல்விக்குப் பின் விரும்பிய சிறப்புத் துறையில் படிப்பு’ என்ற மணிமேகலையின் கருத்தை, மாணவர்களின் ஹாட் சாய்ஸாக இருக்கும் பொறியியல் படிப்பிலும் முன் வைத்தார்… வல்லம், பெரியார்-மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் சுகுமாரன்.

.”பொறியியல் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதும், நுழைவுக்கான நடைமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதும் ஆவரேஜ், பிலோ ஆவரேஜ் மாணவர்களுக்குகூட இன்ஜினீயரிங் ஸீட் கிடைக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால், அவர்கள் கல்லூரியில் நுழைந்ததும் பாடச் சுமையால் திணறிப் போகிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்கள், ஏதாவதொரு அடிப்படை அறிவியல் பாடத்தை இளநிலை படிப்பாக முடித்துவிட்டு, பிறகு அதே படிப்பையட்டிய பொறியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தால்… அதிசயிக்கும் வகையில் சீக்கிரமே பிக்-அப் ஆகிறார்கள் (உதாரணமாக, பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி முடித்து, கெமிக்கல் இன்ஜினீயரிங் சேர்வது). இவர்களுக்கு நேரடியாக இரண்டாமாண்டில் அட்மிஷன் கிடைத்துவிடும். பொறியியல் படிக்க விரும்பும் ஆவரேஜ் மாணவர்கள் இம்மாதிரியான ஐடியாவை பின்பற்றினால், கல்லூரியில் சேர்ந்தது முதல் அரியர்களை சேர்த்துக் கொண்டே வராமல் நிறைவான, நிதானமான தேர்ச்சிகளைப் பெற முடியும்” என்று தேவையான ஆலோசனை பகிர்ந்தவர்,

.”பொறியியலில் சிவில், மெக்கானிக், இ.சி.இ., இ.இ.இ, பி-ஆர்க் போன்ற படிப்புகள் என்றும் நிலையான வேலைவாய்ப்புக்குரியவை. ஏனெனில்… நாட்டின் பொருளாதாரமும், உள்கட்டமைப்பு வசதிகளும் தொலைநோக்கு இலக்கில் சீராக பயணிப்பதால்… என்றும் இந்தத் துறைகள் பசுமையாக இருப்பதுதான். சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட தொய்விலிருந்து மீண்டிருக்கிறது ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை. அவரவர் தனி ஆர்வத்தைப் பொறுத்து இப்படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

.தற்போது இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வாகின்றவர்களில் கணிசமானோர் பி.இ., எம்.பி.பி.எஸ். முடித்திருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வரவேற்புக்குரிய இந்த மாற்றத்துக்காக தொழிற்கல்வி படிப்போர் துவக்க வருடத்தில்இருந்தே ஐ.ஏ.எஸ். தயாரிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்” என்ற சுகுமாரன்,

.”மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி போன்ற படிப்புகளை பொறியியலில் படிப்பதைவிட, கலை அறிவியல் கல்லூரி மூலம் பெறுவதே நல்லதென சில நடைமுறை உதாரணங்கள் காட்டுகின்றன. பிரபல ‘பயோகான்’ நிறுவனத்தின் கிரண் மஜூம்தர் ஷாவின் கருத்தும் இதுவே. இவர் தனது நிறுவனத்துக்கான வேலை வாய்ப்பில் கலை அறிவியல் கல்லூரிகளில் பயோடெக் பட்டம் பெற்றவர்களுக்கே முன்னுரிமை தந்திருக்கிறார்.

.இந்த பயோடெக் படிப்பை இளநிலை, முதுநிலை எனத் தனித்தனியாக படிப்பதற்கு பதில் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பாக (Integrated Course) பெறலாம். ஒரே வீச்சில் படிக்கும்போது, மாணவருக்கு கிடைக்கும் தெளிவும் சிறப்பாக அமையும்” என்ற சுகுமாரன்,

.”புதுமையையும், சவால்களையும் விரும்பும் புத்திசாலி மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்ஸ் (Aeronantics), ஸ்பேஸ் டெக்னாலஜி (Space technology) படிப்புகள் காத்திருக்கின்றன. இப்படிப்புகளை ஏதோ ஒரு நிறுவனத்துக்கு பதில் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் போன்ற தரமான கல்வி நிறுவனங்களில் பயில்வது… வேலை வாய்ப்பை வரவேற்புடன் வசப்படுத்தும்” என்று வாழ்த்துக்கள் சொன்னார்.

.பிலோ ஆவரேஜ், ஆவரேஜ், டாப் ஸ்கோரர்ஸ் என்று எல்லா தரப்பினருக்குமான இத்தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டீர்கள்தானே!

நன்றி:- எஸ்.கே.நிலா –  அவள் விகடன்