Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2012
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,512 முறை படிக்கப்பட்டுள்ளது!

எங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்!

பொதுவாக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ‘மாணவன்… ஆசிரியரை, சக மாணவர்களை துப்பாகியால் சுட்டு கொன்றான்’ என்று கேள்விபடுவோம். ஆனால் இன்று நமது மாநிலத்தில் ‘9ம் வகுப்பு மாணவன் ஆசிரியை கொலை செய்த பயங்கர சம்பவம்’ எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அத்தனையும் ‘மேற்கத்திய’ மயமாகி வரும் நமது நாட்டில் ‘தனிநபரை’ முன்னிறுத்தும் அவர்களது வாழ்க்கை முறை மட்டும் விதிவிலக்கா என்று நினைக்க தோணுகிறது.

சில ஊடகங்கள் அம்மாணவனின் பெயரை வெளியிட்ட போது நமக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும்’ என்று இஸ்லாம் சொல்லித்தந்த அளவுக்கு வேறெந்த மதமும் சொல்லிதந்திருக்காது. இருப்பினும் நமது மாணவ சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது… சமுதாயத்தினராகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதனை சற்று சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஏனென்றால் ‘வாழ்க்கை’ எனும் சுழல்சக்கரத்தில் நாம் அனைவரும் ‘வெறும் இயந்திரங்களாக’ மாறி, இஸ்லாம் கற்றுத்தந்த குழந்தை வளர்ப்பு முறையினை மறந்து வருகிறோம் என்றால் மிகையாகாது. அதற்க்கான அறிகுறி தான் இது போன்ற நிகழ்வுகள்.

“எனக்கென்று தனி அறை, செல்லமான வளர்ப்பு, `ரிப்போர்ட்’ கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்து பாசத்தையும் செலவுக்கு பணம் தருவதையும் நிறுத்தி விட்ட கண்டிப்பான (?) அப்பா” கொலை செய்ய தூண்ட முதற்காரணமாகி போனது. அடுத்து வன்முறையான சினிமா. பொதுவாக சினமாவில் தான் ‘கிளைமாக்ஸ்’ வரும். ஆனால் இவ்விசயத்தில் ‘சினிமாவே’ கிளைமாக்ஸ் ஆக துணை போனது வேறு விஷயம். இறைவன் நாடினால் மற்ற காரணங்களை இரண்டாம் பகுதியில் விரிவாக பேசலாம்.

எளிமையான, நல்ல பிள்ளைகளை ஒப்பிட்டு தனது பிள்ளைகள் அடம்பிடித்து கேட்ப்பவைகளை நாசூக்காக தட்டிகழித்த காலம் போய்… பாக்கட் மணி, கணினி, மடிக்கணினி, அலைப்பேசிகள் மற்றும் ஏனைய நவீனகாலத்து பொழுதுபோக்கு சமாச்சாரங்களை பிள்ளைகள் கேட்டவுடன் வாங்கி தந்து அழகு பார்ப்பதும், பின்னர் அவர்கள் ‘நடவடிக்கைகள்’ சரியில்லை என்றவுடன் அனைத்தையும் ஒரே நாளில் ‘கட்’ செய்யும் போது ஏற்படும் ‘மன அழுத்தத்தினால்’ இது போன்ற ‘குற்றங்களுக்கு’ தள்ளபடுகின்றார்கள். கேட்டதையெல்லாம் வாங்கி தருவதைவிட, அப்பருவத்தில் அவர்களுக்கு தேவைதானா என்று சிந்தியுங்கள். ஒரே மகன் அல்லது மூன்று பெண்பிள்ளைகளில் ஒரு ஆண்பிள்ளை என்றால் பெற்றவர்கள் கொடுக்கும் செல்லம் இருக்கிறதே… நானெழுதி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும தீயவராவதும் அன்னை வளர்பதிலே”. நிலவைக்காட்டி சோறூட்டிய அன்னை இன்று டி.வி. சீரியலைக் காட்டி அமுதூட்டும் கொடுமை. தொலைக்காட்சிகள் இல்லாத காலங்கள் போய் பஜ்ர் முதல் நள்ளிரவு வரை இசை, படங்கள், சீரியல்கள் என பெரும்பாலும் சினிமா நிகழ்ச்சிகள். சில பெரியவர்களும் விதி விலக்கல்ல. சிறுவயதிலேயே என் மகள் ‘குர்ஆனை’ மனனம்/ஓதி முடித்து விட்டாள் என்று அங்கலாய்த்த காலம் போய், என்ன அழகாக ‘கொலை வெறி’ பாடலை பாடுகிறாள், ‘வாடி வாடி நாட்டு கட்…’ பாடலுக்கு நடனம் ஆடுகிறாள் என்று பெருமைபட்டு கொள்ளும் இன்றை மாடர்ன் தாய்மார்கள்.

‘பாய்’ கடையில் போய் வாப்பாவுக்கு சிகரட் வாங்கி வாம்மா மற்றும் முசிபத்து, பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு, ஹயாத்தளி… (மீதியை நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்) என்று திட்டும் பெற்றோர்களும் இன்றும் நமதூரில் இருக்கிறார்கள். காலங்கள் மாறியுள்ளதே தவிர காட்சிகள்/வாசகங்கள் இன்னும் வாழையடி வாழையாக அப்படியேதான் இருக்கின்றன. எதை விதைத்தோமோ அதுதான் முளைக்கும் என்பதற்க்கு சாட்சியாக.

தவறு செய்யும் தம் பிள்ளைகளை கண்டிக்காமல், என் மகன் அப்படியெல்லாம் ஒருக்காலும் செய்ய மாட்டான் என்று கண்மூடித்தனமாக ஒத்து ஊதுவதும், பெண் பிள்ளைகளை மட்டும் ஒழுக்கத்துடனும் நற்பண்புகளுடனும் வளர்த்தால் போதும் ஆண் பிள்ளைகள் ஒரு வயசில் கொஞ்சம் ‘அப்படி இப்படிதான்’ இருக்கும். பின்னொரு காலத்தில் சரியாகி விடுவார்கள் என்ற அதீத நம்பிக்கையில் கண்டும் காணாது விட்டு விடுகிறார்கள். ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா… இதனாலேயே படிப்பில்/வாழ்க்கையில் கவனம் சிதறி ‘திசைமாறிய’ பறவைகள் ஏராளம்.

“…ஒரு பெண் அவளது கணவனுக்கும் அவனது குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்பு பற்றி (மறுமையில்) கேள்வி கேட்கப்படுவாள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உம்ர் (ரலி) நூல் – புஹாரி

சமீபத்தில் ஒரு நண்பரை பல வருடங்கள் கழித்து நமதூரில் சந்தித்தேன். வியாபாரத்திற்காக அவர் வேறொரு ஊரிலும், படித்த மனைவி இன்னொரு நகரத்திலும், அவர்களின் ஒரு வயது குழந்தை கம்மா வீட்டிலும் (நமதூரில்) வளர்ந்து வந்தது. ஏதாவது ஒரு விசேசத்தில் ஊரில் சந்தித்து கொள்வார்கள். அன்றைக்கும் அது போல வந்திருந்தார். மகளுக்கு ஐந்து வயதாகிறது. உடம்பு அடிக்கடி சரியில்லாமல் போய் விடுகிறது. பிள்ளையும் எங்களுடன் ஓட்ட மாட்டேன் என்கிறாள் என்று. அக்குழந்தைக்கு அப்பருவத்தில் கிடைக்க வேண்டிய பெற்றவர்களின் அன்பையும் அரவணைப்பையும் உதாசினபடுத்திவிட்டு இப்பொழுது புலம்பி என்ன பயன்.

ஒரு கணவனாக மனைவிக்கும், தகப்பனாய் பிள்ளைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை ‘அவர்கள்’ அருகாமையிலிருந்தே செய்கின்ற வாய்ப்பிருந்தும் ‘நிறைய சேமிக்க’ வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மனைவி/மக்கள் ஒருபுறம்… தான் மறுபுறம் என வாழுந்து வருபவர்களும் உண்டு. பணம் முக்கியம்தான்… ஆனால் வெளியுலகத்தில் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அறியும் (அதை அறிந்து திருத்தும்) வாய்ப்பு தாயை விட தந்தைக்குத்தான் உள்ளது. எந்த குழந்தைகள் தாய் தந்தையரின் முழு பராமரிப்பில் வளர்கிறதோ அக்குழந்தைகள் ‘வழிதவறி’ போவதற்க்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் பிள்ளைகள் தாயிடமிருந்து கற்க வேண்டிய நல்லொழுக்கங்களை தாயிடமும் அதேபோல் தந்தையிடமும் கற்கிறார்கள்.

‘மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்)

ஒரு விசயத்தை கூர்ந்து கவனித்தால், பெரும்பாலான பிள்ளைகளின் குணாதசியங்கள் (நல்லதோ/கெட்டதோ) பெற்றவர்களை போன்றே இருக்கும். நாம் எதை செய்கிறோமோ அல்லது எதன்படி நடக்கின்றோமோ அதுமாதிரி தான் நமது பிள்ளைகளும். நம் குழந்தை ஒழுக்கத்திலும் மார்க்கத்திலும் நன்நடத்தையிலும் நற்குணத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் இவையனைத்தும் நம்மிடத்தில் ‘முதலில்’ ஏற்படவேண்டும். நமது நடவடிக்கைள் ஒவ்வொன்றும் இஸ்லாத்திற்கு உட்பட்டு அமைய வேண்டும்.

முந்தையகாலம் போல் மார்க்க அறிவுடன் கூடிய உலக கல்வி போய் ‘உலக கல்வியே’ வாழ்க்கை என்று இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கின்றனர். சிலவருடங்களுக்கு முன் அமெரிக்காவில் வசிக்கும் நமதூரை சார்ந்த பையனிடம், ஹலால் இறைச்சிக்கு என்ன செய்கிறாய் என்றேன். எந்த இறைச்சியாக இருந்தால் என்ன காக்கா…அதை சாப்பிடும் பொது ‘பிஸ்மி’ சொல்லி சாப்பிட்டால் ‘எல்லாம்’ ஹலாலாகி விடும் என்று வியப்பில் ஆழ்த்தினான்.

கலாச்சாரதிற்க்கும் ஒழுக்கத்திற்கும் பெயர்போன நமது நாட்டிலேயே/ஊரிலேயே பிள்ளைகளை நல்லபடியாகவும் ஒழுக்கமாகவும் வளர்ப்பதில் இவ்வளவு சிரமம் என்றால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் (அதாவது காலாச்சார சீரழிவுக்கும் தனிநபர் சுதந்திரத்திற்க்கும் பெயர் போன) தங்கள் பிள்ளைகளை இஸ்லாமிய முறையில் ஒழுக்கத்துடனும் நற்பண்புகளுடனும் வளர்க்க விரும்பும் நம்மவர்கள் படும் கஷ்டத்தை இங்கே எழுதி மாள முடியாது. இது போன்ற நாடுகளில் முஸ்லிம் பெற்றோர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படுவது ‘இஸ்லாமிய முறையில் குழந்தை வளர்ப்புதான்’. இலவசமாக படிப்பு கிடைக்கும் ‘பப்ளிக்’ ஸ்கூலில் படித்தால் எங்கே தனது பிள்ளைகள் கெட்டு விடுவார்களோ என்பதற்க்காக, மாதம் $500 – $750 வரை செலவு செய்து தனியார் இஸ்லாமிய பள்ளிகூடங்களுக்கு அனுப்புகின்றனர். ஆனால் இந்நிலை நமது நாட்டில் இல்லை. இன்னும் அமெரிக்காவில் தொலைகாட்சியில்லாத, தேவைக்கு மட்டும் கணினியை பயன்படுத்த தரும் எத்தனையோ இஸ்லாமிய வீடுகளும் உண்டு. ஆனால் இன்று தொலைகாட்சி இல்லாத வீடுகளே நமதூரில் இல்லை. கணினிகளும் மடிகணினிகளும் தேவையில்லை என்றால் கூட… இன்றைய இளைய தலைமுறை கைகளில் கொடுத்து அழகு பார்ப்பதை பெருமையாக நினைக்கிறோம்.

குழந்தைகள் பெற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ‘அமானிதம்’ என்பதை மறந்துவிட்டோம். அமானித மோசடி செய்து மறுமையிலே இறைவனின் முன்பு நஷ்டவாளிகளாக ஆகிவிடக்கூடாது. குழந்தைகளை முறையாக வளர்க்கவில்லையெனில் அல்லாஹ்விடம் பதில் கூற வேண்டும். பெற்றோர்கள் ‘உண்மையான’ முஸ்லிம்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே இஸ்லாமிய சிந்தனையில் வளர்கிறார்கள் ஒரு வேளை ‘பெயர் தாங்கி’ முஸ்லிமாக இருந்தால் அவர்களும் பெயரளவிலே முஸ்லிம்களாக வளர்கிறார்கள் என்பதனை நாம் கண்கூடாகவே காண்கிறோம். பல பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் அவர்கள் தவறு செய்துவிடுவதால் பிள்ளைகள் வழிகேட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். பெற்றெடுத்தக் குழந்தைகளை சரியான அடிப்படையில் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வளர்ப்பதில் தான் பெற்றோரின் திறமையும் கடமையும் அடங்கியுள்ளது.

“உங்கள் பொருள்களும் உங்களின் குழந்தைகளும் (உங்களுக்கு சோதனையே…இந்த சோதனையில் வெற்றி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடம் மிகப் பெரிய மகத்தான கூலி இருக்கிறது (அல்குர்ஆனா 64:15) என்பதனை மனதில் கொண்டு, எல்லாப் பெற்றோர்களும் இஸ்லாம் கூறும் அழகான குழந்தை வளர்ப்பு முறையை நடைமுறை படுத்தினால், வளரும் குழந்தைகள் முழுக்க முழுக்க இறைவனுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. அப்பேர்பட்டவர்களில் ஒருவராக நாமும் ஆகி…நமது பிள்ளைகளுக்கு ஒரு உண்மையான முன்மாதிரியாக (ரோல் மாடல்) இருக்கும் பாக்கியத்தை வல்ல இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!!

இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒரு சில உதாரணங்கள் யாருடைய மனதையும் காயபடுத்துவற்க்காக அல்ல.

ஆசிரியர்: சாளை M.A.C. முஹம்மத் மொஹிதீன் – அமெரிக்காவில் பணி புரியும், காயல் பூர்விக சமூக ஆர்வலர்

நன்றி  : காயல்பட்டிணம்.காம்