Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2012
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,305 முறை படிக்கப்பட்டுள்ளது!

டீன் ஏஜ்!!

டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பருவத்தில் நுழையும் குழந்தைகளிடம், பெற்றோர் மிக ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. என் குழந்தைகளிடம் நான் மிகச் சிறிய வயதிலேயே என்னை அவர்கள் ஃப்ரெண்டாக நினைத்துக் கொள்ளச் சொன்னேன். பலனையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்! – சமயத்தில் என்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவார்கள் – கேட்டால், நீ என் ஃப்ரெண்ட் தானே என்று  பதிலும் வரும்!!நான் இங்கு சொல்ல வந்தது என் குடும்பக் கதையை அல்ல! எனக்குத் தெரிந்த குடும்பத்துப் பெண்ணின் கதை! அந்தப் பெண் மேல்நிலைப் படிப்பு முடிக்கும் வரை உள்ளூரிலேயே படித்தாள். கல்லூரி செல்வதற்கு பேருந்தில் 30 நிமிடம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. கல்லூரியில் நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறாள் என்றே எண்ணிக் கொண்டிருந்தனர் அனைவரும். 3 வருடங்களில் பட்டப்படிப்பு முடிந்த சமயம், பட்டம் வாங்குவதற்கு கான்வகேஷனுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்ற விளம்பரத்தைக் கண்டு, அவள் ஏன் இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்று அவள் உறவினர் கேட்ட போது தான், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையானது.

முதலில் தான் விண்ணப்பம் செய்ததாகச் சொன்னாள்.  பின் மாற்றிப் பேசினாள். அவளது பரீட்சை நுழைவு எண்ணை வாங்கி, பல்கலைக்கழக  வலைத்தளத்தில் பார்த்த போது, அவள் பரீட்சையே எழுதியிருக்கவில்லை! மேலும் இரண்டாம் வருடத்தில் ஒரு பேப்பர் அரியர்ஸ்! காரணம் என்னவென்று யூகித்து விட்டீர்களா? கல்லூரியில் இரண்டாம் வருடத்தில் கிடைத்த கூடா நட்பும், அதன் மூலம் அறிமுகமான இண்டர்நெட் சாட்டிங்கும் தான்! இதில் சாட்டிங்கில் கிடைத்த ஒரு பையனுடன் காதலாம்! கல்லூரிக்குப் போகாமல் இந்த இரண்டு வேலைகளையும் ‘ஒழுங்காக’ச் செய்ததில், மூன்றாம் வருடம் அட்டெண்டன்ஸ் போதாததால் பரிட்சைகள் எழுத இயலவில்லை! பெற்றோர் பார்க்கக் கூடாதென்று இரண்டாம் வருட மதிப்பெண் பட்டியலில் இருந்து எல்லாவற்றையும் கிழித்துப் போட்டிருக்கிறாள்! அவர்கள்  இருந்த அபார்ட்மெண்டில் மாலை தபால்கள் வீட்டுக்கு எடுத்து வருவது அவள் வேலை; அதனால், கல்லூரியிலிருந்து வந்த கடிதங்கள் அத்தனையையும் அவளே அழித்தும் விட்டாள்!  பெற்றோருக்கே தெரியாமல் இன்னொரு கைப்பேசி வைத்திருந்தாள் – அந்தக் காதலனின் பரிசு! அவளது மின்னஞ்சல் முகவரி, மற்ற விவரங்கள் வாங்கி எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்டனர் பெற்றோர். மின்னஞ்சலின் பாஸ்வேர்ட் அந்தக் காதலனுக்கும் தெரியுமாம்!! தகவலை எப்படியெல்லாம் பகிர்ந்து கொள்கின்றனர்! டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்!

பெற்றோருடைய நிலைமையை நினைத்துப் பாருங்கள். ஒருவழியாக காதலுக்கும் இன்ஃபாச்சுவேஷனுக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிய வைத்து, வாழ்க்கையை விளையாட்டாக எண்ணக் கூடாதென்ற பாடத்தையும் அவளுக்குத் தெரிய வைத்தனர். பின்னர் அந்தப் பெண் திருந்தி, ஒழுங்காகத் தன் படிப்பை முடித்தாள்! என்ன கேட்கிறீர்கள் – காதலன் என்ன ஆனான் என்றா? மின்னஞ்சலில் பாஸ்வேர்ட் மாறியவுடன் அவன் அலர்ட் ஆகிவிட்டான்! இவள் பெற்றோருக்குத் தெரிந்து விட்டது எனத் தெரிந்ததும் அவன் ஜூட்! செல்ஃபோனை அவனிடமே திருப்பித் தந்தாகி விட்டது!  அந்தக் கால திரைப்பட பாணியில் சொல்ல வேண்டுமானால், முள்ளில் விழ இருந்த சேலையை சேதாரமில்லாமல் காப்பாற்றியாகி விட்டது!

இங்கே பெண் வலையில் வீழ்ந்தாள் – ஆனால், பெண்களும் இப்போது ஆண் பிள்ளைகளை ஏமாற்றுகிறார்கள்.  குழந்தை ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, தம் குழந்தைகளைச் சரியான வாழ்க்கைப் பாதையில் செலுத்துவது பெற்றோரின் கடனே. மாறி வரும் காலத்தோடு மாற வேண்டியது பெற்றோரும் தான். அவர்கள் தம் குழந்தைகளோடு ‘க்வாலிட்டி டைம்’ செலவழிக்க வேண்டும். அவர்கள் அன்றாட வாழ்வில் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள், என்னென்ன விஷயங்களில் சந்தோஷப்பட்டார்கள் (அவை பெரியவர்களுக்கு எவ்வளவு சின்னதாகத் தெரிந்தாலும் சரி) என்று தினம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்!  குட் டச், பேட் டச் சொல்லித் தருவதோடு மட்டுமன்றி, காதலுக்கும் இன்ஃபாச்சுவேஷனுக்கும் வித்தியாசத்தையும் சொல்ல வேண்டும்!

இந்த விடலைப் பருவம் தான், ‘என் அப்பா/அம்மா மாதிரி உண்டா?’ என்று குழந்தைகள் அதிசயித்து பார்த்ததிலிருந்து, ‘என் அப்பா/அம்மாவிற்கு ஒன்றும் தெரியாது’ என்று நினைக்க ஆரம்பிக்கும் பருவம்! எதை எடுத்தாலும் எதிர்த்துப் பேச ஆரம்பிக்கும் பருவம்! இந்தப் பருவத்தை பெற்றோரும் தாண்டி வந்ததினால், விவேகத்துடன், விடலைக் குழந்தைகளை அரவணைத்துச் செல்ல வேண்டும்.

கணிணி மூலம் அறிவைப் பெருக்கிக் கொள்ளும் இக்காலத்தில், குழந்தைகளை கணிணியைத் தொடாமல் தவிர்க்கக் கூடாது/ முடியாது;   இதற்கு வேண்டாத சில வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சாஃப்ட்வேரைப் பயன்படுத்தலாம். முக்கியமாக, பெற்றோர் தம் குழந்தைகள் பார்க்கக்கூடாத வலைத்தளங்களைத் தாமும் பார்க்காமல் இருக்க வேண்டும்!!

ஃபேஸ்புக் – மூலம் பள்ளி மாணவ மாணவிகள் நண்பர்கள் ஆகும் கலாச்சாரமும் பெருகி வருகிறது. நான் படித்த ஒரு செய்தியில், ஒரு பள்ளியைச் சேர்ந்த குழந்தைகள் முகப்புத்தகத்தில் தம் தலைமையாசிரியரைக் குறித்துக் கிண்டல் செய்து செய்திகள் வெளியிட்டதில் இருந்து, அந்தப் பள்ளியின் விளையாட்டு ஆசிரியருக்கும் மாரல் ஸயின்ஸ் ஆசிரியருக்கும் இன்னொரு வேலையும் சேர்ந்து விட்டது…. – மாற்றுப் பெயரில் தானும் இவர்களுடன் சேர்ந்து, இந்தக் குழந்தைகள் எழுதுவதைக் கண்காணிக்கும் பணி!!  தங்கள் அலுவலக வேலைக்காக கணிணி கற்றுக் கொள்ளும் பெற்றோர், தம் குழந்தைகளின் முகப்புத்தக நண்பரும் ஆகலாமே!

நேரமின்மை என்பது ஒரு மாயை – விரும்பிய வேலைகளுக்கு எப்படியாவது நேரம் ஒதுக்குகிறோம் அல்லவா.. –  – குழந்தைகள் வளரும் பருவத்தில் சிறிது நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கி, அவர்களை நேர்வழியில் அவனியில் முந்தியிருப்பச் செய்தால், பெற்றோருக்கு வயதான காலத்தில் அவர்கள் அசை போட அருமையான நினைவுகளும் இருக்கும், அந்தச் சமயம் வளர்ந்து பெரியவர்களான அவர்கள் குழந்தைகளும், ‘என் அப்பா/அம்மா ரொம்ப அண்டர்ஸ்டாண்டிங் – அவர்கள் என்னை வளர்த்த மாதிரி தான் நான் உங்களிடம் நடக்க முயற்சி செய்கிறேன்’ என்று தம் மக்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்!!

மிடில் கிளாஸ் மாதவி