வரம் சாபமான கதை – காங்கோ பெண்கள்

காங்கோ ஆப்பிரிக்கா கண்டத்தில் நடுப்பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரியநாடு. இந்த நாட்டின் மண்வளம் கொள்ளை அடிக்கப்படும் ஆப்பிரிக்காவின் பெயரிடப்படாத யுத்தக் களத்தில் கற்பழிப்பு (Rape) செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 2 இலட்சம். 2009க்குப் பின் ஒவ்வொரு மாதமும் வறுமையிலும் பிணியிலும் 45000 பேர் இறந்து போகிறார்கள். இதுவரை 900,000 முதல் 5400,000 வரை இறந்திருக்கலாம் என்று கணக்கிடுகிறார்கள்.

இந்த மக்கள் செய்த பாவம் என்ன? வளமிக்க நாட்டில் பிறந்ததைத் தவிர! பொன் கொழிக்கும் பூமி என்பார்கள் நம்நாட்டில். உண்மையில் காங்கோ பொன் கொழிக்கும் பூமிதான். பொன் மட்டுமல்ல, வைரமும் சேர்ந்து தான் அந்த மண்ணை அந்த மண்ணின் மக்களை மரணத்தின் பிடியில் தள்ளியது. இந்தப் பொன்னும் வைரமும் போதாது என்று அந்த மண்ணின் கனிமவளங்கள் அந்த தேசத்தை இன்று சபிக்கப்பட்ட நிலமாக , பாலியல் வன்கொடுமை பூமியாக பெண்கள் வாழ்வதற்கெ தகுதியற்ற ஒரு தேசமாக மாற்றிவிட்டது. எந்த ஒரு நாட்டிலும் அதன் வளங்கள் அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரம். அந்த நாட்டு மக்களின் வளமிக்க வாழ்வுக்கு உத்திரவாதம் என்பது தான் பொதுவான நம்பிக்கை. ஆனால் யதார்த்த நிலையில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் மண் வளங்களே அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை கொள்ளை அடித்து அவர்களைக் கொத்தடிமை ஆக்கிவிட்ட சோகம் முதலாளித்துவ உலகத்தின் மறுபக்கம்.

காங்கோவின் உள்நாட்டு யுத்தம் ஆப்பிரிக்க கண்டத்தின் உலக யுத்தமாக பேசப்படுகிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பின் மிகவும் அதிகமான மனிதர்களையும் அவர்கள் வாழ்வாதாரங்களையும் கொன்று கொள்ளையடித்த யுத்த பூமி காங்கோ. நிலையான அரசும் ஆட்சியும் இல்லாத நிலையும், பெருகிக் கொண்டிருக்கும் ஆயுதம் தாங்கிய போர்க்குழுக்களும் அவர்களுக்கு இடையிலான அதிகாரச் சண்டைகளும் அரசு இராணுவமே தன் குடிமக்களைச் சித்திரவதைச் செய்து சுரங்கங்களில் வேலைக்கு அமர்த்தி அடிமைகளாக்கும் கங்கானிகளாக செயல்படுவதும் இராணுவ அதிகாரிகள் நாட்டில் நடக்கும் வன்கொடுமைகளுக்கெல்லாம் தளபதிகளாக இருப்பதும் நம் எவருடைய கற்பனைக்கும் எட்டாத கறைபடிந்த நிகழ்கால வரலாற்றின் பக்கங்கள்.

தோண்டிய இடமெல்லாம் கனிம வளங்கள். தங்கமும் தாதுப்பொருட்களும். தோண்டிய பள்ளத்தில் கொட்டிக் கிடக்கும் மண் குவியல்களில் தங்கத்துண்டுகளைத் தேடி அலையும் குழ்ந்தைகளும் பெண்களும். கல்வி, மருத்துவமனை இதெல்லாம் அவர்களுக்கு கன்வுலகம்… அந்தச் சுரங்கங்களில் தோண்டி எடுக்கப்படும் தாதுக்கள் இன்றைய அறிவுலக கண்டுபிடிப்புகளின் இன்றியமையாத கச்சாப்பொருளாக இருப்பது தான் அந்தப் பூமியில் அமைதிப் புறாக்களை வேட்டையாடும் அம்புகளாக இருக்கின்றன. நம் கைபேசிகள், கணினி, காமிரா, குறுந்தகடு, இதர மின்னணு சாதனங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான தாதுப்பொருட்கள் மிக அதிகமாக இங்கிருந்து தான் களவாடப்பட்டு உலகச் சந்தைக்கு வருகின்றன அதுவும் அடிமாட்டு விலையில். உதாரணமாக மூன்று ‘டி’ தாதுக்களைச் சொல்லலாம். டிண், டாண்டலும், டங்க்ஸ்டன் (The three Ts, Tin, Tantalum, Tungsten) டிண் என்ற கனிமம் கைபேசிகளின் சர்க்யூட் போர்டில் பயன்படுத்தப்படுகிறது. டாண்டலும் அதாவது ஓர் (ore) என்ற கனிமம் எலெக்ட்ரானிக் டிவைஸில் பயன்படுகிறது.
டங்க்ஸ்டன் அதிர்வலைகளை (வைப்ரேஷன்) உருவாக்க பயன்படுகிறது.

இக்கனிமங்களை ஆஸ்திரேலியா , பிரேசில் நாடுகளிருந்து வாங்கிவதை விட காங்கோவிலிருந்து கள்ளத்தனமாக கடத்தப்பட்டதைச் சந்தையில் வாங்குவது எளிதாக இருப்பதுடன் முதலாளித்துவ பெருமுதலைகளுக்கு கொள்ளை லாபத்தையும் கொடுக்கிறது., விளைவு..? அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு டாலரும் அந்த மண்ணின் ஒரு குழந்தையை அடிமையாக்குகிறது, ஒரு மணி நேரத்தில் 48 பெண்களை கற்பழிப்பு (Rape) செய்கிறது. அந்ததேசத்தில் 70 மில்லியன் பெண்களைக் கற்பழிப்பு செய்து இன்றைக்கு கொத்தடிமைகளாக்கி இருக்கிறது. 2006-2007ல் மட்டும் சற்றொப்ப 400,000 பெண்கள் கற்பழிப்பு கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்

காங்கோவிலிருந்து கடத்திக் கொண்டுவரப்படும் கனிமங்களை வாங்குவது அந்த தேசத்தின் ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்களுக்கே போய்ச் சேர்வதால் அந்தப் பணம் ஆயுதம் வாங்கவும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளவும் மேற்கத்திய நாடுகள் தூக்கி எறியும் எலும்புத் துண்டுகளாக இருக்கின்றன. இங்கிருக்கும் சுரங்கங்களில் 90% க்கும் மேலானவை அதிகாரப்பூர்வமற்ற தனிப்பட்ட ஆயுதக் குழுக்களின்கைகளில் இருக்கின்றன. இக்குழுக்கள் சுரங்கப பணிகள், அதற்கான சர்வதேச விதிகள் மனிதஉரிமைகள் சட்டங்கள் எதையும் மதிப்பதில்லை. மிகவும் மேசமான சூழலில் இச்சுரங்கங்களில்அடிமைகளாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் இந்த நாட்டின் வளமிக்க அந்த மண்ணின் மைந்தர்களும் அவர்கள் பெண்ணிரும் குழந்தைகளும். காங்கோவின் கலாச்சாரமும் கணவன் மனைவி உறவும் கூட கற்பு என்று சொல்லப்படும் மூன்றெழுத்தில் தன் மூச்சிருப்பதாக நினப்பதால் அந்தக் கற்பின் மூச்சுக்காற்றே இந்தப் பெண்களை அடிமைகளாக்கி இச்சுரங்கத்தில் தள்ளிவிட்ட கொடுமைக்கு காரணமாகவும் இருக்கிறது. மனைவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் அது அச்சமூகத்தில் அந்த ஆண்மகனுக்கு பெருத்தஅவமானமாக இருப்பதால் அப்பெண்ணை அவள் கணவன் ஒருபோதும் சேர்த்துக் கொள்வதில்லை. கற்பழிக்கப்பட்ட மனைவி அனாதையாகிவிடுகிறாள் தனியாக அல்ல, அவள் அவனுக்குப் பெற்ற அவன் குழந்தைகளுடன் அவள் அனாதையாகி விடுகிறாள். அப்பெண்ணின் குழந்தைகள் காங்கோ சுரங்கங்களில் அடிமைகாளாக இருப்பதால்தான் அமெரிக்க ஐரோப்பிய குழந்தைகள் வீடியோ கேம்ஸ்களில் எதிர்ப்பவர்களை எல்லாம் சுட்டுத்தள்ளிவிட்டு ஆனந்தமாக தங்கள் இலக்கை அடையும் விளையாட்டுகளை விளையாடிக் களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பெண்களை இராணுவமும் இராணுவக்குழுக்களும் ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்களும் அடிமைப்படுத்த பயன்படுத்த வேண்டிய போராயுதம் உடல்சார்ந்த பெண் பாலியல் உறுப்பைச் சிதைப்பதாகமட்டுமே இருப்பதால் அவர்களுக்கு அது மிகவும் எளிதானதாக இருக்கிறது. இங்கு நடக்கும் கற்பழிப்புகள், உலக மனித வரலாற்றில் இதுவரை நடந்திராத, கண்டிராத கற்பனை செய்ய முடியாத கொடுமைமிக்கவை என்கிறது ஐ.நாவும் பொதுமக்கள் நலன் பற்றிய அமெரிக்க ஏடும். ஆயுதம் தாங்கியவர்கள் கூட்டாக சேர்ந்து ஒரு பெண்ணைக் பாலியல் வல்லுறுவு செய்வதும் அவள் பெண்ணுறுப்பில் துப்பாக்கியால் சுடுவதும் இன்னும் இவ்விதமான எழுத முடியாத பல்வேறு சித்திரவதைகளும் செய்வதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. காங்கோவின் சாலைகளில் “பெண்களைக் வல்லாங்கு செய்யாதீர்கள், பலர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழிப்பு செய்யாதீர்கள்: ” என்று கேட்டுக்கொள்ளும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருக்கின்றன என்றால் உலகத்தில் இப்படி ஒரு தேசத்தை எந்த ஒரு மனிதராலும் கற்பனைசெய்ய முடியாது தான். கண்வன் முன் மனைவி பலரால் வன்புணர்வு செய்யப்படுவதும் தந்தை மகளையும் சகோதரன் உடன் பிறந்த சகோதரியையும் வன்புணர்வு செய்ய கட்டாயப்படுத்தும் கொடுமைகளும் இரவு பகல் போல அன்றாட நிகழ்ச்சிகளாக அந்த மண்ணில் நடந்துக் கொண்டிருக்கின்றன.

அவள் பெயர் புக்காவு. (Bukavu) அவள் வாழைப்பழமும் வேர்க்கடலையும் விற்று பிழைக்கும் எளியப் பெண். அவளைப் பலர் சேர்ந்து பாலியல் வன்முறை செய்தனர் அவள் இரண்டு வருடங்களாக ரத்தக் கசிந்து சீழ்ப் பிடித்த நாற்றமெடுத்தவளாக நடந்தாள்…நடந்தாள்…இறுதியாக அவள் தன்சி மருத்துவமனையை வந்தடையும் போது அவளுக்கு முன் 80 பெண்கள் அவளைப் போலவே …. காத்திருந்தார்கள் பெண்ணுறுப்புகளை தைத்து ஓரளவு சரிப்படுத்தும் அறுவைச் சிகிச்சைக்காக. அந்த பெண்ணுறுப்பைத் தைக்கும் அறுவை ஒரு வாரத்திற்கு 5 பெண்களுக்குத் தான் செய்யப்படும், அதற்கு மேல் செய்கின்ற வசதி அந்த மருத்துவமனையில் இல்லை. புக்காவுக்கு பென்னுறுப்பு தைக்கப்பட்டதா? தெரியவில்லை. அவள் என்னவானாள்…? யாருக்கு கவலை அதைப் பற்றி!

பாஷி மருத்துவமனையில் 250 நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அங்கே பாலுறுப்பு சிதைவுகளை சரி செய்ய நடக்கும் அறுவைச்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் குழுச்சண்டையில் போரில் காயம்பட்ட வீரர்களின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்மு அதிகம். சிதைந்த பெண்ணுறுப்பை தைக்கும் அறுவை/பாலுறுப்பு சிதைவுகளை சரி செய்ய ஒரு பெண் ஆறுமுறை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் . (women go to 6 operations to repair the sexual injuries)

  • *CONGO – the resource curse
  • * UN Official called the country ‘ THE RAPE COUNTRY OF THE WORLD’
  • * UN has called the country ‘ THE CENTRE OF RAPE AS A WEAPON OF WAR’
  • * CONGO THE WORST PLACE ON EARTH TO BE A WOMAN.

மூன்று மாதத்திற்கு ஒரு புதிய கைபேசியை அறிமுகப்படுத்துகின்றன நம் கைபேசி கார்ப்பரேட்டுகள். கைபேசிகளிலும் மின்னணு சாதங்களிலும் பயன்படுத்தப்படும் பொருள்களை வாங்கும் சந்தையில் அப்பொருட்கள் எங்கிருந்து வந்தன என்பதைக் கண்டறியும் சப்ளை செயின் சாத்தியமில்லை என்கிறார்கள் கைபேசி கார்ப்பரேட் அதிகாரிகள்.

நாமோ பழைய கைபேசிகளுக்கு இப்படியும் விடை கொடுக்கலாம் என்ற விளம்பரங்களை ரசித்துக் கொண்டிருக்கிறோம். இன்று தங்க நகைக்கடை இல்லாத ஊரே இல்லை, தங்கம் அணியாத பெண் இருக்க முடியுமா? . தங்கமும் வைரமும் இல்லாத திருமணமா?

புதிய பொருளாதர சந்தையில் அமெரிக்காவின் பொருளாதர சரிவால் தங்கம் மட்டுமே சரியான முதலீடாகிவிட்ட நவீன பொருளாதர இந்தியக் கண்டுபிடிப்பு! இந்தியப் பொருளாதரத்தின் பெரும்பலமாக இருப்பதை எண்ணிப் பூரிப்படைந்து கொண்டிருக்கிறோம். வரும் நிதி ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி அதிகம் இருக்கும் என்கிறார்கள் எப்போதும் நம் பொருளாதர சந்தைப் புலிகள்!

இந்தச் சூழலில் காங்கோ என்ற தேசம் நாம் வாழும் பூமி உருண்டையில் தான் இருக்கிறது என்பதும் இந்தக் கதைகள் எல்லாம் உண்மைக்கதைகள், அதிலும் நாம் வாழும் காலத்தில் நடந்து கொண்டிருக்கும் சமகால
வரலாற்று நிகழ்வுகள் என்பதும் எந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும்?

நன்றி: புதியமாதவி