உண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம்.
இந்த உயரிய பண்பை பற்றி அல்குர்ஆன் என்ன கூறுகின்றது என்பதை முதலில் பார்ப்போம்:
இறையச்சத்தின் அவசியம்:
அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள், இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்”. (21: 49).
உள்ளச்சம் இறைத்தூதர்களின் பண்பாகும்:
(இறைதூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள், அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள், அல்லாஹ்வையன்றி வேறு யாருக்கும் அவர்கள் பயப்பட மாட்டார்கள், ஆகவே, கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.” (33: 39).
“நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம், அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம், நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் – இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள். (21: 90)
மறைவில் இறைவனை அஞ்சுதல்:
“எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார். அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்ல வேண்டியுள்ளது.”
“நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை (ப்பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.” (67: 12).
யார் நேர்வழியுடையோர்:
“அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான். (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுக்கொன்று ஒப்பான (முதஷாபிஹான)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றைக் கேட்கும் போது) சிலிர்த்து விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.” (அஸ்ஸுமர்: 23).
தொழுகையில் உள்ளச்சத்தை வழியுறுத்தும் வசனங்கள்:
“ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.” (23: 1, 2).
உள்ளச்சம் உடையவர்களுக்கு இது இழகுவான காரியம்:
“மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்;லாஹ்;விடம்) உதவி தேடுங்கள், எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும்.” (2: 45).
உள்ளச்சத்துடன் நிற்றல்:
“தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக்கொள்ளுங்கள், (தொழுகையின் போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச் சப்பாட்டுடன் நில்லுங்கள்.” (2: 238).
முதலில் உயர்த்தப்படுவது “உள்ளச்சம்”:
அபூ தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நாம் அல்லாஹ்வின் தூதருடன் இருந்தோம், அப்போது அல்லாஹ்வின் தூதர் தனது பார்வையை வானை நோக்கி உயர்த்தியவர்களாக “இது மனிதர்களிலிருந்து கல்வி பரிக்கப்படும் காலமாகும், எது வரையெனில் அதிலிருந்து எதையும் மனிதர்கள் பெற்றுக்கொள்ளாத அளவுக்கு, அப்போது ஸியாதிப்னு லபீதுல் அன்ஸாரீ (ரலி) அவர்கள், எவ்வாறு கல்வி பரிக்கப்படும் நாம் அல்குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கும் போது, நமது மனைவிமார்களுக்கு, பிள்ளைகளுக்கு அதை ஓதிக்காட்டும் போது என வினவினார். ஸியாதே! உமது தாய் மண்ணைக்கவ்வட்டும், நான் உம்மை மதீனாவின் கல்விமான்களில் ஒருவராக அல்லவா நினைத்திருந்தேன், இந்த தவ்ராத்தும், இன்ஜீலும் யூதர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் இருந்தும் அவர்களுக்கு அது ஏற்படுத்திய பயன் என்ன? என அல்லாஹ்வின் தூதர் கேட்டார். ஜுபைர் குறிப்பிடுகிறார்: உபாததிப்னு ஸாமித் (ரலி) அவர்களை சந்தித்து உமது சகோதரர் அபூதர்தா கூறுவதை செவிமடுக்கவில்லையா? என்று அவர் கூறியதை நான் அவருக்கு அறிவித்த போது அபூதர்தா கூறியது உண்மை தான் என அவர் கூறினார். நீர் விரும்பினால் முதலில் உயர்த்தப்படும் கல்வியை நான் உமக்கு அறிவிக்கின்றேன் என அவர்கூறிவட்டு, அது தான் உள்ளச்சம். எந்த அளவுக்கெனில் மஸ்ஜிதுக்கு கூட்டுத் தொழுகைக்கு வருபவர்களில் உள்ளச்சமுடையவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு நிலமை மோசமடையும்” (திர்மிதி).
தொழுகைக்காக ஒருவர் முறையாக தன்னைத் தயார் படுத்துதல்:
இது பல அம்சங்களைக் கொண்டாகும். அவைகளில்:- முஅத்தின் கூறும் பாங்கைப் போன்று பதில் பாங்கு கூறுதல், அதானுக்கும், இகாமத்திற்கு இiடையில் பிரார்த்தித்தல், பிஸ்மில்லாஹ் கூறி உழூவை ஆரம்பம் செய்தல், அதன் பின்னர் திக்ர், பிரார்த்தனைகள் செய்தல், மிஸ்வாக் செய்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுதல், தூய்மையான அழகிய ஆடைகள் அணிந்து, அடக்கத் தோடும், பணிவோடும் பள்ளிக்குச் சென்று தொழுகையை எதிர் பார்த்திருத்தல், தொழுகையின் (ஸஃப் பை) வரிசையை சரி செய்வதுடன் அதில் நெருக்கமாக நிற்றல் போன்ற காரியங்கள் உள்ளடங்கி இருக்கும்.
1-பாங்கிற்கு உளத்தூய்மையுடன் பதில் கூறுவதன் மூலம் தொழுகைக்கு தயாராகுதல்:
உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “முஅத்தின் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் எனக்கூறும் போது (அதை கேட்கும்) ஒருவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் எனக்கூறுவார். முஅத்தின் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் எனக்கூறும் போது அஷஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் எனக்கூறுவார். பின்பு முஅத்தின் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ் எனக்கூறும் போது, அஷஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ் எனக்கூறுவார் பிறகு ஹய்யஅலஸ் ஸலாத், ஹய்யஅலல்பஃலாஹ் எனக்கூறும் போது லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் எனக்கூறுவார். பின் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எனக்கூறும் போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எனக்கூறுவார். பின் லா இலாஹ் இல்லல்லாஹ் எனக்கூறும் போது இவர் தனது உள்ளத்தால் (உளத்தூய்மையுடன்) லா இலாஹ இல்லல்லாஹ் எனக்கூறினால் அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.” (முஸ்லிம்).
பாங்கைத் தொடர்ந்து துஆ ஓதுதல்:
“எவர் முஅத்தினின் அதானை செவிமடுத்ததன் பின்
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا
“அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லா ஷரீக லஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு ரழீது பில்லாஹி ரப்பன் வபிமுஹம்மதிர் ரஸுலன் வபில் இஸ்லாமி தீனன்”
(வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் ஏகன், அவனுக்கு எந்த ஒரு இணையுமில்லை, முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் சாட்சி கூறுகின்றேன். அல்லாஹ்வை ரப்பாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் ஏற்றுக்கொண்டேன்) என்று கூறுவாரோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதிப்னு அபீவக்காஸ் (ரலி), (முஸ்லிம்).
“எவர் முஅத்தினின் அதானை செவிமடுத்ததன் பின்:
اَللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
(பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!) என்று கூறுவாரோ அவருக்கு நாளை மறுமையில் எனது ஷபாஃஅத் உறுதியாகி விட்டது” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), புஹாரி).
அழகான முறையில் வுழூச் செய்வது:
அம்ரிப்னு ஸஈத் இப்னுல் ஆஸ் தனது தந்தை பாட்டன் வழியாக அறிவிக்கின்றார்: “நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இருந்த போது, அவர்கள் வுழூ செய்வதற்கு தண்ணீரை கொண்டுவருமாறு சொன்னார்கள், பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன்: எந்த ஒரு முஸ்லிமாவது கடமையான தொழுகைக்கு அழகான முறையில் வுழுச் செய்து, உள்ளச்சத்துடன், அதன் ருகூவைப் பேணியவராக தொழுவாரானால் அவர் முன் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக அவை அமைந்து விடும், பெரும் பாவங்களை தவிர்த்து, இவ்வாறு காலம் முழுக்க நடந்து கொண்டிருக்கும்” எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
அப்துல்லாஹ் இப்னு ஸுனாபிஹிய் கூறுகிறார், அபூ முஹம்மத் வித்ர் தொழுகை கடமையென கூறிய போது, அபூ முஹம்மத் கூறியது பொய்யாகும் எனக் கூறிய உபாததிப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன், அல்லாஹ் ஐந்து நேரத் தொழுகையை கடமையாக்கியிருக்கின்றான், எவர் அதன் வுழூவை அழகாகச் செய்து, குறிப்பிட்ட நேரத்தல் அந்தத் தொழுகைகளையும் நிறைவேற்றி, அதன் ருகூவையும் முழுமையாக செய்து, அதில் உள்ளச்சத்தையும் பேணுவாரானால் அல்லாஹ்விடத்தில் அவரை மன்னிப்பதற்குரிய ஒரு உறுதி மொழி இருக்கின்றது. எவர் அவ்வாறு செய்யவில்லையோ அல்லாஹ்விடத்தில் அவருக்கு எந்த ஒரு உறுதி மொழியும் இல்லை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் நாடினால் தண்டிப்பான்” (அபூதாவுத்).
மிஸ்வாக் பல் துலக்குதலின் மூலம் தயாராகுதல்:
“எனது சமூகத்திற்கு, அல்லது மனிதர்களுக்கு சிரமம் இல்லையென்றால் ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக் செய்வதை நான் கட்டளையிட்டிருப்பேன்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி).
பள்ளிக்குச் செல்கின்ற போது ஓதும் துஆ:
اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا وَمِنْ أَمَامِي نُورًا وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا اللَّهُمَّ أَعْطِنِي نُورًا.
“நாயனே! என் இதயத்தில் ஒளியையும், என் நாவில் ஒளியையும், என் செவியில் ஒளியையும், என் பார்வையில் ஒளியையும், எனக்குப்பின்னால் ஒளியையும், எனக்கு முன்னால் ஒளியையும், எனக்கு மேலால் ஒளியையும், எனக்கு கீழால் ஒளியையும், ஏற்படுத்துவாயாக, யா அல்லாஹ் எனக்கு ஒளியை அருள்வாயாக!” (ஆதாரம்:- முஸ்லிம்).
“நான் நபியவர்கள் கூறக் கேட்டேன் “எவர் தொழுகைக்காக முழுமையாக வுழூச் செய்து, பின் கடமையான தொழுகைக்கு நடந்து சென்று, மக்களுடன், அல்லது ஜமாஅத்தாக மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றினால் அவரது முன்னுன்டான பாவங்கள் மன்னிக்கப்படும்” என உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: முஸ்லிம்).
உள்ளம், உடல் இரண்டும் தொழுகையில்:
உக்பதிப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாம் முறை வைத்து ஒட்டகைகளை மேய்ப்பவர்களாக இருந்தோம். எனது முறை வந்த போது நான் அவைகளை மேய்த்துவிட்டு இரவானதும் ஓய்வெடுக்க திரும்பிவிட்டேன். நபியவர்கள் நின்றவர்களாக மக்களுக்கு உரை நிகழ்திக் கொண்டிருந்தார்கள், அப்போது அவர்கள் கூறிய செய்தி: எந்த ஒரு முஸ்லிமாவது அழகான முறையில் வுழூச் செய்து, பிறகு எழுந்து தனது முகத்தையும், உள்ளத்தையும் நிலை நிறுத்தியவராக இரண்டு ரக்அத்துகள் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகிவிடும். எவ்வளவு சிறப்பான ஒரு விடயம் இது? என்று நான் கூறினேன், அப்போது அங்கிருந்த ஒருவர் இதற்கு முன் கூறியது இதை விட அழகானதாகும் என்று நான் அவரை பார்த்ததேன், அவர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், அவர் என்னை நோக்கி நீர் சிறிது நேரத்திற்கு முன்பாக வந்ததை நான் பார்த்தேன். (நீர் வருவதற்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் சொன்ன செய்தி தான்) எவரொருவர் நிறைவாக வுழூச் செய்து பின்னர் :
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ
என்று கூறுகின்றாரோ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயலினூடாக சுவர்க்கம் நுழையலாம் என்பதாகும். (முஸ்லிம்).
அழகான முறையில் தன்னை அழங்கரித்தவராக செல்லல்:
“ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள், உண்ணுங்கள், பருகுங்கள், எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.” (7: 31).
மஸ்ஜிதை நோக்கி வரும் போது அமைதியாக வருதல்:
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழுச் செய்து பிறகு தொழுகையை நாடியவராக மஸ்ஜிதுக்கு வருவாரானால், விரல்களைப் பின்னிக்கொண்டு, கோர்த்துக்கொண்டு வர வேண்டாம். தொழுகைக்கு வர நாடினால் அவர் தொழுகையில் இருப்பவர் போல் தான்” (திர்மிதி).
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தொழுகை நிலை நாட்டப்பட்டு விட்டால் நீங்கள் விரைந்தோடி வரவேண்டாம் மிகவும் அமைதியாகவும், கண்ணியமாகவும் வாருங்கள். நீங்கள் அடைந்தால் தொழுங்கள், தவறினால் தவறியதை நிறைவேற்றுங்கள். தொழுகைக்காக வரும் ஒருவர் தொழுகையில் இருப்பவர் தான்” (ஆதாரம்:- புஹாரி).
வலது காலை முன்வைத்தவராக மஸ்ஜிதுக்குள் நுழைதல்:
“அல்லாஹ்வின் தூதர் அனைத்துக் காரியங்களிலும் வலதை முற்படுத்துவதை விரும்புபவர்களாக இருந்தார்கள்” (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), புஹாரி).
மஸ்ஜிதுக்குள் நுழையும் போது ஓத வேண்டிய பிரார்த்தனைகளில் கவனம் செலுத்தல்:
أَعُوذُ بِاللهِ الْعَظيمِ ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَجِيمَ.
(மகத்துவத்திற்குரிய அல்லாஹ்விடம் சங்கையான அவனது முகத்தைக் கொண்டும், பூர்வீக அவனது முழுமையான அதிகாரத்தைக் கொண்டும் சாபத்திற்குள்ளான ஷைத்தானின் தீங்குகளை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.)
அல்லாஹ்வின் தூதர் மஸ்ஜிதுக்குள் நுழையும் போது இந்த பிறார்த்தனையை ஓதுபவர்களாக இருந்தார்கள். எவர் இதை ஓதியவராக மஸ்ஜிதுக்குள் நுழைவாரோ, இவர் நாளின் எஞ்சிய நேரத்தில் எனது தீங்குகளை விட்டு பாதுகாப்புப் பெற்று விட்டார் என ஷைத்தான் கூறுகின்றான் என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் (ரலி), அபூதாவுத்).
“நீங்கள் மஸ்ஜிதுக்கு நுழையும் போது இதை ஓதிக்கொள்ளுங்கள்:
اللَّهُمَّ افْتَحْ لِى أَبْوَابَ رَحْمَتِكَ
“அல்லாஹும்மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக”
நாயனே! உன் அருள்வாயில்களை எனக்குத் திறந்துவிடுவாயாக!” என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஉஸைத் (ரலி), முஸ்லிம்).
தொகுப்பு: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி