Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2012
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,931 முறை படிக்கப்பட்டுள்ளது!

சட்டைப் பையில் சாம்ராஜ்யம்

அசுரத்தனமான உழைப்பு. தன்னுடைய கருத்துக்களை தன் சமூகமே ஏற்காத போது தன் இலக்குகளின் மீதான அபார நம்பிக்கை. இவை இரண்டும் சிலருக்கு இருந்ததுதான் விஞ்ஞான உலகின் உயிர் நாடியான கணிப்பொறியின் வெற்றி ரகசியம்.

ஒவ்வொரு  வீட்டிலும், தொலைக்காட்சி பெட்டி வைப்பதையே பிரமிப்பாக பார்த்த காலத்தில் அகண்டு விரிந்த கட்டிடங்களில் மொத்த பரப்பளவை அடைத்துக்கொண்டு ராட்சஷ வடிவில் இருந்த கணிப்பொறியை ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி பெட்டிக்கு இணையாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்ட அந்த நம்பிக்கை மனிதர்கள், நம்முள் வெற்றி முனைப்பை ஏற்படுத்தும் முன்னோடிகள்.

ஒரு கருத்து எப்படி வெற்றி பெறுகிறது. அதன் பின்னால் இருக்கும் முயற்சிகள் என்னென்ன என்று அறிந்து கொள்கிற பொழுது நம் சிந்தனைகள் வெற்றியடைவதற்கான வழிகள் நமக்கு புலப்படும். இன்று வளர்ச்சியின் உச்சம் தொட்டு, நாம் கணிப்பொறியை இயக்கிய காலங்கள் மறைந்து இன்று கணிப்பொறி நம்மை இயக்கி வருவதால் கணிப்பொறியின் வெற்றிப்பாதை உங்கள் பார்வைக்கு…

1946 ENAIC  (எலெக்ட்ரானிக்  நியூமரிகல் இன்டிகிரேடர்  அண்ட் கம்ப்யூட்டர்)

“ENAIC” – இதுதான் கணிப்பொறியின் மூதாதையர் என்று கொள்ளலாம். உலகின் முதல் கணிப்பொறி ENAIC என்ற பெயரில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்டு, போர் முடிவுற்றபின் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தில் பராமரிக்கப்பட்டது. அந்த முதல் கணிப்பொறியின் அழகிய வடிவமைப்பு விபரங்கள் இதோ: எட்டடி உயரமுள்ள நாற்பது அறைகள், 18000 வால்வுகள். இவை அனைத்தும் சாதாரண கூட்டல் கழித்தல் கணக்குகள் போடுவதற்காக பயன்படுத்தப்பட்டவையாம்!!!

1954 SAGE  (செமி ஆட்டோமெடிக் கிரவுண்ட் என்விரோன்மெண்ட்)

கணிப்பொறியின் பயன்பாடு விரிவாக்கப்பட்டு, அதன் இரண்டாம் வளர்ச்சி என்று SAGE பெயரிடப் பட்டது. அளவில் மிக பெரியதாய், விமானத்துறைக்கு பயன்படும் விதமாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு மாபெரும் கான்கிரிட் கட்டடத்தின் மொத்த தளத்தையும் ஆக்கிரமித்து 300 டன் எடையில் உருவாக்கப் பட்டிருந்தது.

1960, NEAC   (நிப்பான்  எலக்ட்ரிக் கம்பெனி)

மூன்றாம் நிலை கணிப்பொறி நிப்பான் எலக்ட்ரிக் கம்பெனியால் தயாரிக்கப்பட்டது. உருளையான டிரம் போன்ற வடிவில் ஜப்பானியர்களால் தயாரிக்கப்பட்டு வணிகத் துறையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது.

1964,  IBM System 360

இந்த வடிவமைப்பில் தான் வணிகம் முதல் விஞ்ஞானம் வரை அனைத்து பயன்பாடுகளும் ஒரே கணிப்பொறியில் பயன் படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் நாசா ஆய்வு மையத்தில் உபயோகப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக மென்பொருள் (Software) பயன் படுத்தப்பட்ட கணிப்பொறியும் இதுவே!!

1964 CDC, (கண்ட்ரோல் டேட்டா கார்ப்பரேசன்) 6600

உலகின் முதல் வேகமாக இயங்கும் கணிப் பொறி என்ற பெருமையைப் பெற்றது CDC. “கண்ட்ரோல் டேட்டா கார்பரேசன்” நிறுவனத்தால் “செமோர் கிரே” என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 1969ஆம் ஆண்டு சூப்பர் கம்ப்யூட்டர் என்ற நவீன கணிப்பொறியை வடிவமைத்து அவர் சாதனையை அவரே முறியடித்தார்.

1965 DEC, (டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேசன்) -8

கணிப்பொறி வணிக ரீதியாக வெற்றியடைந்தது இந்த வடிவமைப்பின் மூலம்தான். “டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேசன்” மூலமாக சந்தைப் படுத்தப்பட்டு மொத்தம் 50000 கணிப்பொறிகள் ஒரே நேரத்தில் விற்று சாதனை படைத்தது.

1971  KENBAK-1

இன்றளவும் உலகின் முதல் தனி நபர் கணிப்பொறி (personal computer)  என்ற பெருமை பெற்றது Kenbak வகை கணிப்பொறிகள்தான். இதனுடைய உள் வாங்கும் திறன் (input) குறைவு என்பதால் வணிக ரீதியாக இதன் விற்பனை தோல்வி யுற்றது.

1976 CRAY-1

CRAY-1  சந்தைப் படுத்தப்பட்ட நாள் முதல் விற்பனையில் முதல் இடம் பிடித்தது. செமோர் கிரேவின் எண்ணற்ற வடிவமைப்புகளில் மிகவும் வேகமாக கணக்கு போடும் திறன் வாய்ந்த கணிப்பொறி இதுவே!!

1976 Apple I

ஹெவ்லெட் பக்கர்ட் (Hew lette Packard) நிறுவனத்தால் இந்த வடிவமைப்பு நிராகரிக்கப்பட்டது. இருந்த போதும் தன் கண்டுபிடிப்பின் மேல் இருந்த நம்பிக்கையால் Apple ஐ கணிப்பொறியை வடிவமைத்த ஸ்டீவ் வாஷ்னிக் தன் நண்பர்களுடனும் சிலிக்கன் வேல்லி என்ற நிறுவனத்துடனும் இணைந்து இந்த கணிப்பொறியை விற்பனைக்குக் கொண்டுவந்தார். இதன் துவக்க விலை $666. விற்பனையில் சரிவு கண்டபோதும் Apple II கணிப்பொறியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது Apple I கணிப்பொறியின் தோல்வி தான்.

1981 IBM Personal Computer

இன்று நாம் உபயோகப்படுத்தும் கணிப்பொறிகள் இந்த வகையைச் சார்ந்த வையே. IBM நிறுவனம் தான் முதலில் கணிப் பொறியோடு தட்டச்சுப் பலகை (keyboard)  மற்றும் பிரிண்டர், கணினித் திரை ஆகிய அனைத்து பாகங்களையும் கொண்ட கணிப்பொறியை வடிவமைத்தது. இந்த வடிவமைப்பே மற்ற நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கியது.

1983 (Hewlett- packard)

விஞ்ஞானத்தின் அடுத்த புரட்சியை ஏற்படுத்திய மாடல் இதுவே! முதல் முதலில் தொடு திரை (touch screen) எனப்படும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்தது. விரல்களில் வித்தை காட்டும் கணிப்பொறிகள் 1983ஆம் ஆண்டே பழக்கத்தில் வந்துவிட்டது.  ஆச்சரியம்தான்.

1997 Deep Blue

IBM நிறுவனத்தால் Deep Blue  திட்டம் துவங்கப்பட்டது. இந்த மாடலின் நோக்கமே யாராலும் தீர்க்கமுடியாத கணக்குகளை தீர்ப்பது. மற்றும் ஓர் ஆச்சரியமான தகவல் Deep Blue ரக கணிப்பொறி உலகின் முன்னணி சதுரங்க வீரர் கேரி கேஷ்பராவையே தோற்கடித்திருக்கிறது! மனிதன் மூளையால் கண்டறியப்பட்டு இன்று மனித மூளைகளையே தோற்கடிக்கும் வாமன அவதாரம்  எடுத்திருக்கின்றன கணிப்பொறிகள்.

2007 i Phone

கைக்கு அடக்கமான இணையதள இணைப்புடன் வளம் வரும் குட்டி கணிப் பொறி. நம் கைகளில் ஆறாம் விரலாய் ஒட்டிக்     கொண்டிருக்கும் செல்ஃ போன் போன்ற வடிவில் இருக்கும் i Phone-    கள்தான் இன்றைய தொழில் அதிபர்களின் செல்லக் குழந்தைகள்.

2010 i Pad

கடல் அளவு விரிந்து கிடந்த கணிப்பொறி இன்று நம் கைகளில் சிறு கேப்சூல் வடிவில் சுருங்கி இருக்கிறது. இந்த அதி நவீன கணிப் பொறியின் பெயர் i Pad. துல்லிய திரை, கணக்குகள், விளையாட்டு, இணையதளம் என ஒட்டுமொத்த உலகமும் உள்ளங்கைகளில் அடக்கம்.

கணிப்பொறி பற்றிய நம் பார்வை ஒரு விஞ்ஞானத்தின் வளர்ச்சியை போற்றுவதற்கும் ஆராதிப்பதற்கும் மாத்திரம் அல்ல. வெற்றிக்குப் பின்னால் எத்தனை தடைக்கற்கள் இருப்பினும் அதை தகர்த்தெறிய துணை நிற்கும் நம் நம்பிக்கை உத்திகளை படம்பிடித்துக் காட்டவே!

உதாசீனங்களை உதறித் தள்ளி உலகைத் தன் சட்டைப் பைக்குள்  போட்டுக் கொண்டது கணிப்பொறி. இப்போது சட்டைப்பை அளவில் சுருங்கியும் விட்டது. சின்னதாய் ஒரு கம்ப்யூட்டர் இருந்தால் சட்டைப் பைக்குள் ஒரு சாம்ராஜ்யம் இருப்பது போல!

நன்றி:  கனகலஷ்மி – நமது நம்பிக்கை