ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின் இதில் இரும்புச் சத்து இருக்கும்.
இது தான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இன்று இந்தியாவில் 70 சதவிகிதம் பேர் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான உணவுகள் இன்றி வளர்கின்றனர்.
இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின் போது அவர்கள் போதிய சத்தின்றி உடல் நலம் குன்றி காணப்படுகின்றனர். இதனால் அவர்கள் பூப்பெய்தியவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்கிறார் பிரபல குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயராணி
அவர் மேலும் கூறியதாவது:-
இரும்பு சத்து குறைவினால் அதாவது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சேர்வடைந்து விடுகிறது. மேலும் பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. ரத்தத்தில் பித்தம் அதிகரித்து ரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது.
மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன் றவை ஏற்படுகிறது. இதனால் ரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது. காரணங்கள் ரத்த சிவப்பணுக்கள் தொடக்கம் சீராக இல்லாத நிலையில் ரத்த சோகை உண்டாகும். வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்த சோகை உண்டாகும்.
ரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் ரத்த சோகை ஏற்படும். ரத்தம் அதிகம் வெளியேறுவதால், ரத்தம் மாறுபடுதல், வயிற்றில் அல்சர், வயிற்றில் கட்டி, வயிற்றில் வீக்கம், வயிற்றிலோ, குடலிலோ ஏற்படும் புற்று நோய் காரணமாக சில சமயம் தொடர்ந்து ரத்தம் உள்ளே கசியும், வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அவை காலப்போக்கில் வயிற்றில் ரத்த கசிவை ஏற்படுத்தலாம்.
குழந்தையின் பிறப்பின் போது ஏற்படும் ரத்த இழப்பு போன்ற காரணங்களால் ரத்த சோகை பெண்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இவர்கள் குழந்தை பேறுக்குப்பின் உடல் பலம் இழப்பதால், கை, கால் மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் வலி ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு, சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு, உணவு செரிமானமாகாமல் இருத்தல், உடல் வெளுத்து காணப்படல், முகத்தில் வீக்கம் உண்டாகுதல், நகங்களில் குழி விழுதல், குழந்தைககளுக்கு கண் குவளைகள் மற்றும் நாக்கு வெளுத்து இருத்தல், உடல் நலம் சரியில்லாதது போன்ற உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம், இதயம் வேகமாகத் துடிப்பது அல்லது தாறுமாறாகத் துடிப்பது, குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை.
இதெல்லாம் போக தலைவலி, நாக்கு உலர்ந்து, போவது, சுவையுணர்வு பாதிக்கப்படுவது, முழுங்கச் சிரமமாக இருப்பது, உடல் வெளுத்துப் போவது, வாயின் ஓரங்களில் புண் ஏற்படுவது, அதிகம் வியர்ப்பது, கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பது, கை கால்களில் வீக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் சிலருக்கு அரிதாக ஏற்படும். சாதாரணமாக ஒரு ரத்த சிவப்பணு 110-120 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். அதற்கு பிறகு சிதைந்து விடும்.
ஆனால் சில நோய்களின் காரணமாக ரத்த சிவப்பணுக்கள் மிகச் சீக்கிரமாகவே இறந்து விடும். அப்படி நடக்கும் போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அப்படி எலும்பு மஜ்ஜைகளால் அந்த அளவுக்கு ரத்த செல்களை உருவாக்க முடியாவிட்டால் ஹீமலோலிசிஸ் என்ற ரத்த சோகை ஏற்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு, நோய் தொற்று சில மருந்துகள், நச்சுப் பொருள்கள் ஆகியவற்றால் ஹீமமோசிலிஸ் ஏற்படலாம். ரத்த சோகை இருப்ப வர்களுக்கு சோர்வும், சோம்பலும் ஏற்படும், சோர்வு என்பது உடல் ரீதியானது. சோம்பல் என்பது மனரீதியானது. ஒருவர் உடல் ரீதியாக சோர்வாக இருந்தால் அவரது மனநலன் பாதிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இவை போக மேலும் சில அறிகுறிகள் இருக்கின்றன.
பரிசோதனை:
ரத்த சோகை இருப்பது சாதாரண ரத்த பரிசோதனையின் மூலமே தெரிந்து விடும். ஒருவருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாக தெரிந்தால் அவருக்கு ரத்த சோகை இருப்பதாக அர்த்தம். நோயாளியின் உடலில் இரும்பு சத்து குறைவாக இருந்தால் அவருடைய ரத்த சிவப்பணுக்கள் சிறியதாகவும், வெளுத்துப் போயும் காணப்படும்.
வைட்டமின் குறைபாடு இருந்தால் அவர்களது ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாகவும் பெரியதாகவும் இருக்கும். ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 11.15 கிராம் ஹீமோகுளோபின் இருக்கும்.
ரத்த சோகையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகள்:
பிரசவம்:
கர்ப்பமான பெண்களுக்கு ரத்த சோகை இருந்தால் பிரசவத்தின் போதும், அதற்கு பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம், பிரசவத்தின் போது பொதுவாகவே அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்த சோகை நோய் இருந்தால், ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும். தாய்க்கு ரத்த சோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது. அந்த குழந்தைகளுக்கும் ரத்த சோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.
சோர்வு:
ரத்த சோகை நோயாளிகளின் வாழ்க்கை முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், ரத்த சோகை தீவிரமாக இருந்தால், வேலை பார்ப்பதே அவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். தங்களுடைய தினசரி வேலைகளையே அவர்களால் கவனிக்க முடியாமல் போகக்கூடும். இந்த நீண்ட கால சோர்வின் காரணமாக ஒருவர் மன அழுத்த நோயாளியாகும் வாய்ப்பும் இருக்கிறது.
ஆரோக்கிய மானவர்களைவிட, ரத்த சோகையுடன் கூடியவர்கள் நோயில் சிக்கும் வாய்ப்பு அதிகம். ரத்த சோகையின் காரணமாக ரத்தத்தில் எடுத்து செல்லப்படும் ஆக்சிஜனின் அளவு குறைவதால் அதிக ஆக்சிஜனுக்காக இதயம் அதிகமாக ரத்தத்தை `பம்ப்’ செய்ய வேண்டியிருக்கும். இது தொடரும் பட்சத்தில் இதயம் செயலிழக்கக் கூடும்.
ரத்த சோகையின் காரணமாக வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும். இதனால் நரம்புகள் சேதம் அடையும் வாய்ப்பு இருக்கிறது. நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி 12 போதுமான அளவில் உடலில் இருப்பது அவசியம்.
இரும்பு குறைபாடு, உடலில் தேவையான அளவு இரும்பு சத்து இருப்பதை இறுதி செய்வதற்காக இரும்பு சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடலாம்.
உணவுமுறை:
நோயாளி இரும்பு சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால், இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும், கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயா பீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. வலிநிவாரணி, வீக்கத்தை குறைக்கும் மருந்துகளாலும், ரத்த சோகை ஏற்படலாம் என்பதால் அவற்றிற்கான மூல காரணத்தை சரி செய்ய வேண்டும்.
இத்தகைய ரத்த சோகையை போக்க குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைக்கீரை, அரைக் கீரை, ஆரைக்கீரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பலை, அகத்திக் கீரை, பொன்னாங் கண்ணி கீரை போன்ற கீரைகளையும், திராட்சை, பேரீட்சை, உலர்ந்த திராட்சை பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம், சப்போட்டா ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும், கொடுத்து வருவது நல்லது.
இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும். மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுத் தங்களி, பாதாம் பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.
நன்றி: ஜஃப்னா பீசி