புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது அருளும் சாந்தியும் நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் தோழர்கள்; அனைவர் மீதும் உண்டாவதாக!
சிறப்புமிக்கதொரு மாதம் நம்மிடம் வந்துள்ளது. இது ஓர் உன்னதமான பருவ காலம் இம்மாதத்தில் அல்லாஹ் பெருமளவு கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கிறான். ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் இம்மாதத்தில் நன்மையின் வாயில்களை திறந்து விடுகின்றான். இம்மாதம் வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.
நோன்பு இஸ்லாமிய அடிப்படை கடமைகளில் ஒன்று
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். (2:183)
இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்ப்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
யார் நோன்பு என்ற இந்த கடமையை மறுக்கின்றாரோ அவர் காஃபிராகி விடுவார்.இஸ்லாமிய ஆட்சியில் திருந்தி பாவமன்னிப்பு தேடுமாறு கூறவேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் நம்பிக்கை கொண்ட பின் (முர்தத்)இஸ்லாத்தை விட்டு விலகிச்சென்றவன் என்ற அடிப்படையில் அவனைக்கொன்றிட வேண்டும். பிறகு அவனை குளிப்பாட்டவோ,கஃபனிடவோ, ஜனாஸா தொழுகை நடத்தவோ, முஸ்லீம்களின் கப்றுஸ்தானத்தில் அடக்கம் செய்யவோ கூடாது.
- ரமழான் மாத நோன்பு ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.
- நபி(ஸல்) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.
ரமழான் மாதத்தின் சிறப்புகள்
- மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கின்ற அல்குர்ஆன் அருளப்பட்டமாதம். (2:185)
- ரமழான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும் அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும். அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக்கொள்ளுங்கள்!” என்று உரக்கச்சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : திர்மிதி, இப்னுமாஜா)
- ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : அஹ்மத்)
- ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத்தவிர என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
- யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)
- யார் (உறுதியான)நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமழான் மாதத்தில் (இரவில்) நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்
- எவர் ரமழானில் உம்ரா செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)
- ரமழான் மாதத்தில் லைலத்துல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்.
நோன்பின் சிறப்புகள்
- நோன்பின் பரிந்துரை : நோன்பும், அல்குர்ஆனும் மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும், நோன்பு கூறும் என் இறைவா! நான் இந்த அடியானை உணவை விட்டும் மனஇச்சையை நிறைவேற்றுவதை விட்டும் தடுத்துவைத்திருந்தேன்! எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக! குர்ஆன் சொல்லும் : நான் இவனை இரவில் தூங்க விடாமல் தடுத்திருந்தேன். எனவே இவன் விஷயத்தில் எனது சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக! இவ்வாறு இவ்விரண்டும் சிபாரிசு செய்யும். (ஆதாரம் : அஹ்மத்,தபரானி,ஹாகிம்)
- நோன்பு ஒரு கேடயமாகும். அதனைக்கொண்டு மனிதன் நரகத்திலிந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். (ஆதாரம் : அஹ்மத்)
- சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு ‘அர்ரய்யான்’; என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத்தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)
- நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும் போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் (என) இரு சந்தோசங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)
- எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்ப்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டும் எழுபது ஆண்டு தொலைவுக்கு தூரப்படுத்துவான். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)
ரமழான் நோன்பு எப்போது ஆரம்பம்?
பிறை பார்த்து நோன்பை ஆரம்பிக்கலாம். அல்லது உலகின் ஏதாவது ஒரு பகுதியில் பிறை பார்கப்பட்டதாக உறுதியான தகவல் ஒரு நபரின் மூலம் கிடைத்தாலும் ரமழான் நோன்பின் வருகையை உறுதி செய்யலாம். பிறைபார்க்;க முடியாமல் மேக மூட்டமாக இருந்தால் ஷஅபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து ரமழானின் நோன்பை நோற்கலாம். இம்மூன்று வழி முறைக்கும் குர்ஆன் சுன்னாவில் தெளிவான, உறுதிமிக்க ஆதாரங்கள் உண்டு.
ஆனால் சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்க்கக்கூடாது. ரமழான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் உங்களில் யாரும் (சுன்னத்தான) நோன்பு நோற்க்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்ப்பவர் நோற்றுக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)
ரமழான் நோன்பு கடமையானவர்கள்
- காஃபிர்கள், வேண்டுமென்றே தொழுகையை விட்டவர்கள் மீது நோன்பு கடமையாகாது. தொழுகையை யார் விட்டானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம் : அஹ்மத்)
- பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாத வர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும் பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்க்குமாறு ஏவலாம். ஸலஃபுகளிடத்தில் இதற்கு நல்ல முன்னுதாரணங்கள் உண்டு.
- பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் மீது நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்பிற்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
- முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
- சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க் கப்படும் நோயாக இருந்தால், அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.
- பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதி யுள்ளது. ஊர் திரும்பிய பின், விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.
- கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்ப்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டிய அவசியமில்லை. விடுபட்ட நோன்பிற்காக ஒரு நோன்பிற்கு ஒரு ஏழை வீதம் உணவளிக்க வேண்டும்.
- மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்க்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க்க வேண்டும்.
- நீரில் மூழ்குதல் மற்றும் தீ விபத்துப் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பின்பு அந்த நோன்பை நோறக்;க வேண்டும்.
- நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் ஒருவர் மரணம் அடைந்தால் அவருக்கு பதிலாக அவருடைய பொறுப்பாளர் (வாரிசோ, உறவினரோ)நோன்பு நோற்க்க வேண்டும்.
- பொறுப்பாளர் யாரும் இல்லையெனில் அல்லது பொறுப்பாளர் நோன்பு நோற்க்;க விரும்பவில்லை யெனில் மரணித்தவருக்கு எத்தனை நோன்புகள் கடமையாக இருந்ததோ அத்தனை நோன்புகளுக்கும் ஒரு நாளைக்கு ஒரு ஏழை வீதம் உணவு வழங்க வேண்டும்.
நோன்பை முறிக்கும் செயல்கள்
- சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்ற வற்றால் நோன்பு முறிந்துவிடும்.
- முத்தமிடுதல், அணைத்தல்,உடலுறவு, சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும். தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
- உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை(மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்பிற்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.
- மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும்.
வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அதற்குரிய பரிகாரம்:
- வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அதற்குரிய குற்ற பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்வது. அல்லது தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க்க வேண்டும். அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)
நோன்பாளிகளின் கவனத்திற்கு:
- நாம் செய்யும் எல்லா இபாதத்துகளுக்கும் நிய்யத் அவசியம். எனவே ஒவ்வொரு நாளும் ஃபஜ்ருக்கு முன் நோன்பு நோற்பதாக நிய்யத் வைக்க வேண்டும்.(நிய்யத் என்பது வாயால் மொழிவதல்ல மனதால் எண்ணுவது)
- பல்துலக்குவது, சிறு காயங்கள், விபத்துக்கள் மூலம் ரத்தம் குறைவாகவோ, அதிகமாகவோ வெளியாகுதல், வாந்தி எடுத்தல் போன்ற காரணங்களினால் நோன்பு முறியாது.
- இரத்ததானம் செய்தல், ஊசி வழியாக உடம்பிற்கு மருந்து செலுத்துதல், கண் காதுக்கு சொட்டு மருந்து விடுதல், எச்சில் விழுங்குதல், தொண்டைக்குள் சென்று விடாத வகையில் உணவை ருசிபார்த்தல், போன்ற காரணங்களினால் நோன்பு முறியாது.
- மறதியாக உண்பதினாலோ பருகுவதினாலோ நோன்பு முறிந்து விடாது.
- நகம், முடிவெட்டுதல், நோன்பின் பகல் வேளையில் குளித்தல், சுரும்மா இடுதல், வாசனை திரவியங்கள் பூசுதல் போன்ற காரணங்களினால் நோன்பு முறியாது.
- எல்லை தாண்டாத அளவிற்கு சுய கட்டுபாடு உள்ளவர் மனைவியை அணைப்பதும், முத்தமிடுவதும் கூடும்.
- குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோறக்;கலாம் ஆனால் ஃபஜ்ரு தொழுகைக்கு குளிப்பது கட்டாயம்.
ரமழான் மாதத்தில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்:
- தொழுகை இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமை. இக்கடமையை உரிய நேரத்தில் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும்.
- நோன்பு நோற்பவர்கள் ஸஹர் உணவு உண்பதும், அதை பிற்படுத்துவதும், இஃப்தாரை முற்படுத்துவதும் இவ்விரண்டு உணவு வேளைகளில் பேரீத்தம் பழம் உண்பதும் விரும்பத்தக்க ஒழுங்கு முறைகளில் உள்ளதாகும்;
- யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : திர்மிதி) இதுவும் ரமழானில் நமக்கு நன்மையை பெற்றுத்தரும் நற்செயலாகும்.
- சுன்னத், நஃபிலான வணக்க வழிபாடுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்
- பாவங்களிலிருந்து விலகி இருப்பதுடன் நம்முடைய குணத்தை சீராக்கி இறையச்சத்தை அதிகரிக்க வேண்டும்.
- ரமழான் மாதம் திருக்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் எனவே குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். தினமும் ஒரு ஜூஸ்வு வீதம் குர்ஆன் முழுவதையும் ஓதி முடிக்க முயற்சிப்பது, ஆயத்துகள் அல்லது சூராக்களை மனனம் செய்வது, குர்ஆன் ஓதத்தெரியாதவர்கள் நன்றாக ஓதத்தெரிந்தவர்களிடம் ஓதக்கற்றுக்கொள்வது, திருக்குர்ஆனின் பொருளை உணர்ந்து சிந்திப்பதுடன் அதன் விளக்கங்களை தெரிய முயற்சிப்பது, குர்ஆன், சுன்னாவை நம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நடைமுறை படுத்த பயிற்;சி எடுத்துக்கொள்வது. இதுபோன்ற நல்ல அமல்களில் ஈடுபடவேண்டும்.
மூவருடைய பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அம்மூவரில் ஒருவர் நோன்பாளி எனவே ரமழானில் தினமும் அதிகமாக துஆச்செய்ய வேண்டும். இந்த துஆக்கள் குறிப்பாக ஸஹருடைய நேரத்திலும், இஃப்தாருடைய நேரத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இருத்தல் வேண்டும். நாம் செய்யும் துஆக்களின் வாசகங்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸில் இடம் பெற்றவையாக இருந்தால் மிகச் சிறந்தது.
- இம்மாதத்தில் நபி(ஸல்) வேகமாக வீசுகின்ற புயல் காற்றை விட அதிகம் தர்மம் செய்திருக்கின்றார்கள். எனவே நாம் அண்டை, அயலார்களுக்கும், ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், வறியவர்களுக்கும், மதரஸாக்கள், கல்வி ஸ்தாபனங்கள், அழைப்புப்பணி மையங்கள்; என நம்மை நாடி வருபவர்களுக்கு நம்மால் இயன்ற பொருளாதார உதவிகளைச் செய்ய வேண்டும்.
- முஸ்லீம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய சட்ட திட்டங்களை அறியாதவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக கொள்கை (அகீதா) விஷயத்தில் பலஹீனமாக இருக்கின்றனர். எனவே குர்ஆன் ஹதீஸின் கருத்துக்களை ஸலஃபுஸ்ஸாலிஹீன்களின் புரிதல் அடிப்படையில் மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதற்கும், அவர்கள் ஆற்றிய உரைகளை கேட்பதற்கும் இம்மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
- இஸ்லாமிய இணைய தளங்களை பார்த்து பயனுள்ள தகவல்களை சேகரித்து கௌ;வதுடன் மின் அஞ்சல் வழியாக நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளவேண்டும்.
- இஃப்தார் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து மாற்று மத நண்பர்களை அழைத்து அவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
- கடைசி பத்து நாட்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்து ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவான லைலத்துல் கத்ரு இரவை அடைய முயற்ச்சிப்பது.
- மரணத்திற்கு பின் உள்ள வாழக்கைக்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள இம்மாதத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வோம்.
ரமழான் மாதத்தில் அவசியம் தவிர்க்க வேண்டிய தீய பழக்கங்கள்
- இறந்து போன அவ்லியாக்களை அழைத்து பிரார்த்தனை செய்வது, உதவிதேடுவது, அவர்களுக்காக நேர்ச்சை செய்வது, அறுத்து பலியிடுவது, அவர்களின் கப்ருகளை தவாஃப், ஸஜ்தா செய்வது இதுபோன்ற இணைவப்பான காரியங்களின் மூலம் நோன்பு உட்பட நாம் செய்யும் அனைத்து நல்லறங்களும் அழிந்து விடும். பார்க்க அல் குர்ஆன் 39 : 65,6:88
- ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமழான் மாதம் பத்ரு போர் நடை பெற்றது. இதனை காரணமாக வைத்து பத்ரு மவ்லூது என்றொரு மவ்லூதை பாடிவருகின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய (பித்அத்தான)வழிகேடான காரியமாகும்.
- பொய், புறம், கோள், கேலி, கிண்டல், கோபம், வீண் விவாதங்கள், அசிங்கம், ஆபாசம், மோசடி, நம்பிக்கை துரோகம்… போன்ற அனைத்து தீய பண்புகளிலிருந்தும் விலகி இருத்தல் வேண்டும்.
- யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : புகாரி)
- புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
உங்களுடைய கரங்களால் உங்களுக்கு அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்!. (2:195), உங்களை நீங்களே மாய்த்துக்கொள்ள வேண்டாம்.(4:29) நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் : நமக்கும் நாம் தீங்களிக்கக் கூடாது பிறருக்கும் தீங்களிக்கக் கூடாது.(ஆதாரம் : இப்னு மாஜா, ஹாக்கிம்)
- சினிமா, இசை, பாடல்கள், நாடகங்கள், போன்ற தீய பழக்கங்களிலிருந்து விலகி இருத்தல் வேண்டும். பார்க்க அல் குர்ஆன் (31:6)
நபி(ஸல்) கூறினார்கள் : இந்த சமுதாயத்தில் பூமியினுள் புதையுண்டு போவதும், கல்மாரி பொழிவதும், உருமாற்றமும் ஏற்படும் இது அவர்கள் மது அருந்துவதினால், பாடகிகளை வைத்து பாடல்களை கேட்டால், இசை கருவிகளை உபயோகிப்பதால் அவ்வாறு நிகழும் (ஆதாரம் : திர்மிதி)
இப்னு ஹஸ்ம்(ரஹ்)கூறுகிறார் : அன்னியப்பெண்ணின் குரலை கேட்டு ரசிப்பது முஸ்லீம்கள் அனைவர் மீதும் ஹராமாகும்.
- அதிகமான நேரங்களில் தூங்கியும், கேரம்போர்டு, செஸ், லுடோ இதுபோன்ற சதுரங்க விளையாட்டுக்களை விளையாடியும், கேளிக்கைகளில் ஈடுபட்டும் நேரங்களை வீணடிக்கவேண்டாம்.
குற்றவாளிகளைக் குறித்து- உங்களை ஸகர்(நரகத்தில்)நுழைய வைத்தது எது?(என்றுகேட்பார்கள்.)…(வீணானவற்றில்)மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம் எனக் கூறுவர்:(74 : 41,45)
நபி(ஸல்)கூறினார்கள் எவனொருவன்(சதுரங்கம்)செஸ் விளையாடுகிறானோ அவன் தனது கையை பன்றியின் இறைச்சியிலும் இரத்தத்திலும் நனைத்தவனைப்போலாவான் (ஆதாரம் : முஸ்லிம்)
இது போன்ற அனைத்து தீய பழக்கங்களை விட்டும் ரமழானிலும் அல்லாத நாட்களிலும் நம்மை பாதுகாதுகாத்துக்கொள்வோம்.
இறுதி பத்து நாட்கள், லைலத்துல் கத்ரு, இஃதிகாஃபின் சிறப்புகள்
(நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.(43 : 3,4)
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:1-5)
யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ரு (இரவில்) நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி) இந்த நபி மொழியிலிருந்து பெண்களும் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. ரமழானின் இறுதி பத்து நாட்களின் சிறப்பு குறித்து ஏராளமான நபி மொழிகள் வந்துள்ளன.
மேலே கூறப்பட்டுள்ள நபி மொழிகளிலிருந்து ரமழானின் இறுதி பத்து நாட்களின் சிறப்பை உணர முடிகிறது. ஒரு மனிதன் லைலத்துல் கத்ரு இரவை அடைந்து விட்டால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்கு கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது.
லைலத்துல் கத்ரு இரவு எப்போது?
ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படையான நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)இந்நபி மொழியிலிருந்து நோன்பு 21,23,25,27,29 ஆகிய தினங்களில் ஏதேனுமொன்றில் லைலத்துல் கத்ரு இரவை அடைந்து கொள்ளலாம் என்பதை அறியமுடிகிறது. ஆனால் முஸ்லீம்களில் பெரும்பாலோர் 27 ஆம் இரவுதான் லைலத்துல் கத்ரு என்று எண்ணி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதை காணலாம். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய (பித்அத்தான)வழிகேடான காரியமாகும்.
கடைசி பத்து நாட்களில் ஓதவேண்டிய துஆ
أللهم إنك عفو تحب العفو فاعف عني
தமிழில்; : அல்லாஹ{ம்ம இன்னக்க அஃகப்;வுன் துஹிப்புல் அஃகப் வ ஃகபஉஃகபு அன்னீ.
பொருள் : இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (ஆதாரம் : திர்மிதி)
ஜகாத்துல்ஃபித்ர் பெருநாள் தர்மம்
நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஜகாத்துல்ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். (ஆதாரம் : அபூதாவூத்)
யாரின் மீது கடமை?
முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், குழந்தைகள், அடிமை, சுதந்திரமானவர் என அனைவர் மீதும் ஜகாத்துல்ஃபித்ர் பெருநாள் தர்மம் கடமை. உஸ்மான்(ரலி) அவர்கள் வயிற்றிலுள்ள சிசுவிர்க்காகவும் இத்தர்மத்தை வழங்கி இருக்கின்றார்கள். பேணுதல் அடிப்படையில் இவ்வாறு வழங்குவது குற்றமாகாது.
எவற்றை தர்மமாக வழங்க வேண்டும்?
நாம் எந்த உணவை உண்போமோ அதுபோன்ற உணவு தானியங்களைத்தான் தர்மமாக வழங்க வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;. அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்;. ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்…(2:267) மேலும் ஆடையாகவோ, பாத்திரங்களாகவோ, வேறு பொருட்களாகவோ, பணமாகவோ வழங்குவது கூடாது. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் உணவு தானியமாகத்தான் வழங்க கட்டளையிட்டுள்ளார்கள்.
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்)கூறினார்கள். நூல் : முஸ்லிம்.
ஜகாத்துல்ஃபித்ரின் அளவும், அது வழங்கப்படும் நேரமும், அத்தர்மத்தை பெறத்தகுதியானவர்களும்:
ஜகாத்துல்ஃபித்ரின் அளவு 2கிலோ 500 கிராம் உணவு தானியமாகும்.
நோன்புப் பெருநாள் இரவிலிருந்து மறுநாள் காலை மக்கள் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்பாக ஜகாத்துல்ஃபித்ர் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும். பெருநாள் அன்று காலையில் நிறைவேற்றுவது சிறந்ததுமாகும். அல்லது பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதற்க்கும் மார்க்கத்தில் அனுமதி உண்டு. ஆனால் பெருநாள் தொழுகைக்குப் பிறகு இக்கடமையை நிறைவேற்றினால் ஏனைய தர்மங்களில் ஒரு தர்மமாகவே கருதப்படும்.
ஜகாத்துல்ஃபித்ர் தர்மம் பெற்றிட தகுதியானவர்கள் ஏழைகளும், நிறைவேற்ற முடியாத கடன் சுமை உள்ளவர்களும் ஆவார்கள். இத்;தர்மத்தை ஒன்றுக்கதிகமான ஏழைகளுக்கும் வழங்கலாம். அல்லது பலருடைய தர்மங்களை ஒரே ஏழைக்கும் வழங்கலாம். (அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்)
யா அல்லாஹ்! எங்களது தீன் பற்றிய அறிவு ஞானத்தையும் அதன்படி அமல் செய்யும் பாக்கியத்தையும் எங்களுக்கு வழங்குவாயாக! அதில் எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக! இறை விசுவாசிகளாகவே எங்களை மரணிக்கச் செய்வாயாக! மேலும் உத்தமர்களின் குழுவில் எங்களை சேர்ப்பாயாக! கருணை மிக்க இறைவனே! உனது கருணையினால் எங்களுக்கும், எங்கள் பெற்றோர்களுக்கும், அனைத்து முஸ்லீம்களுக்கும் பாவமன்னிப்பு வழங்குவாயாக!
யாசிர் ஃபிர்தெளசி – ஜுபைல் தஃவா சென்டர் – சுவனச்சோலை.காம்
_________________________________________________________________________________________________
இக்கட்டுரை தொகுக்க உதவிய நூல்கள் :
- ஷைக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்(ரஹ்) அவர்கள் எழுதிய மஜாலிஸ் ஷஹ்ரு ரமழான், ஃபதாவா அஹ்காமுஸ்ஸியாம்.
- உஸைமீன்(ரஹ்) அவர்களின் மாணவர் ஷைக் ஃபவ்ஸி இப்னுஅப்துல்லா அவர்கள் எழுதிய அத்துர்ரத்துல் முஅத்தரா ஃபீ அஹ்காமிஸ்ஸியாம் ஃபீ ஷரீஅத்தில் முதஹ்ஹரா.