Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

October 2012
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,967 முறை படிக்கப்பட்டுள்ளது!

வளமான வாழ்விற்கு வழிகள் பத்து!

முதுமை என்றாலே தள்ளாத வயது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளும் வழக்கம் பலரிடம் இருக்கிறது. முதுமையோடு முடியாமையை இணைத்தே அவர்கள் பார்க்கிறார்கள். முதுமை என்றால் உடல் ஆரோக்கியம் இல்லாமல் இருப்பதும் மன அமைதி இல்லாமல் இருப்பதும் தவிர்க்க முடியாதவை என்று எண்ணுகிறார்கள். ஆனால் நூறாவது பிறந்த நாளை சென்ற வருடம் அக்டோபர் நான்காம் தேதி கண்டு நூற்றி ஒன்றாவது பிறந்த நாளை அடுத்த மாதம் கொண்டாட இருக்கும் ஒரு ஜப்பானிய டாக்டர் இன்றும் தன் மருத்துவத் தொழிலைச் செய்து கொண்டு இருக்கிறார், இப்போதும் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார், உலக நாடுகளுக்குப் பயணித்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?

அந்த டாக்டரின் பெயர் டாக்டர் ஷிகிகி ஹினோஹரோ (Dr. Shigeaki Hinohara). இவர் தன் எழுபத்தைந்தாம் வயதிற்கு மேல் 150 நூல்களை வெளியிட்டுள்ளார். அந்த நூல்களில் ’நீண்ட காலம் வாழ்வதும், நன்றாக வாழ்வதும்’ (Living Long, Living Good) மிகவும் பிரபலமானது. இது பன்னிரண்டு லட்சத்திற்கும் மேலான பிரதிகள் விற்பனையாகி இருக்கிறது. இவர் 75 வயதிற்கும் மேற்பட்ட வயதானவர்களுக்காக “புதிய முதியோர் இயக்கம்” (New Old People’s Movement) என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். இதன் மூலமாக அவர் மக்களை நீண்ட காலம் நலமாய் வாழ உற்சாகப்படுத்தி வருகிறார்.

மனித உடலில் கிட்டத்தட்ட 36000 வித்தியாசமான ஜீன்கள் இருப்பதாகவும் அந்த ஜீன்களை மனிதர்கள் பயன்படுத்தத் தவறி விடுகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார். புதிய புதிய துறைகளில் புதிய புதிய முயற்சிகள் மேற்கொண்டு உடலையும் மனதையும் முதியவர்கள் இளமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ளலாம் என்கிறார் அவர். அது புதிய கலையானாலும் சரி, புதிய விளையாட்டானாலும் சரி புதியவற்றில் உற்சாகமாக ஈடுபடுவதே உடல், மன நலத்திற்கு பேருதவி செய்யும் என்கிறார்.

நூறாண்டு காலத்தையும் தாண்டி வெற்றிகரமாக வாழ்ந்து வரும் அவர் வளமான, நலமான, நீண்ட வாழ்வுக்கு பத்து வழிகளைச் சொல்கிறார். அவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1) உற்சாகம் முக்கியம்
உண்பதும், உறங்குவதும் முக்கியமே என்றாலும் அவற்றை விட அதிக முக்கியம் உற்சாகமாக இருப்பது. குழந்தைகள் உற்சாகமாக விளையாடும் போது சாப்பாடு, உறக்கம் மறந்து போய் விளையாடுவது போல அதே உற்சாகத்தை வாழ்க்கையில் உருவாக்கிக் கொண்டால் கண்டிப்பாக நம்முள் ஒரு பெரும் சக்தியை உணர்வோம் என்கிறார் அவர்.

2) எடை கூடாதீர்கள்
உங்கள் எடை கூடிக் கொண்டே போகாமல் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வையுங்கள் என்கிறார் அவர். சரியான சத்தான உணவுகளை அளவாக உட்கொள்வதும் வயிற்றுக்கு அதிக வேலை கொடுக்காமல் இருப்பதும் சுறுசுறுப்புக்கும் உடல்நலத்திற்கும் வழி வகுக்கும் என்கிறார்.

3) திட்டமிடுங்கள்
திட்டமிட்டு வாழுங்கள். அதன்படி இயங்குங்கள். தினமும் நல்ல விஷயங்களில் ஈடுபாடுடன் இருந்தால், எதிர்பார்க்க ஏதாவது ஒன்று எப்போதும் இருப்பதுடன் உற்சாகமும் இருக்கும், மனமும் இளமையாக இருக்கும் என்கிறார் அவர்.

4) எதையும் அனுபவித்து செய்யுங்கள்
எதைச் செய்கிறோமோ, அதில் முழு மனதுடன் ஈடுபட்டு அனுபவித்து செய்தோமானால் ஓய்வு பெறும் எண்ணமே எழாது. அறுபது வயது வரை குடும்பத்திற்காக உழைக்கிறவர்கள், அதற்குப் பின் சமூகத்திற்காகவும், மனிதகுலத்திற்காகவும் தங்களை அர்ப்பணித்து விட வேண்டும். அதையும் அனுபவித்து செய்தோமானால் நாம் நாலு பேருக்கு உபகாரமாக இருக்கிறோம் என்ற திருப்தியில் தனியொரு சக்தியையும் நிறைவையும் நாம் உணர்வோம் என்கிறார்.

5) பெற்றதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
எத்தனையோ கற்கிறோம் என்றாலும் அதனை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொண்டு உதவும் போது அவர்கள் வாழ்க்கையுடன் சேர்ந்து நம் வாழ்க்கையும் சிறப்புற அமைகிறது என்கிறார். அப்படிப் பகிர்ந்து கொள்ளும் போது நம் அறிவையும் புதுப்பித்துக் கொள்கிறோம் அல்லவா?

6) இயற்கைக்கு வாய்ப்பளியுங்கள்
எல்லா வியாதிகளுக்கும் விஞ்ஞான மருத்துவ உதவியையே நாடாதீர்கள் என்கிறார் இந்த மருத்துவர். விஞ்ஞான மருத்துவத்தில் எல்லைகள் என்றுமே உண்டு என்கிறார் அவர். இயற்கை அழகுடன் இயைந்து வாழ்தல், செல்லப் பிராணிகளுடன் மகிழ்தல், இசையில் ஆழ்தல், போன்றவை உடலோடு மனத்தையும் குணப்படுத்துவன. அதை மருத்துவரும் பரிந்துரைக்க முடியாது, விஞ்ஞான மருந்துகளும் தந்து விட முடியாது என்கிறார்.

7) நடங்கள், படியேறுங்கள்
உடலுக்கு வேலை கொடுத்து உங்கள் தசைகளை வலுவாக வைத்துக் கொள்ள முடிந்த வரை நடப்பது, லிப்டில் போவதற்கு பதிலாக படியேறிச் செல்வது போன்ற சிறிய சிறிய வேலைகளில் பெரிய பலன் உடலுக்குக் கிடைப்பதாக அவர் சொல்கிறார்.

8) பணம், பொருள்களில் மிதமாக இருங்கள்
உண்மையான சந்தோஷத்தை பணத்தாலோ, சேர்த்து வைக்கும் சொத்துகளாலோ நாம் அடைந்து விட முடியாது என்பதால் அவற்றில் ஒரு அளவான, மிதமான மனோபாவம் இருப்பது நல்லது என்கிறார். அவை முக்கியம் என்பதை மறுக்காத அவர் அவற்றை விட திருப்தி அதிக முக்கியம் என்கிறார்.

9) எதிர்பாராதவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
கோடுபோட்டது போல் போவது வாழ்க்கை அல்ல. எத்தனையோ சந்தர்ப்பங்களில் நாம் எதிர்பாராதவையே அதிகம் நடக்கின்றன. அவை எல்லாமே மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இருப்பதில்லை என்றாலும் அவர்றிலும் ஒரு படிப்பினையைப் பெறுவதும் நம் முன்னேற்றத்திற்காக ஏதாவது விதத்தில் பயன்படுத்திக் கொள்வதும் நம்மை உயர்த்துவதோடு பக்குவப்படுத்தவும் செய்யும் என்கிறார்.

10) எட்ட முடியாத உயரத்தைக் குறிக்கோளாக்குங்கள்
சாதாரணமாக எட்ட முடியாத உயரத்தை குறிக்கோளாக வைத்துக் கொள்ளுங்கள். அதை நோக்கிப் பயணிக்கும் போது தான் நம்மிடம் உள்ள கூடுதல் திறமைகளை நம்மால் அறிந்து கொள்ள முடியும். நல்ல ’ரோல் மாடல்’ ஒருவரையும் வைத்துக் கொள்வது நமக்கு ஊக்கசக்தியாக அமையும் என்று அவர் கூறுகிறார்.

அறுபது வயதில் வாழ்க்கை முடிந்து விடுவதாகவும் பின் சாகும் வரை எப்படியோ வாழ வேண்டும் என்பதாகவும் நினைப்பவர்கள் பலர் இருக்க, நூறிலும் ஒரு வாழ்க்கை முடிந்து விடுவதில்லை, அதன் உற்சாகமும் குறைந்து விடுவதில்லை என்கிறார் டாக்டர் ஷிகிகி ஹினோஹரோ. அப்படிச் சொல்பவர் அதை சாதித்தும் காட்டியவர் என்பதால் அவரிடம் இருந்து இவற்றைக் கற்றுக் கொண்டு முடிந்த வரை பின்பற்றினால் நாமும் முதுமையிலும் தளர்ந்து விட மாட்டோம் என்பது நிச்சயம்!.

– என்.கணேசன்