தூள் கிளப்பும் பிரியாணி பிஸினஸ்

எந்த பார்ட்டியா இருந்தாலும்… ‘பிரியாணி உண்டா?’ என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. வேறு எந்த விருந்திலும் திருப்தியாகாத பலரும் ஒரு பிளேட் பிரியாணியில் சமாதானமடைந்து விடுவதைப் பார்க்கலாம். அதிலும் இஸ்லாமியர் செய்கிற பிரியாணிக்கு மவுசே தனி! சைவ,அசைவ பிரியாணி செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த ஃபாத்தி முத்து ஜோஹரா.
‘‘எட்டாவதுக்கு மேல படிக்கலை. கல்யாணத்துக்குப் பிறகு கணவரோட சம்பளத்துல குடும்பம் நடத்தறது சிரமமா இருந்தது. எங்க இனத்துல சின்ன விசேஷத்துலேர்ந்து நிக்ஹா வரைக்கும் எல்லாத்துக்கும் பிரியாணிதான். சுயஉதவிக் குழுவுல சேர்ந்தப்ப, அங்க யார் வீட்ல என்ன விசேஷம்னாலும், ‘நீங்க பண்ற பிரியாணி சூப்பரா இருக்குமே… செய்து தர்றீங்களா’னு கேட்பாங்க. நிறைய ஆர்டர் வருதே… இதையே ஏன் பிசினஸா பண்ணக் கூடாதுனு தோணுச்சு… அப்படி ஆரம்பிச்சதுதான்’’ என்கிற ஃபாத்திமுத்து, பிரியாணி செய்வதைக் கற்றுக்கொண்டு தொழில் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

 என்னென்ன தேவை?‘‘சைவத்துக்குத் தனியா, அசைவத்துக்குத் தனியா பாத்திரங்கள்,பாசுமதி அரிசி, மசாலா பொருள்கள், காய்கறி, சிக்கன், மட்டன்,மளிகை சாமான்கள்… ஆரம்பத்துல 500 ரூபாய் முதலீடு இருந்தாலே போதும்.’’

என்ன ஸ்பெஷல்?‘‘பிரியாணிங்கிறது எங்களுடைய பாரம்பரிய உணவு. என்னதான் ஸ்டார் ஓட்டல்ல சாப்பிட்டாலும், நாங்க வீட்ல பண்ற பிரியாணிக்கு எதுவுமே ஈடாகாது. அந்த சுவைதான் ஸ்பெஷல்… பிரியாணிக்குத் தொட்டுக்க செய்யற கத்தரிக்காய் பச்சடி… அதுவும் எல்லாருக்கும் அதே சுவைல வந்துடாது.’’

ஒரு நாளைக்கு எவ்வளவுபிசினஸ் வாய்ப்பு?

‘‘செய்முறை பழகி, கைப்பக்குவம் வந்துட்டா, ஒரு நாளைக்கு ஒருத்தரே 10 கிலோ வரை செய்யலாம். பிசினஸா செய்ய நினைக்கிறவங்க, முதல்ல அக்கம்பக்கத்து வீடுகளுக்கு கொஞ்சம் சாம்பிள் கொடுத்துப் பார்க்கலாம். அப்புறம் அவங்கவங்க வீட்ல நடக்கிற சின்னச் சின்ன விசேஷங்களுக்கு1 கிலோ, 2 கிலோனு ஆர்டர் எடுத்து செய்து தரலாம். அப்படியே பழகிட்டா, அப்புறம் கல்யாண ஆர்டர் எடுத்துச் செய்யற அளவுக்கு பக்குவம் தானா வரும்.’’லாபம்?‘‘இடம் அல்லது விழாவுக்குத் தகுந்தாற்போல விலை நிர்ணயிக்கலாம். வெஜிடபுள் பிரியாணி ஒரு பிளேட் 100ரூபாய்க்கும், சிக்கன் பிரியாணி 130 ரூபாய்க்கும், மட்டன் பிரியாணி 160 ரூபாய் வரையும் விற்கலாம். தொட்டுக்க கத்தரிக்காய் பச்சடியும் தயிர் பச்சடியும் கொடுக்கணும். ரெண்டு மடங்கு லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?‘‘பிரியாணி, கத்தரிக்காய் பச்சடி செய்ய ஒரே நாள் பயிற்சி… கட்டணம் 500 ரூபாய்.’’

நன்றி: பயனுள்ள தகவல்கள்