உபயோகமில்லாத பழைய துணிகளை வைத்து உருப் படியாக ஒரு தொழில்!
எவ்வளவுதான் புதுத் துணிகள் வாங்கினாலும், பழசை அப்புறப்படுத்த அத்தனை சுலபத்தில் மனசு வருவதில்லை. ‘எதுக்காவது யூஸ் ஆகும்…’ என பத்திரப்படுத்தி பத்திரப்படுத்தியே, ஒரு கட்டத்தில் எதற்குமே உபயோகமில்லாமல் குப்பைக்குப் போகும் அவை. உபயோகிக்காத சேலை, அளவு சிறுத்துப் போன உடைகள் என பலரது வீடுகளையும் ஆக்கிரமிப்பது துணிக்குப்பைதான்.
உபயோகமில்லாத பழைய, புதிய துணிகளை வைத்து உருப் படியாக மெத்தையும், டேபிள் மேட்டும், மிதியடியும் செய்கிறார் ராஜ குமாரி. ‘‘கணவர் ராணுவத்தில இருந்ததால, குஜராத்தில இருந்தேன். அங்க கத்துக்கிட்டதுதான் இந்தத் துணி மெத்தை. குஜராத் மக்கள் சாப்பாட்டுலேருந்து துணி வரை எதையுமே வீணாக்க மாட்டாங்க. புடவை, சுடிதார்னு எதுவானாலும், அதை வச்சு மெத்தைகள் தைச்சு உபயோகிப்பாங்க. சின்னக் குழந்தைங்களுக்கு, பெரியவங்களுக்கு, விருந்தாளிங்க வந்தா உட்கார என பலவிதமான சைஸ்களில் எல்லா வீடுகள்லயும் துணி மெத்தைகள் இருக்கும். அதைப் பார்த்துட்டுத்தான் கத்துக்கிட்டேன்’’ என்கிற ராஜகுமாரி, கற்றுக் கொள்ள விருப்பமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?
‘‘பழைய, புதிய துணிகள், காட்டன் சேலைகள், சிந்தெடிக் சேலைகள், வேட்டிகள், வீட்டில் தையல் மெஷினில் தைக்கும்போது, வெட்டியது போக விழுகிற துண்டுத் துணிகள்… புதிய துணியில்தான் வேண்டும் என்கிறவர்கள், அதற்கு மட்டும் செலவழித்தால் போதும். ஒரு மெத்தை தைக்க 4 புடவைகளாவது வேண்டும். மற்றபடி ஊசி, நூல் மட்டுமே தேவை. தையல் மெஷின் வேண்டாம். கையாலேயே தைத்து விடலாம்.’’
என்ன ஸ்பெஷல்?