Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2013
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,061 முறை படிக்கப்பட்டுள்ளது!

பாஸிடிவ” பார்வைகள்! – சிறுகதை

பெரியப்பாவிற்கு முன்பு நாங்கள் வைத்த பட்டப் பெயர் ”பாஸிடிவ்”. ”எதையும் ”பாஸிடிவா”  பாருடா. எத்தனை மோசமான சூழ்நிலையிலும் ஒரு ”பாஸிடிவ்” அம்சம் இருக்கும். அதிலே கவனம் வை. நீ ஜெயிச்சிடலாம்” என்று அடிக்கடி சொல்வார்.

”அரண்மனை மாதிரி வீடு, ஆறு காரு, ஏக்கர் கணக்கில் பூமி, ஏகப்பட்ட காசு, இதெல்லாம் இருக்கும்போது அவர் வேணும்னா இப்படிப் பேசலாம். நம்மள மாதிரி அடி மட்டத்தில் இருந்துகிட்டுத் தினசரி வாழ்க்கையில போராடிட்டு இருக்கிறவனுக்குத் தான் கஷ்டம்னா என்னான்னு தெரியும். ஜெயிக்க வேண்டாம், சமாளிக்கறதே பெரிய விஷயம்” என்று அண்ணன்  அவர் போனவுடன் கிண்டலடிப்பான்.

அவன் சொன்னதிலும் யதார்த்தம் இருந்தது. எது எப்படியோ? எனக்குச் சிறு வயதிலிருந்தே  பெரியப்பா  ஹீரோ போலவே தெரிந்தார். தோற்றத்தில் ஒரு கம்பீரம், நடையில் ஒரு வேகம்,  எப்போதும் எதிலும் நல்லதையே பார்க்கும் ஒரு தனிப்பெரும் குணம் என எல்லாமாய்ச் சேர்ந்து

அவரை ஒரு ஆதர்ஷ மனிதராக என் மனதில் ஆக்கியிருந்தன.

வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த பெரியப்பாவிற்குக் கடந்த ஐந்து வருடங்களாக இறங்கு முகம். வீடு, கார், பூமி, சேர்த்த பணம் எல்லாம் போய் அண்ணன் சொன்ன அடிமட்டத்திற்கு அவரும் வந்துவிட்டார். திருமணமாகிப் பலவருடங்கள் கழித்துப் பிறந்ததால் அவரது ஒரே மகனும் தற்போது இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டில் படிக்கிறான்.

அறுபது வயதில் அவர் மும்பையில் இருக்கும் தன் நண்பர் ஒருவர் ஹோட்டலில் மானேஜராக வேலை பார்த்து வருகிறார் என்றும் அவர் மிகச் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்றும் கேள்விப்பட்டபோது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் மும்பை சென்ற பின் அவரை நேரில் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போது

ஆபீஸ் வேலை விஷயமாக மும்பை வந்த எனக்கு அவரைப் பார்க்கவும், இப்போதும் அந்த ”பாசிடிவ்”  அணுகுமுறை அவரிடம் இருக்குமா என்று தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தது.

அந்தேரியில் அவர் வீட்டைக் கண்டுபிடிக்கச் சிறிது சிரமப்பட்டேன். கதவைத் திறந்து பெரியம்மா ”வாப்பா” என்று ஆச்சரியத்துடன் வரவேற்றாள். பெரியம்மா கறுத்து, இளைத்திருந்தாள். பார்க்கப் பாவமாய் இருந்தது.

”பெரியப்பா இல்லையா?”

நான் கேட்டது உள்ளே பெரியப்பாவிற்குக் கேட்டிருக்க வேண்டும். ”வாடா.. உட்கார்” என்றபடி உள்ளே இருந்து வந்தார். அன்று போலவே இன்றும் அவர் உற்சாகமாத்தான் தென்பட்டார்.

ஆனால், பெரியம்மா அப்படிச் சந்தோஷப்படும் மனநிலையில் இல்லை. பேசாமல் உள்ளே போனாள். அவர்கள் மகன் எங்கோ வெளியே போயிருந்தான். பெரியப்பா வீட்டில் எல்லோரையும் விசாரித்தார். பொதுவாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

அரண்மனை போன்ற வீட்டில் அரசரைப் போல இருந்த பெரியப்பாவை இப்படியொரு சூழ்நிலையில் பார்க்க எனக்கு மிகவும் கஷ்டமாகவும், ஜீரணிக்க முடியாமலும் இருந்தது.

அதைக் குரல் கம்ம அவரிடம் சொல்லியே விட்டேன்.

பெரியப்பா அமைதியாகச் சொன்னார். ”கையை விட்டுப் போனதைப் பற்றியே நினைச்சுட்டிருந்தா இருக்கிறதோட அருமையை உணராமல் போயிடுவோம்டா. இப்பவும் நல்லாப் படிக்கிற மகன் இருக்கான். எனக்கு உழைக்கிற ஆரோக்கியம் இன்னமும் இருக்கு. அந்தேரியில் குறைஞ்ச வாடகையில் ஒரு வீடு கிடைச்சிருக்கு. சேர்த்து வைக்கக் காசு இல்லாட்டியும் வாழ்க்கையை ஓட்டற அளவு வருமானம் இருக்கு. இப்படி ”இருக்கிற” விஷயங்கள் இன்னமும் நிறைய இருக்கு”

பெரியம்மா காபியுடன் வந்தாள். ”உங்க தத்துவமெல்லாம் கொஞ்சம் நிறுத்துங்களேன்.

ஆரம்பத்தில் இருந்தே இல்லாமல் போறது வேறே… அனுபவிச்சு இழந்துட்டுக் கஷ்டப்படறது  வேறே.. ஊம்…. எதுவும் நிரந்தரமில்லை!”

”எதுவுமே நிரந்தரமில்லைன்னா நீ கஷ்டம்னு நினைக்கிற இது மாத்திரம் நிரந்தரமா என்ன?

இதுவும் ஒரு நாள் மாறும். நீ என்னடா சொல்றே!” என்று புன்சிரிப்புடன் என்னைக் கேட்டார்.

பிரமிப்புடன் தலையாட்டினேன் வெற்றியின் உச்சாணிக் கொம்பிலிருந்த போது இருந்த இடத்தைவிடப் பெரியப்பா என் மனதில் இன்னும் பல மடங்கு உயர்ந்து போனார். நிஜமாகவே பெரியப்பா ”பாசிடிவ்” தான்.

”ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. (அல்குர்ஆன் 9 : 5,6)

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும் என்பதை பெரியப்பா நன்கு உணர்ந்தவராக இருந்தார் என்பதை அனுபவசாலியான அவரது பதில் உணர்த்தியது.

நன்றி: நீடுர்.இன்ஃபோ