Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2013
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,979 முறை படிக்கப்பட்டுள்ளது!

உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்

“உப்பு கொஞ்சம் குறைச்சலா இருக்கு. இன்னும் கொஞ்சம் போடுங்க!” என்று அனைவருமே கூறுவார்கள். உப்பு சேர்த்ததும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்!

காலங்காலமாய் மனிதர்களின் நாக்கில் கம்பீரமாய் அமர்ந்துவிட்ட உப்புதான்… இப்போது, அதே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தற்போது மக்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. உலக மருத்துவ பத்திரிகைகள் பலவும் உப்புக்கு எதிரான எச்சரிக்கைக் கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளன.

‘உலகம் முழுவதும் மாரடைப்பால் நிகழும் மரண எண்ணிக்கைக்கும், சிறுநீரகப்பழுது, ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதற்கும் முக்கியக் காரணம், உப்புத்தான்’ என்று மருத்துவர்கள் அடித்துச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

‘‘இந்தியர்களிடம் உப்பு பற்றிய விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவேயில்லை’’ என்று வருத்தத்தோடு கூறும் பிரபல நெப்ரோலஜிஸ்ட் மருத்துவர் பி.ரவிச்சந்திரன், உப்பு பற்றிய விழிப்புணர்வு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். அவரைச் சந்தித்தோம். ‘மனித ஆரோக்கியத்திற்கு எதிராக உப்பு எவ்வாறு செயல்படுகிறது’ என்பதை விரிவாகவே விளக்கினார்.

‘‘ஆதிகால மனிதர்கள் கடல் உப்பைப் பயன்படுத்தத் தெரியாதவர்கள். ஏன், இன்னமும் விலங்குகளுக்குத் தெரியாதது, இந்த உப்பு. உலகத்திலேயே முதன் முதலில் எகிப்தியர்கள்தான் கடல் நீரிலிருந்து சோடியம் உப்பைப் பிரித்தெடுத்தார்கள். அவர்கள் மொழியில் (Natron) நேட்ரான் என்று பெயர் வைத்தார்கள். இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு, அதாவது ‘மம்மி’க்களைப் பாடம் செய்ய உப்பைப் பயன்படுத்தினார்கள். ஆதிகாலத்தில் வேட்டையாடுதல், போர்செய்தல் என்று வாழ்ந்த மனிதர்களுக்கு சோடியம் உப்பின் அறிமுகம், ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது. அப்புறம், அது தேவையாகவும் மாறிவிட்டது.

உடல் உழைப்பைப் பிரதானமாகக் கொண்ட அன்றைய வாழ்க்கை முறையால், உடலிலிருந்து நிறைய வியர்வை வெளியேறியது. இதனால் ரத்தத்தில் இருந்த சோடியம் உப்பின் சமநிலை அடிக்கடிக் குறைந்தது. போர்க்களத்தில் உடல் சோர்ந்து விழுவார்கள், வீரர்கள். அந்தச் சமயங்களில் அவர்கள் கையில் உப்புக்கட்டிகள்தான் கொடுக்கப்பட்டன. உப்பை நாக்கில் வைத்த உடனேயே, அவர்கள் பழையபடி உற்சாகம் பெற்று எழுவார்கள். இதனால் அந்தக் காலங்களில் உப்பு, தங்கத்தைவிட உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்படி, பழங்காலத்தில் பிரமாண்டமான வரவேற்போடு மனித வாழ்க்கையில் நுழைந்த சோடியம் உப்புதான், இப்போது அதே மனித இனத்திற்கு விஷமாகவும் மாறியிருக்கிறது!’’ என்று நிறுத்தியவர், ‘எப்படி ஏற்பட்டது இந்த மாற்றம்? என்பதை சற்று விரிவாகவே கூற ஆரம்பித்தார்…

‘‘மனித உடலுக்கு மிக அடிப்படையாக, நான்கு வித உப்புகள் தேவை. அவை பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், சோடியம் ஆகும். இதில் பொட்டாசியத்தையோ, மெக்னீசியத்தையோ, கால்சியத்தையோ உப்பு வடிவில் பிரித்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்ளாத நாம், சோடியம் உப்பை மட்டும் கடல் நீரிலிருந்து பிரித்துப் பயன்படுத்துகிறோம். சுவைக்காகவும், உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் படுவதற்காகவும் அன்றாடச் சாப்பாட்டில் அதிகமாக சேர்க்கப் பழகினோம்.

விஞ்ஞான வளர்ச்சியால் நாளுக்குநாள் மனித வாழ்க்கையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. எப்போதும் உட்கார்ந்த நிலையிலும், ஏ.சி. அறையிலும் வேலை என்பது ஒரு பிரிவினரின் வாழ்க்கையாக மாறியுள்ளது. ஒரு மனிதனின் ரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பு இருக்க வேண்டும். அதற்குமேல் ரத்தத்தில் சேரும் உப்பு… வியர்வை, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதின் மூலம் உடலில் இருந்து வெளியேறுகிறது. ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது சிறுநீரகம்.

உதாரணமாக, பத்து கிராம் உப்பை வெளியேற்ற ஐந்து லிட்டர் சிறுநீர் கழிக்க வேண்டும். (இது தான் ‘உப்பைத்தின்றவன் தண்ணீர் குடிப்பான்’ என்ற பழமொழியின் அர்த்தம்) உடலில் குறைபாடு இருக்கும் பட்சத்தில் சிறுநீரகம், சோடியம் உப்பை வெளியேற்றுவதற்குப் பதிலாக, உடல் பலத்தைத் தரும் மெக்னீசியத்தையும், எலும்பு உறுதியைத்தரும் கால்சியத்தையும் வெளியேற்றப் பழகிவிடும். உடலில் தேவைக்கு அதிகமாக சோடியம் உப்பு தங்க ஆரம்பித்தால்… உடல் பருமனாகும். கால்சியம் வெளியேறுவதால் மூட்டுவலி, முதுகுவலி வரும். மெக்னீசியம் வெளியேறுவதால் அசதி வரும். முக்கியமாக, சிற்றின்ப உறவு தோல்வியடையும். சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் முக்கிய நரம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவும் உருவாகலாம். மாரடைப்பு, சிறுநீரகப் பழுது போன்ற உயிர் ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும். அதேபோல், சர்க்கரை வியாதிக்கும் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னைகளுக்கும் அதிக உப்புதான் காரணமாக இருக்கிறது!’’ என்கிறார், அவர்.

கடல் உப்புக்கு மாற்றாக இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் மலை உப்பைப் பயன்படுத்துகிறார்கள். இது மலைப்பிரதேசங்களில் பாறைவடிவில் கிடைக்கக் கூடியது. இதில் சோடியம் மிக மிகக் குறைவாகவும், சல்ஃபர், மெக்னீசியம், கால்சியம் தாதுக்கள் அதிகமாகவும் இருக்கும். இந்த உப்பை வட இந்தியாவில் பணக்காரர்கள்தான் பயன்படுத்துகிறார்கள். காரணம், அத்தனை விலை.

அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அனைத்து உணவுப் பொருள்கள் மற்றும் பால் இவற்றில் சேர்க்கப்படும் சோடியத்தின் அளவை, அதன் அட்டையில் அச்சிட வேண்டும் என்கிற சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. சோடியம் இல்லாத பொட்டாசியம் உப்புத்தூவிய உருளைக்கிழங்கு Chipsம், அங்கே விற்பனையில் இருக்கிறது. அதேபோல் கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகளில் இருந்து கிடைக்கும் மெக்னீசியம், புரோட்டீன்ஸ் அடங்கிய கோரல் உப்பு (coralsalt) ஜப்பான், அமெரிக்காவில் பிரபலம்.

ஆனால், நம் நாட்டிலோ சில பாக்கெட் பால்களில் கூட 0.3 கிராம் வரை சோடியம் உப்பு சேர்க்கப்படுகிறது. பல வீடுகளில் பாக்கெட் பாலில் போடப்படும் டீ, காபி கூட மெல்லிய கரிப்புச்சுவையோடு இருப்பதற்கு இதுதான் காரணம். கடைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்வீட்ஸ், மற்றும் சாக்லேட்டுகளிலும் சோடியம் சேர்க்கப்படுகிறது. ஆனால், அதன் அளவை வெளிநாடுகளில் உள்ளதுபோல இங்கே நுகர்வோருக்குத் தெரிவிப்பதில்லை.

பிரபலமான குளிர்பானங்கள் அனைத்திலும் சோடியம் சல்பேட் சேருகிறது. கருவாடு, ஊறுகாய், அப்பளம் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் வகைகளில் கொஞ்சம் அதிகமாக சோடியம் இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தும் மனிதனின் உடலுக்குள் ஒவ்வொரு நாளும் பத்திலிருந்து முப்பது கிராம் வரை சோடியம் உப்பு தானாகவே நுழைந்து விடுகிறது, என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம்.

ஆனால், ‘பெரும் உடல் உழைப்பு இல்லாத இன்றைய மனிதனுக்கு அன்றாடத் தேவைக்காக வெறும் இரண்டு கிராம் உப்பே போதும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், அவன் சுவையாகச் சாப்பிடும் பொருள்களின் மூலம் இரண்டு கிராமைவிட அதிகமாகச் சேருகிறது. இப்படி உப்பின் அளவு கூடுவதினால், ஆண்மை பலம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகள்கூட குறைந்துவிடுகின்றனவாம்.

இதுதொடர்பாக, பதிலளிக்கும் டாக்டர் ரவிச்சந்திரன் ‘‘சோடியம் உயிர்த்தன்மையை அழிக்கக் கூடியது, மனித விந்தில் மெக்னீசியம், கால்சியம்தான் மிகுதியாக இருக்கிறது. உடலில் சோடியம் கூடும்போது… உயிர் அணுக்களை அது பாதிக்கும் என்பது உண்மையே. அனைத்துத் தாவர விதைகளிலும் மெக்னீசியம் அதிகமாக இருக்கிறது. முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற தாவர விதைகளை அரைத்துத்தான் ஆண்மை லேகியம் செய்து விற்கிறார்கள். அதன் ரகசியம் மெக்னீசியம்தான். விதைகளில் அதிக சக்தி கொண்டது முருங்கையும், பூசணியும்! வெற்றிலை என்பது மெக்னீசியம். அதில் தடவப்படும் சுண்ணாம்பில் கால்சியம். அதனால்தான் தாம்பூலம் என்பது இல்லற வாழ்க்கையோடு தொடர்புபடுத்தப்பட்டது!’’ என்றார்.

அயோடின் கலந்த உப்பு பற்றிக் கருத்து தெரிவிக்கும் அவர், ‘‘அதிக உப்பு சேர்த்துக்கொண்டால், அதிக அயோடின் சத்துக் கிடைக்கும் என சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். அயோடின் என்பது இரண்டு பக்கக் கத்தி போன்றது. அது குறைந்தாலும் பிரச்னை, கூடினாலும் பிரச்னை. சில விதமான கேன்சர், தைராய்டு பிரச்னைகளுக்குக் கூடுதல் அயோடினே காரணமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

அத்துடன், நமது உடலுக்குள் நுழையும் சோடியத்தின் அளவைக் கண்காணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு நாக்கில் சுவை மொட்டுக்கள் நன்கு செயல்படும் என்பதால்…. சிறுவயது முதலேயே குறைந்த உப்புச் சுவையே அவர்களுக்குப் பழக்க வேண்டும். கூடியவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும் அல்லது அதன் சோடியத்தின் அளவைக் கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். கசப்புச் சுவை உள்ள காய்கறிகளான பாகற்காய், கோவைக்காய், வாழைத்தண்டு, பச்சை நிறக் கீரைகள், மற்றும் மோர், இளநீர் போன்றவற்றைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மெக்னீசியம், பொட்டாசியம் கால்சியம் போன்ற உப்புக்கள் நம் உடலில் இயற்கையாகவே சேர்ந்து விடும்.

அதோடு, அன்றாடம் சில உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நமது வியர்வைச் சுரப்பிகளுக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கவும் வேண்டும்!’’ என்கிறார்.

இது மட்டுமல்ல, பெரிய பெரிய கம்பெனிகளின் விளம்பரங்களைப் பார்த்து, அந்த உப்புகளை வாங்கிப் பயன்படுத்துவதைவிட, கடைகளில் கிடைக்கும் சாதாரண கல் உப்பை வாங்கிப் பயன்படுத்துவதும் நல்லது. காரணம், பாக்கெட் உப்புகளில் 99 சதவிகிதம் வரை சோடியம் இருக்கிறது. கல் உப்பில் 40 சதவிகிதம் வரைதான் சோடியம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

ஆகமொத்தத்தில் ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. ‘உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்’ என்பது புதுமொழியாக உருவாகி வருகிறது.

நன்றி: ரா: அரசகுமாரன்   – குமுதம்