Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

September 2013
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,553 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரங்களின் தேசம்… மலர்களின் வாசம் – சிங்கப்பூர்

sg1சிங்கப்பூர் ‘சென்ட்’ அடித்தால் ஊரே மணக்கும் என்பர்; சிங்கப்பூருக்குப் போனால் நாடே மணக்கிறது. சுத்தம், சுகாதாரம், சுகந்தம், பசுமை, தொலைநோக்கு, தொழில் நுட்பம், பிரம்மாண்டம், உழைப்பு, உல்லாசம், உற்சாகம்…இவை தான் சிங்கப்பூரின் நிரந்தர அடையாளங்கள்.

சிங்கப்பூரின் மொத்தப்பரப்பே 710 சதுர கி.மீ.,தான். மலேசியாவிலிருந்து பிரிந்து குட்டித் தீவாக நிற்கும் சிங்கப்பூரை, ‘மைக்ரோ ஸ்டேட்’ என்றும், ‘அல்ஃபா வேல்டு சிட்டி’ என்றும் வர்ணிக்கின்றனர். இந்த குட்டி நாடு தான், உலகின் வளமான நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.சிங்கப்பூரின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு 45 நிமிட பயணத்தில் போய் விடலாம். நாட்டின் மொத்த மக்கள் தொகையே 49 லட்சம் மட்டுமே. இவர்களிலும், 36 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள். சர்வீஸ் செக்டார் எனப்படும் பொதுப்பணிகளில் இவர்களின் பங்களிப்பு மொத்தம் 50 சதவீதம்.சிறிய நாடு, மிகக்குறைந்த மக்கள் தொகை, அதனால் தான் நல்ல முறையில் பராமரிக்க முடிகிறது என்று நம்மவர்கள் விவாதம் செய்யலாம். உண்மையில், உலகிலேயே அதிக மக்கள் நெருக்கம் நிறைந்த நாடுகளில், சிங்கப்பூரும் ஒன்று. விண்ணை முட்டும் முன்னேற்றத்துக்குக் காரணம், நாட்டை முன்னேற்றுவதில் அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அக்கறையும், அதற்கு மக்கள் தரும் அதீத ஒத்துழைப்பும் தான்.

சீனர்கள், மலேயர்கள், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் எல்லாம் சேர்ந்து வாழும் சொர்க்கபூமி சிங்கப்பூர். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ‘நான் ஒரு சிங்கப்பூரியன்’ என்று சொல்வதைத்தான் அவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். 20 வயது இளைஞன் முதல் 70 வயது பெரியவர் வரை, யாரிடம் பேசினாலும் அந்த தேசத்தின் மீது அவர்கள் வைத்திருக்கிற தீவிரப் பற்று வெளிப்படுகிறது.உணவு, தண்ணீர் உட்பட எல்லாவற்றுக்கும் மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளை நம்பி இருக்கும் அந்த குட்டி தேசம் தான், உலகின் மிகப்பெரிய சந்தையாக மாறி, டாலர்களில் வருவாயை வாரிக்கொட்டுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து உற்பத்தியாகும் பொருளையும் வாங்கி, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறது.பல நாட்டு மக்களையும் தங்கள் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளாக வரவழைக்க சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகள், அழகானவை மட்டுமில்லை; அசாத்தியமானவை.

சிங்கப்பூரில் நம் வசதிக்கேற்ப, சுற்றிப்பார்க்க பல விதமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. ஒரு இடத்துக்கும் போகாமல், ஊரைச் சுற்றி நான்கு முறை வலம் வந்தாலே, ஓராயிரம் விஷயங்கள் நமக்கு புலப்படும். முதலில் நம் மூளைக்குள் மின்னலாய்ப் பதிவது, இது ‘மரங்களின் தேசம்’ என்பது தான்.சிங்கப்பூரில் நாம் முதலில் பாதம் பதிக்கும் ‘ஷங்கி’ சர்வதேச விமான நிலையமே, ஓர் அழகிய தாவரவியல் பூங்கா போலத்தான் இருக்கிறது. சென்னை தவிர்த்து, தமிழகத்தின் பிற நகரங்களில் உள்ள விமான நிலையங்களின் பொதுவான அடையாளம், மொட்டை வெயிலும், நெட்டைச்சுவர்களும்தான்.கோவையில் விமான நிலைய ரோட்டில் மட்டும் தான், கொஞ்சம் மரங்கள் மிச்சம் இருந்தன. அதையும் வெட்டி, சாலையை விரிவாக்கம் செய்து விட்டனர். கேட் டால், ‘செம்மொழி மாநாட் டுக்கு’ என்கிறார்கள். மரங் களை அழிப்பதா செம்மொழிக்குச் செய்யும் மரியாதை?

பசுமையே சுமையாய்!: ஷாங்கி விமான நிலையத்திலிருந்து வெளியே பயணத்தைத் துவக்கினால், எங்கே திரும்பினாலும் மரங்கள், செடி, கொடிகள், புல்வெளி… சுருக்கமாய்ச் சொன்னால் பசுமை. பல அடுக்கு மாடிக் கட்டடங்களுடன் பல கோடி மரங்களின் பசுமையையும் சுமையாகத் தாங்கி நிற்கிறது சிங்கப்பூர்.ஏற்கனவே, மொத்தப்பரப்பில் 23 சதவீதம் மழைக்காடுகளைக் கொண்டிருக்கிறது அந்த சின்ன தேசம். இயற்கை சமன்நிலைக்கு ஒரு தேசத்தின் பரப்பில், 33 சதவீதம் வனமாக இருக்க வேண்டுமென்கிறது யுனெஸ்கோ. அந்த இலக்கை எட்ட, 2002ல் ‘சிங்கப்பூர் பசுமைத்திட்டம் 2012’ என்ற திட்டத்தை துவக்கியது அந்நாட்டு அரசு.தனியார், பொதுமக்கள், பொதுத்துறை நிறுவனங்கள் பங்களிப்புடன், (3பி-பீப்பிள்-பிரைவேட் அண்ட் பப்ளிக் செக்டார்ஸ்) இதற்கான பசுமைப் பணிகளைத் துவக்கி, அதில் பெருமளவு வெற்றியையும் கண்டு விட்டது. மார்ச் 2009 வரை, 100 கி.மீ., தூரத்துக்கு இரு புறமும் பசுமைப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 2030க்குள் 360 கி.மீ., தூரத்துக்கு, அதாவது 2,225 ஏக்கர் பரப்பை பசுமைப் பிரதேசமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்காகவே, தேசிய உயிர்க்கோள ஆய்வு மைய த்தை அமைத்து, இந்த பணிகளை வழி நடத்தி வருகிறது அந்த அரசு.இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, பல லட்சங்கள் இருக்கும். பதிலுக்கு நடப்பட்ட மரக்கன்றுகள், சில ஆயிரம் இருப்பது கூட சந்தேகமே. தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை, மரம் வெட்டும் துறையாகவே மாறி விட்டது. ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப் பதிலாக 10 மரக்கன்று நட வேண்டுமென்று ஐகோர்ட் கூறியுள்ள கருத்து, வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. ‘குளுகுளு’ நகரான கோவையில் கடந்த 4 ஆண்டுகளில் 5,000க்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன; பதிலாக 100 மரக்கன்றுகள் கூட வைக்கப்படவில்லை.

ஆனால், சிங்கப்பூரில் மிக அவசியமாக ஒரு மரத்தை வெட்ட வேண்டிய நிலை இருந்தாலும், கிளைகளை மட்டும் நறுக்கி  விட்டு, மரத்தை வேரோடு தோண்டி எடுத்து, அப்படியே வேறு இடத்துக்கு ‘டிரெயிலர்’ மூலமாகக் கொண்டு சென்று, மீண்டும் நட்டு, அதற்கு உயிர் கொடுத்து விடுகின்றனர்.சமீபத்தில், ‘ஆர்ச்சடு’ என்ற பகுதியில் இதேபோல ஒரு மரத்தின் கிளைகளை சிலர் வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, இந்த உண்மை தெரிந்தது. அங்கே, சாலையோரம் வைக்கின்ற மரங்களும், சூழலுக்கு உகந்த மரங்களாகவே உள்ளன. அவை பெரிதாக இடத்தையும் அடைப்பதில்லை. வானுயர கட்டடம் கட்டினாலும், அதற்கு அருகில் இத்தனை மரங்கள் வளர்க்க வேண்டுமென்கிறது அந்நாட்டின் விதி. சாலை விரிவாக்கம், புதிய கட்டடம் என்றாலே, முதல் வேலையாக அங்கிருக்கும் பச்சை மரங்களை வெட்டுவதே நம் தேசத்தில் எழுதப்படாத விதி.

sg2மாதம் மும்மாரி மழை: திரும்பிய திசையெல்லாம் பசுமை இருப்பதால்தான், அங்கே கொளுத்தும் வெயில் காலத்திலும் மாதம் 3 முறையாவது மழை தட்டி எடுக்கிறது. நம்மூரைப் போலவே ஏப்ரல், மே மாதங்கள் தான் அங்கேயும் உச்சக்கட்ட கோடை காலம். அங்கேயும் வெயில் அடிக்கிறது; ஆனால், அதில் உக்கிரமில்லை; காற்றில் வறட்சி இல்லை; ரோட்டில் அனல் பறப்பதில்லை. காரணம், மரங்கள்.

மாயமாகும் மழை நீர்: ஊரிலே எங்கே மழை பெய்தாலும், எல்லாத் தண்ணீரும் பஸ் ஸ்டாண்டுக்கு வரவைக்கும் நம்மூர் பொறியாளர்களின் தொழில்நுட்பமெல்லாம், அங்குள்ள இன்ஜினியர்களுக்கு தெரியவில்லை. எவ்வளவு நேரம் மழை கொட்டினாலும், ஒரு சொட்டுத்தண்ணீரைக்கூட ரோட்டில் பார்க்க முடிவதில்லை. சிங்கப்பூரில் ஒரே ஓர் ஆறு தான் ஓடுகிறது. ஆனால், அங்கே தண்ணீர்க் கஷ்டமே இல்லை. ஆண்டு முழுவதும் பெய்யும் மழை நீரை, ஒரு சொட்டு விடாமல் சேகரித்து விடுகின்றனர். அந்த அளவுக்கு துல்லியமாய் அமைக்கப்பட்டிருக்கிறது மழை நீர் வடிகால்.

sg3குப்பைக்கு குட் பை!: குப்பைத் தொட்டி வாங்கியதில் ஊழல் செய்தே, கோடீஸ்வரன் ஆன அரசியல்வாதிகள், அதிகாரிகள் இங்கே நிறையப்பேர். அங்கே குப்பைத்தொட்டிகள் அதிகமில்லை. ஏனெனில், குப்பை சேர்ப்பதற்கான வாழ்க்கை முறையே அங்கு இல்லை.பத்து நிமிடத்தில் ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிடுவதை விட்டு, 10 பாலீதீன் பைகளில் பார்சல் வாங்கிப் போய், உணவோடு நோயையும் சேர்த்து உட்கொண்டு, ஊரையும் நாறடிப்பது நம்மூர் வழக்கம். இன்றைக்கு, இந்தியாவின் எல்லா பெரு நகரங்களையும் மிரட்டிக் கொண்டிருப்பது மட்காத கழிவுகள்தான்.அங்கேயும் பிளாஸ்டிக் பைகள் இருக்கின்றன; அவை எதுவுமே குப்பை மேடாக மாறுவதில்லை. குப்பைகளில் 56 சதவீதத்தை மறு சுழற்சி செய்து விடுகின்றனர். வரும் 2012க்குள் இதை 60 சதவீதமாகவும், 2020க்குள் 65 சதவீதமாகவும், 2030க்குள் 70 சதவீதமாகவும் மாற்றுவதே அந்நாட்டின் தேசிய மறுசுழற்சித்திட்ட இலக்கு. நம் நாட்டுக்குப்பையில் 10 சதவீதம் மறுசுழற்சிக்குப் போவதும் சந்தேகமே.

கார்களுக்கு கட்டுப்பாடு!: சுத்தமான காற்று, தட்பவெப்பநிலை மாற்றம், நீர் மற்றும் கழிவு மேலாண்மை, மக்கள் நலம், இயற்கை பாதுகாப்பு, சர்வதேச தொடர்புகள்… இந்த 7 விஷயங்களை முன்னிறுத்தியே ‘சிங்கப்பூர் பசுமைத்திட்டம் 2012’ வகுக்கப்பட்டுள்ளது. காற்றை மாசுபடுத்துவதில் வாகனங்களுக்கான பங்கு அதிகம். சிங்கப்பூர் வளமையான நாடாக இருந்தாலும், வாகனப் பெருக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மற்றுமோர் சாதனை. அங்கே, தனிநபர்கள் வாகனங்கள் வாங்க மாபெரும் கட்டுப்பாடுகள் உள்ளன. நினைத்ததுபோல, ஒரே வீட்டில் 9 காரை வாங்கி, வீட்டுக்காரிக்கு ஒன்று, வேலைக்காரிக்கு ஒன்று என்று அனுப்ப முடியாது. அங்கே 1990லேயே ‘வி.க்யூ.எஸ்’ எனப்படும் (வெய்கிள் கோட்டா சிஸ்டம்) நடைமுறைக்கு வந்து விட்டது. வாகனம் வாங்க வேண்டுமெனில், எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.வாகனத் தொகையை விட வரி, நிறுத்துமிடத்துக்கு வாடகை, ரோட்டைப் பயன் படுத்த கட்டணம் என நிறைய ‘தாளிப்புகள்’ இருப்பதால், சாதாரண ஆட்கள் யாரும் வாகனம் வாங்க முடியாது. அதனால்தான், அங்கே வாகனங்களின் எண்ணிக்கை, இன்று வரை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

sg4ஆனாலும், மக்களைத் திண்டாட வைக்காத வகையில், எம்.ஆர்.டி. (மாஸ் ரேபிட் டிரான்சிட்) என்ற பெயரில், 3 முக்கிய வழித்தடங்களில் இடைவிடாமல் ரயில்களை இயக்கி வருகிறது சிங்கப்பூர் அரசு. வடக்கிலிருந்து கிழக்கு, கிழக்கிலிருந்து மேற்கு, சுற்று ரயில் என அத்தனை ரயிலும் ஓடுவது அண்டர்கிரவுண்டில்தான்.இதைத்தவிர்த்து, ‘எல்.ஆர்.டி.’ எனப்படும் ‘லைட் ரயில் டிரான்ஸிட்’ எனப்படும் ரயில் போக்குவரத்தும் உள்ளது. அத்துடன், 2 பெரிய நிறுவனங்களிடம் பஸ்களை இயக்கும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், போக்குவரத்து என்பது அங்கே ஒரு பிரச்னையே இல்லை. டிக்கெட் எடுக்காமல், ரயில்வே ஸ்டேஷனின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்குப் போகவே முடியாது. ரயில் டிக்கெட் உட்பட எல்லாவற்றிலுமே ‘ஆட்டோமேட்டிக்’ முறை தான். பயணத்துக்கு ஒரு டாலர் மட்டுமே; டெபாஸிட் ஒரு டாலர். பயணம் முடியும் இடத்தில், மிஷினில் கார்டைப் போட்டால் ஒரு டாலர் திரும்ப வந்து விடும்.ஹவுசிங் அண்ட் டெவலப்மென்ட் போர்டு எனப்படும் அந்த அமைப்புதான்.

நாடு முழுவதும் பல அடுக்குமாடிகளைக் கட்டி, மக்களுக்கு மானிய விலையில் வீடுகளை சொந்தமாக்கித்தருகிறது. ஒரே குடியிருப்பில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ, அந்த அரசு அனுமதிப்பதில்லை.சீனர்கள், மலேயர்கள், இந்தியர்கள் என எல்லோரையும் சம விகிதத்தில் குடியேற்றி, நாட்டு மக்களிடம் ஒற்றுமையையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த நாட்டின் மீது அங்குள்ள அரசு காட்டும் அக்கறையும், தேசத்தின் வளர்ச்சியின் மீது மக்கள் காட்டும் ஆர்வமும் நம் தேசத்துக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே ஓர் உதாரணம்.

சில்லுன்னு ஒரு பயணத்துக்கு…சில்க் ஏர்வேஸ்! சிங்கப்பூருக்கு சில்லென்று உங்களை அழைத்துச் செல்ல காத்திருக்கிறது சில்க் ஏர்வேஸ். ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பிராந்திய இயக்கத்துக்கான பிரிவு. இந்தியா, சீனா, கம்போடியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் உட்பட 11 ஆசிய நாடுகளில் உள்ள 33 நகரங்களுக்கு வாரத்தில் 400 நவீன சொகுசு ரக விமானங்களை இயக்கி வருகிறது இந்த நிறுவனம். இந்தியாவில் திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் மற்றும் கோவை ஆகிய நகரங்களிலிருந்து தற்போது ‘சில்க் ஏர்வேஸ்’ விமானம், சிங்கப்பூருக்கு நேரடியாக இயக்கப்படுகிறது. வரும் மே 17லிருந்து பெங்களூருவிலிருந்தும், ஜூன் 14லிருந்து சென்னையிலிருந்தும் விமான சேவையை துவக்கவுள்ளது.கோவையிலிருந்து திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிங்கப்பூருக்கும், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கும் விமானங்களை ‘சில்க் ஏர்வேஸ்’ (தொடர்புக்கு:0422-4370271, 4370281) இயக்கி வருகிறது. உணவு, உபசரிப்பு, இருக்கை வசதி என பல வகைகளிலும் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருவதால், உலகின் ‘டாப் 10’ வரிசையில் கடந்த 2005லிருந்து 2009 வரையிலும் தொடர்ந்து இடம் பெற்றிருக்கிறது. அதிலும், ‘பெஸ்ட் கேபின் சர்வீஸ்’ என்பதிலும் உலகில் முதல் 10 இடங்களுக்குள் பெயரைத்தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

sg5ரெசார்ட்ஸ் வேர்ல்டு, ஸென்டோசா: சிங்கப்பூரின் ஸென்டோசா தீவிலுள்ள ‘ரிசார்ட்ஸ் வேல்டு’தான் சிங்கப்பூரின் புதிய வசீகரம்; 121 ஏக்கரில் செதுக்கப்பட்ட வர்ணஜால உலகம். காட்டுக்குள்ளே, தண்ணீருக்குள்ளே, கடற்கரையோரம் போன்ற நீச்சல் குளத்துக்கு அருகே…என 5 ஸ்டார் ஓட்டல்கள் 6 அமைத்திருக்கின்றனர். அதன் அமைவிடங்களில் வித்தியாசம் என்றால், அதன் அறைகளுக்குள் இருக்கும் உள் அலங்காரம், அட்டகாசம். அவற்றிலுள்ள அறைகளின் எண்ணிக்கை மட்டும் 1,800.

sg6விடிய விடிய ஆட்டம்: ‘ரெஸார்ட்ஸ் வேல்டு’க்குள்தான் சிங்கப்பூரின் முதல் ‘கேஸினோ’ (சூதாட்ட விடுதி) உள்ளது. இரவு, பகலென 24 மணி நேரமும் குளுகுளுவென பாதாளத்தில் இயங்கும் அதிசய உலகம். வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் பாஸ்போர்ட் காண்பித்தால் அனுமதி இலவசம். சிங்கப்பூர்வாசிகளுக்கு 100 டாலர் நுழைவுக் கட்டணம். அவர்கள் அடிக்கடி வருவதைத் தடுப்பதற்கு அரசு செய்யும் யுக்தி.இலவசங்களை முன் வாசலில் கொடுத்து, ‘சரக்கு’ விற்பனை மூலமாக, கொல்லைப் புறத்தில் குடும்ப வருவாயைப் பறிக்கும் நம் அரசுகளின் சாதுர்யமும், அந்த நாட்டு மக்கள் நலன் மீது சிங்கப்பூர் அரசு காட்டும் அக்கறையும் சம்மந்தமே இல்லாமல் நம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

என்னதான் நான் சிங்கப்பூர்ல இருந்தாலும், நான்பிறந்து ஓடி திரிந்த ஊரை மறக்க முடிய வில்லை…

நன்றி: தினமலர்