Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2014
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,772 முறை படிக்கப்பட்டுள்ளது!

பலம் பற்றி சிந்தியுங்கள் பலனை நாளும் சந்தியுங்கள்!

வறுமை ஒரு மனிதனை எந்த நிலையிலும் முடக்கிப் போட முடியாது என்பதற்கு சான்றாகத் திகழ்பவர்…

இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொண்டு அதை நோக்கிய பயணத்தை மேற்கொண்டால் ‘கனவுகள் அனைத்தும் நனவாகும்’ என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருப்பவர்…

‘தொழில் தொடங்க கோடிகளில் முதலீடு தேவையில்லை சில ஆயிரங்கள் இருந்தாலே போதும்’ என்று சிறு முதலீட்டுடன் தொடங்கப்பட்ட ஒரு நிறவனத்தை இன்று கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் நிறுவனமாக கட்டமைத்துள்ள சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்து வருபவர்…

உன் உள்ளத்தில் உறுதியும், திட்டமிட்ட செயல்பாடும் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்று உலகின் பல பகுதிகளிலும் தங்கள் நிறுவனத்தின் கிளைகளை ஏற்படுத்தி தரமான, அழகிய வடிவமைப்புடன் கூடிய தங்க நகைகளை விற்பனை செய்து வருபவர்…

படிப்பு மட்டும் தான் ஒருவரின் வேலைவாய்ப்பை நிர்ணயிப்பதில்லை. படைப்புத் திறன் இருந்தால் சாதிக்கலாம் என்பதை உணர்ந்து படிப்பறிவு இல்லாவிட்டாலும் படைப்புத் திறன் பெற்றவர்களை தன் நிறுவனத்தில் பணியமர்த்தி அவர்களின் படைப்புத் திறனை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்…

இப்படி ஒரு நிறுவனத்தின் தலைமைக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும், திறமைகளையும் ஒருங்கே பெற்றுள்ள “எமரால்டு ஜþவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட்” நிறுவனத்தின் நிறுவனர் திரு. கே. சீனிவாசன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்த போது அவர் பகிர்ந்துகொண்ட தன்னுடைய வெற்றிப் பயணத்தின் அனுபவத்தோடு இனி நாம்…

தங்களைப் பற்றிய அறிமுகம்…
நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே கோவையில் தான். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய தந்தை திரு. கிருஷ்ணமூர்த்தி காலமாகிவிட்டார். அப்பாவின் மறைவிற்குப் பின்னர் அம்மா திருமதி. சரஸ்வதி அம்மாள் மற்றும் மாமா ராமச்சந்திரன் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தேன்.

பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு கோவை சி.பி.எம். கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்தேன். குடும்பத்தில் நிலவிய வறுமை சூழல் காரணமாக பகுதி நேர வேலைக்குச் சென்று அதில் ஈட்டிய பணத்தை வைத்துக்கொண்டு என்னுடைய கல்வி மற்றும் இதர செலவுகளை ஈடுசெய்தேன்.

கல்லூரிப் படிப்பும் முடிந்தது. ஒரு நகைக்கடையில் மாதச் சம்பளத்துக்கு பணியில் சேர்ந்தேன். சில மாதங்களில், நம் வாழ்வின் அடுத்த கட்டம் என்ன? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதுவரை எந்த இலக்கும், குறிக்கோளும் இல்லாமல் சென்று கொண்டிருந்த என் வாழ்வில் இலக்குகளை யோசித்தேன்.

ஒவ்வொரு நாளும் நம்முடைய இலக்கு என்ன? நாம் என்னவாக வேண்டும்? அதற்கு எதைச் செய்ய வேண்டும்? என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன். இந்த கேள்விகள் எனக்குள் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ள உதவின.

இலக்கை நோக்கிய பயணத்தில் முதல் அடியாக எனக்கான துறையைத் தேடினேன். நகைத் தொழிலில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை அறிந்தேன். இந்தத் துறையில் நாம் சாதிக்க வேண்டும் என்று உறுதியெடுத்து ஈடுபட்டேன்.

என் அம்மா சரஸ்வதி அம்மாளிடம் சேமிப்பில் இருந்த 10,000 ரூபாயைப் பெற்று 1984ல், 40 கிராம் தங்கத்தை முதலீடாகக் கொண்டு 110 சதுர அடி கட்டிடத்தில் ‘எமரால்டு ஜþவல்லரி’ நிறுவனத்தை சிறிய அளவில் தொடங்கினேன்.

எமரால்டு நிறுவனத்தைத் தொடங்குமுன்னர் நான் என் தகுதிகளை வளர்த்துக் கொண்டேன். இலக்கை முடிவு செய்துவிட்டால் மட்டும் போதாது. அந்த இலக்கை அடைய எது அழைத்துச் செல்லுமோ அவற்றை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மும்பை போன்ற நகரங்களில் எங்கள் நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமென்றால் கட்டாயம் இந்தி மொழி அறிந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அந்த மொழிதான் என் இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும் என்று உணர்ந்தவுடன் அம்மொழியைக் கற்றுக்கொண்டேன். இப்படி ஒவ்வொன்றாக கற்று என் தகுதியை உயர்த்திக் கொண்டதால் தான் தொடர்ந்து என்னால் வெற்றிகளைப் பெற முடிந்தது.

குறிக்கோளை அடைய நீங்கள் எடுத்த முயற்சிகள் குறித்து…

நம் ஒவ்வொருவருக்குள்ளும் தலைசிறந்த தலைவன் இருக்கிறான் என்பதில் நான் உறுதியாக இருப்பேன். இந்த எண்ணம்தான் என்னுள் எழுந்து என் முழு வலிமையையும் காட்டியது. நான் என்னவாக இருக்கிறேன்? என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை அவ்வப்போது சீர்தூக்கிப் பார்த்துக் கொள்வேன்.

வெற்றி என்பதே மனத் தடைகளை உடைப்பதில் தானே இருக்கிறது. நமக்குப் புலப்படாத பல நுண்ணிய வேலிகளை கடந்து நாம் செல்ல வேண்டும். பலராலும் முடியாது என்று சொல்லப்படுவதை நாம் முடித்துக்காட்ட வேண்டும் என்ற தீ எப்போதும் என் உள்ளத்தில் இருக்கும்.

ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தால் அது தலைசிறந்த நிறுவனமாக திகழ வேண்டும் என்ற ‘பென்ச் மார்க்’கை நிர்ணயித்துக் கொண்டேன்.

குறிக்கோளை நோக்கிய பயணத்தில் நிறைய அழுத்தங்களையும், பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தே என்னுடைய குறிக்கோள் நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தேன். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற அணையா நெருப்பு என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. பிறந்தோம்… வாழ்ந்தோம்… மறைந்தோம் என்றில்லாமல் பிறந்தோம்… வாழ்ந்தோம்… சாதித்தோம்… மறைந்தோம் என்று இருக்க வேண்டும் என்று உறுதியெடுத்து கடின உழைப்பை ஈடுபாட்டுடன் கொடுத்தேன். அந்த உண்மையான உழைப்பு, நல்ல சிந்தனை, வேகமான செயல்பாடு ஆகியவை தான் என்னுடைய குறிக்கோளை அடைய உதவியது.

தேர்வு செய்த நகைத்தொழிலில் புதுமையைப் புகுத்தி தேர்வானது எவ்விதம்?

நகைத்தொழில் என்பது ஒரு முறைப்படுத்தப்படாத (Unorganized Sector) தொழிலாக இருந்த காலத்திலேயே அதில் உள்ள வாய்ப்புகளைப் பார்த்துதான் அந்தத் துறையைத் தேர்வு செய்தேன்.

நகை தயாரிப்பில் அதுவரை ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு மட்டுமே இருந்தது. நம்முடைய வடிவமைப்பும் பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது என்று முடிவு செய்தேன்.

மாற்றங்களைச் செயல்படுத்துவது தான் ஒரு புதிய நிறுவனம் எதிர்கொள்ளும் பெரிய சவால். எப்போதுமே புதிய நிறுவனத்தின் வருகையோடு, கூடவே புதிய மாற்றங்களும் வந்து சேர வேண்டும் என்று நினைப்பவன் நான் என்பதால் எங்கள் நிறுவனம் பல புதுமையான மாற்றங்களுடன் கூடிய வடிவமைப்பை உருவாக்கியது.

நவீன வெளிநாட்டு தொழில்நுட்பங்களைப் புகுத்தி தலைசிறந்த வடிவமைப்புகளை உருவாக்கினோம்.

சுவிட்சர்லாந்து, துருக்கி போன்ற நாடுகளின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டும் சிறந்த வடிவமைப்புடன் கூடிய பொழிவான நகையைத் தயாரிக்கிறோம்.

நிபுணத்துவம் பெற்ற வடிவமைப்புகளைத் தரும் நிறுவனம் ‘எமரால்டு’ என்ற பெயர் பெறக் காரணமான செயல்பாடுகள் குறித்து…

நகைகளை வடிவமைப்பதற்கு எங்களிடம் தனியாக சிறப்பு தேர்ச்சி பெற்ற வல்லுநர்கள் குழு இருக்கிறது. கோவை, டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் நகைகளை வடிவமைப்பதற்கு என்றே நூற்றுக்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்களை வைத்திருக்கிறோம். CAD / CAM / 3D வடிவமைப்பு போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்ற வடிவமைப்பாளர்களைக் கொண்டிருப்பதால் தான் சிறந்த வடிவமைப்பைக் கொண்டுவர முடிகிறது.

மேலும் படித்தவர்கள் மட்டுமின்றி படைப்பாளர்களையும், எங்கள் நிறுவனத்தில் பணியில் அமர்த்தி இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒரு பெயிண்டரை அவரின் படைப்புத் திறனுக்காக வடிவமைப்புப் பிரிவில் வைத்திருக்கிறோம். அதேமாதிரி எங்கள் நிறுவனத்தில் அலுவலக அட்டெண்டராக பணியாற்றியவரிடம் இருந்த சிற்பம் செய்யும் திறமையைக் கண்டறிந்து அவரையும் வடிவமைப்புப் பிரிவில் இணைத்துள்ளோம்.

இப்படி படித்தவர்களை மட்டுமின்றி படைப்புத்திறன் பெற்றவர்களையும் பணியில் சேர்த்துள்ளோம்.

உற்பத்தியில் இருந்து விற்பனைக்கு மாறி ‘பிராண்டிங்’ நகைகளை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை எழக்காரணம்?

புதுமையான வடிவமைப்பில் உற்பத்தி செய்யப்பட்ட எங்கள் நகைகளை பல்வேறு நிறுவனங்கள் பெற்று விற்பனை செய்து வருகின்றன. ஒரு கட்டத்தில், எப்போதும் எதைச்செய்து கொண்டிருக்கிறோமோ அதையே செய்து கொண்டிருந்தால், எதுவும் மாறாமல், என்ன கிடைக்குமோ அதுவே கிடைத்துக் கொண்டிருக்கும் என்பதை உணர்ந்தேன். அந்த எண்ணம் ஏற்பட்டவுடன் உற்பத்தியில் இருந்து விற்பனைக்கு மாறினோம்.

மும்பையில் முதன்முதலாக நிஸ்ட்டா 18 கேரட் CZ என்ற பிராண்டை ஆரம்பித்து விற்பனை செய்தோம். பின்னர் மிஸ்டா 22 கேரட் 22 CZ-ம், கொரோனா (வைரத்துடன் சேர்ந்த வடிவமைப்பு), தொடர்ந்து குழந்தைகளுக்கான ‘டிரிப்பிள் எஃப்’ (FFF) என்றும் பல்வேறு வடிவங்களில் பிராண்டிங் செய்து விற்பனையை மேற்கொண்டோம்.

2009ம் ஆண்டு முதல் ‘ஜூவல் ஒன்’ என்ற பெயரில் எங்களின் சிறந்த வடிவமைப்பை சந்தைப்படுத்தி வருகிறோம்.

எங்களின் மிகச்சிறந்த வடிவமைப்புகளை மட்டுமே சந்தைக்குக் கொண்டு வருவதால் எங்களின் வடிவமைப்பு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விற்பனை அதிகரிக்கிறது.

மற்ற நிறுவனங்களில் எங்களின் நகைகள் கிடைப்பதைப் போலவே, எங்களின் வடிவமைப்பை மட்டுமே விற்பனை செய்யும் ‘ஜூவல் ஒன்’ ஷோரூம்-களை தொடங்கினோம். இதுவரை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 7 ஷோரூம்களை (கோவை, கரூர், கள்ளக்குறிச்சி, வேலூர், மயிலாப்பூர் (சென்னை), இராமநாதபுரம் மற்றும் பாண்டிச்சேரி) நிருவியிருக்கிறோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் 40 ஷோரூம்களை செயல்படுத்த வேண்டும் என்று முயற்சிசெய்து வருகிறோம்.

மேலும் ‘ஜூவல் ஒன்’ பொட்டிக் என்ற பெயரில் உத்திரபிரதேசத்தில் 5 நிறுவனங்களை ஏற்படுத்தி இருக்கிறோம். இரண்டு மாதங்களில் மேலும் 15 நிறுவனங்களையும், வருட இறுதியில் 50 நிறுவனங்களையும் ஏற்படுத்த முயற்சியெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தங்களின் நிறுவனம் இந்தியாவைத் தாண்டியும் வளர்ச்சி பெற்றுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்…

இன்று தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகப்பெரிய நவீன நகை உற்பத்தி நிறுவனமாக ‘எமரால்டு நிறுவனம்’ திகழ்கிறது என்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. துபாய், சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா என்று சர்வதேச நாடுகளில் உள்ள டீலர்கள் மூலம் எங்களின் நகைகளை வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள்.

இந்தியாவில் இருப்பதைப் போல் வெளிநாடுகளில் நிறைய வடிவமைப்புகளை விற்பனை செய்யாமல், குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவமைப்புகளை மட்டும் விற்பனை செய்கிறோம்.

தங்கள் நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணமாக தாங்கள் கருதுவது…

என்னுடைய இத்தனை வெற்றிக்கும் காரணம் ‘டீம் வொர்க்’ தான். ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறையில் சிறந்த வல்லுநர்களை நியமித்தோம். அவர்களுக்கு உரிய சுதந்திரத்தைக் கொடுத்தோம். ‘A Right Person for the Right Job’ என்று முடிவு செய்து நல்ல பணியாளர்களைச் சேர்த்துக் கொண்டேன்.

ஒரு உண்மையான நிர்வாகி, தன் மேல் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் தங்கள் நிறுவனத்தில், தங்கள் குழுவில் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் முயற்சிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தருவார்கள். மற்றவர்கள் மீது கவனம் செலுத்துவது அவர்களின் மதிப்பைக் காட்டும். மதிக்கப்பெறும் தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக, உண்மையாக ஈடுபாட்டுடன் உழைப்பார்கள். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

கிட்டத்தட்ட 4000 ஊழியர்கள் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சத்துள்ள உணவு நல்ல உடை, தேவைப்படுபவர்களுக்கு ஆரோக்கியமான இருப்பிடம் போன்றவற்றை கொடுக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் ‘ஸ்போர்ட்ஸ் டே’ கொண்டாடுகிறோம். பரிசுகளை வழங்கி பாராட்டுகிறோம். ஆண்டு விழா கொண்டாட்டங்களில் குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்கிறார்கள். இப்படி மகிழ்ச்சியாக இருக்கும் தொழிலாளர்களின் உன்னத உழைப்புதான் இந்த நிறுவனம் இத்தகைய வெற்றி பெறக் காரணம்.

வறுமை நிலையிலிருந்து இந்த ‘பெருமை’ நிலையை அடைய தூண்டுகோளாக அமைந்தது?
‘உங்களால் முடியும்’ என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் உங்களால் முடியும். உங்களால் முடியாது என்று நினைத்தால் முடியாது. இந்த வரிகளை எப்போதும் நினைத்துக் கொள்வேன். இந்த வரிகள் தான் என் வறுமையை மீறி நான் சாதிக்க உதவியது.

எனக்கென்று ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அந்த இலக்குதான் என் மனதையும், உடலையும் ஒரே நேர்கோட்டில் கொண்டுவந்து சேர்த்தது. இலக்கை அடையச் செய்தது.

நான் எப்போதும் கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பதை விட எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையுடன் தான் இருப்பேன்.

வெற்றியாளர்களுக்கும், தோல்வியடைபவர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் மிக எளிமையானது. வெற்றி பெறுபவர்கள் தாங்கள் முன்புபெற்ற வெற்றிகளை நினைத்து பார்க்கிறார்கள். தோல்வியடைபவர்கள் தாங்கள் முன்பு அடைந்த தோல்விகளை நினைத்து பார்க்கிறார்கள்.

நான் எப்போதும் வெற்றியை மட்டுமே நினைத்து பார்ப்பேன். எப்போதும், தோல்வி பற்றிய பயம் நம்மை பின்னுக்கு இழுத்துச் செல்லும் என்பதால் தோல்வி பற்றி எப்போதும் நினைக்க மாட்டேன்.

நம் மனதில் தீய எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் நாம் வெற்றிக்கோட்டை தொடமுடியாது என்பதால் எப்போதும் நேர்மறை எண்ணத்துடன்தான் சிந்திப்பேன்.

என்னுடைய இந்த நேர்மறை எண்ணம் தான் என் வெற்றிக்கு முதல் காரணம். இந்த நேர்மறை எண்ணம் ஏற்பட வேண்டுமானால் மனதில் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். தன்னம்பிக்கை உள்ள மனிதன் தான் தடைகளைத் தாண்டி வெற்றிபெற முடியும்.

எனக்கு தன்னம்பிக்கை அதிகம். அதனால் தான் வறுமை சூழலில் இருந்த போதும் என்னால் இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. அந்த இலக்கு நோக்கிய பயணத்தில் பயணித்து வெற்றி பெற முடிந்தது.

இளைய தொழில் முனைவோருக்கு தங்களின் ஆலோசனை…

வளர்ந்து வரும் இளைய தொழில் முனைவோருக்கு என்னுடைய ஆலோசனையாக நான் சொல்ல விரும்புவது, உங்களுக்கு என்று ஒரு இலக்கை, குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். உங்கள் கனவில் நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கு எதில் ஆர்வமோ அதில் ஈடுபடுங்கள். குடும்ப உறவினர்களோ, நண்பர்களோ சொல்கிறார்கள் என்பதற்காக செய்ய வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் உங்களின் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். உங்கள் குறிக்கோளை அடைய எவையெல்லாம் பயனளிக்கும் என்று நினைக்கிறீர்களோ அவற்றையெல்லாம் செய்யுங்கள்.

உங்கள் தொழிலாளர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளுங்கள். நல்ல மனிதர்களைத் தேடிப்பிடித்து நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் முகவர்கள், வாடிக்கையாளர்கள் என்று அனைவரின் மீதும் அன்பு செலுத்துங்கள். அந்தத் தகுதிகளை மேம்படுத்திக் கொண்டீர்கள் என்றால் நீங்களும் ஒரு தலைசிறந்த சாதனை படைத்த தொழில் முனைவோராகத் திகழ முடியும்.

இந்தியர்களுக்கு மட்டும் ஏன் தங்கத்தின் மீது இத்தனை மோகம்?

மற்ற நாடுகளைப் போல இந்தியர்கள் தங்கத்தை ஆடம்பரப் பொருளாக மட்டும் பார்ப்பதில்லை. மாறாக ஒரு சோசியல் செக்யூரிட்டியாகத்தான் பார்க்கிறார்கள். அதனால் தான் இந்தியர்களுக்குத் தங்கத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

மற்ற நாடுகளில் மக்களுக்குத் தேவையான சோசியல் செக்யூரிட்டியை அரசாங்கம் செய்து கொடுப்பதால் அவர்கள் ஆபரணங்களை ஒரு ஆடம்பரப் பொருளாக மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் நம்மவர்கள் அப்படி இல்லை. எப்பொழுதாவது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், தங்கத்தை அடமானம் வைத்தாவது பணத்தைப் புரட்டிக் கொள்ளலாம் என்ற சிந்தனை இருப்பதால் ஒரு சோசியல் செக்யூரிட்டியாக இதை கருதுகிறார்கள். அதனால்தான் தங்கத்துக்கான தேவை இந்தியாவில் அதிகமாக இருக்கிறது.

முதல் தலைமுறை சாதிப்பாளரான தாங்கள் வளரும் தன்னம்பிக்கை வாசகர்களுக்கு சொல்லும் செய்தியென்பது…

நம் சிந்தனைகளே நம் செயல்களாக மாறும். நம் பலங்களைப் பற்றியே சிந்தித்தால் பலமானவர்களாக ஆவோம். பலவீனங்களைப் பற்றி சிந்தித்தால் பலவீனமடைவோம். எனவே எதையும் எப்போதும் நேர்மறையாகவே சிந்தியுங்கள்.

உங்கள் வாழ்க்கை எல்லா வகையிலும் உங்களையே சார்ந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை, உங்கள் மகிழ்ச்சி, கவலை எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள் மட்டுமே. உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே வழிகாட்டி என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழையுங்கள். எவ்வளவு சிறப்பான வாழ்வை வழிநடத்த முடியுமோ அவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்துங்கள். உங்கள் நிறுவனத்துக்கான தொலைநோக்குப் பார்வையை விசாலப்படுத்திக் கொண்டு அதை நோக்கியே பயணம் மேற்கொள்ளுங்கள். நீங்களும் நாளைய சாதனையாளர் தான்.

திரு. கே. சீனிவாசன்
நிர்வாக இயக்குனர்
எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட்

நன்றி: தன்னம்பிக்கை