மருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்! நெகிழ்வூட்டும் உண்மைக் கதை!
தாய் – மகள் உறவுக்கு இணையானது… மாமியார் – மருமகள் உறவு. ஆனால், பெரும்பாலான வீடுகளில் இந்த உறவு இணக்கமாக இருப்பதில்லை என்பதுதானே எதார்த்தம். அதேசமயம், அனைத்திலும் எங்காவது விதிவிலக்கு இருக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட விதிவிலக்குகளால்தான் அந்த உறவு… இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது. ஆம், சாதாரண சட்னி விஷயத்தில்கூட மருமகளுடன் சண்டையிடும் மாமியார்களுக்கு மத்தியில்… மருமகளுக்காக தனது கிட்னியையே தானம் செய்து, ‘மாமியார்’ என்கிற உறவுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த 58 வயதான சுரேகா!
மும்பை, வில்லே பார்லா பகுதியில் வசிக்கும் சுரேகாவின் வீட்டுக்கு நாம் சென்றபோது… தன் உயிரைக் காப்பாற்றிய மாமியாரின் அன்பில் நெக்குருகி நிற்கும் மருமகள் வைஷாலியின் பேச்சில்… மூச்சுக்கு மூச்சு மாமியார் பெருமைதான்!
”சில மாதங்களாகவே எனக்கு உடம்பில் எரிச்சலும், வீக்கமும் இருந்தது. அக்கம்பக்கத்தில் இருக்கும் டாக்டர்களைச் சந்தித்து, அவர்களின் ஆலோனைப்படி சிற்சில மருந்துகளை எடுத்துக் கொண்டேன். தற்காலிகமாகத்தான் நிவாரணம் கிடைத்தது. ஒருநாள் எரிச்சல் தாங்க முடியாத அளவுக்குப் போகவே, பெரிய மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோதுதான்… இரண்டு கிட்னிகளும் பழுதாகியிருப்பது தெரிந்தது. ‘கிட்னி மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு’ என்று டாக்டர்கள் சொல்ல, மொத்த குடும்பமும் ஆடிப்போனது.
‘ஏராளமாக பணத்தை செலவு செய்யவேண்டுமே’ என்கிற கவலையோடு… ‘அப்படியே பணம் கிடைத்தாலும், எனக்கு பொருந்துகிற மாதிரி கிட்னி கிடைக்க வேண்டுமே’ என்கிற கவலையும் சேர்ந்து கொண்டது. கணவரும், மாமியாரும் இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்தனர். பலரிடமும் இதற்காக பேசிக் கொண்டிருந்தனர். பலவிதமான முயற்சிகளையும் தொடர்ந்தனர். ஆனால், எதுவும் கைகூடி வரவில்லை. ஒரு கட்டத்தில், ‘இப்படியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் சரிப்படாது. என் மருமகளுக்கு நானே கிட்னியை கொடுக்கிறேன். ஆக வேண்டியதை பாருங்கள்’ என்று மாமியார் சொல்ல, குடும்பத்தினர் அனைவரையுமே அதிர்ச்சியும் ஆச்சர்யமும் சூழ்ந்தது” என்று வைஷாலி நிறுத்த…
மேற்கொண்டு தொடர்ந்தார் தனியார் நிறுவனம் ஒன்றில் ஃபைனான்ஸ் மேனேஜராக பணியாற்றும் கணவர் மணிஷ். ”குஜராத் மாநிலம், அகமதாபாத் மாநகர்தான் சொந்த ஊர். என்றாலும், 40 ஆண்டுகளாக மும்பையில்தான் வசிக்கிறோம். வைஷாலி எனக்கு உறவுக்கார பெண்தான். திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. 9 வயதில் மகன் இருக்கிறான். குடும்ப வாழ்க்கை குதூகலமாக போய்க் கொண்டிருந்த சூழலில், ‘வைஷாலியின் இரண்டு கிட்னிகளுமே பழுது’ என்றொரு புயல் தாக்கியபோது… உலகமே இருண்டுவிட்டது எங்களுக்கு.
‘மனைவியின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமே’ என்று நானும்… ‘மருமகளைக் காப்பாற்ற வேண்டுமே’ என்று என் அம்மாவும் பலவாறாக முயற்சித்துக் கொண் டிருந்தோம். ஒரு கட்டத்தில், ‘நான் இருக்கிறேன். ஆகவேண்டியதை பாருங்கள்’ என்று என் அம்மா சொல்ல… எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இதனால், ‘அம்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னவாகும்’ என்கிற பயமும் உள்ளுக்குள் ஓடியது. என்றாலும், தொடர்ந்து அம்மா வற்புறுத்தவே… டாக்டரிடம் போய் விஷயத்தை சொன்னேன். உடனடியாக அம்மாவை அழைத்துவரச் சொன்னவர், அவருக்கு மருத்துவ டெஸ்ட்களை செய்தார். ‘மாமியாரின் கிட்னி… மருமகளுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது’ என்று டாக்டர் சொல்ல… என் அம்மாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. உடனடியாக ஆபரேஷனுக்கும் அவர் தலையாட்டிவிட்டார். நல்லதொரு நாளில் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது” என்றவரின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.
மகன், மருமகள் இருவர் பேசுவதையும் கண்களில் அன்பும், பாசமும் மின்ன பார்த்துக் கொண்டேயிருந்த மாமியார் சுரேகாவை, ”மருமகள் மீது அத்தனை பாசமா?” என்ற கேள்வி மூலமாக நம் பக்கம் திருப்பினோம்.
”என்ன அப்படி கேட்கிறீர்கள்.. என் வீட்டுக்கு வந்த மருமகளை, நான்தானே பொறுப்பாக கவனிக்க வேண்டும். ‘நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள்’ என்று நம்பித்தானே அவளுடைய அப்பா, அம்மா என் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டாமா..? அதுவுமில்லாமல் எனக்கு ஒரு மகள் இருந்து, அவளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், என் மனது என்ன பாடுபடும். அப்படித்தானே அவளுடைய அம்மாவும் பதறியிருப்பார்கள். கடவுளுடைய ஆசீர்வாதத்தால், என் கிட்னி, என் மருமகளுக்குப் பொருந்தி, ஆபரேஷனும் நல்லபடியாக முடிந்துவிட்டது. அவளுக்கு மறுவாழ்வு கிடைத் திருக்கிறது. அவள் இப்போது நன்றாக இருக்கிறாள். என் பிரார்த்தனைக்கு பலன் கொடுத்த கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்ன சுரேகா,
”கிட்னியோ அல்லது வேறு எந்த உடல் உறுப்போ… நம்மால் முடியும் என்றால், தேவைப்படு பவர்களுக்குத் தானமாக கொடுக்கத் தயங்கக்கூடாது” கண்களில் கசிந்த நீரை துடைத்தபடியே சொன்னார்!
”இந்த வீட்டில் நான் அடி யெடுத்து வைத்த நாளில் எத் தகைய அன்பைக் காட்டினாரோ… அதில் துளிகூட குறையாமல் இன்றுவரை என்னிடம் அந்யோன் யமாக இருக்கிறார் என் மாமியார். என்னைப் பொறுத்த வரைக்கும் எங்க மாமியார்… தங்க மாமியார்!” என்று மருமகள் சொல்லி சிரிக்க, அவருடைய தலையையும், கன்னத்தையும் தடவி நெகிழ்ந்தார் மாமியார் சுரேகா!
இந்த கிட்னி அறுவை சிகிச்சையை செய்த மும்பை பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனை டாக்டர் பிரதீப் ராவ், இதைப் பற்றி பேசும்போது, ”கிட்னி தானம் கொடுப்பவர்கள் யாரும் நோயாளிகளாகிவிட மாட்டார்கள். தங்கள் உடலுறுப்பு ஒன்றை கொடுத்து, மற்றோர் உயிரைக் காப்பாற்றுகிறார்கள். இவ்வாறு உடலுறுப்பு தானம் கொடுப்பவர்களுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையால், அவர்களுக்கு லேசான அசௌகரியங்களே ஏற்படும். சில நாட்களில் அதுவும் சரியாகிவிடும். இதுநாள் வரை செய்யப்பட்டு வந்த அறுவை சிகிச்சை முறையில், கிட்னி தானம் கொடுப்பவர் குணமாக ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஆகும். தற்போது நவீன முறையைப் பயன்படுத்துவதால், ஒரே வாரத்தில் குணமாகி, வழக்கமான வேலைகளை செய்ய தொடங்கிவிடலாம். இந்த நவீன முறை… வலி ஏதும் இல்லாததும்கூட” என்று நம்பிக்கையூட்டினார்.
இதே மருத்துவமனையிலிருக்கும் ‘நர்மதா கிட்னி ஃபவுண்டேஷன்’ நிறுவனர் மற்றும் டாக்டர் பிரசாந்த் ராஜ்புத், ”எவ்வளவோ அறுவை சிகிச்சை செய்திருந்தாலும், மாமியார், மருமகளுக்கு கிட்னி தானம் செய்த இந்த அறுவை சிகிச்சை எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இந்தக் காலத்தில், அக்கா… தங்கைக்கோ; அண்ணன்… தம்பிக்கோ அல்லது அம்மா… மகனுக்கோ கிட்னி தானம் செய்வதற்கு முன்வருவதில்லை. கணவனே, தன் மனைவிக்கு கிட்னி தானம் செய்வதை விரும்புவதும் மிகமிக அரிதாகவே இருக்கிறது. இந்த நிலையில், ஒரு மாமியார்… தன் மருமகளுக்கு கிட்னி தானம் செய்தது ஆச்சர்யமான விஷயம்தானே!” என்றார்.