Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2016
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
2829  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,150 முறை படிக்கப்பட்டுள்ளது!

அண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள்

Henry-Worsleyஇங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஹென்றி வொர்ஸ்லி (55). முன்னாள் ராணுவ அதிகாரி. சாகச வீரரான இவர் இங்கிலாந்து அரச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர்.

இவர் அண்டார்டிகா துருவ பிரதேசத்தை தனியாக பயணம் செய்து கடக்க திட்டமிட்டார். அதன் மூலம் கடந்த 100 ஆண்டுக்கு முன்பு சாகசம் புரிய முயற்சி மேற்கொண்டு அதை பாதியிலேயே முடித்த எர்னெஸ்ட் ஷேக்கெல்டனின் சாதனையை முறியடிக்க விரும்பினார்.

அதற்காக கடந்த 71 நாட்களுக்கு முன்பு தென் துருவம் வழியாக அண்டார்டிகாவை கடக்க தன்னந்தனியாக பயணத்தை தொடர்ந்தார். அவரது கடினமான பயணம் சுமூகமாக சென்றது.

ஆனால் வெற்றி இலக்கை அடைய 48 கிலோ மீட்டர் அதாவது 30 மைல் தூரம் இருக்கும் நிலையில் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. உடனே இவர் தன்னை காப்பாற்றும்படி உதவி கேட்டார்.

உடனே, ஹெலிகாப்டார் மூலம் அவர் மீட்கப்பட்டு சிலியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். உடல் சோர்வு மற்றும் உடலில் இருந்து நீர்வெளியேற்றம் போன்ற காரணங்களால் அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஹென்ரி இறந்த தகவலை அவரது மனைவி ஜோயன்னா தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அண்டார்ட்டிக்காவைப் பற்றிய சில சுவையான தகவல்கள்

antarticaஅண்டார்ட்டிக்கா பூமியின் தென் கோடியில் தென் துருவத்தை அடக்கியுள்ள ஒரு கண்டம். தென் கடல்கள் இதனை சூழ்ந்திருக்கின்றன. ஆசியாவுக்கு அடுத்த படியாக 5.4 மில்லியன் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட ஐந்தாவது பெரிய, முழுவதுமாக பனி சூழ்ந்த கண்டம். பூமியின் மிகக் குளிர்ந்த, உலர்ந்த, அதிகமாக காற்று வீசும் பகுதியும் அண்டார்ட்டிக்காதான்.  

இரண்டு பகுதிகளாகக் கொண்ட அண்டார்ட்டிக்காவில் கிழக்குப் பகுதியின் – சுமார் ஆஸ்திரேலியாவின் அளவு கொண்டது – பனிப்பாறைகளின் உயரம் சராசரியாக 1.2 மைல்கள். மேற்கு அண்டார்ட்டிக்கா பெரும்பாலும் தென் அமெரிக்காவின் தென் முனைவரை தொடரக்கூடிய, உறைந்து போன பல தீவுகளைக் கொண்டது. இந்த இரண்டு பகுதிகளையும் அண்டார்ட்டிக்கா முழுவதும் பரந்திருக்கும் பெரிய மலைத் தொடர் ஒன்று பிரிக்கிறது.

அண்டார்ட்டிக்காவில் காணப்படும் பனிக்கட்டியின் பரப்பளவு பனியால் உறைந்த ஆறுகளின் (Glaciers) ஓட்டத்தின் காரணமாக உடைக்கப்பட்டும், பிளக்கப்பட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் மேற்பகுதியில் காணப்படும் அதிக கனமில்லாத பனிக்கட்டி போர்வைகளுக்குக் கீழே நூற்றுக்கணக்கான அடிகள் ஆழம் கொண்ட பனிக்கட்டி பிளப்புகளும் (Crevasse) காணப்பட்டுகின்றன.

பெரும்பாலும் ஈரப்பசை இங்கே காணப்படாததால் பொதுவாக அண்டார்ட்டிக்காவை ஒரு பாலைவனமாகவே கருதுகின்றனர். இருந்தும் பல நேரங்களில் பனித்துகள்களை சுமந்துகொண்டு 200 மைல் வேகம் வரை கூட வீசும், பலத்த குளிர் காற்றுக்கு (blizzard) அண்டார்ட்டிக்கா பிரபலமானது.

அண்டார்ட்டிக்காவில் கொதிக்கும் வெந்நீரை மேலே விட்டெறிந்தால் அது உடனேயே நீராவியாகவும் சிறு பனிக்கட்டிகளாகவும் மாறிவிடும் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.

அண்டார்ட்டிக்காவின் பனிக்கட்டிகள் உருகினால் பூமியின் மற்ற பகுதிகளிலுள்ள கடல் நீர் மட்டம் 200 அடி வரைகூட உயருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2000-ஆம் ஆண்டு ராஸ் பனித்தட்டுகளிலிருந்து (Ross Ice Shelves) கடல் மட்டத்துக்கு மேல் 4250 சதுர மைல்கள் மேற்பரப்பளவு கொண்ட (அமெரிக்காவின் டெக்சாஸ் மானிலத்தின் அளவு) ஒரு பனிப்பாறை பிளந்து விழுந்ததுதான் இதுவரை நேர்ந்த பனிப்பிளவுகளிலேயே மிகப் பெரியது.  பிளந்து விழுந்த பகுதியைப் போல பத்து மடங்கு பெரிய பாறைகள்  நீர் மட்டத்துக்குக் கீழே இருந்தன என்பதுதான் இன்னொரு ஆச்சரியம்.

அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கோடை காலமாகவும் ஆண்டின் மற்ற மாதங்கள் குளிர் காலமாகவும் இங்கு காணப்படுகின்றன. பூமியின் வடக்குப் பகுதிகளுக்கு நேரெதிரான பருவ நிலை. மரம், செடி, கொடிகள் இங்கு வளர்வதில்லை. பெங்குவின், வேல், சீல் போன்ற கடல் இனங்களை கடலோரப் பகுதிகளில் காணலாம்.

நிரந்தரமாக இங்கு வசிப்பவர்கள் யாருமில்லை என்றாலும் பல ஆராய்ச்சிகளுக்காக ஆயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை மக்கள் இங்கே எந்நேரத்திலும் தங்கியிருப்பதைக் காணலாம்.

அண்டார்ட்டிக்கா பகுதியில் ராணுவ நடவடிக்கைகள், கனிம வளங்களெடுத்தல், அணு பரிசோதனை செய்தல் போன்ற சுற்றுப்புற சூழ்னிலையை பாதிக்கக் கூடிய எந்த செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என்ற அண்டார்ட்டிக்கா ஒப்பந்தத்தில் (1959)  சுமார் 50 நாடுகளுக்கு மேல் கையெழுத்திட்டிருக்கின்றனர்.

நன்றி: நீலகண்டன் – neel48.blogspot