Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,860 முறை படிக்கப்பட்டுள்ளது!

மாற்று எரிபொருள்: தயக்கம் ஏன்?

m-gf-nafa-1இந்திய மக்கள்தொகை 127 கோடியைக் கடந்து விட்டது. இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை மிஞ்சிவிடும் என்று கூறுகிறார்கள். அதற்கு ஏற்றார் போல, விண்ணைத் தொடும் அளவுக்கு விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது. இதற்கு மூலகாரணம் நாம் அன்றாடும் பயன்படுத்தும் எரிபொருளாகும் (பெட்ரோல், டீசல்).

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தைப் பொருத்து பயணச் சீட்டின் கட்டணம் உயர்கிறது. வியாபாரிகள் லாரியின் வாடகை மற்றும் காய்கறிகளின் வரவுகளை வைத்து விலையை நிர்ணயம் செய்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் எரிபொருள்களின் விலை ஏற்ற, இறக்கங்களே என்று தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

பல வெளிநாடுகள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி விலையைக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால், நமது அரசு தனியார் நிறுவனங்களின் கைகளில் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அரசு நினைத்தால் ஒவ்வொரு திட்டத்தையும் அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்ல முடியும். உதாரணமாக, மழைநீர் சேகரிப்புத் திட்டம் பெரிய நகரங்கள் மட்டும் அல்லாது கிராமங்கள் வரை செயல்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு பல செயல் திட்டங்களை அறிவிப்பு செய்கிறது. ஆனால், தொடங்கப்படும் போது காட்டும் அக்கறை சிறிது காலங்களில் காணாமல் போய்விடுகிறது. பயோடீசல் என்ற இயற்கை முறையில் எரிபொருள் உற்பத்தி செய்யப்படும் என்று விவசாயிகளிடம் திட்டத்தைக் கொண்டு சென்றது. அதனால் காட்டாமணக்கு, புங்கம் விதைகள் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

ஆனால், சிறிது காலத்திற்குப் பின் உற்பத்தி செய்யப்பட்ட விதைகள் வாங்குவதற்கும், வழிகாட்டுதலுக்கும் ஆள் இல்லாமல் விவசாயிகள் பெரிய நஷ்டத்தையும், தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் பயிர்களும் அழிந்து விட்டன. இதற்கு முறையான நடைமுறைகள் பின்பற்றாததே காரணம்.

நம்முடைய கொள்கை பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று ஏற்பாடு செய்வது தான். ஆனால், நடைமுறைப்படுத்தாமல் சோதனை வடிவில் மட்டுமே உள்ளது. இதுபோல், ஆக்கபூர்வமான திட்டங்களை பல காரணங்களால் தோல்வியடைய வைத்துவிடுகிறார்கள்.

அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் பெட்ரோலுக்குப் பதில் எத்தனாலை 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உபயோகிக்கிறார்கள். அதாவது, பெட்ரோலுடன் 10, 15 மற்றும் 20 என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தப்படுகிறது.

இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவது குறைகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறுகிறார்கள்.

இப்பொழுது உற்பத்தி செய்யப்படும் என்ஜின் மற்றும் கார்புரேட்டர்கள் எத்தனால் பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலைநாடுகளில் எத்தனால் உற்பத்தி செய்வதற்கு கரும்பு மற்றும் மக்காச் சோளத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதேபோல், நம் நாட்டிலும் எத்தனால் உற்பத்தி செய்யமுடியும்.

நம்முடைய தட்பவெப்ப நிலைகேற்ப நெல், கோதுமை, மக்காச் சோளம், கிழங்கு வகைகள், கரும்பில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யலாம். அதாவது, “ஸ்டார்ச்’ இருக்கக்கூடிய அத்தனை பொருள்களில் இருந்தும் எத்தனால் பெறலாம்.

இந்தியாவில் கரும்பு ஆலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் மொத்த எண்ணிக்கை 526. தமிழ்நாட்டில் 43 உள்ளது. இந்தியாவில் அதிகமாக கரும்பு ஆலை உள்ள மாநிலம் உத்தரப் பிரதேசம். தமிழ்நாட்டில் 6 கரும்பு ஆலைகளுக்கு எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மட்டும் ரூ.50 கோடி வருமானம் கிடைப்பதாக கணக்கிட்டு உள்ளார்கள்.

அப்படியானால், நம் பயன்பாட்டில் உள்ள, அதாவது விவசாயம் செய்யப்படும் அளவு எவ்வளவு தெரியுமா? இந்தியாவில் 50.64 லட்சம் ஹெக்டர் நிலத்தில் இருந்து 338.96 மில்லியன் டன் கரும்பும், தமிழ்நாட்டில் 3.82 லட்சம் ஹெக்டர் நிலத்தில் இருந்து 35.19 மில்லியன் டன்னும் கிடைக்கிறது.

இதேபோல், மற்ற பயிர்களான மக்காச் சோளம், மரவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை வைத்து பல ஆலைகளில் பல பொருள்களை உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

எத்தனால் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டால் பழைய ஆலைகள் பயன்படுத்த முடியாது. இதற்காக பல தனி ஆலைகள் உருவாக்க வேண்டும். இதனால், இந்தியாவில் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

சென்ற ஆண்டு அமெரிக்கா பெட்ரோல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். அங்கு பெட்ரோல் விலை 25 சதவீதம் குறைந்துள்ளதால் மீதமாகும் பணத்தைக் கொண்டு “ரெஸ்ட்டாரண்ட்’, சுற்றுலா என்று அமெரிக்கர்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ ஆரம்பித்துள்ளனர். ஒரு குடும்பத்திற்கு பெட்ரோல் விலை குறைவால் சுமார் 750 டாலர்கள் சேமிப்பு கிடைத்துள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால்,பெட்ரோல் அநியாய விலைக்கு விற்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணி இடம் வகிக்கிறது. இந்தியா நியாயமாக இப்பொழுது 1 லிட்டர் பெட்ரோல் 35-40 ரூபாய்க்கு விற்கலாம்.

இருப்பினும், இன்றும் ரூ.60-க்கு மேலேயே விற்கப்படுகிறது. எனவே, இந்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்குப் பதிலாக மாற்று எரிபொருளுக்கான ஆராய்ச்சிகளையும் விஞ்ஞானிகளையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

நன்றி  ந. செந்தில்குமார் – தினமணி