Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,553 முறை படிக்கப்பட்டுள்ளது!

வங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்

mallya பல வங்கிகளிடம் 7,000 கோடி ரூபாய் அளவில் கடன் பெற்று, அதை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர் என்று பட்டியலிடப்பட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சமீபத்திய லண்டன் பயணம்தான் வங்கி துறையில் இப்பொழுது பரபரப்பு செய்தியாகப் பேசப்படுகிறது.

2004 முதல் 2010 வரை 17 வங்கிகள் மல்லையாவின் பெயரை முன்னிறுத்திய கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு 7,000 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகையை வழங்கியிருக்கின்றன. இதில், 90% அளவுக்கான கடன் தொகை, ஸ்டேட் பாங்க், பஞ்சாப் நேஷனல் பாங்க், ஐ.டி.பி.ஐ. போன்ற அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளைச் சார்ந்ததாகும்.

வங்கிகளின் வியாபாரத்தில் தொழில் கடன் என்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால், அது எந்தவித கடனாக இருந்தாலும், தொழில் நலிவுறும்பட்சத்தில், வழங்கிய கடனை வசூலிக்க போதிய பிணைய சொத்துகள் உள்ளனவா என்று ஆராய்ந்து, அந்தச் சொத்துகளை ஆவணங்கள் மூலம், கடன் வழங்குவதற்கு முன்பே வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான், விதிக்கப்பட்ட வழிமுறையாகும்.

வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில், மல்லையா கடன்களுக்கு இணையான மதிப்புள்ள பிணைய சொத்துகள் வங்கிகள் வசம் இல்லை என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது. இவ்வளவு பெரிய கடனுக்கு, கடன் பெற்றவரின் சொந்த உத்திரவாத பத்திரம் மற்றும் கடன் வழங்கிய வங்கிகளின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சுழற்சி சொத்துகள் மட்டும்தான் பிணைய ஈடுகளாக பெறப்பட்டிருக்கின்றன என்பதையும் அனுமானிக்க முடிகிறது. சொந்த உத்திரவாதத்தை அளித்தவரின் பெயரில், மதிப்புள்ள சொத்துகள் இருந்தால்தான் கடனை வசூலிப்பதில், தனி உத்திரவாதம் பயனுள்ளதாக இருக்கும்.

மல்லையாவின் தனிப்பட்டச் சொத்துகளின் மதிப்புகள் வெகு குறைவாகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த சொத்துகளை விற்று கடனை செலுத்துவதற்கு, உத்திரவாதம் அளித்தவரின் முழு ஒத்துழைப்பு தேவை. ஆகையால், அந்த உத்திரவாத பிணையம் தற்போதைய நிலையில், மதிப்பற்ற வெறும் பேப்பர் அளவில்தான் உள்ளது எனலாம்.

மக்களிடமிருந்து பெறப்படும் வைப்புப் பணத்தைதான் வங்கிகள் தொழில் துறைக்குக் கடனாக வழங்குகின்றன. கடனாளியின் தொழில் பற்றி முழு விவரம், அந்த தொழிலில் கடனாளியின் முன் அனுபவம், தொழில் வளர்ச்சியில் அவர் முழுக்கவனம் செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், ஒரு தொழிலுக்கு பெற்ற கடனை அங்கீகரிக்கப்படாத இன்னொரு தொழிலில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள், கடன் மற்றும் வட்டித் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கான போதிய வருமானம் ஆகியவைகளை கணக்கில் கொண்டுதான், வங்கிகள் கடனை வழங்கவேண்டும்.

அதற்கு மாறாக, கடனாளியின் சமூக அந்தஸ்து, படாடோபம், அரசியல் தொடர்புகள் போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலும் மல்லையா கடன் போல் சிக்கலுக்கு உள்ளாகின்றன. கிங்ஃபிஷருக்கு வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும், பல வங்கிகளின் கூட்டமைப்பால் (Consortium of Banks)  வழங்கப்பட்டவையாகும். மல்லையாவிற்கு வழங்கப்பட்ட கடனை பொறுத்தவரை, கடன் வழங்குதலில் பல வங்கிகளின் கூட்டு அனுபவம் மற்றும் நிபுணத்துவம் முற்றிலுமாக முடங்கிப் போனதுதான் வருத்தத்திற்குரியது.

வங்கி கூட்டமைப்பு திட்டத்தில் (Consortium lending) கடன் வழங்கும் முறைகள் (Credit appraisal),  மேற்பார்வை, கடனை வசூலிப்பதில் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி ஆகிய பல்வேறு கட்டங்களில் உள்ள ஆழமான குறைபாடுகளை மல்லையா கடன் வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டது எனலாம்.

பதினேழு வங்கிகளில், ஏதாவது சில வங்கிகள் விழிப்போடு செயல்பட்டிருந்தால், மற்ற வங்கிகளுக்கு அதுவே கடிவாளமாக அமைந்திருக்கும். ஆனால், சமூகத்தில் பெரிய மனிதர்களாக நடமாடுபவர்களை முழுவதுமாக நம்பி, விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அவர்களுக்கு கடன் வழங்குவதில் எந்த வங்கியும் விதிவிலக்கல்ல என்பதற்கு மல்லையா கடன் ஒரு நல்ல உதாரணமாகும்.

வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடனுக்கான தவணை மற்றும் வட்டித் தொகை, 90 நாள்களுக்கு மேல் செலுத்தப்படாமல் நிலுவையிலிருந்தால், அந்த கடன் வாராக்கடனாக கருதப்பட்டு, அதன் தரம் தாழ்த்தப்படும் (Substandard asset). தரம் தாழ்த்தப்பட்டவுடன், கடனை வசூலிப்பதற்கு பிணைய சொத்துகளை விற்பது உள்பட பல தொடர் நடவடிக்கைகள் எவ்வித தாமதமும் இன்றி கடனை வழங்கிய வங்கி மேற்கொள்ளவேண்டும்.

கடன் தவணைகள் செலுத்தப்படாத நிலையில், 2010-12இல் மல்லையா கடனை வங்கிகள் மறு சீரமைப்பு செய்தன. கடன் மறு சீரமைப்புக்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு கடன் தரம் தாழ்த்தப்பட்டால், அந்தக் கடனாளிக்கு எந்த வங்கியிலும் மேற்கொண்டு கடன் வழங்கப்பட மாட்டாது என்பது விதிமுறையாகும். தவணைகள் செலுத்தப்படாத நிலையில், வங்கிகளிடமிருந்து மேலும் கடன் பெறுவதற்காகவே மல்லையா கடன்கள், தரமான கடன்களாக ஆவணப்படுத்தப்பட்டனவா என்ற சந்தேகங்கள் எழச் செய்கின்றன. விதிமுறைகளை மீறி, ஒரு கடனாளிக்கு அம்மாதிரி பிரத்யேக சலுகைகளை வழங்க ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

கடன் வழங்குவதில், விதிமுறை மீறல்களில், பெரும்பாலும் அரசியல்வாதிகளின் தலையீடுகள் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம். மல்லையா கடன்களைப் பொறுத்தவரை, நாட்டு பொருளாதார நலனை முன்னிறுத்தி பல கட்டங்களில் நிகழ்ந்த அரசியல் தலையீடுகள் பற்றி தெள்ளத் தெளிவாக வங்கி அதிகாரிகள், தாங்களாகவே முன்வந்து தங்களுக்குத் தெரிந்த முழுத் தகவல்களையும் புலன் விசாரணை குழுக்களிடம் தெரிவிக்கவேண்டிய தருணம் இது.

கடன் வழங்கும் தருணங்களில் பதவியில் இருந்த வங்கி அதிகாரிகள் ஓய்வில் சென்றிருந்தாலும், அவர்களிடம் முழு விசாரணை நடத்தப்பட்டால்தான், உண்மை வெளிவந்து எதிர் காலத்தில் அதுபோன்ற தவறுகள் நடக்காதவண்ணம் வங்கித் துறையைப் பாதுகாக்க முடியும். விசாரணையில் யாருக்கும் விலக்கு அளிக்கப்படக்கூடாது.

நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில், வங்கிகளால் வழங்கப்பட்ட மல்லையா கடன் தொகை, அங்கீகரிக்கப்படாத வேறு தொழில்களுக்கும், கடன்தாரரின் சொந்த செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கமுடிகிறது.

மேன்மேலும் கடன் வழங்கியபோது, ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன்களின் பயன்பாட்டு விவரங்களை ஆராய்ந்து, வங்கிகளால் கணிக்க முடியாமல் போனது பெரும் கவலைக்குரியது. அதற்கான காரணங்கள் வெளிப்பட்டால், வழிமுறைகளில் ஒளிந்திருக்கும் ஓட்டைகளை அடைத்து, தவறுகளைத் திருத்திக்கொள்ள அந்த விவரங்கள் பயனுள்ளதாக அமையும்.

போதிய பிணைய சொத்துகள் இல்லாததால், வங்கிகள் விற்கக்கூடிய சொத்துகளைத் தேடிக் கண்டுபிடித்து விற்பனை நடவடிக்கைகளை தற்போதுதான் துவக்கியுள்ளனர். வட்டியோடு சேர்ந்து, ரூ.9,000 கோடியாக வளர்ந்த கடன் தொகைக்கு, இதுவரை சுமார் 150 கோடி சொத்துகள்தான் அடையாளம் காணப்பட்டிருக்

கின்றன. இதைத்தவிர, போயிங் விமானம் வாங்குவதற்காக அன்னிய நாட்டு கம்பெனிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தப்பட்ட முன்தொகை பணம் 350 கோடி ரூபாய் அளவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சில அரசியல் கட்சிகளின் அரவணைப்பில், மல்லையா மாநிலங்களவை உறுப்பினராக தொடர்கிறார். வாராக்கடன்களை பற்றி பல விவாதங்கள் கிளம்பியபோதும், அந்த விவாதங்களில் மல்லையாவின் வங்கிக் கடன்கள் அதிகமாக விமர்சிக்கப்படவில்லை. இந்த சம்பவங்களை மேற்கோளாகக் கொண்டு, மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் வங்கிக் கடன் விவரங்கள் அரசால் திரட்டப்பட்டு, அந்த விவரங்கள் ஆழ்ந்த சோதனைக்கு உள்படுத்தப்படவேண்டும்.

அந்த கடன்களில் வாராக் கடன்களின் அளவு, பெறப்பட்ட தள்ளுபடி, சலுகைகள் ஆகிய விவரங்கள் பற்றி சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் கடனாளிகளிடம் முழு விளக்கம் பெறப்பட்டு, அந்த விவரங்களை மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அரசு வங்கித் துறையில் கடன் வசூல் முறையில், சிறு கடனாளி, பெரும் கடனாளி என்ற பாகுபாடுகள் அகற்றப்படவேண்டும். கடன் வழங்குதல், தள்ளுபடி சலுகைகள் ஆகியவைகளில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் முற்றிலும் அகற்றப்படவேண்டும்.

வேண்டுமென்றே வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத நடவடிக்கை, கிரிமினல் குற்றமாக சட்டத் திருத்தம் மூலம் வரையறுக்கப்பட வேண்டும். குற்றவாளி நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க, பாஸ்போர்ட் விதிகளிலும் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, குறுகிய காலத்திற்கு அரசு வங்கிகளில் தலைமைப் பொறுப்பை வகித்துச் செல்லும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் சுய நலத்தைத் தவிர்த்து, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக அமையவேண்டும்.

dramanபோதிய பொருளாதார வசதிகள் இருந்தும், வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா, வங்கிகளுக்கு பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திவிட்டார். அதேசமயத்தில், வங்கி செயல்பாடுகளில் உள்ள பெரும் ஓட்டைகளை பற்றி வெளிச்சமிட்டு காட்டி, அனைவருக்கும் பாடம் புகட்டியதற்காக அவருக்கு நன்றி சொல்லலாம். அவர் மூலம் கற்ற பாடங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான முயற்சிகளை வங்கிகள் மேற்கொண்டால், புதிதாக முளைக்கும் மல்லையாக்களை எளிதாகச் சமாளிக்க அது உதவும்.

எஸ். ராமன் – தினமணி