Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,881 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் 1/2

p103c தானிய இனிப்பு புட்டு

தேவையானவை: பச்சரிசி மாவு – அரை கப், கடலைப்பருப்பு, பச்சைப்பயறு, சோளம்,  – தலா கால் கப், கோதுமை மாவு – கால் கப், தேங்காய்த் துருவல் – ஒரு கப், நாட்டுச் சர்க்கரை – ஒரு கப், முந்திரி – 8 (நெய்யில் வறுக்கவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய், உப்பு – சிறிதளவு.

 செய்முறை: கடாயில் கோதுமை மாவை சிவக்க வறுத்து வைக்கவும் தானிய வகை களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் தனித்தனியாக பொடித்துக்கொள்ளவும். இவற்றுடன் அரிசி மாவு சேர்த்து வெதுவெதுப்பான உப்பு நீர் தெளித்துப் பிசறி 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு, இதனை இட்லித்தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெந்த மாவுடன் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி… வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

=============

ராகி சேமியா பிரியாணி
p103dதேவையானவை: ராகி சேமியா – ஒரு கப், பச்சைப் பட்டாணி – 50 கிராம், நறுக்கிய பீன்ஸ், கேரட் – தலா 2 டேபிள்ஸ்பூன், தக்காளி – ஒன்று (நறுக்கவும்), பெரிய வெங்காயம் – ஒன்று (நீளமாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினாத்தழை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, சோம்பு – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – ஒன்று, பிரியாணி மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), பூண்டு – 6 பல், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, ஏலக்காய் – 2, நல்லெண்ணெய், உப்பு –  தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு வதக்கி… வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிர் உதிராக வேகும்). இப்போது ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

=============

 புளி அவல்
p103eதேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, வேர்க்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

 செய்முறை: புளியைக் கரைக்கவும். சிவப்பு அவலை அலசவும். புளிக் கரைசலில் உப்பு, மஞ்சள்தூள், அவல் சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு… கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து… வேர்க்கடலைப் பொடி, உப்பு சேர்த்துக் கிளறி, ஊறவைத்த அவலைப் பிழிந்து சேர்த்துப் புரட்டவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

=============

 சுண்டல் குழிப்பணியாரம்
p103fதேவையானவை: தோசை மாவு – ஒரு கப், பாசிப்பருப்பு – அரை கப், பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லித்தழை, இஞ்சித் துருவல் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை குழையாமல் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு தாளித்து… கேரட் துருவல், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் வெந்த பாசிப்பருப்பை சேர்த்துக் கிளறினால்… பாசிப்பருப்பு சுண்டல் ரெடி. தோசை மாவில் இந்த சுண்டலை போட்டுக் கலக்கவும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, குழிகளில் சிறிது எண்ணெய் விட்டு, இந்த மாவை குழிகளில் ஊற்றி வேகவிட்டு, திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

=============

 மல்டி க்ரெய்ன் ஊத்தப்பம்
p103gதேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா ஒரு கப், வெள்ளை உளுந்து, பச்சைப் பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப், கொண்டைக்கடலை – கால் கப், வெந்தயம் – அரை டீஸ்பூன், கெட்டித் தயிர் – தேவையான அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை: அனைத்து தானியங்களையும் நீர், தயிர் சேர்த்து 4 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து, கடைசியில் உப்பு சேர்த்து வைக்கவும். 6 மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். ஊத்தப்பம் ஊற்றும் சமயத்தில், தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, மாவில் போட்டுக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, மாவை கனமான வட்டமாக ஊற்றி இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

 குறிப்பு: வெங்காய ஊத்தப்பம் வேண்டுமெனில், நறுக்கிய வெங்காயத்தை ஊத்தப்பத்தின் மீது தூவி மிதமான தீயில் பொன்னிறமாக சுடவும்.

=============

 பூசணி விதை பாயசம்
p103hதேவையானவை: பூசணி விதை – ஒரு கப் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் பாக்கெட்டாக கிடைக்கும்), முந்திரிப்பருப்பு – 15 (நன்றாக உடைத்துக்கொள்ளவும்), பால் – ஒன்றரை கப், பொடித்த சர்க்கரை – அரை கப், ஜாதிக்காய் பொடி – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை.

 செய்முறை: முந்திரி, பூசணி விதையை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பாத்திரத்தில் பால் ஊற்றி அடுப்பில் வைத்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, ஊறிய முந்திரி – பூசணி விதையை சேர்த்து வேகவிடவும். இதை ஆறவிட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து திரும்ப ஒருமுறை அடுப்பில் வைத்து, குறைந்த தீயில் வேகவிடவும். ஒரு கொதி வந்ததும் ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

=============

 கம்பு – ஜவ்வரிசி இட்லி

 p103iதேவையானவை: கம்பு – ஒரு கப், இட்லி அரிசி – 3 கப், ஜவ்வரிசி – அரை கப், உப்பு – தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கறி வேப்பிலை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி  – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் – சிறிதளவு.

 செய்முறை: கம்பு, ஜவ்வரிசி, இட்லி அரிசியை தனித்தனியே 3 – 4 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, கிரைண்டரில் ஒன்றாக சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். இதை 6 மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, தாளிக்க வேண்டியதை தாளித்து மாவில் சேர்த்துக் கிளறி, இட்லித் தட்டில் இட்லியாக ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

=============

மினி பார்லி இட்லி –  சாம்பார்
p103jதேவையானவை: இட்லி புழுங்கல் அரிசி – ஒரு கப், பார்லி, முழு உளுந்து – தலா அரை கப், வெந்தயம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

சாம்பார் செய்ய: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், தனியா, கடலைப்பருப்பு, எள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, வெந்தயம் – அரை டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு, உப்பு தேவையான அளவு.

 செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம், பார்லி எல்லாவற்றையும் நன்றாக அலசி, வெதுவெதுப்பான நீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, கிரைண்டரில் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து அரைத்து, 4 மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு, மாவை மினி இட்லித் தட்டில் (அ) சாதாரண இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

=============

சாம்பார் செய்முறை:  தனியா, கடலைப்பருப்பு, எள், காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும். புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றுசேர்த்து நீர் விட்டு… மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சிறிது உப்பு சேர்த்து குழைய வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, புளிக்கரைசல் விட்டு… சாம்பார் பொடி, சிறிது உப்பு  சேர்த்து, பருப்பைக் கடைந்து சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

சாம்பாரை கிண்ணத்தில் விட்டு, அதில் மினி இட்லிகளைப் போட்டு, ஸ்பூன் வைத்து சாப்பிடக் கொடுக்கவும். பெரிய இட்லியாக செய்திருந்தால், சின்னச் சின்னதாக நறுக்கி, சாம்பாரில் போடலாம்.

=============

காக்ரா சாட்
p103kதேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, ஓமம் – ஒரு டீஸ்பூன், அம்சூர் பவுடர் (மாங்காய்தூள்) – அரை டீஸ்பூன், மிளகு – சீரகத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, நெய், உப்பு தேவையான அளவு.
மேலே தூவ: தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்) வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),  ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – தேவையான அளவு, சாட் மசாலா, உப்பு – சிறிதளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் மஞ்சள்தூள், ஓமம், அம்சூர் பவுடர், மிளகு – சீரகத்தூள், எண்ணெய், உப்பு சேர்த்து நீர் விட்டு, நன்றாகப் பிசையவும் (கெட்டியாக பிசைந்துகொள்ளவும்). மாவை உருண்டையாக உருட்டி, மிகவும் மெல்லிய சப்பாத்தியாக இடவும். கனமான தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் சிறிதளவு ஊற்றி, சப்பாத்தியைப் போட்டு பொன்னிறமாக சுட வும். பிறகு, மெல்லிய சுத்தமான துணியை சுருட்டி, சப்பாத்தியின் மேல் வைத்து அதன் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது போல் சீராக அழுத்தம் தரவும். சப்பாத்தி பழுப்பு நிறமாகும்போது, திருப்பிப் போட்டு, இதே மாதிரி செய்யவும். சப்பாத்தி முறுகலாக, மொறுமொறுப்பாக வரும். அதன் மீது பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், ஓமப்பொடி,  உப்பு, சாட் பவுடர் தூவி சாப்பிடலாம். இது சில நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

குறிப்பு: சப்பாத்தி மேக்கரிலும் இதை செய்யலாம்.

=============

ராகி – முந்திரி ரவா தோசை
p103lதேவையானவை: கேழ்வரகு மாவு – அரை கப், முந்திரிப்பருப்பு – 20 (சிறுதுண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்) ரவை – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், கோதுமை மாவு, மைதா மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப், மிளகு – அரை டீஸ்பூன் (உடைத்துக்கொள்ளவும்), சீரகம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, கேழ்வரகு மாவு, ரவை ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதனுடன் உப்பு, சீரகம், மிளகு, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லித்தழை, முந்திரி சேர்த்து, நீர் விட்டுக் கரைக்கவும். (ஒரு பங்கு மாவுக்கு 2 பங்கு நீர் விட்டுக் கரைக்கலாம்). 15 நிமிடம் அப்படியே வைக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை தோசையாக ஊற்றி, திருப்பிப் போட்டு வேகவிட்டு முறுகலாக எடுக்கவும்.

=============

வெஜிடபிள் சாலட்
p103m தேவையானவை:  துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ் – தலா கால் கப், மிகவும் மெல்லி யதாக நறுக்கிய குடமிளகாய் – கால் கப், எலுமிச்சைப் பழம் – ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன் – பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் (குழையாமல் வேகவிடவும்), பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.

 செய்முறை: ஒரு கிண்ணத்தில்  காய்கறிகளைப் போட்டு வெந்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கி இறக்கி, காய்கறிக் கலவையில் சேர்க்கவும். பரிமாறும் முன் எலுமிச்சைச் சாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.  கசப்பு இல்லாத வெள்ளரிக் காயை துருவி இதனுடன் சேர்க்க லாம்… நறுக்கிய தக்காளியையும் சேர்க்கலாம்.

=============

வெற்றிலை ரசம்
p103nதேவையானவை: வெற்றிலை – 6, புளி – எலுமிச்சை அளவு,  மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பழுத்த தக்காளி – 2, சர்க்கரை – அரை டீஸ்பூன், தனியாத்தூள், மிளகு – சீரகப் பொடி – தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் (வேகவைத்து நீர் விட்டு கரைக்கவும்), எண்ணெய் – சிறிதளவு, உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: புளியை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய்  விட்டு கடுகு தாளித்து, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன்  மஞ்சள்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து, புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நெய்யில் தனியாத்தூள், மிளகு – சீரகப் பொடியை வறுத்து, கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும். உடனடியாக வெற்றிலையை நறுக்கிப் போட்டு மூடிவிடவும். 15 நிமிடத்துக்குப் பிறகு பரிமாறவும்.

=============

கலவைக்காய் குழம்பு
p103oதேவையானவை: முருங்கைக்காய் – ஒன்று, பச்சை மொச்சைப் பயறு – அரை கப், கத்திரிக்காய் – 4, பூண்டு – 5 பல், தோல் உரித்த சின்ன வெங்காயம் – அரை கப்,  இஞ்சி – ஒரு சிறு துண்டு (தோல் சீவவும்), பச்சை மிளகாய் – 3, தக்காளி – 2, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, புளி – எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,  உப்பு – தேவையான அளவு.

 தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை: புளியைக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து… சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, தோல் சீவிய இஞ்சியைத் தட்டிப் போட்டு, பூண்டையும் நசுக்கி போட்டு, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, கத்திரிக்காய், முருங்கைக் காய் மற்றும் பச்சை மொச்சை சேர்த்து மேலும் வதக்கவும்.

பின்னர் தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறி, அரை கப்  நீர் விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். இதில் புளிக் கரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நன்கு வெந்து, குழம்பு பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: பச்சை மொச்சை கிடைக்கவில்லை என்றால், காய்ந்த மொச்சைப் பயறை 10 மணி நேரம் நீரில் ஊறவைத்து உபயோகப்படுத்தலாம்.

=============

தஹி பூரி
p103pதேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு – தலா அரை கப், கேரட் துருவல் – கால் கப், வேகவைத்த உருளைக்கிழங்கு – 2 (மசிக்கவும்), தயிர் – ஒரு கப், ரவை – ஒரு டேபிள்ஸ்பூன், சாட் மசாலா – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 செய்முறை: கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டுப் பிசைந்து, சிறுசிறு பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மசித்த உருளைக்கிழங்கு, கேரட் துருவல், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பொரித்த பூரி நடுவே ஓட்டை போட்டு இந்த கலவையை வைத்து, பூரியின் மேல் தயிர் ஊற்றி நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி சாப்பிடவும்.

=============

முருங்கை இலை பொடி சாதம்

p103q தேவையானவை: வடித்த சாதம் – ஒரு கப், ஆய்ந்த முருங்கை இலை – அரை கப், காய்ந்த மிளகாய் – 6, பூண்டு – 6 பல்,  புளி – நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு – கால் கப், எள் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய் – சிறிதளவு, உப்பு தேவையான அளவு.

செய்முறை: முருங்கை இலையை நீரில் அலசி, துணியால் நன்கு துடைத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் இந்த இலையை வறுத்துக்கொண்டு, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக்கிகொள்ளவும். பூண்டு, உளுத்தம்பருப்பு, எள், காய்ந்த மிளகாயை சிறிதளவு எண்ணெயில் வறுத்து… புளி, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும். சூடான வடித்த சாதத்தில் சிறிதளவு நெய் விட்டு, செய்து வைத்திருக்கும் பொடி வகைகளைப் போட்டு பிசைந்து சாப்பிடவும்.

=============