கோடை விடுமுறை எப்போது வரும், குடும்பத்துடன் டூருக்குச் செல்லலாம் என ஒரு காலத்தில் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த மனநிலை, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. மாறாக, நினைத்தால் டூர் கிளம்பும் மனநிலை, பலருக்கும் எழ ஆரம்பித்திருக்கிறது. `ரெண்டு நாள் லீவு இருக்கு. ஒரு எட்டு கொடைக்கானல் போயிட்டு வந்துடலாமா?’ என பலரும் நினைத்தவுடன் கிளம்பிவிடுகிறார்கள். ஆனாலும் கோடைவிடுமுறை… அதற்கான மவுசு இன்னும் குறையாமல்தான் இருக்கிறது. சரி… அலுவலக டென்ஷனில் இருந்து விடுபட்டு, ஹாயாக சம்மர் டூர் செல்பவர்கள் எந்தெந்த விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்? அவர்களுக்கான சில ஆலோசனைகள் இங்கே…
நெரிசலற்ற இடத்தைத் தேர்ந்தெடுங்கள்!
பாதுகாப்பான சுற்றுலாவுக்கு மிக முக்கியமானது, சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பது. அதிகக் கூட்டம் குவியும் சுற்றுலா மையங்கள் நிறைய இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களைத் தவிர்ப்பது நல்லது.
வெளியில் அதிகம் பிரபலமாகாதபோதும், மிகுந்த மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் இடங்கள் நிறைய இருக்கின்றன. ஒட்டுமொத்தக் கூட்டமும் கொடைக்கானலுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, நாம் தேனி மாவட்டத்தின் மேகமலைக்குப் போகலாம்.
ஏற்கெனவே சென்ற இடத்தைத் தவிர்த்துவிட்டு, புதிதாக ஓர் இடத்துக்குச் சென்றால், நமக்கு மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்தக் குடும்பத்தினருக்குமே புதிய அனுபவமாக அது இருக்கும். இதுபோன்ற இடங்களுக்குச் செல்வதால், கூட்ட நெரிசலில் இருந்து தப்பிப்பதுடன், தொற்றுநோய்கள் ஏற்படுவதில் இருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
திட்டமிடல் அவசியம்!
சரியான திட்டமிடல் இல்லாமல் சுற்றுலா சென்றால், டென்ஷன் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. போகவேண்டிய இடம், அதற்கான பயணத் திட்டம், எங்கு தங்க வேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். போகும் இடத்தைச் சுற்றியிருக்கும் முக்கிய இடங்களையும் பட்டியலிட வேண்டும். நேரம் கிடைத்தால், அந்த இடங்களுக்கும் சென்று வரலாம். இதனால், கூடுதலாக சில இடங்களைப் பார்த்த திருப்தி ஏற்படும்.
நோ டென்ஷன்!
சிலருக்கு, வெளி ஊருக்குக் கிளம்புகிறோம் என்றாலே, டென்ஷன் அதிகமாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் உணர்ச்சிவசப்படாமல் எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்தால், சுற்றுலா சிறப்பாக, இனிமையாக அமையும்.
வீட்டைப் பூட்டிவிட்டுக் கிளம்புவதற்கு முன்னர், ஒருமுறைக்கு இரு முறை காஸ் இணைப்பு, மோட்டர் சுவிட்ச் உள்ளிட்ட மின் இணைப்புகள், தண்ணீர் குழாய்கள் போன்றவை ஆஃப் செய்யப்ப
ட்டிருக்கின்றனவா என பரிசோதித்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால், பயணம் முழுவதும் அதைச் சுற்றியே எண்ணம் இருக்கும்; டூரை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாமல் போகும்.
உணவில் கவனம் தேவை!
வெளியிடங்களுக்குச் செல்லும்போது, அசைவ உணவைத் தவிர்த்துவிடுவது நல்லது. சைவ உணவு, அதுவும் இயற்கை உணவை எடுத்துக்கொண்டால், வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு, ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
பயணத் தின்போது, தண்ணீரில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சுகாதாரமற்ற தண்ணீரைக் குடிப்பதால், உடல்நலக் குறைபாடு ஏற்படலாம். எனவே, பாதுகாப்பான நீரை அருந்துவது நல்லது. மினரல் வாட்டர் அல்லது வெந்நீர் அருந்தலாம்.
அலைச்சல் காரணமாக உடலில் நீர்ச்சத்துக் குறையக்கூடும். அதனால், நாக்கு வறட்சி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். இது உடலை ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க உதவும்.
தேவையான பொருட்களை எடுக்க மறவாதீர்கள்!
மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள், அவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். அத்துடன், டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் சீட்டையும் கையோடு கொண்டுசெல்ல வேண்டும்.
அத்துடன், வழக்கமாக தினமும் பயன்படுத்தக்கூடிய தரமான ஷாம்பு, எண்ணெய் போன்றவற்றைக் கையோடு எடுத்துச் செல்ல வேண்டும்.
சுற்றுலா செல்லக்கூடிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் உங்களது செல்போன் நம்பர், டிக்கெட்டின் நகல், முகவரி, தங்கும் இடத்தின் முகவரி மற்றும் போன் நம்பர் போன்றவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
உடல்நலனில் அக்கறை தேவை!
சுற்றுலா செல்லும்போது, அதீத உற்சாகத்தின் காரணமாகப் போதிய ஓய்வு எடுத்துக்கொள்ள மாட்டோம். அதனால் அதிக அலைச்சல் காரணமாக உடலில் உஷ்ணம் ஏற்படும்.
இதனைத் தவிர்க்க, துண்டு அல்லது கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து, அடிக்கடி முகம், கை, கழுத்துப் பகுதிகளில் ஒத்திஎடுப்பது நல்லது. இதனால், தோலில் வறட்சி ஏற்படுவது, அழுக்குப்படிவது தடுக்கப்படும். உடல் வெப்பம், தூக்கமின்மை போன்றவற்றின் காரணமாக, கண்ணில் எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்க, அடிக்கடி தண்ணீர் குடிப்பது, உடலுக்குக் குளிர்சி தரக்கூடிய பழச்சாறு அருந்துவது, தலைக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போன்றவற்றைச் செய்யலாம். கிடைக்கும் சமயங்களில் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.
சோர்வில் இருந்து விடுபடுங்கள்!
பயணத்தின்போது ஒரே நிலையில் அமர்ந்து இருப்பதால், கை கால்களில் வலி ஏற்படும். அதுவும், ஒரே நிலையில் அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், கூடுதல் அசதி ஏற்படும்.
வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம், உடலை ஸ்ட்ரெச் செய்துகொள்வது, ஒரே இடத்தில் அமராமல், எழுந்து நடமாடுவது போன்றவை ரத்த ஓட்டத்தைச் சீராக்கி உடல்வலியைப் போக்கும்.
தூங்கச் செல்லும் முன்னர், வெந்நீரில் சிறிது உப்பைச் சேர்த்து, கால்களைச் சற்றுநேரம் அந்த நீரில் வைத்திருந்தால், பாதத்தில் ஏற்படும் வலி பறந்துபோகும். அத்துடன், வெந்நீர் குளியலும் உடல்வலியைக் காணாமல் செய்துவிடும்.
பாதுகாப்பில் கவனம் தேவை!
வெயில் இருக்கும் இடமாக இருந்தால், பருத்தி ஆடைகளையும் குளிர் அதிகம் உள்ள இடமாக இருந்தால், ஸ்வெட்டர், மங்க்கி கேப், மஃப்ளர் போன்றவற்றையும் பயன்படுத்த வேண்டும். குளிர் பிரதேசத்தில் காதுகளை மூடும்படியான உடையைத் தேர்வு செய்யுங்கள்.
சுற்றுலா செல்லும்போது ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிந்து செல்லாதீர்கள். அது, காலில் வலியை ஏற்படுத்துவதுடன், கரடுமுரடான பாதைகளில் செல்லவேண்டிய சூழல் ஏற்படும்போது, நடக்கச் சிரமமாக இருக்கும். சில நேரங்களில் தடுக்கி விழும் ஆபத்து ஏற்படுவதுடன் காலில் வலியும் ஏற்படும்.
வசதியான கேன்வாஸ் அணிவது மிகவும் நல்லது. பக்கிள்ஸ் வைத்த செருப்புகளையும் அணியலாம்.
இதையும் கொஞ்சம் கவனியுங்க!
சுற்றுலாவின்போது அதிக அலைச்சல் இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால், இரவில் தூங்கச் செல்லும் முன்னர், காய்ந்த திராட்சைகள் சிலவற்றைச் சாப்பிடுவது நல்லது. சீரகத்தைத் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்துக் குடித்தால், உடல் வெப்பம் மற்றும் அலைச்சலால் ஏற்படும் உடல் சோர்வு நீங்கும்.
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் ஊறவைத்த வெந்தயம் எடுத்துக்கொள்வது உடல்சோர்வைப் போக்கும்.
டூரின் அசதியை மறக்க, குடும்பத்தினருடன் நீங்கள் சென்ற இடங்களைப் பற்றிய சிந்தனையைத் தூண்டும் விதத்தில் பேசிக்கொண்டு வரலாம். அவர்களும் தாங்கள் மகிழ்ந்த விஷயங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக்கொண்டு வருவார்கள். இது, உங்களை உடல் அசதியில் இருந்து மறக்கச் செய்யும்.
டூர் செல்லும்போது அந்தந்த இடத்தில் உள்ள உடற்பயிற்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள். குறிப்பாக, கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களுக்குச் சென்றால், அங்கு டிரக்கிங் செல்வதற்கான இடங்கள் அதிகம் இருக்கும். அங்கு, காலையும் மாலையும் டிரக்கிங் செல்லலாம். ஒருவேளை, டிரக்கிங் செல்ல வாய்ப்பு கிடைக்காவிட்டால், நடைப்பயிற்சிக்கு ஏற்ற இடங்கள் அதிகம் இருக்கின்றன.
ஊட்டி செல்பவர்கள் கோத்தகிரி அருகில் உள்ள தெங்கமரடா பகுதிக்கு டிரக்கிங் செல்ல வாய்ப்பு உள்ளது. சுமார், 20 கி.மீ மலைப்பகுதிகளில் நடந்து செல்வது, மிகுந்த உற்சாகம் தருவதாகவும் புதிய அனுபவமாகவும் இருக்கும்.
சில இடங்களில் மசாஜ் மிகவும் பிரபலமாக இருக்கும். குறிப்பாக, கேரளாவின் ஆலப்புழா பகுதிக்குச் சுற்றுலா செல்பவர்கள், அங்கு குமரகம் பகுதியில் ஆயில் மசாஜ் செய்து புத்துணர்வு பெறலாம். சுற்றுலாவுடன் இணைந்து மசாஜ் செய்துகொள்வதன் மூலமாகப் பணவிரயத்தைத் தவிர்க்கலாம்.
மதுரையில் ‘பசுமை நடை’ என்கிற அமைப்பு, அங்கு இருந்து மதுரையைச் சுற்றிலும் இருக்கும் சமணர் மலைகள், யானைமலை, நாகமலை பசுமலை உள்ளிட்ட இடங்களுக்குச் சுற்றுச்சூழல் மற்றும் தொன்மையை அறிந்துகொள்ளும் பயணங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். இதில், பங்கேற்பதன் மூலமாக சுற்றுலா சென்ற அனுபவம் கிடைப்பதுடன் ஆரோக்கியத்துக்கும் பலன் கிடைப்பதாக மைந்திருக்கிறது.
சென்னையைச் சுற்றிலும் தடா, நாகலாபுரம், செஞ்சிக்கோட்டை ஆகிய சுற்றுலா மையங்களில் டிரக்கிங் செல்ல பல்வேறு குழுக்கள் ஏற்பாடு செய்து தருகின்றன. அங்கும் சென்று சுற்றுலாவையும் டிரக்கிங் அனுபவத்தையும் ஒருசேரப் பெற்றுக்கொள்ளலாம்.
கோவையின் டாப்சிலிப்புக்குச் செல்பவர்கள், அங்கு உள்ள மூலிகைப் பண்ணைக்கு விசிட் அடிக்கத் தவற வேண்டாம். மூலிகையின் பலன்களையும் எந்தெந்த சீதோஷ்ண நிலையில் என்னென்ன மூலிகைகள் வளரும் என்பதையும் அறிந்துகொள்ள முடியும். வீட்டிலேயே மூலிகைகளை வளர்க்கும் ஆவல் இந்த இடத்துக்கு சென்றாலே வந்துவிடும்.